என் மலர்
சமையல்
- வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும்.
- முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஹை பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம பார்க்க இருப்பது கட்டு சோறு செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த கட்டு சோறு நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இப்பொழுது உள்ள குளிருக்கு நாவிற்கு இதமாக இந்த கட்டு சோறு மற்றும் அதற்கு ஏற்ற முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சரி வாங்க இந்த கட்டு சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1½ டேபிள் ஸ்பூன்
அரிசி – ஒரு கப்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பொடித்த சீரகம் – அரை டீஸ்பூன்
பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – ஒரு கப்
புளிக்கரைத்த நீர் – கால் கப்
தண்ணீர் – 1¾ கப்
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு செய்து பொரியவிடவும். கடுகு, கடலை பருப்பு புரிந்துக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் காய்ந்த மிளகாயை சிவக்க வதக்கவும். கடலை பருப்பு ஓரளவு சிவந்து வந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக மற்றும் நீளமாக நறுக்கியதை அவற்றில் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் வதங்கி வந்ததும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், பொடித்த சீரகம் மற்றும் மிளகு பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாவை 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரிசி வேகவைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் கால் கப் அளவிற்கு கரைத்த புளித்தண்ணீருடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதி வைத்ததும் ஏற்கனவே ஊறவைத்துள்ள அரிசியை வடிகட்டி அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு செய்து நன்றாக ஒரு முறை கிளறிவிட்டதும் குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்து குக்கரில் உள்ள பிரஷர் அடங்கும் வரை காத்திருங்கள். குக்கரில் பிரஷர் அடைங்கிய பிறகு திறந்து பார்க்கவும். சாதம் நன்றாக வெந்திருக்கும் நல்ல வாசனையாக கட்டு சோறு தயாராகிருக்கும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
- பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.
இந்த மழைக்காலத்தில் தொற்று நோய்களின் பாதிப்பு என்பது அதிகரிக்கும். ஒருவருக்கு சளி, இருமல், காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றொருவருக்கும் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது அதனால் இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அதேசமயம் தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் குறைக்கவும் நமக்கு உதவி செய்யும் உணவு பொருளாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை போலவே மிளகும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட பொருள் என்பதால் இவை இரண்டையும் சேர்த்து ஆரோக்கியமாக பூண்டு மிளகு சாதம் செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மிளகு- 2 ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
கடுகு- கால் டீஸ்பூன்
பூண்டு- 10 பல் (நறுக்கியது)
சாம்பார் வெங்காயம்- 10 (நறுக்கியது)
காய்ந்த மிளகாய்- 2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
சாதம்- 2 கப்
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரம், பூண்டை தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு வதங்கிக்கொண்டு இருக்கும் போதே வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பிறகு அதில் சாதத்தை சேர்த்து வதக்க வேண்டும். இறக்குவதற்கு முன்பு மிளகை ஒன்றிரண்டாக பொடித்து சாதத்தின் மீது தூவி இறக்கினால் சுவையான பூண்டு, மிளகு சாதம் தயார். இது குளிர்காலத்துக்கு மிகவும் ஏற்றதும். சளி, இருமல் உள்ளவர்கள் சூடாக சாப்பிட்டு வர மிகவும் இதமாக இருக்கும்.
- முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருந்தது அவர்களின் உணவு முறை.
- கேழ்வரகில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நம் முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது அவர்களின் உணவு முறை. அவற்றில் ஒன்றான கேழ்வரகின் நன்மைகள் மற்றும் அவற்றில் செய்யப்படும் ரெசிப்பிகள் எல்லோருக்கும் பிடிக்கும். கேழ்வரகில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த அருமையான ராகி மாவை வைத்து ஒரு சுவையான வால்நட் ராகி சாக்லேட் கேக் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
ராகி மாவு- 3/4 கப்
கோதுமை மாவு- 3/4 கப்
கோகோ பவுடர்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா- ஒரு டீஸ்பூன்
நாட்டுசர்க்கரை- ஒரு கப்
காபி தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
வினிகர்- ஒரு ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்- ஒரு டீஸ்பூன்
டார்க் சாக்கலேட்- 200 கிராம் (துருவியது)
கிரீம்- 150 மி.மி
வால்நட்- 1/2 கப் (நறுக்கியது)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு, கோகோ பவுடர் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து கலந்துகொள்ள வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் நாட்டுசர்க்கரை, காபி தூள், வினிகர் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரினை ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் எண்ணெய், தயிர், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
இந்த கலவையை மாவு வைத்திருக்கும் பவுலில் சிறிது சிறிதாக ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். அதனுடன் வால்நட், , டார்க் சாக்லேட் கலந்து ஒரு கேக் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து அதில் கேக் கலவையை ஊற்றி வைக்க வேண்டும்.
ஏற்கனவே குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரிஹீட் செய்து அதனுள் கேக் டிரே வைத்து 45 நிமிடத்திற்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் திறந்து பார்த்து குச்சியை அதனுள் அழுத்தி எடுத்தால் அதில் ஒட்டாமல் வர வேண்டும். பின்னர் வெளியே எடுத்து பார்த்தால் சுவையான வால்நட் ராகி சாக்லேட் கேக் தயார்.

- பழங்கால பழமையான பானின் சுவையை கேக்கில் இணைக்கப்போகிறோம்.
- குல்கந்த் இல்லாமல் பான் முழுமையடையாது.
இன்றைய பான் கேக் ரெசிபியில், பழங்கால பழமையான பானின் சுவையை கேக்கில் இணைக்கப்போகிறோம். பான் ஒரு பிரபலமான வாய் ப்ரெஷ்னர். கேக்கில் உள்ள இந்த தனித்துவமான சுவை மிகவும் அருமை. குல்கந்து இல்லாமல் பான் முழுமையடையாது. குல்கந்து என்பது ரோஜா இதழ்களின் இனிப்பு. எனவே நமது இன்றைய கேக் வெறும் பான் கேக்காக மட்டும் இருக்கப் போவதில்லை, மாறாக அது பான் குல்கந்த் கேக்காக இருக்க போகிறது. வாங்க எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
மைதா மாவு - 175 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
பால்- 50 கிராம்
இளம் வெற்றிலைகள்- 5
வினிகர் - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - 75 மி.லி.
பொடித்த சர்க்கரை- 150 கிராம்
பச்சை நிறம் - 2 துளிகள்
கிர்ணி பழ விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
வெற்றிலை எசன்ஸ் - 2 துளிகள்
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
பொடித்த பிஸ்தா பகுப்பு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வெற்றிலைகளை 40 மி.லி. தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

அகலமான கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிக் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பாலையும், வினிகரையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். இப்போது பால் திரிந்து இருக்கும்.

மற்றொரு கிண்ணத்தில் எண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை கொட்டி நன்றாக அடித்து கலக்க வேண்டும். அதனுடன் மைதா மாவு கலவை. பால்- வினிகர் கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் அதில் வெற்றிலை சாறு, வெற்றிலை எசன்ஸ், பச்சை நிறம் மற்றும் குல்கந்து, கிர்ணி பழ விதைகள் மற்றும் பொடித்த பிஸ்தா ஆகியவற்றை போட்டு மீண்டும் நன்றாக கலக்க வேண்டும்.

இந்த கலவையை கேக் தயாரிக்கும் டிரேயில் ஊற்றி. 40 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். இறுதியா கிர்ணி பழ விதைகள் மற்றும் பிஸ்தா பருப்புகள் கொண்டு கேக்கை அலங்கரித்து பரிமாறலாம்.

- கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு.
- கேக் வகைகளில் லவங்கப்பட்டை கேக் வித்தியாசமானது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு. ஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது. கேக் வகைகளில் லவங்கப்பட்டை கேக் வித்தியாசமானது.
தேவைப்படும் பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கப்பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் - 1 கப்
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
முட்டை - 3
பால் - 5 கப்
உப்பு - கால் டீஸ்பூன்
சிரப் தயாரிக்க:
லவங்கப்பட்டை தூள் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் 6 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
வெனிலா எசன்ஸ்- 1 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அகலமான கிண்ணத்தில் லவங்கப்பட்டை தூள், மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை கொட்டி சலித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையில் பாலை ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்து கலக்க வேண்டும். மற்றொரு பெரிய கிண்ணத்தில் சர்க்கரை, வெண்ணெய், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை போட்டு மென்மையான கிரீம் போல அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி மீண்டும் நன்றாக அடித்துக்கொள்ளவு வேண்டும். இப்போது இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து அடித்து கலக்கவும். பின்னர் அதை டிரேயில் ஊற்றி 40 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும். வெந் ததும் ஓவனில் இருந்து வெளியே எடுத்து ஆறவைக்க வேண்டும்.
அடிகனமான சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் லவங்கப்பட்டை தூள், வெண்ணெய், சர்க்கரை, வெனிலா எசன்ஸ், தண்ணீர் ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கலவை கெட்டியாகத் தொடங்கும்போது அடுப்பில் இருந்து இறக்கி இந்த சிரப்பை கேக்கின் மீது ஊற்ற வேண்டும். இப்போது சுவையான லவங்கப்பட்டை கேக் தயார்.
- குக்கீசை வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கலாம்.
- குக்கீஸ் வடிவங்களை வைத்து 8 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது குழந்தைகளுக்கு பிடித்தமான குக்கீசை வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கலாம். அதன் செய்முறை குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - தேவையான அளவு (பொடித்துக் கொள்ளவும்)
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பட்டர் பேப்பர் - தேவையான அளவு
செய்முறை:
வெண்ணெய்யுடன் மைதா மாவு, சர்க்கரை, ஏலக்காய் தூள், கிராம்புத்தூள், பட்டைத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ள வேண்டும். பின்னர் தோசை அளவுக்கு தடிமனாக உருட்டிக்கொள்ள வேண்டும். அதனை நட்சத்திர வடிவங்களில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அகன்ற தட்டில் பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல், வெட்டிய துண்டுகளை அடுக்கி வைத்து அரை மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் மைக்ரோ ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஹீட் செய்யவும். அதில் உள்ள பேக்கிங் டிரே மீது பட்டர் பேப்பர் விரித்து ஃபிரிட்ஜில் குளிரவைத்த குக்கீஸ் வடிவங்களை வைத்து 8 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும். குக்கீஸ்களின் முனை பகுதி பிரவுன் நிறத்துக்கு மாறியதும் வெளியே எடுத்து ஆற வைக்கவும். அவற்றை அலங்கரித்து குழந்தைகளுக்கு ருசிக்க கொடுக்கலாம்.

- வாழைத்தண்டை சாப்பிடும் நாட்களில் தயிர், மோரை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது மிதமான சூட்டில் வதக்கவும்.
* கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது அரிசி மாவு அல்லது ரவையில் உப்பு, காரம், பெருங்காயம் அல்லது மசாலா தூளை கலந்து வைக்கவும். கிழங்கை வேகவைத்து ரவை அல்லது அரிசி மாவில் நன்றாக தோய்த்து சிறிது நேரம் கழித்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வதக்கவும். சுவையாக இருக்கும்.
* மிக்சியில் இட்லி, தோசை மாவு அரைத்தால் அரிசி மாவையும், உளுந்து மாவையும் தனித்தனியாக அரைத்து பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அதை சூடு ஆறும் வரை குளிர்ந்த நீரில் வைக்கவும். பின்பு இரண்டு மாவையும் ஒன்றாக பாத்திரத்தில் கொட்டி உப்பு கலந்து வைத்தால் மறுநாள் இட்லி மென்மையாக இருக்கும்.
* வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தை துருவியது போல் சிறிதாக நறுக்கி உப்பு தூள் கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு அதனுடன் கடலைமாவு, மசாலாப் பொடிகள் சேர்த்து பிசைந்து தண்ணீர் சேர்க்காமல் 2 ஸ்பூன் உருக்கிய நெய் மட்டும் விட்டு பிசைய வேண்டும். பின்பு எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் வெங்காய பக்கோடா ருசியாக இருக்கும்.
* காய்ந்த பச்சை பட்டாணி அல்லது கொண்டைக்கட லையை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை மூடி வைக்கவும். அரை மணி நேரத்தில் பட்டாணி, கடலை நன்றாக ஊறிவிடும். அதை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சமையல் ருசியாக இருக்கும்.
* வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில் தயிரையும், மோரையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்.
- மோமோசில் பல வகை இருக்கிறது.
மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் சாட் கடைகளில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். மோமோசில் பல வகை இருக்கிறது. அதில் சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ், மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படும் கோவா மோமோஸ் பிரபலமானவை.
தேவையான பொருட்கள்
மைதா மாவு- ஒரு கப்
வெங்காயம்- 1 (நறுக்கியது)
குடை மிளகாய்- 1
கேரட்- 1
பீன்ஸ்- 5-6
முட்டைகோஸ்- (சின்னது)
பூண்டு- 2 பல்
இஞ்சி- ஒரு துண்டு
மிளகு தூள்- ஒரு ஸ்பூன்
வினிகர்- ஒரு ஸ்பூன்
சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை பொடியா நறுக்கி தயார் செய்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு பவுலில் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40-ல் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்சை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும். அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.
அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பிங்கை வைக்கவும். ஸ்டஃப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோசை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோசை அதில் வைக்கவும். அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 8-ல் இருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோசை எடுத்து சுட சுட பரிமாறவும்.
- இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு.
- ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
சிக்கன் டிக்கா இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு அசைவ உணவு. இவை இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரன்ட் மெனுக்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். ஏனென்றால் அசைவ உணவு பிரியர்கள் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பு அப்படி. சில ரெஸ்டாரன்டுகள் அவர்களின் வாடிக்கையாளர்களின் பிரத்தியேக அனுபவத்திற்காக இன்னும் ஒரு படி மேலே சென்று சிக்கன் துண்டுகளை மசாலாவில் ஊற வைத்து (ஸ்கியூவர்) குச்சியில் சொருகி சுட்டு சாப்பிடுவதற்கு தயாரான நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களிடமே கொடுத்து விடுகிறார்கள். ரெஸ்டாரன்டில் வாடிக்கையாளர்களே சிக்கனை சுட்டு சாப்பிடுவதற்கு பல வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதை வெகு சுலபமாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம். சிக்கனை ஊற வைப்பதற்கு தேவையான மசாலாவை செய்து சிக்கனை அதில் போட்டு சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும். இதை வெகு எளிதாக ஒரு வாணலியில் வைத்தே வேக வைத்து விடலாம். மேலும் சிக்கன் டிக்கா ஒரு வித்தியாசமான முறையில் சமைக்கப்பட்டு பரிமாறப்படும் உணவு என்பதால் வீட்டில் உள்ளவர்களும் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன்- 1/2 கிலோ
பெரிய வெங்காயம்- 2
பச்சை குடை மிளகாய்- 1
மஞ்சள் குடை மிளகாய்- 1
கேரட்- 1
பெரிய வெள்ளரிக்காய்- 1
எலுமிச்சம் பழம்- 1/2
இஞ்சி, பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
தயிர்- 4 ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு ஸ்பூன்
சீரக தூள்- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா- ஒரு ஸ்பூன்
மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
மல்லி தூள்- 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சிக்கன் துண்டுகலுக்கு ஏற்றவாறு நறுக்கி, அடுத்து ஒரு பவுலில் கெட்டி தயிர், மஞ்சள் தூள், மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகள், வெங்காயம், குடை மிளகாய், மற்றும் மிளகு தூளை தூவி நன்கு சிக்கன் துண்டுகளில் மசாலா ஒட்டுமாறு கலந்து விடவும்.
அதன்பிறகு அந்த கலவையை ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டு அதை நன்கு இறுக்கமாக மூடி அப்படியே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை ஊற விடவும்.
சிக்கனை மசாலாவுடன் எவ்வளவு நேரம் நாம் ஊறவிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதன் சுவை நன்றாக இருக்கும். 2 மணி நேரத்திற்கு பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விடவும்.
பின்னர் ஒரு கரித்துண்டை அடுப்பில் காட்டி அதனை ஒரு கிண்ணத்தை வைத்து அதனை சிக்கன் கலந்து வைத்துள்ள பவுலின் நடுவில் வைத்து அதில் கால் டீஸ்பூன் நெய்விட வேண்டும். அப்போது புகை கிளம்பும் உடனே அதனை மூடிகொண்டு 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு ஸ்கியூவரை எடுத்து அதில் நாம் மூடிபோட்டு வைத்துள்ள சிக்கன் துண்டை சொருகி அதற்கு அடுத்து ஒரு வெங்காயம் அதன் பின்பு ஒரு பச்சை குடை மிளகாய் மற்றும் மஞ்சள் குடை மிளகாயை சொருகி கொள்ளவும். மீண்டும் இதேபோன்று ஒரு ஸ்கியூவரில் அளவிற்கேற்ப சிக்கன், வெங்காயம், மற்றும் குடை மிளகாய் துண்டுகளை சொருகி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
இரும்பு ஸ்கியூவருக்கு பதிலாக மர ஸ்கியூவரை பயன்படுத்துவதாக இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு முன் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
இப்பொழுது ஒரு வாணலியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெயை ஊற்றி உருகியதும் அதில் சிக்கன் துண்டுகளை சொருகி வைத்திருக்கும் ஸ்கியூவரை வைக்க வேண்டும். ஸ்கியூவரை தொடர்ச்சியாக திருப்பி விட்டு கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சிக்கன் துண்டுகள் அனைத்தும் சமமாக வெந்து இருக்கும்.
இதை ஓனில் செய்வதாக இருந்தால் அவனில் சுமார் 450 டிகிரி பாரன்ஹீட்க்கு ஃப்ரீஹீட் செய்து இந்த சிக்கன் துண்டுகளோடு இருக்கும் ஸ்கியூவர்களை ஒரு தட்டில் வைத்து அதை ஓனில் வைத்து சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும். 10 நிமிடத்திற்கு பிறகு அவனில் இருந்து அந்த தட்டை கவனமாக எடுத்து ஸ்கியூவரை திருப்பி வைத்து மீண்டும் அதே ஓனில் வைத்து சுமார் 12-ல்ருந்து 15 நிமிடம் வரை அதை வேக விட்டு வெளியே எடுக்கவும்.
அதன்பிறகு இதை ஒரு தட்டில் வைத்து அதனுடன் சிறிது கேரட், வெங்காயம், மற்றும் வெள்ளரிக்காய் துண்டுகளை நறுக்கி வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் டிக்கா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
- நெல்லிக்காய் குல்கந்தில் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளது.
- தோலுக்கு மினிமினுப்பு கொடுக்கும்.
பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி' நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும், அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய்- 250 கிராம்
நாட்டுசர்க்கரை- 100 கிராம்
தேன்- 50 கிராம்
பூசணி விதை- ஒரு ஸ்பூன்
வெள்ளரி விதை- - ஒரு ஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காய்களை நன்றாக சுத்தமாக கழுவி அதன்பிறகு அதனை துருவிக்கொள்ள வேண்டும். துருவிய நெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அதனுள் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரையும் வரை வைத்திருந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மீண்டும் ஒரு அடிகனமான வாணலியை வைத்து அதில் வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் வெல்லத்தை போட்டு மிதமான தீயில் வைத்து கிளர வேண்டும்.
நெல்லிக்காயில் உள்ள தண்ணீர் வற்றும் அளவுக்கு கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வதங்கி வந்ததும் அதில் தேனை ஊற்றி நன்றாக கிளரி சுருள வதங்கி வந்ததும் இறக்கும் போது பூசணி விதை மற்றும் வெள்ளரி விதை சேர்த்து கிளரி இறக்க வேண்டும். இது சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைத்துக்கொள்ளலாம். எத்தனை மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும்.
இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறது.
நெல்லிக்காய் குல்கந்தின் பயன்கள்:
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், 70 வகையான சத்துக்கள் அடங்கிய தேன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ அடங்கிய பூசணி விதை மற்றும் வெள்ளரி விதை சேர்த்து தயாரித்த நெல்லிக்காய் குல்கந்தில் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் கொடுக்கும், நெல்லிக்காய் குல்கந்தில் உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளது. மேலும் இவை நரம்புகளை பலப்படுத்தும், தோலுக்கு மினிமினுப்பு கொடுக்கும், முடி வளர்ச்சிக்கு உதவும் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
- கேக் மீது ஒரு தனி பிரியம் வரத்தொடங்கிவிடும்.
- குக்கீஸ்களை தயாரிக்காமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது.
டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் நேரம் தான். அப்போதில் இருந்தே கேக் மீது ஒரு தனி பிரியம் வரத்தொடங்கிவிடும். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது. கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேக் தான் எப்போதுமே சிறந்தது. இப்போது ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
(குறிப்பு) இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் ஒரு மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது ஒரு வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரை - 1 கப்
மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
ரம் - 5 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப்பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.
சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.
முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பவுலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பவுலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும். பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.
பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும். பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.
இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.
பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, கேக் மோல்டில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.
அதன்பிறகு கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் ரெடி.
- பண்டிகைக்கு வாங்கிய பொரி மீந்துபோய்விட்டதா?
- பொரியில் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வீட்டில் பண்டிகைக்கு வாங்கிய பொரி மீந்துபோய் வீணாக்குவதற்கு பதிலாக அதில் அல்வா செஞ்சி சாப்பிடலாம். இதுவரைக்கும் கோதுமை மாவு முதல் வாழை இலை வரை அனைத்திலும் அல்வா செய்த்து சாப்பிட்டுருப்போம். தற்போது பொரியில் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசிப்பொரி - 3 கப்
வெல்லம் - 3 கப்
புட் கலர் 2 சிட்டிகை
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி- 10
திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசிப்பொரியைக் கொட்டி, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசிப்பொரியை தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து எடுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கரைத்து பாகு தயாரிக்க வேண்டும்.
அடுப்பில், அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில், அரிசிப்பொரி விழுது, வெல்லப்பாகு ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் நன்றாக கிளற வேண்டும். இடையிடையே சிறிது சிறிதாக நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதில் சிறிதளவு புட் கலர், ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.
அரிசிப்பொரி கலவை நன்றாகத் திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அதை அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி, திராட்சையை 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து அல்வாவுடன் சேர்த்துக் கிளறி பரிமாறலாம். சுவையான அல்வா தயார்.






