என் மலர்
சமையல்
- இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
வட்டலப்பம் என்பது இஸ்லாமிய வீடுகளில் திருமண விசேஷங்கள் ரம்ஜான் பண்டிகை போன்றவற்றின் போது பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும். இதில் தேங்காய் பால், வெல்லம், முந்திரி பருப்பு, முட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மசாலாப் பொருட்களாலும் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.
இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதை வேண்டாம் என்று கூறாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆகவே வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த இனிப்பை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பால்- 1 டம்ளர்
முட்டை- 10
ஏலக்காய்ப்பொடி- சிறிது
முந்திரிப்பருப்பு- 15
பாதாம் பருப்பு- 10
உலர் திராட்சை- 15
சர்க்கரை- 400 கிராம்
நெய்- 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் 10 முட்டைகளை மிக்சியில் அடித்து எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரையை மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயை துருவி மிக்சி ஜாரில் போட்டு கெட்டியான பால் ஒரு டம்ளர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், அடித்துவைத்துள்ள முட்டையை ஊற்றி, பொடித்துவைத்துள்ள சர்க்கரை மற்றும் தேங்காய்ப் பால், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அடித்து கலக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் நெய் தடவிவிட்டு அதில், இந்த கலவையை ஊற்ற வேண்டும். பின்னர் குக்கரில் தண்ணீரை ஊற்றி சூடுபடுத்தி, அதினுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து நெய் தடவி வைத்த பாத்திரத்தை குக்கருக்குள் மூடி போடாமல் வைக்க வேண்டும். குக்கரை மூடி 30 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
30 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறக்கவும். ஒரு கத்தியை வைத்து குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது சரியாக வெந்துள்ளது என அறிந்து கொள்ளலாம். பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை மேலே தூவி பரிமாறவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.
- கருப்பட்டியை தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
- அரைத்த உளுந்து மாவுடன், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
கருப்பட்டி - 3/4 கப்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான கடாயில் கருப்பு உளுந்தை போட்டு நன்கு வறுத்து, அதனுடன் பொட்டுக்கடலையை சேர்த்து இறக்கி விடவும். ஆறியவுடன் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
கருப்பட்டியை தூளாக்கி அதனுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
அரைத்த உளுந்து மாவுடன், ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து, நெய் விட்டு உருண்டைகளாக பிடித்தால் சத்தான் கருப்பு உளுந்து லட்டு தயார்.
- வெங்காயம் வதங்கியவுடன் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை சேர்க்கவும்.
- பன்னீர் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
பன்னீா் - 500 கிராம்
உருளைக்கிழங்கு - 3
பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2
வெங்காயம் - 2
பீன்ஸ் - 1/4 கப்
கேரட் - 1/4 கப்
கோஸ் - 1/4 கப்
குடை மிளகாய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
சோள மாவு - 5 ஸ்பூன்
பிரெட் தூள் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும். பன்னீரை துருவிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் பீன்ஸ், கேரட், கோஸ் காய்கறிகளை சேர்க்கவும்.
காய்கள் லேசாக வதங்கியவுடன் குடை மிளகாய் சேர்த்து உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, சீரக தூள், தனியா தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வதக்கிய பின்னர் பன்னீர் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ஆறிய பின்னர் கைகளால் பிசைந்து சிறுசிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, கட்லெட் வடிவில் செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
கட்லெட்டுகளை சோளமாவு கலவையில் முக்கி பின் பிரெட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் வெஜிடபுள் கட்லெட் தயார்.
- கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு உள்ளது.
- இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
கனவாய் மீன் தான் கடம்பா மீன் என்று அழைக்கப்படும். இந்த கடம்பா மீன்கள் உடலுக்கு பல நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியவை. இந்த கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு பொட்டாசியம், கால்சியம் மற்றும் காப்பர் உள்ளது. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு விந்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இந்த மீன்களை வறுவல் செய்து சாப்பிடும்போது அதிக அளவு பலன்கள் கிடைக்கின்றன. இந்த நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கனவா- 500 கிராம்
வெங்காயம்- 20
பூண்டு-8
இஞ்சி- ஒரு துண்டு
மல்லி- இரண்டு ஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
சோம்பு- ஒரு ஸ்பூன்
வர மிளகாய்- மூன்று
பட்டை- இரண்டு
கிராம்பு- இரண்டு
அண்ணாச்சி பூ- ஒன்று
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ இதை எல்லாம் எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். நன்கு வறுத்த பிறகு மிக்சியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை வெங்காயத்தில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன்பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும், அதோடு தனியாக அரைத்துவைத்த மசாலா கலவையை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
மசாலா கலவையில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக கழுவி வைத்துள்ள கனவா மீனை சேர்க்க வேண்டும். மசாலா கலவையின் சாறு கனவாய் மீனில் இறங்கும் வரை வேகவைத்து இறக்கினால் சுவையான செட்டிநாடு கனவா மீன் கிரேவி தயார்.

- சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்கிரீம் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க. ஆரஞ்சு பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால்- 1 லிட்டர்
ஆரஞ்சு பழம்- 3
பாதாம், முந்திரி- 10
செய்முறை:
முதலில் ஒரு முழு ஆரஞ்சை பழத்தை எடுத்து அதன் மேல் பகுதியை வட்டமாக வெட்டி எடுத்துவிட்டு, அதனுள் இருக்கும் சதை பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது முழு ஆரஞ்சு பழம் போல் முழுவதுமாக நமக்கு வேண்டும்.
இதற்கிடையே அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் கொழுப்பு நிறைந்த பால் சேர்த்து அதில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
கடாயின் ஓரங்களில் பிடிக்கும் ஏடுகளை கரண்டியால் எடுத்து பாலிலேயே மீண்டும் சேர்த்து விட வேண்டும். இந்த பால் வற்றி பால்கோவா பதத்திற்கு முன்புள்ள நிலையான கிரீம் பதம் வர வேண்டும். கிரீம் பதம் வந்ததும் இதில் பொடியாக நறுக்கிய பாதாம் , முந்திரி சேர்த்து, அரை ஸ்பூன் பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
இப்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். இதை 15 நிமிடம் அப்படியே ஆற விட வேண்டும். இந்த கலவை இட்லி மாவை விட சற்று கெட்டியான பதத்திற்கு வந்து விடும்.
இப்போது நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதை பகுதியில் இருந்து விதைகளை நீக்கி விட்டு, அதன் ஜூசை மட்டும் ஒரு பாத்திரத்தில் கைகளை பயன்படுத்தி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த ஜூசை நாம் கிரீம் போல் தயாரித்து வைத்துள்ள பாலில் சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு, பின்னர் இதை நாம் உடையாமல் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்திற்குள் கரண்டியை பயன்படுத்தி ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இப்போது நாம் ஏற்கனவே வெட்டி எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலின் மேல் பகுதியை கொண்டு இதை மூடிக் கொள்ள வேண்டும். இதை இரண்டரை மணி நேரம் ஃப்ரீசருக்குள் வைத்து பின்பு வெளியே எடுத்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

- பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம்.
- எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ்.
சமைக்கும்போது பாத்திரத்தில் அடி பிடித்துவிட்டால் கவலை வேண்டாம். எளிதாக சுத்தம் செய்ய சில டிப்ஸ் உங்களுக்காக....
சமைக்கும் போது பால் பாத்திரம், டீ போடும் பாத்திரம் மற்றும் குழம்பு வகைகள் உள்ளிட்டவை கடுமையாக அடிபிடித்து விட்டால், இனி அதை கஷ்டப்பட்டு தேய்த்து கழுவ வேண்டாம். இப்படி செய்து பாருங்கள்.

பாத்திரத்தில் அடிபிடித்த இடம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதில் அரை டீஸ்பூன் பேங்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.
தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்யூடை சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு கரண்டியை கொண்டு பாத்திரத்தின் அடிப்பிடித்த பகுதிகளை சுரண்டி விட வேண்டும்.
இப்போது பாத்திரத்தில் உள்ள நீர் பால் போல் பொங்கி வரும். தொடர்ந்து கரண்டியால் சுரண்டி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கீழே கொட்டிவிடலாம்.
அதன்பிறகு பாத்திரத்தை ஒரு துணியால், பிடித்துக் கொண்டு பாத்திரம் சூடாக இருக்கும்போதே, கம்பி நார் ஸ்க்ரப் கொண்டு அடிபிடித்த பகுதியை லேசாக தேய்த்தால் போதும் அந்த கறைகள் நீங்கி விடும். இப்போது பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளிச்சென்று இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். உதவியாக இருக்கும்.
- மணத்தக்காளி கீரை வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.
மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சத்துக்களை கொண்டு வந்து சேர்க்கும். இதன் இலை, காய் பழம், வேர் ஆகிய அனைத்துமே பலன்களை கொண்டுள்ளது. மணத்தக்காளி கீரை வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றுவதுடன், சளியை நீக்கி உடலை வலுப்பெறச் செய்கிறது.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
பெருங்காய தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பூண்டை தட்டி சேர்க்கவும். பூண்டு பொரிந்தவுடன் மிளகு, சோம்பு, சீரகத்தை பொடித்து சேர்க்க வேண்டும்.
அதனுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சுத்தம் செய்த கீரையை போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
சுவையான மணத்தக்காளி கீரை சூப் ரெடி. மணத்தக்காளி கீரை சூப் வளரும் குழந்தைகள், இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.
- அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும்.
- சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 1
பால் - 1/4 கப் (பாலுக்கு மாற்றாக தேங்காய் பால் (அ) ஊற வைத்து அரைத்த பாதாம் விழுது பயன்படுத்தலாம்)
தயிர் - 4 ஸ்பூன்
சர்க்கரை - 3 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
ஏலக்காய் - சிறிதளவு
பாதாம், முந்திரி துருவியது
செய்முறை:
மிக்சியில் மாம்பழத்தை துண்டுகளாக்கி சேர்க்கவும். அதனுடன் பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.
பின்னர் சர்க்கரை, தயிர், தேன் சேர்த்து கலக்கவும். அதனுடன் ஏலக்காயை தூளாக்கி போடவும். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும். சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும். கோடையில் குழந்தைகள் விரும்பும் சுவையான மாம்பழ ஸ்மூத்தி ரெடி.
- பானகம் உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும்.
- வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும்.
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு சுவை கலந்த பானம். கோடை காலத்தில் இந்த பானகம், உடலின் களைப்பை நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கோடை வெயிலில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் பானகம் தயாரிக்கும் முறையை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை பழம் - 1
வெல்லம் - தேவையான அளவு
சுக்கு - சிறிதளவு
ஏலக்காய் - சிறிதளவு
பச்சை கற்பூரம் - சிறிதளவு
செய்முறை:
* வெல்லத்தை தூளாக்கி தண்ணீரை ஊற்றி கரைக்கவும். கரைந்த பின் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.
* அதனுடன் சுக்குப்பொடி, ஏலக்காய் தூளை சேர்க்கவும். கலந்து விட்டு பச்சை கற்பூரம் சிறிதளவு சேர்க்கவும்.
* பின்னர் அதனுடன் எலுமிச்சை பழச்சாறை கொட்டையை இல்லாமல் சேர்த்து நன்கு கலக்கினால் பானகம் தயார்.
- நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
- எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான்.
இந்த வெயிலுக்கு என்ன சாப்பிடுவது, உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்து கொள்வது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். ஏனென்றால் வெயில் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இதனால் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வெயில் காலத்தில் அம்மை, காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர்ச்சியான உணவாகவும், எல்லாரும் வீட்டிலும் இருக்க கூடிய ஒன்றாக இருப்பது வெந்தயம் தான். இந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவது பலருக்கும் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. அதற்கு தான் வெந்தயத்தை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
தேவையான பொருட்கள்:
வெந்தயம்- 3 தேக்கரண்டி
பச்சரிசி- 1 கப்
பாசி பருப்பு- 2 கப்
தேங்காய் - 1/2 மூடி
பூண்டு - 6 பற்கள்
செய்முறை:
முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 2 கப் பாசி பருப்பு, 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 3 முறை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.
பின் இதனை ஒரு குக்கர் அல்லது பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு 3 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். பூண்டு பற்கள் 6 சேர்த்து கொள்ள வேண்டும். இதனை வேக விட வேண்டும். குக்கரில் வைத்தால் 4 விசில் விட வேண்டும்.
அதுவே நீங்கள் பாத்திரத்தில் வைத்தால் தண்ணீர் குறையும் வரை வேக விட வேண்டும். அரிசியானது அளவாக வெந்திருக்க வேண்டும்.
பிறகு 1/2 மூடி தேங்காய் எடுத்து திருகி கொள்ள வேண்டும், இதனை அரைத்து பாலாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய் பாலை வேக வைத்த அரிசியில் சேர்த்து கலந்து விட வேண்டும்.
இந்த கஞ்சியை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. இரவு மற்றும் மதிய நேரத்தில் இந்த கஞ்சியை எடுத்து கொள்ளாதீர்கள்.
- வாணலியில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
- நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளற வேண்டும்.
தேவையான பொருட்கள்:
பலாச்சுளை பொடியாக நறுக்கியது - 1/2 கப்
அவல் - 1 கப்
வெல்லம் - 1 கப்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
* வாணலியில் நெய் சேர்த்து அவலை வறுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும்.
* பலாப்பழத்தை துண்டுகளாக்கி கொள்ளவும்.
* வாணலியில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய வெல்ல தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் பொடித்த அவல், அரிசி மாவை சேர்த்து கிளற வேண்டும்.
* அதனுடன் நெய், தேங்காய் துருவல், ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளற வேண்டும்.
* பின்னர் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்தால் பலாப்பழ கொழுக்கட்டை ரெடி. இந்த மாவை வாழை இலையில் தட்டியும் ஆவியில் வேக வைக்கலாம்.
- சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும்.
- தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு – 5
மிளகாய் – 7
புளி – எலுமிச்சை பழம் அளவு
சின்ன வெங்காயம் – 10
கடுகு – சிறிதளவு
தக்காளி – 1
கருவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு, மிளகாய் 7 எடுத்துக் கொள்ளவும். அதில் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும். அதனுடன் 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து வெறும் தக்காளியை மட்டும் 1 எடுத்து அதனை மட்டும் அரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை வைத்து அதில் 1 கடாயில் நல்ல எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு கடுகு போட்டு பொரிந்தவுடன் அதில் கருவேப்பிலை போடவும். அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அப்போது தான் சட்னி நன்றாக இருக்கும்.
இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நல்லா இருக்கும். ஆகவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் பின் சட்னியை சூடாக தோசை மற்றும் இட்லிக்கு சேர்த்து சாப்பிடுங்கள்..! சும்மா சுவை அள்ளும்..!






