என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    அழகான தலைமுடி.. பளபளப்பான சருமம்.. வலுவான நகங்களுக்கு சப்ளிமெண்டுகள் அவசியமா?
    X

    அழகான தலைமுடி.. பளபளப்பான சருமம்.. வலுவான நகங்களுக்கு சப்ளிமெண்டுகள் அவசியமா?

    • சப்ளிமெண்டுகள் பயன்தரக்கூடியவைதான் என்றாலும், அவை சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன.
    • எப்போதும் உயர்தர சப்ளிமெண்டுகளைத் தேர்வுசெய்து, அதன் பரிந்துரை அளவை மட்டும் பயன்படுத்துங்கள்.

    உணவின் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காதபோது, கூடுதல் வைட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன்கள் அல்லது பிற ஊட்டச்சத்துக்களை பெற தற்போது பலரும் எடுத்துக்கொள்வது சப்ளிமெண்டுகள். உணவுகள் மூலம் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருக்காது. நாம் எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம், அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பொறுத்துதான் அவை அமையும். இப்போதெல்லாம் பலரும் உணவு எடுத்துக்கொள்வதே ஒரு வேலையாக பார்க்கும்போது, எப்படி ஊட்டச்சத்து கிடைக்கும். அதனால் ஊட்டச்சத்துக்களையும் மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியத்தைத் தாண்டி சருமம், முடி என அழகு சார்ந்த தேவைகளுக்கும் இந்த சப்ளிமெண்டுகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சப்ளிமெண்டுகள் பயன்தரக்கூடியவைதான் என்றாலும், அவை சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன. நீங்கள் தினந்தோறும் சருமம், முடி, மற்றும் நக பொலிவுக்காக பயன்படுத்தும் சப்ளிமெண்டுகளால் ஏற்படும் பக்க விளைவுகளை காண்போம்.

    குமட்டல், வயிற்றுவலி

    சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை உணவு இல்லாமல் எடுத்துக் கொள்ளும்போது செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்யலாம். இது குமட்டல், வயிற்றுப் பிடிப்புகள், வயிறு எரிச்சல் போன்ற செரிமான அசௌகரியங்களை ஏற்படுத்தும். அதுபோல வெறும் வயிற்றில் அல்லது காபி, ஆரஞ்சு சாறு போன்ற அமில பானங்களுடன் சேர்த்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலமும் அசௌகரியம் அதிகரிக்கும். இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து, நெஞ்செரிச்சல், அஜீரணம் அல்லது இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகளை மோசமாக்கலாம். எனவே, சப்ளிமெண்ட்ஸை உணவுடன் எடுத்துக்கொள்வது சிறந்தது.

    தலைவலி, தலைச்சுற்றல்

    கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளும்போது அவை உடலில் சேமிக்கப்பட்டு, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் தலைச்சுற்றல், தலைவலி ஏற்படலாம். மேலும் ரத்த அழுத்தத்தை பாதிப்பதுடன், நீரிழிவையும் ஏற்படுத்தும். காஃபின் மற்றும் மூலிகை சாறுகள் கொண்ட சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொள்ள தொடங்கும்போதும் சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

    தோல் பிரச்சனைகள், முகப்பரு

    உங்கள் சருமத்தை மேம்படுத்துவதற்காக நீங்கள் பயன்படுத்தும் சப்ளிமெண்டுகள் சில நேரங்களில் அதை மோசமாக்கும். அதிக அளவு பயோட்டின் (வைட்டமின் பி7) அல்லது வைட்டமின் பி12 முகப்பரு போன்ற வெடிப்புகளைத் தூண்டக்கூடும். குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களில். இதற்குக் காரணம், பயோட்டின் மற்றும் வைட்டமின் B5 (பாந்தோத்தேனிக் அமிலம்) இரண்டும் ஒரே பாதையில் உறிஞ்சப்படுகின்றன. எனவே, அதிகப்படியான பயோட்டின், வைட்டமின் B5-ஐ உடல் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும், இது முகப்பரு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒவ்வாமை உணர்திறன் காரணமாக மற்றவர்களுக்கு லேசான தடிப்புகள், அரிப்பு அல்லது சிவத்தல் ஏற்படலாம்.


    அதிக அளவு வைட்டமின் பி7, பி12 பயன்படுத்துவது முகப்பருவுக்கு வழிவகுக்கும்

    மாறுபடும் சிறுநீரின் நிறம்

    சப்ளிமெண்டுகளை எடுத்துக்கொண்ட பிறகு, சிறுநீர் அடர் மஞ்சள் அல்லது நியான் நிறங்களில் செல்லும். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், முக்கியமாக வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்) எடுத்துக்கொண்டால் ஏற்படும் பொதுவான மற்றும் பாதிப்பில்லாத விளைவுதான் இது. இதுகுறித்து கவலைக்கொள்ள வேண்டியதில்லை என்றாலும், முதல்முறை சப்ளிமெண்ட் பயன்படுத்துபவர்களுக்கு புதிதாகவும், பயமாகவும் இருக்கலாம். ஆனால் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.

    சோர்வு, மனநிலை மாற்றங்கள்

    சிலர் முடி மற்றும் சரும பராமரிப்பிற்காக சப்ளிமெண்டுகள் எடுத்துக்கொள்ள தொடங்கும்போது சோர்வு, எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்களை அனுபவிக்கக்கூடும். இது அதிகப்படியான வைட்டமின் B6, நியாசின் (B3) அல்லது துத்தநாகத்தால் ஏற்படக்கூடியது. வைட்டமின் B6 அதிக நரம்பு சேதத்தை ஏற்படுத்தும், இது உணர்வின்மை மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். நியாசின் (B3) அளவுக்கு அதிகமாக உட்கொள்வது தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    நகம் உடைதல், முடி உதிர்தல்

    சப்ளிமெண்ட் எடுக்கத் தொடங்கும்போது உச்சந்தலையில் எண்ணெய் பசை அதிகரிப்பது, நகங்கள் எளிதாக உடைவது, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உடல் திடீரென ஊட்டச்சத்துக்களின் வருகைக்கு ஏற்ப மாறும்போது, கெரட்டின் உற்பத்தி மற்றும் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும்போது இந்த விளைவுகள் ஏற்படலாம். ஆனால் இது தற்காலிகமானதுதான்.

    செரிமான அசௌகரியம் மற்றும் வீக்கம்...

    குமட்டலைத் தவிர சில நேரங்களில் வீக்கம், வாயு அல்லது லேசான வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளையும் பயனர்கள் அடைகின்றனர். ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கொலாஜன், ஜெலட்டின் அல்லது செயற்கை இனிப்புகள் போன்ற பொருட்கள் உணர்திறன் உள்ளவர்களுக்கு லேசான செரிமானக் கோளாறை ஏற்படுத்தக்கூடும். சப்ளிமெண்ட் எடுக்க தொடங்கும் ஆரம்பகாலத்தில் இந்த அறிகுறிகள் தென்படலாம். பின்னர், குடல் அதன் வருகைக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கிவிடும்.

    இறுதியில் பிரகாசமான சருமம், வலுவான நகங்கள் மற்றும் பளபளப்பான கூந்தல் போன்றவை மாத்திரைகளால் கிடைப்பவை அல்ல. இவை அனைத்தும் ஊட்டச்சத்துக்களால், அதாவது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. நமது அழகு, நமது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதை புரிந்துகொண்டாலே இதுபோன்ற மாத்திரைகளும், கேப்ஸ்யூல்களும், அழகு சாதனப் பொருட்கள் எதுவும் உங்களுக்கு பயன்படாது.

    Next Story
    ×