என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும். அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
    இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால், கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. இதற்கு மத்தியில்தான் திறமையான இளைஞர்கள் உருவாக வேண்டியதிருக்கிறது. ஆகவே அவர்களை நாம் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, அவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நமது பிள்ளைகள் திறமையானவர்களாக, நல்லவர்களாக உருவாகுவார்கள் என்று முதலில் நாம் உறுதியாக நம்ப வேண்டும்.

    பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தபோது, ஒரு மாணவியின் கைவினைப் பொருள் தயாரிப்பை பார்த்து பாராட்டினேன்.

    அப்பொழுது அவள் என்னிடம் மிக நெருக்கமாக வந்து, “என்னை உங்களுக்கு பிடிக்குமா ஆன்டி?” என்று கேட்டாள்.

    “ஆமாம் செல்லம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா” என்று நான் கூறியவுடன், அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

    “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டவுடன் “நான் படிப்பதெல்லாம் மறந்து போய் பரீட்சையில் பெயில் ஆகி விடுகிறேன். மிஸ் திட்டுறாங்க, யாரும் என்னோட பேச மாட்டேங் கிறாங்க.. என்னை யாருக்கும் பிடிக்கல..” என்று தொடர்ந்து அழ, அவளை அரவணைத்துக் கொண்டு “உன்னால் முடியும். நிச்சயமாக நீ நல்ல மார்க் வாங்குவாய்” என்று நான் சொன்னவுடன் அவள் முகத்தில் புன்னகை வெளிப்பட்டது.

    வகுப்பு முடிந்ததும் அவள் ஆசிரியையை சந்தித்து “அவள் மனதில் உன்னால் முடியும் நிச்சயம் நீ வெல்வாய் என்று நம்பிக்கையை விதையுங்கள். அதையே அவள் பெற்றோரும் கூறும்படி சொல்லுங்கள்” என்றேன். அதன் பின்பு அவள் கல்வித்திறன் மேம்பட்டது. இதுதான் சரியான அணுகுமுறை.

    பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளீர்களோ, அந்த அளவு கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகள் மேல் எந்த அளவு அன்பை காட்டுகின்றீர்களோ, அந்த அளவு கண்டிப்பும் தேவை. ஆனால் அது தண்டனையாக இல்லாமல், தான் செய்தது தவறு என்பதை அவர்கள் உணரும் வண்ணம் இருக்கவேண்டும்.

    பெற்றோர்களாகிய நாம், பிள்ளைகளின் கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏனைய திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றில் காட்டும் அக்கறை போல பிள்ளைகளின் மன நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இந்த காரணத்தினால்தான் பெற்றோர்-பிள்ளைகள் இடையே கருத்து மோதல் பல வீடுகளில் ஏற்படுகிறது.

    ‘அந்த காலத்தில் நாங்க எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று நம் பிள்ளைகளிடம், கேள்வி கேட்கும் முன் கொஞ்சம் யோசிப்போம். யோசித்தால் இன்று இவர்களின் மாற்றத்திற்கு நாமும் காரணம் என்பதை புரிந்துகொள்ளலாம்.

    பிள்ளைகளுக்கு பெற்றோரின் அன்பு தேவை. அரவணைப்பு தேவை. பிள்ளைகளின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். பிள்ளைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை தெரிந்து, அதை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம் சுய கட்டுப்பாட்டை வளர்க்கவேண்டும். முறையான முயற்சியுடன் திறமைகளைத் தானே முன்வந்து வளர்க்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும். கொடுத்த வேலையை அதிக கண் காணிப்பு இன்றி நிறைவேற்றும் ஆற்றலை மேம்படுத்தவேண்டும். நல்ல மனப்பக்குவம், நல்லொழுக்கம், தலைமைப் பண்புகள், பண்பு நெறி எனும் சீரிய அம்சங்களில் பிள்ளைகளை ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்கள், தகுதியான நல்ல பிள்ளைகளாக, கவலை கொள்ள வேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லாதவர்களாக வளர்வார்கள்.

    இன்றைய தாய்மார்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் மகள்களிடம் பேசுவதே தங்களுக்கு சவாலான விஷயமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது மகள்கள் தங்களிடம் மனந்திறந்து பேசுவதில்லை என்று குறைபடுகிறார்கள். அவர்களுடன் பேசுவதற்கென்று தனி நேரம் எதுவும் ஒதுக்கவேண்டியதில்லை. அவர்கள் ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அந்த வேலையை செய்துகொண்டே அவர்களுடன் பேசலாம். பிள்ளைகளோடு சேர்ந்து வீட்டிலேயே சின்ன சின்ன வேலைகள் செய்யலாம், சேர்ந்து சாப்பிடலாம், அவர் களோடு விளையாடலாம். இப்படி அவர்களோடு நேரம் செலவிட்டால், பிள்ளைகளிடம் மனந்திறந்து பேச நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

    தாய் பொறுமையாகக் கேட்டால்தான் பிள்ளைகள் மனந்திறந்து பேசுவார்கள். நாம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தால், நம்மிடம் பேசத் தயங்குவார்கள். பிள்ளைகளிடம் நாம் நட்போடு பழகினால், வெளிப்படையாகப் பேசுவார்கள். ‘என்னை உன் நண்பன் மாதிரி நினைச்சுக்கோ, எதுவாக இருந்தாலும் சொல்லு’ என்று சொன்னால் மட்டும் போதாது. அதே உணர்வுடன் பழகவேண்டும். அவர்கள் சொல்லும் பிரச்சினைகளை அசட்டை செய்யாமல், அவர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல், பிள்ளைகள் விஷயத்தைச் சொல்லி முடிப்பதற்குள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்.

    “என் அம்மாவிடம் எதை பத்தி வேண்டுமானாலும் தயங்காமல் பேசலாம். நான் பேசும்போது என் அப்பா குறுக்கே பேசமாட்டார். என்னை பத்தி தப்புக்கணக்கு போட மாட்டார். நான் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியாக கேட்பார். அதுக்கப்புறம் எனக்கு தேவையான, நல்ல ஆலோசனைகளை கொடுப்பார்” என்று அவளது தோழியிடம், உங்கள் மகள் பேசும் அளவுக்கு நீங்கள் அவளிடம் நம்பிக்கையை பெறுங்கள்.

    சில விஷயங்களைப் பற்றி மகள்களிடம் பேசும்போது, உதாரணமாக காதலிப்பதைப் பற்றிப் பேசும்போது அதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி மட்டும் சொல்லாமல் அவர்கள் சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். காதலிப்பதற்கு முன்னால் அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள என்ன செய்யவேண்டும்? சரியான நபரை தேர்ந்தெடுப்பது எப்படி? தற்போது காதல் தேவையா? உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுப்பது எப்படி? என்பதை எல்லாம் தெளிவாக உணர்த்தவேண்டும். ஒருவரின் புற அழகை விட அக அழகு முக்கியம், பொறுமை முக்கியம் என்பதை தோழமையுணர்வுடன் சொல்லவேண்டும். அப்படி சொல்லும்போது பிள்ளைகள் ‘நமக்கு யாரையாவது பிடித்திருந்தால், அதை அப்பா-அம்மாவிடம் மறைக்காமல் சொல்லவேண்டும்’ என்று கருதுவார்கள். ஒருவேளை யாரையாவது காதலித்தால்கூட பொறுமையாக காத்திருப்பார்களே தவிர தவறான முடிவு எடுக்க மாட்டார்கள்.

    ‘நம் பிள்ளைகள் மீது நம்பிக்கைவைப்போம். அவர்கள் நல்லவர்களாக வளர்வார்கள்’ என்பது நல்ல பண்பாடு. நல்ல பழக்கங்களை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதைவிட, நாம் அவைகளை கடைப்பிடித்து அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். எங்கோ இருக்கும் தலைவர்கள் நமது குழந்தை களுக்கு முன்மாதிரியில்லை. அவர்கள் முன்னால் வாழ்ந்துகாட்டும் நாமே அவர்களுக்கு முன்மாதிரியாவோம்.

    -ஆ.ஆண்டனி ரோஸ்லின்,

    தொழில் முனைவு மற்றும் மனிதவள ஆலோசகர், மதுரை.
    உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள்.
    குழந்தைகளை இரவில் தூங்க வைப்பது நிறைய பெற்றோருக்கு கடினமான விஷயமாக இருக்கிறது. சில குழந்தைகள் நள்ளிரவு நெருங்கும் வரை தூங்காமல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் நன்றாக தூங்கினால்தான் அவர்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படவும் தூண்டும். இரவில் தூங்க அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் வழக்கத்தை பின்பற்றலாம். அது குழந்தைகளுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தி கொடுப்பதோடு அவர்களது ஆளுமைத்திறனையும் வளர்க்கும்.

    உங்கள் பிள்ளைகள் புத்திசாலித்தனமானவர்களாகவும், அறிவுக்கூர்மையுடையவர்களாகவும் வளர விரும்பினால், தூங்க செல்லும் முன்பு கதை வாசிக்கும் பழக்கத்தை பின்பற்றவையுங்கள். நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் கதைகளைப் படிப்பதன் மூலம் நல்ல பண்புகளை பின்பற்றி வளர்வார்கள்.

    குழந்தை பருவத்தில் இருந்தே நீங்கள் அவர்களுக்கு கதை சொல்லும் வழக்கத்தை தொடரலாம். அது அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். சிறந்த கற்பனைத்திறன், அறிவுத்திறன் கொண்டவர்களாகவும் வளர்வார்கள். நல்ல புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்வார்கள். குழந்தைகள் வளரும்போது அவர்களின் மூளையும் வளர்ச்சி பெறும். அப்போது கேட்கும் தகவல்களை சிறப்பாக உள்வாங்கினால் சரியான அறிவு வளர்ச்சியை பெறுவார்கள். அதற்கு கதை கேட்கும், படிக்கும் பழக்கம் உதவும்.

    குழந்தைகள் பேசும்போது அவர்களின் உடல் மொழிகளையும், உதட்டு அசைவுகளையும் ரசித்து பாருங்கள். அது அவர்களின் அறிவாற்றல் செயல்பாடுகளை அதிகரிக்க உதவும். கதை வாசிக்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை திறமையாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள். அவர்களின் தகவல்தொடர்பு திறனை மேம்படுத்துவதில் கதை சொல்லுதலும், கதை வாசிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. கதையில் வரும் சம்பவங்களை கேள்விகளாக கேட்டு பதில் சொல்வதற்கு ஊக்குவிப்பது அவர்களை தைரியமானவர்களாக உருவாக்க உதவும். மேலும் புதிய சொற்களை ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் முயற்சிப்பார்கள்.

    குழந்தைகள் தினமும் வீட்டில் உள்ளவர்கள் பேசும் மொழியை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் தாய்மொழியில் சரளமாக பேச தொடங்குகிறார்கள். எவ்வளவு அதிகமாக கேட்கிறார்களோ, அதற்கேற்ப அதிக சொற்களையும் கற்றுக்கொள்வார்கள். அதற்கு கதை கேட்கும் வழக்கம் துணைபுரியும்.

    புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம். குழந்தை பருவத்தில் இருந்தே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தால் அறிவாற்றல் மேம்படுவதுடன் சிந்தனைத்திறனும், கற்றல் திறனும் மேம்படும். ஆரம்பத்தில் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் புத்தகங்களுடன் கதை சொல்லிக்கொடுக்கும் பழக்கத்தை தொடங்கலாம்.

    குழந்தைகள் எப்போதும் புதிய விஷயங்களை காணவும், கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். பிரமாண்டமான படங்களுடன் கூடிய கதை விளக்கங்கள் அவர்களை எளிதாக கவர்ந்திழுத்துவிடும். அதில் இடம்பெறும் புதிய சொற்களையும் ஆர்வமாக படிப்பார்கள். எழுச்சியூட்டும் கதைகளைப் படிப்பது, அதேபோன்ற ஆளுமை திறன் கொண்டவர்களாக வளர்வதற்கு ஊக்கப்படுத்தும். எதையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் எதிர்கொள்ள வும் தயாராகுவார்கள். 
    தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் 7 வயதுக்குள் உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
    டீன் ஏஜ் பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுவதுதான் உடல் பருமனுக்கான பொதுவான காரணமாக கருதப்படுகிறது. உணவு பழக்கங்கள் மட்டுமின்றி அன்றாட செயல்பாடுகளாலும் உடல் பருமன் அடைகிறது. ஸ்பெயினை சேர்ந்த சுகாதார நிறுவனம் ஒன்று குழந்தைகளின் வெவ்வேறு வாழ்க்கை முறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் குழந்தைகளின் உடல் இயக்க செயல்பாடுகள், தூங்கும் கால அளவு, டி.வி. பார்க்கும் நேரம், பச்சை காய்கறிகளை அடிப்படையாக கொண்ட உணவு பொருட்களை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை உட்கொள்வது ஆகிய ஐந்து விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

    அத்துடன் நான்கு வயதுக்குள் குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் பெற்றோரிடம் ஆய்வுக்குழுவினர் கேட்டுஅறிந்திருக்கிறார்கள். மேலும் நான்கு மற்றும் ஏழு வயதுகளில் குழந்தைகளின் ரத்த அழுத்தம், உடல் எடைக்கு ஏற்ற உயரம் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்திருக்கிறார்கள். 1480 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆய்வின் முடிவில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் அதிகம் இல்லாமல் தொலைக்காட்சி பெட்டியின் முன்பு அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் 7 வயதுக்குள் உடல் பருமன், வளர்சிதை மாற்றத்தில் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஆய்வுக்குழுவின் இணை தலைவரான டோரா ரோமகேரா, “குழந்தைகள் தொலைக்காட்சியை பார்க்கும்போது, ஏராளமான விஷயங்களை காண்கிறார்கள். அதில் பார்க்கும் உணவு பொருட்களை உட்கொள்வதற்கு விரும்புகிறார்கள். இனிப்பு பலகாரங் கள், பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட தானிய பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் உப்பு, சர்க்கரை, கொழுப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் ஊட்டச்சத்துக்கள் குறைவான அளவிலேயே இருக்கின்றன. நான்கு வயதில் இத்தகைய பொருட்களை அதிக அளவில் உட்கொள்வது ஏழு வயதில் உயரத்திற்கு பொருத்தமில்லாத உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது” என்கிறார்.

    குறைவான நேரம் தூங்குவதும் உடல் பருமன் பிரச்சினைக்கு மற்றொரு முக்கிய காரணம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
    கொரோனா நெருக்கடியால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் ஏராளமான சிறுவர்-சிறுமியர்கள் ‘மொபைல் போன் கேம்ஸ்’ விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அதனை நினைத்து பெரும்பாலான பெற்றோர்கள் இப்போது சந்தோஷப் படுகிறார்கள். ‘அடிதடி இல்லாமல் அமைதியாக இருந்து பிள்ளைகள் விளையாடுகிறார்கள்’ என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர்களால், பள்ளிக்கூடம் திறந்து அவர்கள் பள்ளிக்கு செல்லும்போதுதான் அந்த விளையாட்டின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும். மொபைல் போன் கேம்ஸ், கிட்டத்தட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலும் தகர்க்கும் விளையாட்டாகும்.

    இது போலத்தான் ஒருமுறை, இரண்டு மாத விடுமுறை முடிந்து பள்ளிக்கூடம் திறந்தது. பள்ளி சென்ற சிறுவனால் நோட்டில் எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என் கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.

    டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த் திருக்கவில்லை.

    விரல் வீக்கம் முதல்- திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.

    திருடனை பிடிப்பது-மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது-மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

    மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேஇரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

    பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபாவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

    குழந்தைகளை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்கும்போது படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

    ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.

    ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும். உங்கள் குழந்தைகள் தினமும் 2 மணி நேஇரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாட அனுமதிக்காதீர்கள். வேறு வெளிவிளையாட்டுகளிலும், நல்ல பொழுதுபோக்குகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

    தூக்கமின்மை, ஒற்றை தலைவலி, சோர்வு, பலவீனம், பள்ளி பாடங்களில் பின்னடைவு, கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல், சுத்தமின்மை, பொய் சொல்லுதல், சக நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல் போன்றவை எல்லாம் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையானவர்களின் அறிகுறியாகும்.

    இதை எல்லாம் தெரிந்துகொண்டு, வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் இந்த நேஇரத்தில் குழந்தைகளை கண்காணியுங்கள்.
    வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் செடி, கொடிகளோடு விளையாடினால் எப்படி இருக்கும்...? அப்படி ஒரு பழக்கத்தை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு பழக்கிவிட வேண்டும்.
    வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் செடி, கொடிகளோடு விளையாடினால் எப்படி இருக்கும்...? அப்படி ஒரு பழக்கத்தை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு பழக்கிவிட வேண்டும். விதை விதைப்பது, செடி வளர்ப்பது, வளர்ந்த செடியை பராமரிப்பது போன்ற பழக்கங்களினால், குழந்தைகளை உற்சாகப்படுத்தலாம். இந்த பழக்கம் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதோடு, பசுமையான பொழுதுபோக்காகவும் அமையும். பாடப்புத்தகங்களின் வழியே தாவர வகைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும், வீட்டுத்தோட்டத்தில் செடி வளர்த்து புரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா...?

    * எளிமையான செடிகளை தேர்ந்தெடுங்கள்

    குழந்தைகளுக்கு இயற்கை பாடம் சொல்லி கொடுக்க, அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டு சமையலில் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை கொண்டே இயற்கை பாடம் நடத்தலாம். சமைத்தது போக மீதமிருக்கும் தக்காளி மற்றும் எலுமிச்சை விதைகளை, குழந்தைகளின் கையால் தோட்டத்தில் தெளித்துவிடுங்கள். அது ஓரிரு நாட்களில் செடியாக முளைத்துவிடும். கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை நட்டு வைப்பதன் மூலம் செடிகளை வளர்க்கலாம். பப்பாளி, மாதுளை போன்ற பழவகைகளும் வெகு சுலபமாகவே வளரக்கூடியவை.

    * அறிவியல் அறியட்டும்

    சிறு தொட்டியில் மண் நிரப்பி, (கண்ணாடி தொட்டியாக இருப்பது சிறப்பு) அதில் குழந்தைகளை விதை நட செய்யுங்கள். ஒரு விதை எப்படி செடியாக முளைக்கிறது, எப்படி வேர் உருவாகிறது, வேர் வளர வளர செடி வளரும் ரகசியம், இலையின் வளர்ச்சி மாற்றம், நிற மாற்றம் இறுதியில் செடி பூ பூக்கும், காய் காய்க்கும் அதிசயம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கண் கூடாக காட்டுங்கள். இந்த பயிற்சி, தாவரம் பற்றிய முழு புரிதலை குழந்தைகளுக்கு உண்டாக்கும்.

    அதற்கு முன்பாக மண் எப்படி உருவானது?, எந்தெந்த வகையான மணலில் செடிகள் செழித்து வளரும், செடி, மரம் வளர என்னென்ன தேவை? (வளமான மண், உரம், தண்ணீர், சூரிய வெளிச்சம்), நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் எப்படி உருவாகிறது? (மரம்தான் வெளியிடுகிறது), போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஒரு சின்ன செடி, எவ்வளவு பாடங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறது பார்த்தீர்களா...?

    * செடிகளை வெட்டி, ஒட்டலாம்

    காகிதங்களை மட்டுமல்ல, செடிகளையும் வெட்டி, ஒட்டி விளையாடலாம். ஆனால் அதற்கு பெற்றோரின் வழிகாட்டுதல் அவசியம். சிகப்பு நிற செம்பருத்தி பூக்கும் செடியில், திடீரென மஞ்சள் நிற பூ பூத்தால் எப்படி இருக்கும்?, இந்த அதிசயத்தையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். இருவேறு நிற செம் பருத்தி செடிகளின் தண்டுகளை வெட்டி, ஒன்றாக ஒட்டுவதன் மூலம் அவை ஒரே செடியாக வளர்ந்து, இருவேறு நிறங்களில் பூ பூக்கும். இந்த வெட்டு, ஒட்டு முறையில் பல செடிகளை வளர்த்து, வர்ணஜாலம் படைக்கலாம். மேலும் தாவர தண்டுகளில் ஒளிந் திருக்கும் தாவரவியல் பாடங்களையும் சுலபமாக கற்றுக்கொடுக்கலாம்.

    * தோட்டத்தில் விளையாடுங்கள்

    குழந்தைகள் விளையாட வேண்டிய மைதானங்களில், வீட்டுத்தோட்டமும் ஒன்று. மணல் பரப்பில் பள்ளம் தோண்டுவது, சிறு செடிகளை இடம்மாற்றி நடுவது, செடி-மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, பூக்களை பறித்து மணம் முகர்வது என இயற்கை எழிலோடு, குழந்தைகளை விளையாட விடுங்கள். வீட்டுத்தோட்டம் இல்லாதவர்கள், மாடித்தோட்டம், தொட்டி செடிகள் என குழந்தைகளை இயற்கையோடு பிசியாக வைத்திருக்கலாம்.
    பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...
    பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ...

    ஒவ்வொரு முறையும் பால் புகட்டிய பின்னர் சுத்தமான, கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில், மஸ்லின் போன்ற மெல்லிய துணியை நனைத்து, ஈறுகள் மற்றும் நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை வளர வளர அவர்களைப் பிரஷ் பண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர சிரமப்பட வேண்டியதில்லை.    

    மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

    உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

    ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.

    இந்த கொரோனா காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மன அமைதியுடனும், மன வலிமையுடனும் இருப்பதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.
    ஊரடங்கு, கொரோனா பீதி, பள்ளி விடுமுறை இவை மூன்றும் குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழலால் கவலை, பீதி, மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மன அமைதியுடனும், மன வலிமையுடனும் இருப்பதற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதற்கு அவர்களிடம் தனிப்பட்டக் காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    அதிகப்படியான அழுகை, அடிக்கடி எரிச்சல்படுவது, சின்ன விஷயத்திற்கு கூட கவலைப்படுவது, வழக்கத்திற்கு மாறாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது, சரியாக தூங்காமல் இருப்பது, கவனக்குறைபாடு, விரும்பி விளையாடும் விளையாட்டுகள் மீது கூட ஆர்வம் இல்லாமல் இருப்பது, அடிக்கடி தலைவலி ஏற்படுவது, உடல் வலியால் அவதிப்படுவது போன்றவை குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப் பதற்கான அறிகுறிகள் ஆகும்.

    “குழந்தைகளும், பதின்ம வயதை கடந்தவர்களும் பெற்றோர், தங்களை சுற்றி இருக்கும் பெரியவர்களின் அணுகுமுறைகளின் ஒரு பகுதியை பின்பற்றுகிறார்கள். இந்த சமயத்தில் கொரோனா நோய் தொற்று சார்ந்த விஷயங்களை நம்பிக்கையுடனும், அமைதியாகவும் கையாள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் ஆதரவாக இருக்க முடியும். குழந்தைகள் முன்னால் கொரோனா பற்றிய கவலையை வெளிப்படுத்த வேண்டாம். பீதியுடனும் இருக்க வேண்டாம். துணையுடன் பகிரங்கமாக சண்டை போடவோ, வாதாடவோ கூடாது. எல்லா வகையிலும் வீட்டில் அமைதியான சூழலை உருவாக்க வேண்டும். அவைதான் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும்” என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

    முககவசம் அணியாவிட்டால் கொரோனா தாக்கிவிடும் என்பது போன்ற அச்ச உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்திவிடக்கூடாது. முககவசம் அணிவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது? எந்த அளவுக்கு நோய் தொற்றுவில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கமாக சொல்லி புரிய வைக்க வேண்டும். ஒருவித பயத்துடன் முககவசத்தை அணிவது மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்கவோ, இணையதளங்களை பார்வையிடவோ அனுமதிக்கக்கூடாது. கொரோனா நோய்த்தொற்று பற்றிய விஷயங்களை அவர்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். அது அவர்களிடத்தில் கவலையை அதிகரிக்கச்செய்துவிடும். வீண் பதற்றத்தையும் ஏற்படுத்தும். கொரோனா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு பதிலாக நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவோ, அவர்களுடன் ஆன்லைனில் அரட்டை அடிக்கவோ குறிப்பிட்ட நேரத்தை செலவிட அனுமதிக்கலாம்.

    பள்ளிக்கூடம் செல்லும் காலகட்டத்தில் எத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்களோ அதையே பின்தொடர வைக்கலாம். அது அவர்களை சுற்றியுள்ள தேவையற்ற குழப்பங்களை சமாளிக்க உதவும். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் புத்தகங்களை வாசிக்க ஊக்குவியுங்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளுடன் அமர்ந்து பாடங்களை சொல்லிக்கொடுக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் அதோடு தொடர்புடைய இணையதள விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம். அது அவர்களின் அறிவை மேம்படுத்த உதவும். சரியான நேரத்தில் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது என குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்தான உணவுகளை வழங்க வேண்டிய காலகட்டம் இது. அதனால் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதற்கு கவனம் செலுத்துங்கள். 
    குழந்தைகளை குறிப்பிட்ட நேரத்தில் காலையில் தினமும் உணவு சாப்பிட பழகிவிட்டால், அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும்.
    பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 7 முதல் 8 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த நேரத்தில் வயிறு பசிக்கவில்லை என்று கூறி, நிறைய குழந்தைகள் சாப்பிடாமல் செல்வார்கள். ஆனால் காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். சாப்பிட்ட பின்பு அதுவே அஜீரணத்திற்கும் காரணமாகிவிடும்.

    குறிப்பிட்ட நேரத்தில் காலையில் தினமும் உணவு சாப்பிட பழகிவிட்டால், அடுத்தடுத்த நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு கட்டாயமாக சாப்பிடவைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும்.

    உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறும். உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அதனால் அவசரமாக சாப்பிட்டாலும் அஜீரணம் தோன்றும்.

    காலையில் பள்ளி வேனை பற்றிய பயம் எல்லா பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இருந்து கொண்டிருக்கிறது. வேனை பிடிக்கும் அவசரத்தில் உணவை அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். அல்லது ‘பள்ளி வேன் வந்துவிட்டது’ என்று கூறி, காலை உணவை தவிர்க்கிறார்கள். இதனால் பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் ‘குளூட்டின்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் ‘செலியாக்’ எனப்படுகிறது. இந்த நோய் தாக்கினால் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் வாடை வீசும். வயிறு வீங்கி, வலித்ததுபோல் இருக்கும். இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் உடல்வளர்ச்சி தடைபடும். உடல் எடையும் குறையும்.

    அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் வயிற்றுப்போக்கு குறிப்பிடத்தக்கது. உணவு சாப்பிடும் பழக்கத்தில் ஏற்படும் முரண்பாடு மற்றும் சீதோஷ்ணநிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலத்தில்தான் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

    பால் மற்றும் பால்வகை உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சோயா பால் பருகலாம்.
    பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.
    கொரோனா வைரஸ் பரவியது முதல் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக படிப்படியாக மாறி வருகிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.

    கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலைந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.

    எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

    ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்துவது என்பது நடைமுறையில் இயலாத ஒன்றுதான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகிவிட்டது.

    ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.

    பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது.
    குழந்தைகளின் கல்வி அறிவை பலவழிகளில் மேம்படுத்தமுடியும். குறிப்பாக கருத்துள்ள திரைப்படங்களின் மூலமும் வளர்க்கமுடியும்
    குழந்தைகளின் கல்வி அறிவை பலவழிகளில் மேம்படுத்தமுடியும். குறிப்பாக கருத்துள்ள திரைப்படங்களின் மூலமும் வளர்க்கமுடியும். அத்தகைய திரைப்படங்களை தொகுத்திருக்கிறோம். அவை என்னென்ன திரைப்படங்கள்? அவை எதற்காக தனித்துவமானவை என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    லயன் கிங் : காடுகள் பற்றியும், காட்டு விலங்குகளின் வாழ்க்கை பற்றியும் அழகாக விளக்கும் திரைப்படம் இது. விலங்குகளின் பெயர், அதன் குணாதிசயம், அவை சாப்பிடக்கூடிய உணவு வகைகள், வாழ்க்கை முறை பற்றி குழந்தைகளை கவரும் வகையில் படமாக்கி உள்ளனர். அதனால் வன உயிரியியல் பூங்காவிற்கு சென்று வந்த உணர்வை, ‘லயன் கிங்’ திரைப் படம் நிச்சயம் உண்டாக்கும்.

    வாட்ஸ் ஆன் யுவர் பிளேட்:

    ஆரோக்கியமில்லாத துரித உணவின் வரலாற்றையும், துரித உணவு சாப்பிடுவதால் ஏற்படும் உடல் சீர்கேட்டையும், இந்த ஆவணப்படம் விளக்குகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகள் எந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும், எதை தவிர்க்க வேண்டும், காய்கறி பழங்களில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளன, எந்த குறைபாட்டிற்கு எந்த காய்கறி பழங்களை சாப்பிடவேண்டும் என்பது போன்ற பல ஆரோக்கிய விஷயங்களை இந்த படம் அழுத்தமாக பேசுகிறது.

    அப் : ஒரு வீடு பலூன்களின் மூலம் வானில் பறந்தால் எப்படி இருக்கும்?, இதையே ‘அப்’ என்ற அனிமேஷன் திரைப்படமாக உருவாக்கி உள்ளனர். நகைச்சுவை காட்சி களுக்கு மத்தியில், குழந்தைகள் முதியவர்களிடம் எப்படி பழகுவது, குழந்தை-முதியோர்களுக்கான உறவு எப்படி இருக்கவேண்டும்... போன்ற பல உறவு எதார்த்தங்களை அப் திரைப்படம் விளக்குகிறது. கூடவே பல அறிவியல் விந்தைகளையும் சொல்லித்தருகிறது.

    மார்ச் ஆப் பெங்குவின் : அண்டார்டிகா கண்டத்தின் நில அமைப்பு, அரிய வகை பெங்குவின்களின் வாழ்க்கை முறை, பனிப்பாறை பிளவு, வெப்பமயமாதல்... போன்ற பல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க நினைத்தால், மார்ச் ஆப் பெங்குவின் திரைப்படத்தை போட்டுக்காட்டுங்கள். பூமி யில் இருக்கும் மற்றொரு உலகை இந்த படம் கலக்கலாக காட்டிவிடும்.

    இது போல நிறைய திரைப்படங்கள் உள்ளன. இதன் மூலம் குழந்தைகளின் பொழுதை நல்லவிதமாக கழிக்கவும், கல்வி அறிவை வளர்க்கவும் முடியும். 
    கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் கல்வி திட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிப்பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வித்திட்டிருக்கிறது.
    கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் கல்வி திட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிப்பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வித்திட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நிறைய பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தும் நடைமுறையை பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. வகுப்பறையில் நேருக்கு நேர் மாணவர்களை அமர்த்தி பாடங்களை விளக்கி புரியவைப்பதற்கு பதிலாக வீடியோக்கள் வழியாக வீடுகளில் அமர்ந்திருந்தே கல்வி போதிக்கும் நடைமுறையை கையாளுகிறார்கள். இத்தகைய இணையவழி அணுகுமுறை மாணவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும், கற்றல் வழியிலும் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    “மாணவர்கள் அணுகக்கூடிய டிஜிட்டல் வழி கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் மத்தியில் சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். டிஜிட்டல் நுட்பங்களை கையாள்வதற்கு சிறுவர் களுக்கு கிடைக்கும் சலுகை பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருக்காது” என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

    “இந்தியாவில் தொழில்நுட்பங்களை கையாளும் விஷயத்தில் பெரும்பாலும் பெண் கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி ஆராய்ச்சி அதிகாரி ரியானான் மூர் கூறுகிறார். இதே கருத்தை மூத்த கல்வி ஆராய்ச்சியாளர் லிடியா மார்ஷலும் முன்வைக்கிறார். மேலும் அவர்கள் இருவரும் கூறுகையில், “இந்தியா முழுவதும் வீடு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து டிஜிட்டல் வழி அணுகுமுறை கணிசமாக வேறுபடுகிறது. பாலின சமத்துவமின்மையும் நிலவுகிறது. சிறுவர்கள் தங்கள் சகமாணவிகளை விட கணினி, ஸ்மார்ட்போன் போன்ற பிற தொழில்நுட்பங்கள் வழியாக இணையத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் கிராமப்புறங்களில் ஐந்தில் நான்கு பேர் இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஐந்தில் மூன்று பேர் கம்ப்யூட்டர் பயன்படுத்தாத நிலையில் இருக்கிறார்கள். வசதியானவர்கள் அல்லது நகர்ப்புற வீடுகளில் வசிக்கும் சிறுவர் சிறுமிகளை விட கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மையான சிறுவர்-சிறுமியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த அறிவு குறைவாகவே இருக்கிறது” என்கிறார்கள்.

    தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.கோவிந்தா கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு பள்ளிப்படிப்பு மாறப்போகிறது. டிஜிட்டல் தலையீடுகள் காரணமாக, எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில்நுட்பம் பணக்காரர்களுக்கோ அல்லது நடுத்தர வர்க்கத்துக்கோ வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். வகுப்பில் ஒரு ஆசிரியரின் நேரடி பயிற்சிக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. நேருக்கு நேர் பாடம் கற்பிக்கும் பயிற்சிக்கு மாற்றுமுறையை டிஜிட்டல் நுட்பத்தால் தரமுடியாது” என்கிறார்.

    டெல்லி பல்கலைக்கழக கல்வியாளர் பேராசிரியர் அமிதா ராம்பால், “ஊடரங்குக்கு பிறகு சுமார் 20 சதவீத பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லமாட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெரும் பாலான குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் தவறான நடைமுறையும் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார். 
    குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
    குழந்தைகள் சில சமயங்களில் வாயை திறந்த நிலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது சுவாசம் மூக்கு வழியாக உள்ளிழுக்கப்பட்டு வெளியாகுவதற்கு பதிலாக வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். அப்படி தூங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    சுவாச பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கு வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடலாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும்போது சுவாசப் பாதை அடைப்பட்டு விடுகிறது. அப்போது சுவாசிக்க வாயை உபயோகிப்பார்கள்.

    குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மூக்கின் வழியாக சுவாசிப்பதுதான் நல்லது. ஏனெனில் மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றில் படிந்திருக்கும் தூசுகளை நாசிப் பகுதி நீக்கி சுத்தம் செய்தே உள்ளே அனுப்பும்.

    ஆனால் வாய் வழியாக சுவாசிக்கும்போது தூசுக்கள், அழுக்குகள், வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகள் நேரடியாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். அதனால் சுவாச பாதையில் தொற்றுகள் உருவாகக்கூடும். குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
    ×