என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    சிறு வயதில் இருந்தே குழந்தைகளின் மீது பெற்றோர் தங்களின் ஆசைகளையும், கனவுகளையும் திணிக்கின்றனர். குழந்தைகளின் எண்ணம் என்னவென்று அவர்கள் கவலைப்படுவதில்லை.
    இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயம் என்பார்கள். ஆனால் நாம் இன்றைய குழந்தைகளை சரியான முறையில் வளர்க்கிறோமா? என்றால் சந்தேகம்தான். ஏனென்றால் சிறு வயதில் இருந்தே குழந்தைகளின் மீது பெற்றோர் தங்களின் ஆசைகளையும், கனவுகளையும் திணிக்கின்றனர். குழந்தைகளின் எண்ணம் என்னவென்று அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மன ரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இத்தகைய பாதிப்புகளே குழந்தைகளை தற்கொலைக்கு தூண்ட வாய்ப்பாக அமையும். மன அதிர்ச்சி ஏற்படுத்தும் செயல்கள், தோல்விகள், திட்டுதல், ஒப்பிட்டு பேசுதல் போன்ற சிறு செயல்கள் குழந்தைகளிடையே ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அவர்களின் திறமைக்கு மீறிய எதிர்பார்ப்பை வைப்பதில் நியாயமில்லை. குழந்தைகள் முன்பு தீய வார்த்தைகளை உபயோகித்தல், சண்டை போட்டுக் கொள்ளுதல், அடித்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது குழந்தைகள் ஆழ்மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    குழந்தைகளிடம் தங்களது குடும்பநிலை வறுமையை பேசும்போது பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவது குறையும்போது குழந்தைகள் அன்புக்கு ஏங்கு கின்றார்கள். மேலும், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். சுய மதிப்பு குறையும். தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். சிந்திக்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க பெற்றோர்கள் குழந்தைகளிடம் தோழமை உணர்வுடன் பழகவேண்டும். குழந்தைகள் தோல்வி அடையும்போது அவர்களை திட்டாமல், ஊக்கப்படுத்த வேண்டும். பிற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசாமல் அவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதனை வளர்த்து கொள்ள பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கல்வி ஒன்றே வாழ்க்கையாகாது என்பதை பெற்றோர்கள் தங்கள் மனதில் பதியவைக்க வேண்டும். நேற்றைய கரு இன்றைய குழந்தை; நாளைய சமுதாயம் என்பதை மறந்துவிடக்கூடாது.

    -ஸ்ரீ விவேக், ஈரோடு
    ஒட்டுண்ணிகளான புழுக்கள் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது.
    வயிற்றில் பூச்சி என்பது பிள்ளைகளுக்கு பெரும் தலைவலியை தர, அம்மாக்களையும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள் நம் உடலில் நுழைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை தின்று உங்கள் குழந்தையின் வளர்ச்சியை முடக்க திட்டமிடுகிறது. இந்த புழுக்களை நீங்கள் அவ்வப்போது விரட்டி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நோய்களை தாங்கும் எதிர்ப்பு சக்தி என்பது இல்லாமல் போய்விடும்.

    வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்துக்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒருவித எரிச்சலும் காணப்படும். நார்ச்சத்து உணவை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பிரச்சனையை போக்கலாம். ஒருவேளை நார்ச்சத்து உணவையும் எடுத்துக்கொண்டு இப்பிரச்சனை இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

    மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படவும் கூடும். குழந்தைகளுக்கு இப்பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் பூச்சுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும்.

    வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

    பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும்.

    புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கொறிப்போம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம். உங்கள் குழந்தைகள் இரவில் படுக்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம்.

    அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சுவதாலே ஆகும். உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் ஏற்படும். இந்த அறிகுறிகளெல்லாம் உங்களுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.
    சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத  உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல்  அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

    அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும்  குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட  அழலாம். இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட  பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

    சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை  தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று  அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய்  ஏற்பட்டதாக கருதலாம்.

    இவைகள் மூலம் குழந்தைகள் என்ன  காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

    மாறிவரும் பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் டிசைன்கள் எக்கச்சக்கமாக அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன.
    குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. மாறிவரும் பேஷன் உலகுக்கு ஈடு கொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் டிசைன்கள் எக்கச்சக்கமாக அணிவகுத்துக்கொண்டிருக்கின்றன. அவைகளுள் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஆடை தேர்வுக்கான சுவாரசியத்தை குறைத்துவிடும்.

    குழந்தைகளுக்கு ஏற்ற விதவிதமான ஆடைகள் பற்றிய தொகுப்பு இது!

    தற்போது வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் வாசகம் காண்போரை கணநேரமேனும் புன்னகை பூக்க வைக்கும்.

    சிறுவர்-சிறுமியர் இருவருக்கும் நேர்கோடு மற்றும் கட்டம் போட்ட ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். அவைகளை எல்லா வகையான உடை களுக்கும் மேலாடையாக அணியமுடியும். மேலும் கழுத்து இல்லாத டி-சர்ட்டுகளும் அதிக அழகு தரும்.

    ஆடைகளில் இடம்பிடிக்கும் வண்ணம்தான் குழந்தைகளின் அழகை மெருகேற்றும். அதனால் பல்வேறு வண்ண உடைகளை குழந்தைகளுக்கு அணிவித்துப் பாருங்கள். மேலாடை, கீழாடைக்கான வண்ணங்கள் ஒன்றோடொன்று பொருந்தும்விதமான டிசைன்கள் இருக்கட்டும்.

    ஜீன்ஸ் தற்போது பல்வேறு ரகங்களில் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு ஜீன்ஸ் ஆடைகள் வித்தியாசமான அழகைத்தரும்.

    ஜம்ப்சூட்ஸ் ரக ஆடைகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருத்தமானது. இது பல டிசைன்களில் கிடைக்கிறது. ஜம்ப்சூட்ஸை பொறுத்தமட்டில் ‘டாப், பாட்டம், மேட்சிங்’ பற்றி கவலை கொள்ளவேண்டியதில்லை. விரும்பும் டிசைன்களை சுலபமாக தேர்ந்தெடுத்துவிடலாம்.

    பெண் குழந்தைகளுக்கு இளவரசி தோற்றத்தை ஏற்படுத்தி தரக்கூடிய கவுன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ஒரே வண்ணம், பல டிசைன்கள் என எதிர்பார்க்கும் ரகங்களை கொண்டவையாக இருக்கின்றன. இந்தவகை ஆடைகளுக்கு பெரிதாக அணிகலன்கள் தேவையில்லை. இவை நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் ஆர்ப்பாட்டமற்ற அழகை அள்ளி வழங்கக்கூடியது. எடுப்பான, அட்டகாசமான தோற்றத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.



    திருமணம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் குழந்தைகளுக்கு தாவணி, வேஷ்டி-சட்டை போன்ற கலாசார உடைகளை அணிவித்து அழகு பார்க்கலாம். நீங்களும் அத்தகைய ஆடைகளை அணியலாம். ஆயிரம் டிசைன்களில் ஆடைகள் இருந்தாலும் நம் பாரம்பரிய ஆடைகளுக்கு நிகர் ஏதுமில்லை.

    அழகாக இருக்கிறது என்பதற்காக பாசி மணிகள், ஜிகினாக்கள், ஜிமிக்கி, அலங்கார கற்கள், ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளை குழந்தை களுக்கு தேர்வு செய்யக்கூடாது. அவைகளை வாயில் வைத்து சப்பிவிடக்கூடும். சின்ன முத்துகள், கற்களை குழந்தைகள் தெரியாமல் விழுங்கிவிடவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் அழகை விட சவுகரியமான ஆடைகள் குழந்தைகளுக்கு ஏற்றது.

    கொக்கிகள், சேப்டிபின், கழுத்தை இறுக்கும் வகையில் கயிறு, எலாஸ்டிக் போ‌ன்றவை இ‌ல்லாத ஆடைகளை தேர்ந்தெடுப்பதும் நல்லது.

    குழந்தைகளின் உடலை உறுத்தாத வகையிலும் ஆடைகள் அமைந்திருக்க வேண்டும். குழந்தை களின் சருமம், வயது, தட்ப வெப்பநிலை போன்றவைகளை கருத்தில் கொண்டும் உடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

    அழகிய டிசைன்களை கொண்ட ஆடைகளை தேர்வு செய்தாலும் அது காட்டன் ஆடைகளாக இருந்தால் குழந்தைகளுக்கு இதமாக இருக்கும். வியர்வையால் நனைந்தாலும் ஈரமாகாமல் குழந்தைகளை சளி தொல்லையில் இருந்து காக்கும்.

    ஆடம்பரமாக காட்சியளிக்கவேண்டும் என்பதற்காக அதிக எடை கொண்ட ஆடைகளை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கான ஆடை மென்மையானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறந்தது.
    குழந்தைகள் தானே நடக்கப் பழகும்போதுதான் அவர்களின் மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சியடையும். வாக்கரைப் பயன்படுத்தும்போது உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்காது.
    ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும் எதை எப்போது செய்ய வேண்டும் என்பது, உடலியல் ரீதியாக முன்பே தீர்மானிக்கப்படும். இந்த இயற்கை உடலியக்கங்கள், மனித உடலில் சீராக நடந்துகொண்டே இருக்கும். குப்புறப் படுத்தல், தலையைத் தூக்கிப் பார்த்தல், தவழ்ந்து வருதல், முட்டிப் போடுதல், ஒரு பொருளை பிடித்து எழுந்து நிற்றல் என இந்த வளர்ச்சி நிலையை இயற்கையாகக் கடந்தால் மட்டுமே ஒரு குழந்தை தானாக நடக்க முடியும். அதற்கு முன்னதாக, நாம் வலுக்கட்டாயமாக வாக்கர் மூலம் நடக்கப் பழக்கப்படுத்துவது இயற்கைக்கு முரணானது.

    மனித உடலில் மூளையும் உடல் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தானே நடக்கப் பழகும்போதுதான் அவர்களின் மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சியடையும். வாக்கரைப் பயன்படுத்தும்போது உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்காது. இதனால், மூளை தன் கட்டுப்பாட்டை இழக்கும். இதனால், குழந்தைகள் வேகமாக நடக்க ஆரம்பித்துச் சிறு சிறு விபத்துகளைச் சந்திப்பர். சாதாரணமாக குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது, ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து நடக்கப் பழகுவர். இதுவே, வாக்கரில் உட்கார வைக்கும்போது அந்தக் குழந்தை ஒரு நொடிக்கு மூன்று முறை அடியெடுத்து வைக்கும். இதனால், மூளை கட்டுப்பாடு மீறிச் செயல்படுகிறது.

    பொதுவாக, வாக்கரின் அடிப்பகுதியில் சக்கரத்தைச் சுற்றி வட்டம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனால், குழந்தைக்கு அடிபடாது எனப் பெற்றோர் கருதுகின்றனர். ஆனால், இந்த வட்ட அமைப்பினால் குழந்தையின் கை, கால்களில் அடிபடாமல் இருக்குமே தவிர, தலையில் அடிபடும். அதிக வேகத்துடன் குழந்தை வாக்கரை இழுத்துக்கொண்டு வரும்போது, படிகளில் உருண்டு விழுவது, வாக்கருடன் சேர்ந்து குப்புற விழுவது போன்ற விபத்துகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.



    வாக்கரில் நடக்கும்போது, குழந்தைகள் முழு பாதத்தையும் தரையில் ஊன்றி நடப்பதில்லை. கால் விரல்களை மட்டுமே தரையில் பதிக்கின்றனர். இதனால், கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. வாக்கரை எடுத்த பிறகும் இதே பழக்கத்தில் குழந்தைகள் நடக்க முயற்சி செய்யும்போது பிரச்னையைச் சந்திக்கிறார்கள்.

    குழந்தைகள் தானாக நடக்கத் தொடங்கினால்தான், ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், மீண்டும் எழுந்து நடக்க முயல்வார்கள். வாக்கரைப் பயன்படுத்தும்போது இதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. வாக்கரில் பழகிய குழந்தையானது, தானாக நடக்க ஆரம்பிக்கும்போது, பயம், தடுமாற்றம் போன்றவற்றைச் சந்திக்கிறது.

    உங்கள் குழந்தை நடக்க ஆரம்பிக்க முயற்சி செய்யும் தருவாயில், இரு கைகளை பிடித்துக்கொண்டு நடக்க ஊக்கப்படுத்துங்கள். ஆரம்பத்தில், அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடக்கப் பழக்குங்கள். அதன்பின், சிறிது சிறிதாக நேரத்தை அதிகரிக்கலாம்.
    குழந்தைகளுக்கு சளி, இருமல் உண்டாகும் போது தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு சளி, இருமல் உண்டாகும் போது தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கடலூர் முதுநகர் எஸ்.டி.மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் முகுந்தன் கூறியதாவது:-

    6 மாதம் முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுவது இயற்கையே. சளி, இருமல் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லையென்றால் மருந்து ஏதும் இல்லாமலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.

    மூச்சு விடுவதில் சிரமம், அதிக இருமல் இருப்பின் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் இருப்பின் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். டாக்டரின் ஆலோசனையில்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்லதல்ல.

    சில சமயங்களில் கேடு விளைவிக்கக்கூடும். பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைக்கு சளி, காய்ச்சல் வர 3 முதல் 4 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். பின் 2 வயது வரை தாய்ப்பாலுடன் வீட்டில் சமைக்கும் உணவை தர வேண்டும்.

    எந்த வயதிலும் பிற பாலோ, டின் உணவோ தரக்கூடாது. சுத்தமான காற்று, நீர், சுற்றுப்புறத்தினால் நல்ல பழக்க வழக்கங்களினால் அடிக்களி சளி பிடிப்பது குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தான் இந்த பிரச்சனை வரஆரம்பிக்கும்.
    சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு.

    தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே தூங்கும்போது பால் மற்றும் பழச்சாற்றில் இருக்கும் சர்க்கரை நீண்ட நேரமாக வாயிலேயே இருக்கிறது இதுதான் சொத்தைப் பல்லையும், பல்லில் துவாரத்தையும் உண்டாக்கும்.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்து முடித்த பின்பும் ஒரு சுத்தமான மெல்லிய ஈரத் துணியை ஆட்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு குழந்தையின் ஈறுகளை நன்கு சுத்தம் பண்ணிவிட வேண்டும்.



    என்றைக்கு குழந்தையின் வாயில் பற்கள் தெரிய ஆரம்பிக்கிறதோ அன்றைய தேதியிலிருந்தே குழந்தைகளுக்கு பிரஷ் பண்ண ஆரம்பித்து விட வேண்டும். பிரஷ் கொண்டு அல்ல, நான் ஏற்கனவே சொல்லியபடி மெல்லிய சுத்தமான ஈரத்துணியை வைத்துதான். நிறைய குழந்தைகள் கை சப்புவதை நாம் பார்த்திருப்போம். குழந்தைகள் கை சப்புவது ஒரு இயற்கையான காரியம் தான். குழந்தைகளுக்கு நிரந்தர பற்கள் முளைப்பதற்கு முன்பு இந்த கை சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயதிற்குள் தானாகவே நிறுத்திவிடும்.

    சில குழந்தைகள் பத்து வயதை தாண்டிய பின் கூட விரல் சூப்பும் பழக்கத்தை விடாது. விரல் சூப்பும் பழக்கம் நிறுத்தப்பட வில்லையென்றால் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும்போது பல் சீராக வரிசையாக வளராமல் இடுக்குப்பல் மற்றும் தெத்துப்பல் என்று பற்கள் தாறுமாறாக வளர ஆரம்பித்துவிடும். இதனால் பற்களில் நிறைய பிரச்சினைகள் பின்னாளில் வர வாய்ப்புண்டு.

    நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வந்த நாளிலிருந்தே குழந்தைகளுக்கு பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொடுக்க வேண்டும். பல் டாக்டரைச் சந்தித்து பற்களை பிரஷ் கொண்டு எப்படி துலக்க வேண்டும் என்பதை நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு உறுதியான நல்ல பற்கள் வளர சத்தான உணவு மிகமிக முக்கியம். கால்சியம், புரோட்டின், வைட்டமின் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் பற்களுக்கு கண்டிப்பாக தேவை.
    பிரச்சினைகள், கேலிப் பேச்சுகளால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட சில அறிகுறிகள் தென்படும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ‘உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதை எல்லாம் வழங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை பெற்றோர்களிடம் கேட்டால், பதிலாக சொல்ல அவர்கள் நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார்கள். ‘குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்குகிறோம். சத்துணவுகளை கொடுக்கிறோம். அவர்களுக்கு தேவையான சவுகரியங்களை உருவாக்கித்தருகிறோம். வருடத்திற்கு ஒன்றிரண்டு சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம்’ என்றெல்லாம் கூறுகிறார்கள்.

    பெற்றோர் கொடுத்துக்கொண்டிருக்கும் இவை எல்லாம் குழந்தைகளுக்குத் தேவைதான் என்றாலும், இப்போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர்வதும், அவர்களது மனக்குழப்பத்தை போக்க எதை தற்போது வழங்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதும் மிக அவசியம்.

    பல்வேறு சம்பவங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் பாதிக்கின்றன. சிறுவர், சிறுமிகள் என்ற பேதமின்றி எல்லா குழந்தைகளும் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை உணர்ந்துகொள்ளாமல், ‘நமது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து, அவர்களை நல்லபடியாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று, உண்மையை அறியாமல் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

    குழந்தைகள் தேடிவந்து ஏதாவது பேச வாயெடுத்தால், பல பெற்றோர்கள் அதை கவனமாக நிதானித்து கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா? இதைப்போய் சொல்லவந்துவிட்டாயே!’ என்பதுபோல் அலட்சியமாக பதிலளித்துவிடுகிறார்கள்.

    இப்போது பெரியவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிப்பதுபோல், குழந்தைகளுக்கும் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. அந்த பிரச்சினைகளை குழந்தைகளின் மனநிலையில் இருந்தும், குழந்தைகளின் சூழ்நிலையில் இருந்தும் உணர்ந்தால் மட்டுமே அதை தெளிவாக அணுகி, தீர்வு காணமுடியும். பெற்றோர் தங்கள் சிந்தனையை விசாலப்படுத்திக்கொண்டால் மட்டுமே குழந்தைகளை சரியாக அணுகி, பேசி, அவர்களது பிரச்சினைகளை முழுமையாக உணரமுடியும்.



    பிரச்சினைகள், கேலிப் பேச்சுகளால் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் குழந்தைகளிடம் கீழ்க்கண்ட சில அறிகுறிகள் தென்படும்.

    - தோழிகளிடம் இருந்து விலகி, தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள்.

    - கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவுவார்கள்.

    - பேசுவதற்கு ஆர்வமில்லாமல் ஒதுங்கிக்கொள்வார்கள்.

    - பள்ளிக்கு செல்வதை தவிர்க்கப்பார்ப்பார்கள்.

    - உணவில் ஆர்வம் குறைந்துபோயிருக்கும்.

    - விரக்தியுடன் காணப்படுவார்கள்.

    - அளவுக்கு அதிகமாக கோபம் வரும்.

    - பிடிவாதம் பிடிப்பார்கள்.

    - வீட்டிலும், பள்ளியிலும் சண்டைபோட்டபடி இருப்பார்கள்.

    - தூக்கம் குறையும்.

    - படிப்பில் பின்தங்குவார்கள்.

    - பிரச்சினைக்குரிய பழக்கவழக்கங்களில் ஈடுபட முயற்சிப்பார்கள்.



    சோர்வு, அலட்சியம், விரக்தி, கோபம் போன்றவை குழந்தைகளிடம் வெளிப்படத் தொடங்கிவிட்டாலே பெற்றோர் உடனே அதற்கான காரணங்களை அறிய முன்வரவேண்டும். மாறாக, ‘வேண்டுமென்றே அவ்வாறு குழந்தை செய்கிறது. காலப்போக்கில் அதுவாகவே சரியாகிவிடும்’ என்று நினைத்து, அதற்கு தீர்வு காணாமல் இருந்துவிடக்கூடாது.

    குழந்தைகளின் மனநிலையை உணர்ந்துகொள்ள அவர்களோடு பெற்றோர் அதிக நேரத்தை செலவிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கிவைத்து, அந்த நேரத்தில் மனம்விட்டுப் பேசினாலே போதும்.

    குழந்தைகளுக்காக கவுன்சலிங்கிற்கு வரும் பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் மிகுந்த கடனுக்கு மத்தியிலும், கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்வதாக சொல்கிறார்கள். கடனாலோ, இதர பிரச்சினைகளாலோ பெற்றோருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அதற்கு குழந்தை காரணமில்லை. பெற்றோர் தாங்களாக மனஅழுத்தத்தை உருவாக்கிக்கொண்டு அதற்காக குழந்தைகளை குறைசொல்லக்கூடாது. தங்கள் கவலைகளையும், கஷ்டங்களையும் குழந்தைகளிடம் திணிக்கவும்கூடாது. அவர்களை குழந்தைகளாகவே வாழவும், வளரவும் அனுமதிக்கவேண்டும்.

    குழந்தைகளுக்கு தேவையான முக்கியத்துவமும், அன்பும் பெற்றோர்களிடமிருந்து மட்டுமல்ல, அவர்கள் அதிக நேரத்தை செலவிடும் ஆசிரியர்களிடமிருந்தும் கிடைக்கவேண்டும். சமூகமும் இதில் தனது பங்களிப்பை சரிவர செய்யவேண்டும். ஒட்டுமொத்தமாக அனைவரும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால்தான், அவர்களது மனஅழுத்தம் குறைந்து, அவர்களது மனநிலையில் நல்ல மாற்றமும், மறுமலர்ச்சியும் உருவாகும்.

    - விஜயலட்சுமி பந்தையன்
    குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும்.
    பெற்றோரின் மனம், தீடீரென ஒரு சூழலில் குழந்தை பொய் சொல்லத் தொடங்கும்போது பதற்றம்கொள்கிறது. அதிலும் சில குழந்தைகள் தொடர்ந்து பொய் சொல்லும் போது எங்கே நம் குழந்தை கெட்டுப்போய்விடுமோ என்ற அச்சத்தில் சில பெற்றோர்களுக்கு மனஉளைச்சலே ஏற்பட்டுவிடும். குழந்தைகள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

    ・ உண்மையில் குழந்தைகள் பொய் சொல்வது என்பது அவர்களின் புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தையின் பொய்களுக்குப் பின்னே அவர்களின் நரம்பியல் வளர்ச்சி, சமூகத்தைப் புரிந்துகொள்ளும் பாங்கு, அறிவார்த்தம், உணர்ச்சி நிலை ஆகியன எல்லாம் மேம்பட்டு இருப்பதை உணரலாம் என்கிறார்கள்.

    ・ குழந்தைகள் பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவோ, பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவோதான் பொய் சொல்கிறார்கள்.

    ・ சின்னஞ்சிறு குழந்தைகளிடம் தவறு செய்வதற்கும் தவறான நபராக இருப்பதற்குமான இடைவெளி பற்றிய புரிதல்கள் குறைவாகவே உள்ளன. அதாவது, தவறு செய்வதாலேயே நாம் தவறான நபராகிவிட மாட்டோம் என்ற புரிதல் பெரியவர்களிடம் உண்டு. குழந்தைகள் இப்படிக் கருதுவது இல்லை. தவறு செய்பவர்கள் தவறான மனிதர்கள் என்று கருதுகிறார்கள். எனவே, அவர்கள் செய்த ஏதாவது குறும்பு அல்லது தவறைப் பற்றி விசாரிக்கும்போது, அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ஏனெனில், அதை ஒப்புக்கொள்வது அவர்கள் தவறானவர்கள் என ஒப்புக்கொள்வதற்குச் சமம்.



    ・ குழந்தைகளுக்கு நல்லது, தீயதைச் சொல்லித்தந்து, சமூக ஒழுக்கத்தை, நற்பழக்கங்களை பின்பற்ற வைப்பதற்காக அவர்களைச் சற்று கண்டிப்புடன் வளர்க்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அதற்காக நாம் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது. ஒழுங்காக இருப்பது என்பது பின்பற்றியே ஆகவேண்டிய விதி என்பதைவிடவும் ஒழுங்காக இருப்பது வாழ்க்கைக்கு மிகவும் நல்லது என்பதைப் புரியவைப்பதாக நம் அணுகுமுறை இருக்க வேண்டும். குழந்தைகள் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அறிவார்த்தமாக அவர்களிடம் பிரசங்கிப்பதைவிடவும் உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் உரையாடுவதும் கதைகள் போன்றவற்றின் வாயிலாக புரியவைப்பதும் நல்ல பலன் அளிக்கக்கூடிய முயற்சிகள்.

    ・ தொடர்ந்து பொய் சொல்லும் குழந்தைகளிடம் தோழமையுடன் நடந்துகொள்ளவது அவசியம். அவர்கள் பொய் சொல்லும் போதெல்லாம் அதைக் கண்டுப்பிடித்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருப்பவர்களாக நாம் இருந்தால், குழந்தைகள் நம்மிடம் இருந்து விலகிக்கொண்டே இருப்பார்கள். மாறாக, அவர்கள் பொய் சொல்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியுமா என்று பார்க்கலாம். அதாவது, பொய் சொல்வது ஒரு ஒழுக்கக்கேடான விஷயம் என்பதைப் புரியவைக்க வேண்டியது அவசியம். ஆனால், பொய் சொல்வது தண்டனைக்கான வாய்ப்பை உருவாக்கும் என்கிற மனப்பதிவு இருந்தால் தண்டனை கொடுப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.

    ・ குழந்தைகள் சிறிய குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் போது அவர்களின் நடத்தையைப் பாராட்டுங்கள். ஆனால் அந்த செயல் தவறு என்பதைப் புரியவையுங்கள். சிறிய சிறிய பரிசுகள், எளிய பாராட்டுக்கள் போன்றவை சிறந்த பலன்களைத் தரும்.

    ・ குழந்தைகள் பொய் சொல்வது ஒரு இயல்பான செயல்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தும்போது அவர்களுக்குப் பொய் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை எனும் நெருக்கடியை ஏற்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் அவர்கள் பொய்யர்கள் எனக் குற்றம்சாட்டாதீர்கள். ஆனால், பிரச்னை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச் சொல்லுங்கள்.
    குழந்தைகளின் உடல், உள்ளம், ஆன்மா என அனைத்தும் முழு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் உடற்பயிற்சியும், விளையாட்டும் மிகவும் அவசியம்.
    இன்றைய காலத்தில் விளையாட்டு என்பது பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதில்லை. உடல், உள்ளம், ஆன்மா என அனைத்தும் முழு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் உடற்பயிற்சியும், விளையாட்டும் மிகவும் அவசியம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாரதியார் விளையாட்டின் அவசியம் உணர்ந்து பாடியுள்ளார். இன்றுள்ள குழந்தைகளும் விளையாட ஆவலாக உள்ளார்கள். எப்படி தெரியுமா? கணினியிலும், செல்போனிலுமே விளையாட ஆர்வம் காட்டுகிறார்கள். யாரைக் குற்றம் சொல்வது?

    பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தெருவிற்கு செல்வதையும், மண்ணில் விளையாடுவதையும் விரும்பாமல் குழந்தைகளை வீட்டிற்குள்ளே பொத்தி பொத்தி வளர்த்து கூண்டு கிளிகளாக மாற்றி வருகிறார்கள். விளைவு, மாணவர்கள் பிராய்லர் கோழிகளாக வளர்ந்து உடல் உபாதைகளுடன் காணப்படுகின்றனர்.

    வளர்ந்த பெரியவர்களும் உடற்பயிற்சி இன்றி ரோபோக்கள் போல் செயல்படுவதால் பல நோய்கள் உடம்பில் குடியேறி குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுகிறது. அதன் பின்னர் தான் இவர்கள் ஓடோடிச் சென்று நடைப்பயிற்சியும் மேற்கொள்கிறார்கள். காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை காலம் கடந்த பிறகு செய்ய முயன்று தோற்றுப் போய் முடங்கி விடுகிறார்கள்.

    பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். கணினி, செல்போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை குழந்தைகள் உணரும்படியாக எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்தி, உடற்பயிற்சியிலும், விளையாட்டிலுமே நலமான வாழ்வு கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நடந்துச் சென்றும், சைக்கிளில் சென்றும் முன்பு செய்து முடித்த வேலைகளுக்கு, இப்போது மோட்டார் சைக்கிள், கார், பஸ் போன்ற வாகனங்களை தேடுகிறோம். அன்று பணம் மிச்சமானதோடு, உடலும் பலம் பெற்றது.

    நீந்துவதற்கு இருந்த ஏரி, குளத்தின் மீது அடுக்குமாடி கட்டி அண்ணாந்து பார்த்து அதிலே ‘சவர் பாத்’ குளியல் போடுகிறோம். படிக்கட்டில் பாதம் பதித்து நடந்தால் கால் வலிக்கும் என லிப்ட் வைத்து விட்டோம். உடல்நலன் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் எந்திரங்களின் வரவால் நம்மை சோம்பேறிகளாக மாற்றியதோடு உடல் நலத்தையும் சேர்த்தே கெடுத்து விட்டன. உயிருக்கு ஆதாரம் உடம்பு அந்த உடம்பை காப்போம்.

    -பழனி
    சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். குழந்தைகளுக்கு சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
    சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள் சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும்.

    மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.



    குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

    அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும். எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை காண்போம்.
    பள்ளி மாணவர்கள் சந்திக்கும் முதல் பொதுத்தேர்வு என்றால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தான். பள்ளி பருவத்தில் இதுவரை நடந்த இறுதி தேர்வுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தேர்வாக அமைவதுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அமையும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அவர்கள் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆசிரியர்கள் கூறிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை காண்போம்.

    மொழிப்பாடத்தில் 100 மதிப்பெண் பெற, எழுத்து பிழைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சந்தி பிழை, ஒற்றுப்பிழை, மதிப்பெண்ணை குறைக்கும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருக்க கூடாது. எழுதிய விடையை வேறு பக்கத்தில் மீண்டும் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. முக்கிய பதில்களில் முன்னுரை, உள் தலைப்பு, முடிவுரை அவசியம் ஆகும். தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம்.

    சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்கக் கூடாது.

    பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர்களிடையே உள்ளது.

    தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும். கேள்விகளை எழுதி விட்டு பக்க எண்களை சரிபார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். அந்த விஷயத்தில் அவசரப்படக் கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலாவதாக வரலாம் என்ற எண்ணத்துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
    ×