என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு எந்த வயதில் பாதாம் பால் கொடுக்கலாம், பாதாம் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் சத்துக்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33% கால்சியம் கொண்டுள்ளது.

    பாதாமை அப்படியே சாப்பிடுவதால் அதன் முழுமையான பலன்களை பெறலாம். ஆனால் பாதாம் பாலாக செய்து குடிக்கும் போது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல், நீர்த்துவிடுகிறது.

    சிலர் ஒரு வயதிற்கு முதலேயே பாதாம் பாலை குழந்தைகளுக்கு தருவார்கள். அது தவறு. ஏனெனில் சில குழந்தைகளுக்கு நட்ஸ் அலர்ஜி உண்டாகலாம்.
    நட்ஸ் அலர்ஜி உண்டானால் வாந்தி, வயிற்று வலி, மூச்சு திணறல், வயிறு இழுத்து பிடிப்பதுபோலுணர்வு, இருமல், சரும தடிப்பு ஆகியவை உண்டாகலாம். இதனால் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசித்துவிட்டு நீங்கள் கொடுக்கலாம்.



    பாதாம் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும். அதோடு பாதாமிலுள்ள சில பண்புகள் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டவை. ஆகவே குழந்தைகளுக்கு கொழுப்பை வரவிடாமால் தடுக்கும். ஆனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமாகும்.

    பொதுவாக 2 வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுக்கலாம். இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நட்ஸ் ஆகும். அதிலுள்ள நார்சத்து இதயத்தை வலுவாக்கும். எலும்புகள் வலுவாகும்.

    நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். நீண்ட ஆயுளை தரும். பாதாமை பாலாக விட அப்படியே கொடுப்பது சிறந்தது. இரவில் ஊற வைத்து மறு நாள் தினமும் இரு பாதாமை சாப்பிட சொல்லுங்கள். புத்திக் கூர்மை, ஆயுள் ஆரோக்கியம் மேம்படும்.
    உங்கள் குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தால் கோடை வெயிலில் இருந்து உங்கள் குழந்தையை காக்க நீங்கள் பல மடங்கு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
    கோடைக்காலம் என்பது நம்மை போன்றவர்களையே வாட்டி வதக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அப்படி இருக்க, பிறந்த மாத குழந்தைகள் எப்படி உணர்வார்கள்? பாவம், நம்மால் தாக்கத்தை வெளிப்படையாக சொல்லிவிட முடியும். ஆனால், அவர்களோ அழமட்டுமே செய்வார்கள்.

    உங்கள் குழந்தைகள் பிறந்து அனுபவிக்கும் முதல் கோடைக்காலமெனில், நீங்கள் குழந்தையின் மீது பல மடங்கு அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

    குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு நீங்கள் ஊட்டும் எந்த ஒரு உணவையும் ஏற்றுக்கொள்ள மறுத்து அழவே செய்வார்கள். அதனால் நீங்கள் முதன்மையாக அவர்களுக்கு தர வேண்டியது தாய்ப்பால் மட்டுமே ஆகும். முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் உங்கள் குழந்தைக்கு அவசியமாக அமைகிறது. தாய்ப்பால் மட்டுமே உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும், தேவையான ஊட்டச்சத்துக்களையும் தரும். அவர்களுடைய 6 மாதத்திற்கு பிறகு பழங்களையும், காய்கறிகளையும் கூட சேர்த்து தரலாம்.



    உங்கள் குழந்தைகள் அறையில் எப்போதும் போதுமான அளவு குளிர் மற்றும் வெப்ப தன்மை இருக்கிறதா? என்பதை அடிக்கடி நீங்கள் பார்க்க வேண்டியது அவசியம்.

    குழந்தைகள் அணியும் ஆடை என்பது பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டியது அவசியமாக சருமத்தை இறுக்கும் ஆடையாக இல்லாமல் இருத்தல் வேண்டும். அதாவது குழந்தையின் ஆடைக்கும் அவர்கள் சருமத்திற்கும் காற்றுப்புகும் அளவு இடைவெளி என்பது காணப்பட வேண்டியது அவசியம். இரு அடுக்குகளாக அவர்கள் ஆடை இருப்பது நல்லது. இதனால் வியர்க்கும்போது மேல் ஆடையை நீக்கி அவர்களுக்கு தேவையான காற்றோட்ட வசதியை நீங்கள் ஏற்படுத்தி தரலாம்.

    குழந்தைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள அவர்கள் உடல் அளவு வெப்பத்தை அவ்வப்போது கவனித்தபடி நீங்கள் இருக்க வேண்டும். குழந்தைகளின் இரண்டு மாதத்திற்கு பிறகு தினமும் குளிப்பாட்டுவதன் மூலமாக அவர்கள் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யலாம்.
    குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம் இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
    கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.

    இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
    நடக்கிறதா?



    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டியவை கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
    அந்தந்த பருவத்திற்கு உண்டான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் அதே நேரத்தில் பாதை தவறாமல் வழி காட்டவும், பள்ளியை விட்டு வெளியில் போனாலும் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம், நம்பிக்கை, துணிச்சலை கல்வி தர வேண்டும்.
    ஓடி விளையாடு பாப்பா, என்றார் பாரதியார். இன்று விளையாட்டு, மகிழ்ச்சி, ஓய்வு நேரம் என்பதை மறந்து பள்ளி விடுமுறை நாளில் ஆனந்தமாக உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்ற உறவுகளை எல்லாம் மறந்து பள்ளி, மதிப்பெண், அது இல்லை என்றால் தனிப் பயிற்சி பள்ளி என்று மாறிப் போயிருக்கிறது.

    “ஒரு மாணவி கூறும் போது வார விடுமுறை என்பது நாங்கள் சென்ட்ரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். மே மாத விடுமுறை என்பது பரோல்” என்றாள். சிரிப்பு வந்தாலும் அதுதானே உண்மை. காலை முதல் இரவு வரை படிப்பு என்றுதான் இருக்கிறது ஒரு பள்ளிக் குழந்தையின் வாழ்க்கை. மனஅழுத்தத்தில் சிக்கி மனநிலை தவறிப் போகிறார்கள். இல்லை எனில் தற்கொலை. இன்று நிறைய மாணவ தற்கொலைகள் நடக்கிறது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வரும் அன்று சில தற்கொலைகள் நடக்கும்.

    ஆனால் இன்று....? பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பு, வியாபாரமாகிப் போன கல்வி முறை, அதிகமாக பள்ளி கட்டணம் வாங்கும் பள்ளிதான் நல்ல பள்ளி, அதிக வீட்டுப் பாடம் தரவேண்டும்.அடிக்கடி தேர்வுகள் வைக்க வேண்டும்.ஞாயிறு அன்றும் பள்ளி, சிறப்பு வகுப்புகள் நடக்க வேண்டும் என்று பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.மழலையர் வகுப்பில் சேர்க்கும் போதே தன் குழந்தை டாக்டர், என்ஜினீயர், வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டும், என் மச்சினன் பையன் எல்.கே.ஜி யில் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண். நூற்றுக்கு நூறு. இவன் தொண்ணூறுதான். எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு என்று புலம்பும் தாயார்.

    குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாற்றி விடுகிறார்கள். கல்வி வியாபாரமாகிப் போன இன்றைய நாளில், பெற்றோர்களுக்கு ஒரு பயம் இருப்பது நியாயம்தான்.தன் குழந்தைகளை நல்லபடியாக செட்டில் ஆகி,நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்ற பரபரப்பு. கோடிக் கணக்கில் பணம் கொட்டிக் கொடுக்க முடியாத நிலை. நீ படிக்கலைன்னா, தெருவுல பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி குழந்தைகள் மனதிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

    பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால்தான் தங்கள் பள்ளிக்கு வருமானம் என்று அவர்களை கட்டிப் போட்டு இடைவெளி இல்லாமல், எந்த ஒரு பொழுது போக்கும் இல்லாமல் புத்தகப்புழுவாக மாற்றி விடுகிறார்கள். கல்வி வியாபார நிறுவனங்கள் . விளையாட்டு, உறவினர்கள்,நண்பர்களுடன் பேச்சு, என்று இல்லாமல் தங்களுக்குள் மூழ்கி, புத்தகம் தவிர வேறு எதையும் தெரியாத குழந்தைகள்,பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்து போனால் நம்பிக்கை இழந்து, உலகை எதிர்கொள்ள முடியாமல் மனமொடிந்து தற்கொலையை நாடுகிறார்கள் இல்லை என்றால் திட்டும் பெற்றோர்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடிப் போகிறார்கள்.

    இன்றைய கல்வி, குழந்தைகளை, தன்னம்பிக்கை இல்லாதவர்களாக, மனப்பாட இயந்திரங்களாகத்தான் மாற்றுகிறது. பள்ளியில் படிக்கும் கால்குலஸ், முக்கோணவியல், தொகையிடுதல், நடைமுறை வாழ்வில் எந்த இடத்திலும் உதவுவது கிடையாது. பள்ளியில் அனைவரிடமும் கலந்து பழகுதல்,அவன் கற்கும் வாழ்வியல் விஷயங்கள், பண்புகள், ஒழுக்க நெறிகள்தான் அவனை நல்ல பாதையில் வழி நடத்துகிறது.



    இப்போது இன்னொரு மன நிலை பரவுகிறது அரசுப் பள்ளிகளில் அந்த மாவட்டம் பொதுத் தேர்வில் அதிக சதவீதம் பெற்று முதலிடத்தில் இருக்கிறது, நம் மாவட்டம் முதலிடம் பெற வேண்டும் என்று ஒரு மனப்பான்மை. அந்தப் பள்ளியில் காலை எட்டு மணி முதல் ஆறு மணி வரை வகுப்புகள். நாமும் அப்படி நடத்த வேண்டும் என்ற எண்ணம். இலவச பஸ் பாஸ் உள்ள சில குழந்தைகள் ஆறு மணிக்கே பஸ் பிடித்தால்தான் எட்டுமணிக்குள் வர முடியும். ஆறு மணியை விட்டால் எட்டு மணிக்கு அடுத்த பேருந்து. பள்ளிக்கு தாமதமாக வந்தால் தலைமை ஆசிரியர் வாசலில் நின்று கண்டிப்பார்.

    பெற்றோர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வர வேண்டும். மாலை பள்ளி விட்டு வீட்டுக்குப் போக எட்டு மணி ஆகி விடும். அதன் பின்னர் வீட்டுப் பாடம் செய்து, அலகுத் தேர்வுக்குப் படித்து, பத்து மணிக்குப் படுத்தால்தான் அடுத்த நாள் ஐந்து மணிக்கு எழுந்து பள்ளிக்கு வார முடியும்.அலகுத் தேர்வு இன்னொரு கொடுமை அவர்களுக்கு. ஒரு தேர்வு என்று நடந்தால் அது முடிந்து அடுத்த நாள் விடைத் தாள்களைக் கொடுத்து, தவறு செய்த பகுதியில் திருப்புதல் பயிற்சி தந்து, அவர்களை செம்மைப்படுத்தினால்தான் அடுத்த தேர்வில் அதே தவறைச் செய்ய மாட்டார்கள். ஆனால் முதல் நாள் முடிந்தால் அடுத்த நாளே அடுத்த அலகுத் தேர்வு ஆரம்பித்து விடும்.

    அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் எல்லோரும் கீழ் நடுத்தர மக்கள். ஆரோக்கியமான உணவு, சூழ்நிலை இல்லை. வறுமை, புத்தி கூர்மை கம்மியாக உள்ள குழந்தைகள்தான் அதிகம் இருப்பார்கள்.தங்கள் ஏழ்மை நிலை குறித்து ஒரு தாழ்வு மனநிலை, ஏக்கம், ஆசை அதன் காரணமாக ஏற்பட்ட கோபம், பொறாமை, தீய மனம் என்று எல்லா கருப்பு உணர்வுகளுடன் இருப்பார்கள்.

    அவர்களை மெதுவாகத்தான் வழிப்படுத்த முடியும். அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அட்டை தொழிற்சாலை இருக்கிறது. மாலை பள்ளி விட்டுப் போனதும் அங்கு வேலைக்குப் போகும் மாணவர்கள் அடுத்த நாள் குளிக்காமல், அழுக்கு சட்டையுடன் பள்ளிக்கு வருவார்கள்.அவனுக்கு நான் ஆங்கிலம், கணிதம் எப்படி மண்டையில் ஏற்ற முடியும் என்று ஒரு ஆசிரியர் கேட்டார். வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு நேரம் வயிறு நிரம்புவது தான் முக்கியம்.

    படிப்பு முக்கியம். கல்வி மட்டுமே அவனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். ஆனால் அது அவனை பயப்படுத்தாத விதத்தில் இருக்க வேண்டும். அறிவைப் பெருக்கிக் கொள்ளத்தான் கல்வி. வெறும் வெள்ளைத் தாளில் அவன் கக்கியதைக் கொண்டு அறிவை எடைபோட முடியாது. பத்தாம் வகுப்பு பாஸ் செய்யாதவர் பெரும் தொழிலதிபராக இருப்பதையும் எம்.பி.ஏ. படித்தவர் அவரிடம் வேலை பார்ப்பதையும் நேரடி வாழ்வில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

    அந்தந்த பருவத்திற்கு உண்டான மகிழ்ச்சியை அனுபவிக்கவும் அதே நேரத்தில் பாதை தவறாமல் வழி காட்டவும், பள்ளியை விட்டு வெளியில் போனாலும் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம், நம்பிக்கை, துணிச்சலை கல்வி தர வேண்டும். வெறும் தேர்ச்சி சதவீதம் காட்டவும், தங்கள் பள்ளிதான் சிறந்தது என்று காட்டவும் கல்வி நிறுவனங்கள் இல்லை. மாணவர்களுக்காக, சிறந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்கவும் தான் கல்வி நிறுவனங்கள். குழவி, கூட்டுக்குள் இருந்து வளைந்து, நெளிந்து முட்டி,மோதி வெளியில் வரும்போது அது உற்சாகமாகப் பறக்கிறது. மாணவனும் அப்படித்தான். பறக்கும் வித்தையை கல்வி கற்றுத் தரவேண்டும். அந்தப் பருவத்தில் அவன் மகிழ்ச்சியைத் தொலைத்து விடாமலிருந்தால் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு வெற்றிதான்.

    எழுத்தாளர் கோபி பிரபா
    வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுட்டி குழந்தைகளுக்கென்று தனி அறை ஒதுக்கும்போது எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
    பல்வேறு பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி கனவு வீடுகளை கட்டமைக்கும்போது அல்லது வாங்கும்போது அவற்றில் சுட்டி குழந்தைகள் சுதந்திரமாக துள்ளித்திரியும் ஒரு இடமாக, அவர்களுக்கென்று ஒரு தனி அறையை ஒதுக்குவது பெருநகரங்களில் வழக்கமாகி வருகிறது. புதிய வீடுகளில் குடியேறும் சமயங்களில் குழந்தைகள் பரபரப்பு அடைவதாக அறியப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அவர்களுக்கென்று தனிப்பட்ட அறை என்பது அவர்களது உற்சாகத்தை அதிகரிக்கும் விஷயம் என்று குழந்தைகள் நல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சுட்டி குழந்தைகளுக்கென்று தனி அறை ஒதுக்கும்போது எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடும் பொதுவான தகவல்களை இங்கே காணலாம்.

    தனி கப்போர்டுகள்

    குழந்தைகள் அறைகளில் பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றை பத்திரமாக வைக்க போதுமான அலமாரிகள் இருக்கவேண்டும். அதன் காரணமாக, பொருட்களை அறையின் ஓரத்தில் போட்டுவிட்டு செல்லாமல், அவற்றிற்குரிய இடத்தில் வைக்கும் பழக்கம் ஏற்படும். குறிப்பாக, அவர்களது ஆடைகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்களுக்கென்று தனித்தனி ‘கப்போர்டுகள்’ இருப்பது நல்லது.

    பராமரிப்புகள்

    பர்னிச்சர்களை அவர்களது உயரத்துக்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் அறைகளில் அமைக்கவேண்டும். சிறிய அளவிலான நாற்காலி, எழுதப்படிக்க பயன்படும் மேஜை, புத்தக அலமாரி, சிறிய அளவுள்ள சோபா என்று குட்டிப்பசங்களின் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரலாம். அவர்கள் அறையை அவர்களே பராமரிக்க கற்று தருவதோடு, பாடப் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை சரியான இடங்களில் வைக்கவும் கற்றுத் தரவேண்டும்.

    தரையை பொறுத்த வரையில் எளிதில் சுத்தம் செய்யக்கூடியதும், அதிகம் வழுக்காததுமான வகைகளே அவர்களுக்கு பொருத்தமானது. தரை விரிப்புகள் விஷயத்திலும் தக்க கவனத்தோடு தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.



    அடிப்படை வசதிகள்

    குழந்தைகளின் படுக்கை கச்சிதமாகவும், சவுகரியமானதாகவும் இருப்பதாக அமைத்து, அதன் கீழ்ப்பகுதியில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் ஆகியவற்றை வைக்க வசதிகள் செய்து தரலாம். மேலும், அவர்களுடைய பொருட்களை அவர்களே பராமரிக்கும்படி இருக்கவேண்டும். அதிகப்படியான வேலைப்பாடுகள் உள்ள பொருட்களைவிடவும், அடிப்படை வசதிகள் கொண்ட பொருட்களே எப்போதும் நல்லது.

    அவர்கள் அறையில் தனிப்பட்ட பாத்ரூம் இருப்பதோடு, குழந்தைகளின் அறை பெற்றோரின் அறையை ஒட்டியவாறு அமைந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் உறக்கத்தில் கனவு கண்டு பயந்து விடும் சமயங்களில் அல்லது அவசரத் தேவைகளின்போது உடனே கவனிக்க வசதியாக இருக்கும். பெற்றோர் அறையிலிருந்து, பிள்ளைகளின் அறைக்கு செல்வதற்கான வழியும் இருக்கவேண்டும்.

    காற்றோட்டம் முக்கியம்

    எல்லாவற்றையும் விட அவர்களது அறையில் காற்று மற்றும் வெளிச்சம் ஆகியவை எளிதாக நுழையும் வசதிகள் வேண்டும். அவர்களது வயதுக்கேற்ப விருப்பங்களும், கற்பனைகளும் மாறுபடுவதை கணக்கில் கொண்டு அறையின் அமைப்புகளில் மாற்றங்களை செய்யலாம்.

    குறிப்பாக, குழந்தைகளின் அறைகளில் உள்ள பர்னிச்சர்களின் முனைகள் கூர்மையாக இல்லாமல், வளவளப்பாக பாலீஷ் செய்து விட்டால், கூரான முனைகள் அவர்களை காயப்படுத்தும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும்.

    அறையின் அருகிலேயே குளியலறை அமைத்தால் பள்ளிக்குக் கிளம்புவதற்கு எளிதாக இருக்கும். அறையில் பால்கனி இருந்தால் அவற்றின் மீது தக்க தடுப்புகளை அமைக்கவேண்டும்.
    மசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.
    குழந்தைகள் மசாஜ் என்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே ஆறுதலைத் தரவல்லது. குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கு இல்லையென்றால் மன அழுத்தம் உருவாகும். மசாஜ் பல உடல் ரீதியான நன்மைகள் நிறைந்தது என்பதோடு குழந்தையின் உணவுச் செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

    குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் சரியான வளர்ச்சிக்கும் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளில் தசை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறது. மசாஜ் ஆஸ்துமா, சர்க்கரை நோய் அல்லது சரும பிரச்சனைகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று.

    புற்று நோயால் அவதியுறும் குழந்தைகளுக்கும் உடம்பு மசாஜ் மன அழுத்தத்தை குறைத்து எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கும் இது மிகவும் பயனளிப்பதாக உள்ளது.

    குழந்தைகளுக்கு மசாஜின் மூலம் கிடைக்கும் நன்மைகள் :

    குழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தவும் அவர்களுடைய தூக்க முறைகளை நெறிமுறைப்படுத்தவும் உதவுகிறது.

    மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆரோக்கியமாக அதாவது எடை சீக்கிரமாக கூடுவர்.



    உணர்ச்சிகளை மேம்படுத்தவும் குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தவும் மசாஜ் உதவுகிறது

    குழந்தைகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது

    உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது

    குழந்தைகள் புத்துணர்ச்சியாகவும் சுறுசுறுப்பாக உணரவும் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. இந்தக் குழந்தைகள் சட்டென எதையும் புரிந்துகொள்ளவும் சமாளிக்கவும் செய்வர்.

    குழந்தைக்கு 15-20 நாட்கள் ஆனவுடனேயே மசாஜ் செய்யத் தொடங்கி விடுங்கள். மசாஜ் செய்த  பின்பு வெதுவெதுப்பான தண்ணீரால் குளிப்பாட்டி விடுவதன் மூலம் உங்கள் குழந்தையை ஆசுவாசப்படுத்தவும் நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.
    குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சனை தொடரும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத் தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள்கூடப் பேசுவார்கள்.

    குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாகத் தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர். கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம்.

    பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான். இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.



    ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கைக் கைவிடாது.

    ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமானது. குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும்.
    ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். இதுதொடர்பாக பெற்றோர், சிறுவர்- சிறுமிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
    ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம்.

    சிறுவர்-சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருக்கின்றன. இதையடுத்து பள்ளிகள், வெளி இடங்களில் பாலியல் தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த கல்வி ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்களை பற்றி கற்பிக்கும் தகவல்கள் படங்களுடன் இடம்பெற இருக்கிறது.

    ஒருவர் தன்னை எத்தகைய நோக்கத்துடன் தொட்டுப் பேசுகிறார் என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைப்பது அவசியம். அதன்மூலம் மற்றவர்களின் தவறான அணுகுமுறையில் இருந்து குழந்தைகளால் தற்காத்து கொள்ள முடியும். இதுதொடர்பாக பெற்றோர், சிறுவர்- சிறுமிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

    * உன் உடல் உனக்கு மட்டும்தான் சொந்தம். அதனை எந்த வகையிலும் தீண்டவோ, காயப்படுத்தவோ மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.

    * எந்த உறுப்புகளெல்லாம் உள்ளாடையால் மறைக்கப்படுகிறதோ அவை உன்னுடைய தனிப்பட்ட உறுப்புகள். உன்னுடைய உடல் ஆரோக்கியத்திற்காக தவிர வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியான அணுகுமுறை அல்ல என்பதை பெற்றோர் விளக்கி கூற வேண்டும்.

    * மனதுக்கு பிடித்தமானவர்கள் இறுக்கமாக கட்டிப்பிடித்தோ, முத்தம் கொடுத்தோ அன்பை வெளிப்படுத்துவார்கள். பெற்றோர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் அப்படி அரவணைப்பதற்கும், ரகசியமாக அப்படி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்படி யாராவது ரகசியமாக செய்தால் உடனே அதனை நம்பிக்கையான பெரியவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும் பெற்றோர் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது.



    * சிலர் குழந்தைகளுக்கு பரிசு, காசு, சாக்லேட் போன்றவைகளை கொடுத்து அவர்களின் சொல்படி நடக்க வைப்பதற்கு முயற்சிப்பார்கள். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் குழந்தைகள் வாங்கக்கூடாது. இதனை பெற்றோர் குழந்தைகளுக்கு தெளிவாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * யாராவது ஒருவர் ரகசிய தொடுதல் செய்கைகளை செய்தாலோ, அதனை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலோ அதுபற்றி குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லவேண்டும். இதனை பெற்றோர்தான் குழந்தைகளுக்கு பக்குவமாக புரிய வைக்க வேண்டும்.

    * யாராவது தவறான எண்ணத் துடன் தொட்டு பேசினால் உடனே ‘அப்படி செய்யாதீர்கள்’ என்று பயமின்றி சத்தமாக சொல்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

    * யாராவது குழந்தைகளுக்கு பிடிக்காத மாதிரியான செய்கைகளில் ஈடுபட்டாலோ, பயம், குழப்பம், தர்ம சங்கடமான நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் தொடுவதற்கு முயற்சி செய்தாலோ சத்தம் போட்டு அவர்களுடைய பிடியில் இருந்து மீள்வதற்கு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * ஒருவர் தவறான எண்ணத்தில் தொடுகிறார் என்பதை உணர்ந்ததும் தயக்கமோ, பயமோ, குழப்பமோ இல்லாமல் நெருக்கமானவர்களிடம் சொல்லி விட வேண்டும். அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் மற்றவர்களிடம் கண்டிப்பாக கூற வேண்டும். அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தயக்கமின்றி சொல்ல வேண்டும்.

    * யாராவது ஒருவர் தவறான எண்ணத்தில் தொடுதல் செய்கையில் ஈடுபட்டு காயப்படுத்தினால் அது குழந்தைகளின் தவறு அல்ல என்பதை பெற்றோர் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். சில சமயங் களில் குழந்தைகளால் வெளியே சொல்ல முடியவில்லை என்றாலோ, அந்த இடத்தில் இருந்து விலகி செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ அவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் இதற்கு அவர்கள் காரணமில்லை. உடனே வெளியே சொல்ல முடியவில்லை என்றாலும் எப்போது மற்றவர்களிடம் சொல்வதற்கான சந்தர்ப்பம் அமையுமோ அப்போதாவது சொல்லிவிட வேண்டும். ஒருபோதும் மனதுக்குள்ளே புதைத்து வைக்கக் கூடாது.
    வீடியோ கேம் விளையாட்டின் முடிவு பெரும்பாலான சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சிறுவர்கள் சந்தோஷமாக பொழுது போக்க வீடியோ கேம் விளையாடுகிறார்கள். பல மணி நேரத்தை வீடியோ கேம்களிலேயே நிறைய குழந்தைகள் செலவிடுகிறார்கள். விளையாட்டில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பு சிறுவர்களிடம் வெளிப்படுவதில் தவறில்லை. அதுவே எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது. ஏனெனில் இந்த விளையாட்டின் முடிவு பெரும்பாலான சிறுவர்களின் மனநலனை பாதிக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. விளையாட்டில் பல்வேறு தடைகளை கடந்து வெற்றி பெற வேண்டியிருக்கும். அது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

    அதேவேளையில் இறுதிகட்டத்தை நெருங்கும் வேளையில் தோல்வியை சந்திக்கும்போது அது மனதை வெகுவாக பாதிப்புக்குள்ளாக செய்து விடும். அதேபோல் ஆரம்பம் முதலே தொடர் தோல்விகளை சந்திக்கும்போது தடுமாற்றம் ஏற்படும். ரிமோட்டின் கட்டுப்பாட்டில் மனம் இயங்கும் சூழல் உருவாகிவிடும். பெரும்பாலான வீடியோ கேம்கள் நாயகன் எப்படி பிரச்சினையில் இருந்து தப்பிக்கிறான் என்பதை சித்தரிக்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு குறுக்கு வழிகளை கையாளும் வித்தைகளையும் வீடியோ கேம்கள் சொல்லி கொடுக்கின்றன.

    அவை குழந்தைகள் மனதில் விபரீத எண்ணங்களை விதைத்துவிடும். வெற்றி பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான சிந்தனையும் மேலோங்கிவிடும். இது தீய பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கு அச்சாரமிடக்கூடும். சில வீடியோ கேம்கள் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்களை சித்தரிக்கும் வகையான பின்னணிகளை கொண்டிருக்கின்றன. குற்ற செயல்களில் இருந்து தப்பிக்க தவறான வழிமுறைகளையும் சொல்லி கொடுக்கின்றன.



    தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் சிறுவர்களின் மூளையின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாகும். அதன் காரணமாக படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்களுடன் செலவிடும் நேரம் குறைந்துபோய்விடும். வீடியோ கேம் விளையாட்டுக்குள்ளேயே முடங்கிபோய்விடுவார்கள். மன அழுத்த பிரச்சினையும் உருவாகிவிடும்.

    வீடியோ கேம் விளையாடுவதில் விடாப்பிடியாக இருக்கும் பிள்ளைகளிடம் அதிரடியான போக்கை கையாண்டு அதில் இருந்து மீளவைக்க முயற்சிக்காதீர்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டை நீங்களே தேர்வு செய்து கொடுங்கள். அந்த விளையாட்டில் தவறான விஷயங்கள் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் விளையாடுங்கள். அதில் தவறான வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தால் அதனை சுட்டிக்காட்டுங்கள்.

    தொடர்ந்து விளையாட ஆசைப்பட்டால் அதில் இருந்து மீள்வதற்கான சில கட்டுப்பாட்டுகளை விதியுங்கள். அதனை செயல்படுத்து கிறார்களா? என்பதை கண்காணியுங்கள். வெளி இடங்களில் மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்துங்கள். நீங்களும் குழந்தையாக மாறி அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள். இத்தகைய செயல்பாடுகள் படிப்படியாக வீடியோ கேம் மோகத்தில் இருந்து மீட்டெடுக்க உதவும்.
    பிறந்த குழந்தையின் வளர்ச்சியில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தாலே ஆட்டிசம் பாதிப்பு இருந்தால் எளிதில் உணரலாம்.
    இன்று (ஏப்ரல் 2-ந்தேதி) உலக ஆட்டிசம் தினம்.

    ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதக் குறைபாடு. இதனை ஒரு நோய் என்றோ, மூளை வளர்ச்சி குறை என்றோ மற்றும் மனவளர்ச்சிக் குறை என்றோ கருதக்கூடாது.

    ஆட்டிசம் என்பது மூளைத் தகவல்களை பயன்படுத்திப் புரிந்து கொள்ளும் திறனை தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாத காரணங்களால் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படும் வித்தியாசங்கள் ஆட்டிசம் என்பதாகும்.

    தாய் கருவுற்றிருக்கும்போது ரூபெல்லா என்னும் தட்டம்மையால் பாதிக்கப்படுவது, கருவுற்ற தாய்மார்கள் மது அருந்துவது, கொகெயின் போன்ற போதை மருந்துகளை உட்கொள்ளுவது முதலியனவும் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டிசம் உருவாக காரணிகளாக அமைகின்றன. எனினும் ஆட்டிசம் உருவாக முழுமையானக் காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.

    பிறந்த குழந்தையின் வளர்ச்சியில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தாலே ஆட்டிசம் பாதிப்பு இருந்தால் எளிதில் உணரலாம். அப்படி இரண்டு வயதுக்குள்ளேயே குறைபாடு கண்டறியப்பட்டால் அதை பெருமளவு சரி செய்வதும் சாத்தியம். பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடின்றி இருப்பர். அனைவரிடமும் சகஜமாக பழகாமல், ஓரிடத்தில் அமராமல் சத்தமிட்டுக் கொண்டே இருப்பர்.

    பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும். தாயின் முகம் பார்த்து சிரிப்பது, பேசுவது என குறிப்பிட்ட மாதங்களில் இந்த வளர்ச்சி தானாக இருக்க வேண்டும். ஆனால், ஆறுமாதங்களாகியும் தாய் முகம் பார்த்து சிரிக்காமல் இருப்பது, 12 மாதங்களான பின்பும் மழலை சப்தங்கள் செய்யாமலிருத்தல், 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்ப திரும்பச் சொல்லுதல் ஆட்டிசத்தின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

    இதுமட்டுமல்லாமல் 18 முதல் 24 மாதங்களில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல் தனியாகவே இருத்தல், கைகளை உதறிக் கொண்டே இருத்தல், ஒரு பொருளையோ நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை, கதை கேட்பதில் விருப்பமின்மை, தூக்கமின்மை, தூங்கும் நேரம் குறைவாக இருத்தல், கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலும் வலியை உணராதிருத்தல், பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருத்தல், சில வேளைகளில் காது கேளாதது போல் இருத்தல், கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது, காரணமற்ற பயம் போன்றவைகளும் ஆட்டிசத்தின் அறிகுறிகளாகும்.

    ஆட்டிசத்தால் பாதிப்படைந்த குழந்தைகள் பயம், ஆபத்து போன்றவற்றை உணரமாட்டார்கள். காரணமில்லாமல் அழுவதும், சோக உணர்ச்சியைக் காட்டுவதும் அவர்களின் இயல்பு. மனம் போன போக்கில் செயல்பட வேண்டும் என்று நினைப்பர்.



    ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீதத் திறனுடன் இருக்க வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்கள் முழு நம்பிக்கையுடனும் கவனத்துடனும் அவர்களைக் கையாள்வதிலும், அவர்களுக்கு தேவையான சிறந்தப் பயிற்சியளிப்பதன் மூலமும் அவர்களிடமுள்ள அந்தத் திறனைக் கண்டறிந்து அதை வெளிக் கொணர முடியும்.

    மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த கட்டுரையில் கூறப்பட்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால் ஆட்டிசம் பாதிப்பு இருக்கும் என்று உடனே முடிவெடுக்கக் கூடாது. இத்தகைய குணாதிசயம் கொண்ட குழந்தைகளை மருத்துவர்கள் நன்றாக பரிசோதித்து மதிப்பீடு செய்த பிறகே ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானதா, இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும். குழந்தைக்குப் பிரச்சினை இருப்பதை ஒன்றரை, இரண்டு வயதிலேயே கண்டறிய முடியும்.

    இந்தக் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே தகுந்த பயிற்சிகள் அளித்து மற்ற குழந்தைகளைப் போல் இவர்களையும் மாற்ற முடியும். ஆட்டிசத்திற்கு இதுதான் சிகிச்சை முறை என்று எதுவும் இல்லை. இதனால் எங்கே செல்வது என்று தெரியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர்.

    ஆரம்ப நிலையிலேயே இந்த குழந்தைகளுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதன் மூலம், குறைந்தது 18 வயதிலேயே அவர்கள் சுயமாக தங்கள் வேலையைச் செய்து கொள்ளும் நிலையை உருவாக்க முடியும். மற்ற குழந்தைகளைப்போல பள்ளிக்கு சென்று படிக்க முடியும். இப்படி அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

    பெற்றோர்கள் கவனத்துடன் செய்ய வேண்டியது தங்கள் குழந்தைகளிடம் ஏதாவது வித்தியாசமான நடைமுறை தெரிந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் உதவியுடன் அதனைக் கண்டறிய வேண்டும். அன்புடன் அவர்களை அரவணைக்க வேண்டும். இதற்கென உள்ள தனி பயிற்சி மையங்களை கண்டறிந்து சேர்க்க வேண்டும்.

    பிரச்சினைக்கு ஏற்றவாறு பேசும் பயிற்சி, பழகும் பயிற்சிகளை உரிய முறைகளில் அளிக்க வேண்டும். இப்படி, அவர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அனுபவித்து அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

    இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளி விவரங்கள் இங்கே இல்லை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பது வருந்தத்தக்க செய்தி. இது குறித்த விழிப்புணர்வை பெருக்க வேண்டியது இச்சமூகத்தின் கடமை.

    டி.கலையரசி, சிறப்புக் கல்வி பயிற்சியாளர்
    பெரும்பாலான குழந்தைகள் உணவு உண்பதில் கவனம் செலுத்தமாட்டார்கள் அதிலும், இரட்டை குழந்தைகளை உணவு உண்ண வைப்பது கடினமான காரியமாகும்.
    குறும்புத்தனமான குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை விட கடினம் என்ன தெரியுமா? இரண்டு குறும்புத்தமான குழந்தைக்கு உணவு ஊட்டுவது. இரட்டை குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்பது கடினமானது. குறிப்பாக அவர்களை தூங்கவைப்பதும், உணவு ஊட்டுவதும் மிகவும் கடினமானது. பெரும்பாலான குழந்தைகள் உணவு உண்பதில் கவனம் செலுத்தமாட்டார்கள் அதிலும், இரட்டை குழந்தைகளை உணவு உண்ண வைப்பது கடினமான காரியமாகும்.

    தினசரி சாப்பாடுகளில் உங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உணவு விருப்பங்களை கொடுங்கள். அவர்களுக்கு நிறைய வகையான உணவுகளை கொடுப்பது ஆர்வமாய் உண்ண செய்யுங்கள்.

    விளையாடிக்கொண்டே உணவு உண்பது என்பது அவர்களை குதூகலப்படுத்தும். இரட்டை குழந்தைகளாய் இருக்கும்போது அவர்களில் யார் முதலில் உணவு உண்கிறார்கள் என்று விளையாட்டை போட்டி வைப்பது சிறந்த வழியாகும். இருப்பினும், வெற்றி பெற்றால் பரிசு கொடுத்து பழக்கவேண்டாம் இது அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும்.



    உங்களின் செல்ல குழந்தைக்கு சரியான நேரத்தில் சாப்பிடுவதை பழக்குங்கள் இது அவர்களுக்கு எதிர்காலத்திலும் பயனளிக்கும். சரியான நேரத்திற்கு சாப்பிடுபவர்களாயின் அவர்கள் உணவில் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே சரியான நேரத்தில் உணவு கொடுப்பதோடு உணவுக்கு முன் குளிர்பானங்களையோ, சிற்றுண்டிகளையோ கொடுக்காதீர்கள்.

    குடும்பமாய் அனைவரும் அமர்ந்து உண்பதை பழக்கமாக வைத்திருங்கள். இருவருமே வேலைக்கு செல்பவர்களாய் இருந்தாலும் முடிந்தவரை இதை பின்பற்ற முயற்சியுங்கள். எல்லோருடனும் சேர்ந்து சாப்பிடும்போது அவர்கள் உங்களை பார்த்து வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அவர்களுக்கு கொடுக்கும் அதே உணவை நீங்களும் முடிந்தவரை உண்ணுங்கள். இது அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் அமையும்.

    குழந்தைகளை சமையல் வேலைகளில் உட்படுத்துங்கள். கடைகளுக்கு செல்லும்போது அவர்களை உடன் அழைத்துச்செல்லுங்கள். நீங்கள் வாங்கும் காய்கறிகளை காட்டுவதோடு, உணவு சமைப்பது எவ்வளவு ஆர்வமான வேலை என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள். இது அவர்கள் உணவை நன்கு உண்ண உதவுவதோடு உணவை வெறுப்பதையும் குறைக்கும்.
    பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி பிரச்சனை குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை.
    ஆட்டிசம், கவனக்குறைவு நோய், அஸ்பெர்கர் நோய், இன்னும் இன்னதென வரையறுக்க முடியாத நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உலகம் முழுக்க அதிகரித்துவருகிறது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி, உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானவர்கள்.

    அமெரிக்காவில் 68 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் பாதிப்போடு பிறக்கிறது. இந்தியாவில், 2012-ம் ஆண்டு கணக்குப்படி, ஒரு கோடி பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறது. பிறக்கும் 88 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் பிரச்னையோடு பிறக்கிறது. இந்தியாவில் இருபது லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    பெற்றோர் தொடங்கி மருத்துவர்கள் வரைக்கும் குழந்தைகள் மன வளர்ச்சி பிரச்சனை குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.  இதுகுறித்து ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கௌதமன் கூறுகையில்,

    மன வளர்ச்சி பிரச்சனை என்பது வரையறுக்கப்பட முடியாதது. எனவே, எந்தக் கட்டத்திலும் இதற்கு மேல் நம் குழந்தைக்கு வளர்ச்சி இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வாழ்நாளின் ஏதேனும் ஒரு கணத்தில் அக்குழந்தைகள் எதையேனும் சாதிக்க முடியும். எனவே, மனதைத் தளர விடாமல் தொடர்ந்து கற்க அவர்களை ஊக்குவியுங்கள். பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்குத் தொடர்ந்து அளியுங்கள். இசை, நடனம், ஓவியம், புதிர்களை அடுக்குதல், ஸ்கேட்டிங் என எல்லா வகை வகுப்புகளையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்துங்கள். அக்குழந்தைக்குள் ஒளிந்திருக்கும் ஏதேனும் ஒரு திறனை நீங்கள் அறிய நேரிடலாம். அது குழந்தையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.



    மன வளர்ச்சி பிரச்சைனைகள் குழந்தைகளுக்கு ஏற்படும்போது அதற்கான காரணத்தை கண்டு முறையான சிகிச்சை அளிப்பதுதான் ஆயுர்வேத சிகிச்சை முறை. அந்த வழியில் பார்க்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மன அல்லது மூளை வளர்ச்சி பிரச்சனைகளுக்கு உடலில் உள்ள சில வேதியல் பொருட்களின் மிக அதிகமான அளவே காரணமாக இருக்கிறது.

    ரத்தத்தில் உள்ள பாதரசம் துத்தநாகம் ஆர்சனிக் தாமிரம் அலுமினியம் மெக்னிசியம் மற்றும் வேறு ஏழு வகையான கனிமங்களின் அளவே எந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் மிக அதிகமாக உள்ள இந்த கனிமங்களை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சரி செய்யும் போது மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம் ஆயுர்வேதத்தில் செய்யப்படும் பஞ்ச கர்மா சிகிச்சைகள் மற்றும் உணவு முறை மாற்றங்கள் உடல் மற்றும் மன பயிற்சிகள் எல்லாம் சேர்ந்த ஒரு சிகிச்சையாக ஒருங்கிணைத்த சிகிச்சையாக கொடுக்க படும் போது எந்த பிரச்சையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம்.

    ஆயுர்வேத சிகிச்சையுடன் சேர்ந்து பேச்சு மற்றும் நடத்தைக்கான பயிற்சியும் சேர்ந்து கொடுக்கப்படும் போது நல்ல முன்னேற்றம் ஏற்படுவதையும் குழந்தையின் ஆரோக்கியம் உடல் மற்றும் மன அளவில் படிப்படியாக மாறி குணம் அடைவதை பார்க்கலாம் என்று கூறினார்.
    ×