என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கி கொண்டிருந்த போது 7 வார்த்தைகள் கூறினார். அதில் 3-ம் வார்த்தை, 4-ம் வார்த்தையாக என்ன கூறினார் என்பதை குறித்து தியானிக்கலாம்.
    இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கி கொண்டிருந்த போது 7 வார்த்தைகள் கூறினார். அதில் 3-ம் வார்த்தை, 4-ம் வார்த்தையாக என்ன கூறினார் என்பதை குறித்து தியானிக்கலாம்.

    பொதுவாக நம்முடைய குடும்பத்திலோ, அல்லது உறவினர்களோ மரித்து போனால், இவர் நல்ல மனிதன், அல்லது எனக்கு ரொம்ப பிடித்தமானவர் இப்படி மரித்துபோனாரே என்று நாம் கண்ணீர் விட்டு அழுவது வழக்கம். ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு பாடுகளை அனுபவித்த போது இயேசுவின் தாயார் மரியாள் அழவேயில்லை.

    ஏனென்றால், இயேசு இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக ரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான். மேலும் சிலுவையில் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை ரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன் இயேசுவின் தாயார் மரியாளுக்கு தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார்.எனவே தான் இயேசு சிலுவையில் மரித்த போது அவரது தாயார் மரியாள் அழவில்லை என்று வேதம் கூறுகிறது.

    இதையெல்லாம் சிலுவையில் தொங்கியபடி பார்த்துக் கொண்டிருந்த இயேசுவும் இவைகளெல்லாம் கடவுளின் சித்தத்தின்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக என்ற தேவனின் கட்டளையின் படி தன் தாயின் எதிர்காலத்தை சிந்தித்து யோவானிடத்தில் தன் தாயை ஒப்படைத்தார்.இது இயேசு கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்க தவறவில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. நாமும் நம்முடைய பெற்றோரை கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    இதைத்தான் இயேசு சிலுவையிலே 3-ம் வார்த்தையாக தம்முடைய தாயை நோக்கி, அதோ உன் மகன் என்றார் பின்பு அந்த சீடரை நோக்கி அதோ உன் தாய் என்று கூறுகிறார் (யோவான்:19-26-27).

    சிலுவையில் தொங்கிய இயேசுவை பார்த்து இவர் தேவனுடைய குமாரன் என்று சொல்லுகின்றனர். பின்னர் இவர் ஏன் மரிக்க வேண்டும். இப்படி பாடுகளை அனுபவிக்க வேண்டும். தேவன் இவரை சிலுவையில் அறையாமல் காப்பாற்றலாமே? என்ற கேள்வி ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றக்கூடும்.

    கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிலும் மேலான வாக்குத்தத்தம் ‘நான் உன்னை விட்டு விலகுவது மில்லை, உன்னை கைவிடுவதுமில்லை’ என்ற வாக்குதத்தம் நிறைவேறும்படியாக நாம் ஒவ்வொருவரையும் கடவுள் கைவிடாதபடியும், நம்மை விட்டு விலகாமல் இருக்கவும். நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் இயேசு என்ற ஒருவர் மீது பழி சுமத்தி இவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக் கப்படுகிறார். எனவே தான் சுத்த கண்களுடைய கடவுள் இயேசுவை கைவிடவேண்டியதாயிற்கு என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.

    இதைத்தான் தேவன் சிலுவையிலே 4-ம் வார்த்தையாக என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் (‘ எலி ஏலி லாமா சபக்தானி) என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார்’ (மத்தேயு 27:46) என்று சொல்லப்படுகிறது.

    நாமும் நம்முடைய தாய், தகப்பனுக்கு கீழ்படியாமல் பாவம் செய்து கொண்டிருக்கிறோமா? அப்படியில்லாமல் நம்முடைய பாவங்களுக்காக இயேசு அன்றே சிலுவையில் அனுபவித்து விட்டார். இனி நாம் பாவம் செய்யக்கூடாது என்று நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு பயந்து, தாய் தகப்பனுக்கு கீழ்படிந்து வாழ்வோம். அப்படி செய்யும் போது நம்முடைய கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    சகோ.பெலிக்ஸ், வீரபாண்டி.
    மூன்றாவது அதிகாரம் ஏன் இந்த அழிவு என்பதை விளக்கக் கூடியதாக அமைகிறது. மனிதநேயமற்ற அசீரியாவின் செயல்களே அதன் அழிவுக்குக் காரணமாய் அமையும் என அறுதியிட்டுச் சொல்கிறார் நாகூம்.
    ‘நாகூம்’ என்பதற்கு ‘ஆறுதல்’ என்று பொருள். ‘நெகேமியா’ எனும் பெயருக்குப் பதிலாக சுருக்கமாக ‘நாகூம்’ என வைப்பதும் அக்கால வழக்கம். இது வெறும் மூன்று அதிகாரங்கள் அடங்கிய மிகச் சிறிய நூல். நாற்பத்து மூன்று வசனங்கள், 1285 வார்த்தைகள் என சட்டென வாசித்து முடிக்கக் கூடிய நூல் இது.

    இறைவாக்கினர் நாகூமுக்கும், இறைவாக்கினர் யோனாவுக்கும் சில நெருங்கிய தொடர்புகள் உண்டு. இருவருமே வட நாடான இஸ்ரேலில் உள்ளவர்கள். இருவருமே இறைவனால் அழைக்கப்பட்டவர்கள். இருவருமே நினிவே நகரத்துக்குச் செல்ல அனுப்பப்பட்டவர்கள். நினிவே, அசீரியாவின் தலைநகர்.

    நினிவே மக்கள் பாவிகளாக இருந்ததால் எச்சரிக்கைக் குரலாக யோனா சென்றார். அப்போது மக்கள் மனம் திரும்பினார்கள். எனவே இறைவன் அந்த நாட்டை அழிக்காமல் மன்னித்து விட்டார்.

    அதன் பின் மீண்டும் அசீரியா பாவத்தின் வழிகளில் நடக்கத் தொடங்கியது. யோனாவுக்குப் பின் நூறு ஆண்டுகள் கடந்தபின் நாகூம் அங்கே இறைவாக்குரைத்தார். அதற்கும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நினிவே நகர் அழிந்தது. அதாவது, யோனா இறைவாக்குரைத்தபின் 150 ஆண்டுகளில் நினிவே இறைவனின் கோபப்பார்வையால் அழிந்தது.

    அசீரியர்களின் ஆட்டம் இஸ்ரேலுக்கும், யூதாவுக்கும் எதிரானதாக இருந்தது. ஒரு முறை இஸ்ரேலுக்கு எதிராக வந்த அசீரியர்கள் 1,85,000 பேரை கடவுளின் தூதர் ஒரே இரவில் வெட்டிச் சாய்த்திருந்தார். இருந்தாலும அசீரியா திருந்தவில்லை.

    நாகூம் இறைவாக்குரைத்தது தான் நினிவேயின் கடைசி சாவு மணி. நினிவேவுக்குக் கடவுள் கொடுத்திருந்த மன்னிப்பின் காலம் முடிந்து விட்டிருந்தது. கடவுளின் கோபம் கொழுந்து விட்டெரிந்த காலம் அது. கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள யாராலும் முடியாது. அப்படிப்பட்ட கோபம் எழுகையில், ‘நிலமே எங்களை விழுங்கி விடு’ என மக்கள் கதறுவார்கள் என திருவெளிப்பாடு நூல் கூறு கிறது.

    இப்போது நினிவே மன்னன் மனம் திரும்ப வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ‘உனது புண் ஆறாது. உன் காயத்துக்கு மருந்தில்லை’ என நினிவேயின் அழிவை தீர்க்கமாக உரைக்கிறார் நாகூம். அசீரியர்களின் அழிவு பிற மக்களுக்கான நற்செய்தியாக மாறும் என்பதை அவரது இறைவாக்கு தெளிவாக்குகிறது.

    நினிவே அழியும் எனும் இறைவார்த்தையை அப்போது யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. காரணம் உலகின் வலிமை மிகுந்த சாம்ராஜ்யமாக அது நிலைபெற்றிருந்தது. நகர் மிகப்பெரிய மதில் சுவர்களால் கட்டிப் பாதுகாக்கப் பட்டிருந்தது. அந்த மதிலின் மேல் பாகம் மூன்று தேர்கள் ஒரே நேரத்தில் சீறிப் பாயுமளவுக்கு அகலமாய் இருந்தது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

    அந்த மதில் சுவரைச் சுற்றி நூற்று ஐம்பது அடி அகலமும், அறுபது அடி ஆழமும் உடைய அகழி வெட்டப்பட்டிருந்தது. எதிரிகள் நுழையவே முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அப்படியே நினிவே முற்றுகையிடப்பட்டாலும் சுமார் இருபது ஆண்டுகள் வரை மக்கள் உயிரைக் காத்துக்கொள்ளுமளவுக்கு பொருட்கள் நகரிலேயே இருந்தன.

    மனிதன் என்ன தான் பாதுகாப்பாய் இருந்தாலும், இறைவனின் கோபத்துக்கு முன் எதுவுமே ஒன்றுமில்லை. இறைவாக்கு நிறைவேறியது. நினிவே அழிந்தது.

    ‘உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்’ எனும் நாகூம் வாக்குக்கிணங்க, நதி பெருக்கெடுத்து நகரின் மதிலை உடைத்தது. பாபிலோனியர்கள் நுழைந்தனர். நகரை தீக்கிரையாக்கினர். கி.மு. 612-ல் நகர் அழிந்து சாம்பலானது. அதன் பின் அது கட்டியெழுப்பப்படவே இல்லை. இன்று அது பாலை நிலமாய் இருக்கிறது. கி.பி. 1820-ல் இந்த இடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர் என்கிறது வரலாற்றுப் பதிவு.

    மிகுந்த இலக்கியச் சுவை வாய்ந்த இந்த நூல் கவிதை நடையில் அமைந்துள்ளது. முதல் அதிகாரம் ‘அக்ரோஸ்டிக்’ எனப்படும் எபிரேய எழுத்து வரிசையில் அமைந்த கவிதை. யூதாவின் மகிழ்வையும், நினிவேயின் அழிவையும் இது மாறி மாறி பதிவு செய்து கொண்டே பயணிக்கிறது. முதல் அதிகாரத்தை அறிவித்தல், அல்லது பிரகடனப்படுத்துதல் எனலாம். இரண்டாவது அதிகாரம், நினிவேயின் அழிவு எப்படி நடக்கும் என்பதை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் நடக்கப் போகும் அழிவை நாகூம் தூய ஆவியின் வெளிப்படுத்தலால் மிகத் தெளிவாகக் கண்டு எழுது கிறார்.

    மூன்றாவது அதிகாரம் ஏன் இந்த அழிவு என்பதை விளக்கக் கூடியதாக அமைகிறது. மனிதநேயமற்ற அசீரியாவின் செயல்களே அதன் அழிவுக்குக் காரணமாய் அமையும் என அறுதியிட்டுச் சொல்கிறார் நாகூம்.

    நினிவேவுக்கு இறைவாக்கு உரைக்கச் சென்ற நாகூம் அதன் பின்னர் நாடு திரும்பவில்லை. அவர் அங்கேயே இறந்து அடக்கம் செய்யப்பட்டார். நாகூம் இறைவாக்கினரின் பெயரால் ஒரு ஊர் அழைக்கப்படுகிறது. அது தான் ‘கப்பர் நாகூம்’. ‘கப்பர்’ என்பதற்கு ‘கிராமம்’ என்பது பொருள். ‘நாகூர் கிராமம்’ என்பதே ‘கப்பர் நாகூம்’. அங்கே தான் இறைமகன் இயேசு போதித்துத் திரிந்தார் என்பது நாம் அறிந்த செய்தி.

    சேவியர்
    அவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.
    சகல உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் வார்த்தையினால் படைத்த கர்த்தரே, பராக்கிரமசாலியாய் உன்னோடு இருக்கும்போது உனக்கு பயம் வேண்டாம். நீதியையும் நியாயத்தையும் பாரபட்சமின்றி அவனவனுடைய கிரியைகளின்படி, சரியாய் நியாயத்தீர்ப்பு செய்கிற நீதிதேவன் உன்னோடு இருக்கும்போது நீ பயப்படாதே.

    ‘கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றார்’. (உபா.31:8)

    உலகத்திலே ஜனங்கள் அநேக காரியங்களை குறித்து பயப்படுகிறார்கள். எப்பொழுதும் பயப்படுகிற மனிதர்களும் இருக்கிறார்கள். இறைவனுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அதிகமாக அன்புகூர்ந்து அவரைத்தேடினால் பயத்தின் ஆவியை எடுத்து போட்டு தேவ பலத்தின் ஆவியை தருவார்.

    சர்வ வல்லவரை சார்ந்துகொண்டு வாழ்பவர்களை ஒரு போதும் அவர் கைவிடுவதில்லை. அவர் வார்த்தைக்கு செவி கொடுத்து முழு இதயத்தோடு, அவரைத்தேடி, நெருங்கிய உறவு வைத்துக்கொண்டால் உன்னை விட்டு அவர் விலக மாட்டார்.

    அவருக்கு பயப்படுகிற மனுஷனுக்கு அவன் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். தேவ நன்மையினால் அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். அவருடைய ரகசியம் அவருக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து அவர்கள் கூப்பிடுதலை கேட்பார். அவர்களுக்கு முன்பாக தேவமகிமை செல்லும்.

    பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்கு பயப்படுகிறவர்களுக்கு அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறது போல தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குவார்.

    ஆண்டவருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் பாக்கியவான். நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கிறார்.

    ‘கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு. அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று அதனால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்’. (நீதி. 14:26,27)

    மழையானது இளம்பயிரின் மேல் பொழிவது போல தேவனுக்கு பயந்தவர்களுக்கு தெளிந்த புத்தியுள்ள ஆவியை பொழிகிறார். அவர்மேல் திடநம்பிக்கை வைத்து, முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால் கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருப்போம்.

    ‘நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள். இயேசுவை நம்புகிறவன் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல இருப்பான். அவன் பிள்ளை களுக்கு அடைக்கலமாக இருப்பார்’.

    மனிதன் பாவம் செய்து பயந்து நடுங்குகிறான். கெட்ட பழக்கத்தில் சென்று அதைவிட முடியாமல் பயப்படுகிறான். கொடிய பழக்கத்தில் சென்று சரீரத்தை கெடுத்துக்கொள்கிறான்.

    பயத்தினால் மரணக்கண்ணிகள் வந்தாலும் நீ மனந்திரும்பி பரிசுத்த வாழ்க்கையை தேடினால், பரிசுத்த ஆவியானவர் உனக்கு உகந்த வாசனையாய் இருப்பார். உன் பாவங்களையும், மீறுதல்களையும் மன்னிப்பார். வேதத்தை வாசிக்கத் தொடங்கினால் உன் இதயத்திலிருந்து, ஜீவ ஊற்றாகிய மகிழ்ச்சி உண்டாகும்.

    ‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்’. (ஏசா.41:10)

    அருள்நாதர் நம்மோடிருக்கும்போது, நாம் அஞ்சத் தேவையில்லை. வாழ்வின் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்கும் கிருபையையும் பெலத்தையும் தருகிறார். சோதனை நேரத்தில் நமக்கு சமாதானம் தரும் ஊற்றாக இருக்கிறார். மனுஷனுக்குப் பயப்படும் பயம் நமக்கு கண்ணியை வருவிக்கும். அவரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

    சாமுவேல் தீர்க்கதரிசி பயத்தோடு பரலோகத்தை பார்த்து மழைக்காக ஜெபித்தபோது உடனடி இடி முழக்கங்களையும், மழையையும் கட்டளையிட்டார். பெருமழை பெய்தது.

    யோசுவா பயத்தோடு ‘ஆயிபட்டணத்தின் மேல் யுத்தத்திற்கு போகலாமா?’ என்று ஜெபித்தபோது, ‘நீ போகலாம்’ என்றார். ‘ஆயியின் ராஜாவையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்’ என்றார். யுத்தத்தில் யோசுவா ஜெயித்தான்.

    அவருக்கு பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். அவர் கவனித்துக் கேட்பார். ‘என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்’ என்றார். ஆமென்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சி. பூமணி, சென்னை-50.
    பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பெங்களூரு சிவாஜிநகரில் பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதாவது மாலை 5.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும், நற்கருணை ஆசீர், மாலை 6.30 மணிக்கு மறையுரைகள், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    31-ந்தேதி நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. காலை 9 மணிக்கு கன்னடத்திலும், காலை 10 மணிக்கு ஆங்கிலத்திலும், காலை 11 மணிக்கு தமிழிலும் திருப்பலி நடக்கிறது. அன்று இரவு 10 மணி முதல் மறுநாள் (1-ந்தேதி) அதிகாலை 4.30 மணி வரை இரவு ஆராதனையும் நடக்கிறது.

    1-ந்தேதி காலை 9 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும், காலை 10 மணிக்கு கன்னடத்தில் கூட்டுத்திருமணமும், காலை 11.30 மணிக்கு தமிழில் கூட்டுத்திருமணமும், திருமண பொன்விழா தம்பதியருக்கான நன்றி திருப்பலி பகல் 1.30 மணிக்கு கன்னடத்திலும், பகல் 2.40 மணிக்கு தமிழிலும் நடக்கிறது.

    6-ந்தேதி சபையினர் மற்றும் இளைஞர் அணியினருக்கான சிறப்பு திருப்பலி காலை 9 மணிக்கு கன்னடத்திலும், காலை 11 மணிக்கு தமிழிலும் நடக்கிறது. 8-ந்தேதி தூய ஆரோக்கிய அன்னையின் பிறப்பு பெருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடக்கிறது. ரசல் மார்க்கெட் சதுக்கத்தில் காலை 9.30 மணிக்கு பெருவிழாவின் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதில் பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பீட்டர் மச்சாதோ கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னையின் அலங்கார தேர் பவனியும், இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீர் மற்றும் அன்னையின் கொடியிறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மேலும் 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தமிழ், கன்னடம், ஆங்கிலம், கொங்கணி, மலையாளம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பேராலய நிர்வாகத்தினர் மற்றும் சபை மக்கள் செய்து வருகிறார்கள்.
    ஒரு மனப்பட்டு நற்குணம் பெற்றவர்களுடன் இறைபணியில் ஈடுபட்டு இந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவராக பல நேரங்களில் நற்பணிகளை முடித்துவிட முடியாது.
    டெலிவிஷனில் ஒளிபரப்பான கிரிக்கெட் ஆட்டத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் மகன் என்னிடம் வந்து விடைத்தாளை நீட்டி “அப்பா கையெழுத்து போடுங்க” என்றான்.

    அந்த விடைத்தாளை வாங்கி சற்று புரட்டிப் பார்த்தேன், நல்ல மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தான். இருந்தாலும் “ஏன்... இவ்வளவு மார்க் தான் வாங்க முடியுமா?. நல்லா படிச்சா தான் நல்ல வாழ்க்கை அமையும். நான் படிக்கும் போது மரத்தடியில் இருந்து படித்தேன், மழையானாலும் மூன்று கிலோமீட்டர் நடந்தே செல்வோம்” என்று என்னுடைய பழைய புராணத்தை ஆரம்பித்தேன்.

    ‘அப்பா நல்ல மார்க் தானே, கையெழுத்து போடுங்க ப்ளஸ்’ என்றான்.

    அறிவுரையை நான் நிறுத்தவில்லை. ‘நன்றாக படித்தால் தான் நல்ல சம்பளம் கிடைக்கும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போய் வேலை செய்ய முடியம், நாலு பேரு மதிப்பாங்க...’ என்று அடுக்கிக்கொண்டே போனேன்.

    மகனின் முகம் சுருங்கியது. சட்டென தன்னுடைய அறைக்குப் போய்விட்டான்.

    மனதுக்குள், ‘நல்ல வாழ்க்கை என்றால் என்ன?’ என்பதை சிந்திக்க ஆரம்பித்தேன்.

    சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் பணம், பொருள், அழகு, பதவி, சொத்து, கார், வீடு, நிலம், செல்வாக்கு என அனைத்தும் அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதுவும் குறிப்பாக மற்றவர்களிடம் இருப்பதைவிட அதிகமாக நம்மிடம் இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

    நல்ல வாழ்க்கை என்பது, ‘நாம் நன்மை நிறைந்தவர்களாக காணப்படவும் செயல்படவும் வேண்டும்’ என்பதை வேதம் கற்றுத்தருகிறது. நல்ல வாழ்க்கை என்பது கடவுள் நம் மேல் வைத்த திட்டத்தை செயல்படுத்துவது எனலாம்.

    ‘ஏனெனில், நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற் செயல்கள் புரிவதெற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்’ (எபேசியர் 2:10).

    நமது நற்குணம் என்பது கடவுள் கொடுத்த கொடை. அவர் கற்றுக்கொடுத்த பாடம். இயல்பிலே நாம் பாவ சுபாவம் உள்ளவர்கள். ஒரு சில பாவங்களை விட்டு வெளியே வர முயற்சி செய்தும் தோல்வியே மிஞ்சும். ஆனால் கடவுளின் உதவியுடன் நம்மை ஆட்கொண்ட பாவத்திலிருந்து விடுதலை பெற்று நல்ல வாழ்க்கை வாழ நம்மால் முடியும்.

    உலக செல்வங்கள் இருந்தாலும் ஒரு சில பாவங்களின் காரணமாக வாழ்க்கையில் தோற்றுப்போன பலரின் வாழ்க்கையை நாம் பார்த்திருக்கிறோம். ஆதலால் கடவுள் கொடுத்த நற்குணத்தை பேணிக்காக்க வேண்டும். நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமெனில் நல்ல சிந்தனை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    ‘உண்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனதில் இருத்துங்கள்’ (பிலிப்பியர் 4:8) என்று வேதம் கூறுகிறது.

    நேர்மையாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் பார்க்கும் தீமையான செயல்களை கண்டு அமைதியாக இருத்தல் கூடாது.

    ‘நீங்கள் ரோமில் இருக்கும்போது ரோமனைப்போல் இருங்கள்’ என்ற பழமொழி எல்லா நேரமும் பொருந்தாது. ஒரு வேளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தீமையான செயல்களில் ஈடுபடும் போது அதற்கு துணை போகக்கூடாது. அதை நீங்கள் கடிந்து கொண்டே ஆக வேண்டும்.

    நல்லவற்றை செய்வதால் தீமை உண்டானால் கவலைப்படாதிருங்கள். ஏனென்றால் நீங்கள் தவறு செய்யவில்லை. ஒரு இலக்கை நோக்கிச் செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி. சொல்லப்போனால் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.

    கடவுள் மேல் நம்பிக்கை வைத்து நற்குணம் படைத்தவர்களிடம் ஐக்கியப்படுங்கள். அது இந்த பாவ உலகத்தில் நல்ல வாழ்க்கை வாழ நமக்கு உதவும்.

    ஒரு மனப்பட்டு நற்குணம் பெற்றவர்களுடன் இறைபணியில் ஈடுபட்டு இந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவராக பல நேரங்களில் நற்பணிகளை முடித்துவிட முடியாது. ஆதலால் நாம் குழுவாக இயங்கும் பொழுது அது மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கத்தை கொடுக்கும்.

    உலகமே போற்றும் அன்னை தெரசா மற்றவர்களுக்காக வாழ்ந்து பல விருதுகளை பெற்றார். அவற்றில் வந்த பணத்தை எல்லாம் வறுமை வயிறுகளுக்குப் பசியாற்றினார். ‘வரவேற்பு அறைகளில் அழகாக தோன்றும் பதக்கங்களை விட வறுமை வயிறுகளின் பசி போக்கும் உணவே உயரியது’ என்று எண்ணினார்.

    உலகின் உயரிய விருதான நோபல் பரிசு அளிக்கப்பட்ட போது உலகமே ஆனந்தித்து. அன்னையோ, ‘மலர்களுக்காய் செலவழிப்பதை என் மழலைகளுக்காய் செலவழியுங்கள்’ என்று சொன்னார்.

    இப்படி மற்றவர்களுக்காக வாழும் வாழ்வல்லவா உலகம் போற்றும் நல்ல வாழ்வு.

    துலீப் தாமஸ், சென்னை. 
    ஏழை எளியோருக்கு இருப்பதை கொடுப்போம், பசியால் மடிவோரை தடுப்போம், தவறு செய்தால் தண்டனை என்பதை விட்டு அவர் திருந்திட நமது அன்பினை தருவோம்
    பாவத்தை விட்டு புண்ணியத்தை சேர்க்க வழிகாட்டும் இந்தருணத்தில் இயேசுவின் பாடுகளை சிலுவைப்பாதையின் வழியே தியானித்து பாவத்தினால் மறத்துபோன நம் மனசாட்சிக்கு உயிர் தருவது இப்புனிதவாரம்.

    விவிலியத்தில் அவர் கூறிய ஊதாரி மைந்தனின் கதைப்பற்றி நாம் அறிவோம். அவன் தன் தந்தையிடமிருந்து தனக்குரிய சொத்துக்களை பிரித்து எடுத்துச்சென்று ஊதாரித்தனமாக செலவழித்து பல்வேறு இன்னல்கள் அடைந்து தன்பாவ செயலுக்காய் மனம் வருந்தி தந்தையிடம் திரும்பி வந்து மன்னிப்பு வேண்டுகிறான். தந்தையும் அவன் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இரக்கம் கொள்கிறார். நாமும் பிறரிடம் இரக்கம் உடையவர்களாய் இருக்க வேண்டுமென அவர் விரும்புகிறார்.

    இரக்கத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் முதியோர்கள், ஏழைகள், உடல் ஊனமுற்றோர், நோயாளர்கள், ஆதரவற்றோர், அனாதைகள், விதவைகள், தனிமையல் வாழும் உள்ளங்கள் இன்னும் எத்தனையோ பேர் நம் கண்முன்னே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களை காணும்போது நம் மனநிலை என்ன? நம்மாலான உதவி கரங்களை நீட்டி அவர்களை உவகை அடைய செய்கிறோமா? அவ்வாறு உதவிசெய் முன்வருவதே இத்தவக்காலத்தில் நாம் எடுக்கும் சிறந்த முடிவாகும். அதற்கு அடிப்படையாக இருப்பது தான் அன்பு. அன்பிருந்தால் இரக்கம் பிறக்கும், இரக்கத்தின் மூலமே நாம் இறைவனை அடைய முடியும்.

    தாவீது அரசன் “ என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது“ என கூறியது போல நம் குற்றங்களையும், பாவங்களையும் சிந்திப்போம். நன்மைகளை மட்டுமே செய்து வந்த இயேசுவுக்கே சிலுவை மரணம் வழங்கினார்கள் யூதகுலத்தினர், காரணம் பொறாமை, சாதி இனவெறி, பதவிவெறி. இன்று நாமும் பல இழிவான காரணங்களுக்கான எத்தனையோ பேரின் உள்ளங்களை சாகடிக்கிறோம். இவை அனைத்தும் இயேசுவுக்கே செய்யும் செயல் என உணருகிறோமா? இனியாவது அவர் சாயலாக உள்ள மனித குலத்தில் இயேசுவை காண்போம்.

    ஏழை எளியோருக்கு இருப்பதை கொடுப்போம், பசியால் மடிவோரை தடுப்போம், தவறு செய்தால் தண்டனை என்பதை விட்டு அவர் திருந்திட நமது அன்பினை தருவோம், தங்கிட இல்லம், உடுத்துவதற்கு உடை உவப்புடன் வழங்குவோம் மலை பிரசங்கத்தில் இறைமகன் உரைத்த வாழ்வு தரும் இறைவார்த்தைகளை மனதில் இருத்துவோம்.

    அருட்சகோதரி. ஆலிஸ் பிரான்சிஸ், கும்பகோணம்.
    முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.
    இஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ், ஓசேயா. ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது.

    முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.

    தன்னைத் தொழுது, தன்னை மட்டுமே அன்பு செய்து வாழ்கின்ற ஒரு மக்கள் இனம் இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாக இருந்தது. அதற்காக பன்னிரண்டு கோத்திரங்கள் கொண்ட இஸ்ரேல் இனத்தை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் மக்களோ இறைவனை விட்டு விலகிச் செல்வதையே தொடர்ந்து விரும்பிக் கொண்டிருந்தனர். சவுல், தாவீது, சாலமோன் எனும் மூன்று மன்னர்களுக்குப் பின் ஒன்றாய் இருந்த இனம், இரண்டானது.

    வட நாடான இஸ்ரேல் பெரிய குழுவானது, பன்னிரண்டில் பத்து கோத்திரங்கள் வடக்கே இணைந்தன. அவர்கள் தாவீதின் வழிமரமற்ற அரச பரம்பரையை உருவாக்கினார்கள். அவர்களுக்கு எருசலேம் தேவாலயமும் இல்லாமல் போக, பெத்தேல் சமாரியா போன்ற இடங்களில் வழிபடத் தொடங்கினர்.

    தென் நாடான யூதா தாவீதின் பரம்பரை அரசாட்சியுடனும், எருசலேம் தேவாலயத்துடனும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

    இஸ்ரேல் நாடு செழுமையாய் இருந்த காலகட்டத்தில் இறைவாக்கு உரைக்க வந்தவர் தான் ஆமோஸ். நாட்டில் வளங்களுக்குக் குறைவில்லை. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆகிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அப்போது கவனிக்கப்படாமல் உதாசீனம் செய்யப்பட்ட ஏழைகள் எனும் ஒரு கூட்டமும் பெருகிக்கொண்டே இருந்தது.

    வீடுகளை ஒருசாரார் வாங்கிக் குவிக்க, வீடின்றி ஒரு சாரார் வாடத் தொடங்கினர். வளங்களோடு ஒரு சாரார் வாழ்க்கை நடத்த, வழியின்றி ஒரு சாரார் வாடி வதங்கினர்.

    செல்வம் அங்கே பிரதானமானது. மனித நேயம் மறைந்து போனது. கையூட்டு எங்கும் தலைவிரித்தாடியது. எங்கும் அநியாயமாய் பணம் சேர்க்கும் நிலை உருவானது. நீதிபதிகளும் நீதிகளை விற்கத் துவங்கினர். பாலியல் குற்றங்கள் பரவத் துவங்கின. மதுவின் கோரத் தாண்டவம் எங்கும் வியாபித்தது.

    ஓய்வு நாள் இறைவனுக்கானது எனும் சிந்தனை மெல்ல மெல்ல மறைய, ஓய்வு நாளிலும் உழைப்போம், பணம் ஈட்டுவோம் எனும் சிந்தனை எங்கும் பரவத் துவங்கியது. அது ஆன்மிகத் தளத்திலும் எதிரொலித்தது. மக்கள் விளைச்சலுக்காகவும், வளத்துக்காகவும் வேறு தெய்வங்களை நாடத் துவங்கினார்கள். தூய்மை என்பது தூரமாய்ப் போனது.

    இந்த காலகட்டத்தில் தான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிரான இறைவனின் குரலாய் வந்தார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆமோஸ் என்பதற்கு ‘துயரத்தைத் தாங்குபவர்’ என்பது பொருள். தென் நாடான யூதாவில், எருசலேமுக்கு பன்னிரண்டு மைல் தொலைவில் வாழ்ந்து வந்தவர். சமத்துவ சமுதாயமே இறைவனின் பார்வை என விளம்பினார். மிகவும் கடுமையான போதனையாய் இவரது போதனைகள் அமைந்திருந்தன.

    பழைய ஏற்பாட்டில் ஆமோஸ் இறைவாக்கினரைப் பற்றிய குறிப்பு ஆமோஸ் இறைவாக்கினர் நூலில் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் மக்களை இறைவன் மீண்டும் தன் வழிக்குக் கொண்டு வர தண்டனைகளைக் கொடுத்தார் என்கிறது பைபிள். செல்வத்தை கொண்டாடிய அவர்களின் விளைச்சலை நிறுத்தினார். வளங்களோடு வாழ்க்கை நடத்திய அவர்களின் நீர் ஆதாரத்தை குறைத்தார். பயிர்களை அழிக்க வெட்டுக்கிளிகளை அனுப்பினார். விலங்குகளை வலுவிழக்கச் செய்தார். மனிதர்களுக்கு நோய்களை அனுப்பினார்.

    ஆமோஸ் இறைவாக்கினர் தொழுகைக் கூடங்களில் ஆன்மிகம் கற்றவரல்ல. வளமான வாழ்க்கை வாழ்ந்தவரல்ல. ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்தவர். அடக்குமுறையின் வலியையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர். ஏழைகளின் உணவான அத்தி மரங்களைப் பராமரித்து வந்தவர். இறைவாக்கினராய் வருவதற்குரிய ஆன்மிக கல்வி அவருக்கு இல்லை. ஆனாலும் இறைவனின் கரம் அவரை வலிமையாய்ப் பற்றிக் கொண்டது. நற்செய்தி அறிவித்தலுக்குத் தேவை கல்வியறிவல்ல, இறையருள் என்பதை இவரது வாழ்க்கை நமக்கு புரிய வைக்கிறது.

    மக்களை அழிப்பேன் என காட்சியின் மூலம் இறைவன் ஆமோஸுக்கு எடுத்துரைக்கிறார். ஆமோஸ் இறைவாக்கினரோ இறைவனிடம் மன்றாடிப் புலம்புகிறார். இறைவன் மனம் மாறி தனது திட்டத்தை மாற்றிக்கொள்கிறார். நமது செபங்கள் இறைவனின் திட்டங்களை மாற்றும் எனும் உண்மையை இந்த நிகழ்வு நமக்குப் புரிய வைக்கிறது.

    ஆமோஸின் இறைவாக்குகள் மக்களை கோபமடையச் செய்கின்றன. காரணம் அவருடைய எச்சரிக்கைகள் மக்களுடைய இதயங்களில் மிகப்பெரிய இடியாக இறங்கின. எட்டு நாடுகளின் மீது அவர் எச்சரிக்கை விடுத்தார். மூன்று நீண்ட உரைகளை ஆற்றினார். ஐந்து குறியீடுகளைப் பேசினார். மூன்று மாற்றங்களைக் குறித்துப் பேசினார்.

    கவித்துவமும், இறை சிந்தனையும் அடங்கிய ஒரு முக்கியமான நூலாய் திகழ்கிறது ஆமோஸ் இறைவாக்கினரின் நூல்.
    மீக்காவின் இறைவார்த்தை சமூக அவலங்களுக்கு நேரான சாட்டையாய் சுழன்றது. இறைவனின் பிள்ளைகள் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டியவர்கள், ஆனால் அவர்களோ இருளின் ஆதிக்கத்தில் இருக்கிறார்களே என அவர் கலங்கினார்.
    பிரபல இறைவாக்கினர் ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு இறைவாக்கினர் மீக்கா.

    ஏசாயா செல்வச் செழிப்புள்ள அரசவைக் குடும்பத்தில் பிறந்தவர். மீக்காவோ, ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அடக்குமுறைக்கு ஆளாகும் சமூகத்தின் பிரதிநிதி. ஆனால் இறைவாக்குகளைப் பொறுத்தவரை ஏசாயாவின் இறைவாக்கோடு ஒத்துப்போகும் இறைவார்த்தைகளைப் பகிர்ந்தவர்.

    இவர் சின்ன இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகிறார். கி.மு.735- களில் இறைவாக்கு உரைத்தவர். இறைமகன் இயேசுவின் பிறப்பை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாய்க் கூறி விவிலியத்தின் மிக முக்கிய இறைவாக்கினராய் மாறியவர்.

    “எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய். ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்” எனும் அவரது இறைவார்த்தையை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது.

    மீக்காவின் இறைவார்த்தை சமூக அவலங்களுக்கு நேரான சாட்டையாய் சுழன்றது. இறைவனின் பிள்ளைகள் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டியவர்கள், ஆனால் அவர்களோ இருளின் ஆதிக்கத்தில் இருக்கிறார்களே என அவர் கலங்கினார்.

    குறிப்பாக மூன்று பிரச்சினைகள் அவரது மனதை அலைக்கழித்தன. ஒன்று சிலை வழிபாடு. தங்களை படைத்து வழிநடத்தும் யாவே தேவனை விட்டு விட்டு வேறு தெய்வங்களை மக்கள் வழிபட்டனர். கடவுளுக்கு எதிரான மிகப்பெரிய பாவமாக மீக்கா இதைப் பார்த்தார்.

    இரண்டாவதாக, மக்களின் ஒழுக்கமின்மை. பாவத்தின் வழிகளில் பயணம் செய்த மக்கள் தங்களுடைய ஆன்மாவை அழுக்கடையச் செய்து கொண்டிருந்தனர். இது தன்னையே அழிக்கின்ற பாவம்.

    மூன்றாவதாக நீதியின்மை. செல்வந்தர்கள் ஏழைகளை அடக்கி கொடுமைப் படுத்தினார்கள். நீதியும் நியாயமும் பணம் இருப்பவர்களின் பக்கமாகவே சார்ந்து கிடந்தன. ஆலயங்களிலும் கையூட்டு நடந்தது. இறைவனின் வார்த்தையை விட பணம் பெற்றுத் தரும் வார்த்தைகளே பகிரப்பட்டன. பிறருக்கு எதிரான குற்றங்கள் மலிந்து விட்டன. வறியவர்கள், விதவைகள் ஆகியோர் நசுக்கப்பட்டனர். பிறருக்கு எதிரான மிகப்பெரிய பாவங்கள் இவை.

    இப்படி கடவுளுக்கு எதிரான, தனக்கு எதிரான, பிறருக்கு எதிரான எனும் மூன்று வகைப் பாவங்களும் மீக்காவின் மனதை நிலைகுலையச் செய்தன. அவரை இறைவன் இறைவாக்கு உரைக்க அழைத்தார். தூய ஆவியின் இயல்புகளோடு, தனது இயல்பும் இணையும் போது அங்கே வலிமையான தீர்க்கதரிசிகள் உருவாகின்றனர்.

    மொத்தம் ஏழு அதிகாரங்கள் அடங்கியது இவரது நூல். 105 வசனங்களும், 3153 வார்த்தைகளும் அடங்கியது. அதில் முதல் மூன்று அதிகாரங்களும் மக்களின் குற்றங்களும், அதற்காக இறைவன் தண்டனை தரப்போகிறார் எனும் எச்சரிக்கையுமாய் அமைகிறது.

    அதன் பின் வருகின்ற இரண்டு அதிகாரங்களும் இறைவன் தர விரும்புகின்ற அமைதியையும், பாதுகாப்பையும் பேசுகிறது. கடைசி இரண்டு அதிகாரங்களும் இறைவனின் இரக்கத்தையும், நீதியையும் பேசுகிறது.

    இறைமகன் இயேசுவின் முதல் வருகையை மட்டுமல்லாமல், இரண்டாம் வருகையைப் பற்றியும் இந்த நூல் பூடகமாய்ப் பேசுகிறது.

    மிக அற்புதமாய்க் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நூலில் இறைவனின் இரண்டு இயல்புகளை மிக நேர்த்தியாக மீக்கா பதிவு செய்கிறார். இறைவன் பாவங்களை வெறுக்கிறவர், அதற்கான தண்டனையைத் தருபவர்.

    அதே நேரத்தில் இறைவன் பாவிகளை நேசிக்கிறவர், அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்பவர். தண்டனை தராத மன்னிப்பு இல்லை, மன்னிப்பு பெறாமல் மீட்பு இல்லை எனும் தத்துவ சிந்தனை இந்த நூலில் காணப்படுகிறது.

    அதனால் தான் ஒவ்வொரு பகுதியையும் எச்சரிக்கையின் ஒலியோடு தொடங்கி, ஆறுதலின் தொனியோடு முடிக்கிறார்.

    இறைமகன் இயேசுவின் சிலுவை மரணம் என்பது உலக பாவங்களுக்காக அவர் ஏற்றுக் கொண்ட தண்டனை. அவருடைய சிலுவை மரணம் என்பது மனிதர்களின் பாவங்களுக்காக அவர் தருகின்ற மன்னிப்பு.

    சிலுவை இல்லாமல் இயேசு மன்னித்திருந்தால் அவர் இரக்கமுடையவர். ஆனால் நீதியற்றவர் எனும் நிலை ஏற்பட்டிருக்கும்.

    மன்னிக்காமல் தண்டனை கொடுத்திருந்தால், அவர் நீதிபரர். ஆனால் இரக்கமற்றவர் எனும் இயல்பு உருவாகியிருக்கும். ஆனால் இறைவனின் இயல்பு இரண்டும் கலந்தது என்பதையே மீக்கா அழகாகப் பதிவு செய்கிறார்.

    எருசலேமிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் தான் அவருடைய ஊர் இருந்தது. அவருடைய இறைவாக்கு பெரும்பாலும் யூதாவை மையமாகக் கொண்டிருந்தாலும், அவர் இஸ்ரேலுக்கு எதிரான இறைவாக்குகளையும் உரைக்கிறார். சுமார் 25 ஆண்டு காலம் இவர் இறைவாக்கு உரைத்தார் என்கிறது இறையியல் வரலாறு.

    நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,

    இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்

    உன் கடவுளுக்கு முன்பாக

    தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர

    வேறு எதை ஆண்டவர்

    உன்னிடம் கேட்கின்றார்

    எனும் அழைப்பே மீக்கா நூலின் வாயிலாக நமக்கு விடப்படுகிறது.

    மிகச்சிறிய, ஆனால் மிக ஆழமான சிந்தனைகள் அடங்கிய இந்த நூலை வாசிப்பது ஒரு இனிய ஆன்மிக அனுபவம்.

    சேவியர்
    திருச்சி புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 62-ம் ஆண்டு பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருச்சி புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 62-ம் ஆண்டு பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் திருப்பலி நடந்தது. இந்த நிலையில் முக்கிய விழாவான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. முன்னதாக கருமண்டபம் அருட்தந்தை தாமஸ் ஜான் ஜூலியன் தலைமையில் மறையுரை நடந்தது. அருட்தந்தை மைக்கில்ராஜ் மறையுரை நடத்தினார்.

    இதில் பங்கு பேரவையினர், பாடற்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவில் தேர்பவனி நடந்தது. இதில் புத்தூர் ஆலய பங்குத்தந்தை ஜான்கென்னடி உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்பவனி ஆலயத்தில் தொடங்கி திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மாருதி மருத்துவமனை, பட்டாபிராமன் பிள்ளை தெரு, காவேரி மருத்துவமனை, பாத்திமா உயர்நிலைப்பள்ளி, புத்தூர் நால்ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை நற்கருணை பெருவிழா திருப்பலி மற்றும் பவனி நடைபெற்றது.
    அழகப்பபுரம் அருகே பொட்டல்குளம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது.
    அழகப்பபுரம் அருகே பொட்டல்குளம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடங்கியது. விழாவின் முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, திருப்பலி போன்றவை நடைபெறும்.

    வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு அன்னையின் தேர் பவனி, தொடர்ந்து அணைக்கரை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டாலின் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், திருவிழாவின் இறுதி நாளான 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு கருங்குளம் அருட்பணியாளர் போஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு பொது அசன விருந்தும் நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்துள்ளனர்.
    கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் தமிழ்நாட்டில் 7-வது திருத்தலமாக உயர்வு பெற்றது.
    உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்கள் ஆலயம், பேராலயம், திருத்தலம் (பசிலிக்கா) என்று பிரிக்கப்படுகிறது. இவற்றில் ஆலயம் என்பது பொதுவாக இருக்கக்கூடியது.

    இதில் ஆலய குருக்கள் இறைப்பணி செய்கின்றனர். பேராலயம் என்பது மாவட்ட தலைநகரங்களில் கத்தோலிக்க பிஷப் (ஆயர்) இறைப்பணி செய்யும் இடமாக விளங்க கூடியது. ஆனால் திருத்தலம் என்பது ஆலயங்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றதாக விளங்கும்.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித தோமையார் பேராலயம் (சென்னை), ஆரோக்கிய மாதா ஆலயம் (வேளாங்கண்ணி), பனிமய மாதா ஆலயம் (தூத்துக்குடி), புனித லூர்து மாதா (பூண்டி), புனித ரட்சகர் (திருச்சி), தூய இருதய ஆண்டவர் (பாண்டிச்சேரி) ஆகிய 6 திருத்தலங்களாக உள்ளன. தற்போது 7-வது திருத்தல சிறப்பு பெற்றதாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் போப்பாண்டவரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்ததாகும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழாவின்போது சாதி, மத பேதமின்றி லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்தநிலையில் பல்வேறு பெருமைக்குரிய இந்த ஆலயம் தற்போது தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கிறிஸ்தவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
    வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நார்பட் தாமஸ் அர்ச்சித்து கொடியேற்றினார். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.

    9-ந் திருநாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது.

    10-ந் திருநாளான நேற்று அதிகாலை அன்னையின் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து ஆயர் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடும், நற்கருணை ஆசீரும் நடந்தது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ தலைமையில் உதவி பங்குத்தந்தை, பங்கு நிதிக்குழு, பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    ×