என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரையுடன் திருவிழா சப்பர பவனி நடந்தது.
    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருப்பலியும், சிறப்பு மறையுரையுடன் கொடியேற்றம் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 6 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது.

    11-ம் திருவிழாவான 10-ந் தேதி காலை 6 மணிக்கு பண்டாரகுளம் பங்கு தந்தை போஸ்கோ குணசீலன் தலைமையில் திருப்பலி, வேலாயுதபுரம் பங்கு தந்தை தலைமையில் மறையுரை, மாலை 7 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரையுடன் திருவிழா சப்பர பவனி நடந்தது. 12-வது திருவிழாவான நேற்று திருவிழா நடைபெற்றது இதையடுத்து காலை 4.30 மணிக்கு வாடியூர் பங்கு தந்தை ஸ்டிமன் தலைமையில் திருப்பலியும், வீரவநல்லூர் பங்குத்தந்தை ஞானதினகரன் மறையுரையும், காலை 10 மணிக்கு திருச்செபமாலை நிகழ்ச்சி, காலை 11.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு பாளையம்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் தலைமையில் திருப்பலியும், சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலாளர் சேவியர்ராஜ் தலைமையில் மறையுரை நடக்கிறது. இன்று (12-ந் தேதி) புதன்கிழமை காலை 4.30 மணிக்கு வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பணியும், பாளை ஆயரின் செயலாளர் சுந்தர் தலைமை மறையுரை, 6 மணிக்கு கோவில்பட்டி பங்குத்தந்தை அலாய்சியஸ் துரைராஜ் தலைமையில் திருப்பலி கொடியிறக்கம் நடைபெற்றது.

    திருவிழாவிற்கு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவில் பங்குத்தந்தை மரியபிரான்சிஸ் தலைமையில் சகாயதாசன், உதவிப் பங்குத் தந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய 124-ம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய 124-ம் ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி இனிகோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை மரிவளன், உதவி பங்குத்தந்தை லியோலின், அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி, என்.எஸ்.பி. ரோடு, தெப்பக்குளம் வழியாக நந்திகோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, சத்திரம் பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து கொடியிறக்கப்பட்டது.

    தேர்பவனியையொட்டி கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி கமிஷனர்கள் விக்னேஷ்வரன், அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    திருத்தூதர் பவுல், தீத்துவுக்கு எழுதிய திருமுகம் “ஆயர் பணித் திருமுகங்கள்” வரிசையில் வருகிறது. விவிலியத்தில் 1 திமொத்தேயு, 2 திமொத்தேயுவுக்குப் பிறகு இடம் பெற்றிருந்தாலும் தீத்து நூலே முதலில் எழுதப்பட்டது என கருதப்படுகிறது.
    திருத்தூதர் பவுல், தீத்துவுக்கு எழுதிய திருமுகம் “ஆயர் பணித் திருமுகங்கள்” வரிசையில் வருகிறது. விவிலியத்தில் 1 திமொத்தேயு, 2 திமொத்தேயுவுக்குப் பிறகு இடம் பெற்றிருந்தாலும் தீத்து நூலே முதலில் எழுதப்பட்டது என கருதப்படுகிறது. இதன் காலம் கி.பி. 63. இதை பவுல் கொரிந்து நகரிலிருந்து எழுதுகிறார்.

    மூன்றே மூன்று அதிகாரங்களும், 46 வசனங்களும் மட்டும் கொண்ட இந்த நூல் மிக முக்கியமான பல செய்திகளை நமக்குத் தருகிறது. குறிப்பாக, திருச்சபைத் தலைவர்களை நியமிப்பதிலும், அமைப்பைக் கட்டமைப்பதிலும் இந்த நூல் நமக்கு பெருமளவில் உதவுகிறது.

    தீத்து ஒரு பிற இன கிறிஸ்தவர். இவர் பவுலுடைய மூன்றாவது நற்செய்தி அறிவிப்புப் பயணத்தில் இணைந்து கொண்டவர். யூதத் தாய்க்குப் பிறந்த திமொத்தேயு யூதர்களிடையே பணிசெய்வதற்கு ஏதுவாக அவருக்கு விருத்தசேதனம் செய்தார் பவுல். ஆனால் பிற இனத்தாரான தீத்துவுக்கு அவர் விருத்தசேதனம் செய்யவில்லை. விருத்தசேதனம் செய்யப்படாத நிலையிலேயே நற்செய்திப் பணியில் தீத்து நுழைகிறார்.

    பவுல் அந்தியோயாக்கியாவிலிருந்து எருசலேம் சென்றபோதும் தீத்துவும் அவரோடு இணைந்து பயணித்தார். பின்னாளில் அவர் கிரேத்துத் தீவில் ஆயராகப் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் தான் பவுல் இந்தக் கடிதத்தை தீத்துவுக்கு எழுதுகிறார்.

    கிரேத்துத் தீவு சுமார் 156 மைல் நீளமும், முப்பது மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவு. எருசலேமில் பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவர் வந்திறங்கினார். அந்த நாளில் எருசலேமில் இருந்த யூதர்களில் பலர் கிரேத்துத் தீவிலிருந்து வந்தவர்கள்.

    தீத்துவைக் குறித்து திருத்தூதர் பணிகளில் லூக்கா எதையும் எழுதவில்லை. ஆனால் பவுல் தனது கடிதங்களில் 13 முறை தீத்துவைக் குறிப்பிடுகிறார்.

    பவுலின் மூலமாக இறைவனை ஏற்றுக் கொண்டவர் தான் தீத்து. அதன் பின் பவுலுடன் நெருக்கமாகிறார். மூன்று முறை பவுல் தீத்துவை கொரிந்து நகருக்கு அனுப்புகிறார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

    கிரேத்துத் தீவில் பவுல் முதலில் நற்செய்தி அறிவித்திருந்தார். அதன் பின் தீத்துவை அங்கே விட்டுச் சென்றார். காலம் செல்லச் செல்ல அங்கே ஆன்மிகத்தின் வெளிச்சம் மங்கிக் கொண்டிருந்தது. அதற்கு என்ன காரணம் என்பதை பவுல் உணர்ந்து கொள்கிறார். மக்களுடைய வாழ்க்கை முறையும், தலைவர்களுடைய குணாதிசயங்களும் திருச்சபையை வலுவாகக் கட்டியெழுப்ப வேண்டும் என அவர் விரும்புகிறார். அதற்கான தெளிவான வழிகாட்டுதலாக இந்தக் கடிதத்தை அமைக்கிறார்.

    குறிப்பாக, எப்படி ஒரு சாட்சியுள்ள, கனி கொடுக்கும் வாழ்க்கை வாழ்வது?, எப்படி திருச்சபையை புனிதமாய்க் காத்துக் கொள்வது? எப்படி போலிப் போதனைகளை எதிர்ப்பது? நல்ல செயல்களைச் செய்வதன் தேவை என்ன? உண்மையைப் போதிப்பதன் தேவை என்ன? திருச்சபைத் தலைவர்களை தேர்வு செய்வது எப்படி? திருச்சபையைக் கட்டுக்கோப்பாய் வழிநடத்துவது எப்படி? என பல்வேறு விஷயங்களை தீத்து திருமுகம் மூலமாக பவுல் விளக்கு கிறார்.

    திருச்சபைத் தலைவர்கள் பாலியல் ஒழுக்கம் கொண்டவர்களாகவும், பிறருடைய நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களிடம் அகந்தை, சுயநலம், முன்கோபம், குடிவெறி, வன்முறை போன்றவை இருக்கக் கூடாது. விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் போன்றவை இருக்க வேண்டும் என மிகத் தெளிவான வரையறையை பவுல் தருகிறார்.

    வயது முதிர்ந்தவர்கள் சரியான பாதையில் நடந்தால் தான் இளம் வயதினர் சரியான பாதையில் நடப்பார்கள். போதனைகளைப் பார்த்தல்ல, வாழ்க்கையைப் பார்த்தே மக்கள் தங்களை சரி செய்து கொள்வார்கள் எனும் சிந்தனை பவுலின் போதனைகளில் இழையோடுகிறது.

    மறுமைக்கான எதிர்நோக்கும், இரண்டாம் வருகைக்காய் நம்மைக் காத்துக் கொள்வதும் இந்த கடிதத்திலும் இடம்பெற்றிருக்கிறது. நாம் உலகின் சிற்றின்பங்களை வெறுத்து, இறைவனை பற்றிக்கொள்ள நமக்கு இறையருள் தரப்பட்டிருக்கிறது. நம்மை நெறிகேடுகளிலிருந்து மீட்பது இறைவனே. நாம் கட்டுப்பாடுடனும், இறை பற்றுடனும், நேர்மையுடனும் வாழ்வது இறைவனின் வருகையில் நம்மை இணைத்துக் கொள்ளவே என்கிறார் பவுல்.

    மக்கள் தீய நாட்டங்களில் இருந்தால் அவர்களைப் பழித்துரைக்க வேண்டாம். காரணம் நாமும் ஒரு காலத்தில் தீய வழிகளில் நடந்தவர்கள் தான். இப்போது நம்மை இறைவன் அவரது இரக்கத்தின் மூலமாக மீட்டு புதுப்பித்திருக்கிறார். எனவே, பிறரும் மனம் மாறி இறைவனை நெருங்க வேண்டும் எனும் சிந்தனை இருக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பழிக்கும் மனநிலை இருக்கக் கூடாது என்கிறார் பவுல்.

    தீத்து நீண்டகாலம் கிரேத்து தீவில் பணியாற்றினார். இவர் மரணமடைந்த காலம் கி.பி. 96 அல்லது கி.பி. 107 என குறிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்கத் திருச்சபை மரபுப்படி இவர் ‘புனித தீத்து’ என அழைக்கப்படுகிறார். ஜனவரி 26-ம் நாளை இவருடைய விழாவாக கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    சேவியர்
    மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றினார். இதனை தொடர்ந்து ஜெபமாலை, ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தை தாஸ் கென்னடி, உதவி பங்குதந்தை பிரபின் சூசடிமை, திருச்சி சலேசிய மாநில முன்னாள் தலைவர் கமில்லஸ், புனித லூர்து அன்னை ஆலய பொருளாளர் மரியதாஸ், ஜான்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நூற்றாண்டு விழாவையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நற்கருணை பவனி நடக்கிறது. இதுபோல் சிகர நிகழ்ச்சியாக, வருகிற 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவான்அம்புரோஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தைகள், உதவி பங்கு தந்தைகள், சலேசியர்கள், அருட்பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5)
    சர்வ ஞானமுள்ள இறைவன் மனிதனை சிருஷ்டித்தபோது அவனை பூமியின் மண்ணினாலே உண்டாக்கினார். மனிதனை மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டினார். தேவன் நம்மேல் நினைவுள்ளவராக இருக்கிறார். நாம் பூமியிலே ஜீவிக்க அவரிடத்திலிருந்து கிருபையும் இரக்கமும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

    தாழ்மையுள்ளவர்களுக்கு

    கிருபையும் இரக்கமும் கிடைக்கும்

    மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (1 பேதுரு 5:5)

    சகல துர்குணத்திற்கும் காரணம் பெருமை. பெருமையுடையவன் எனக்கு எல்லாம் தெரியும், ஒருவரும் எனக்கு போதிக்க வேண்டியதில்லை என்று எல்லாவற்றிலும் எதிர்த்து நிற்பான். அவனிடத்திலிருந்து கோபம், எரிச்சல், பேராசை, பொறாமை என்ற துர்குணங்கள் தோன்றும். பெருமையுடையவன் சுயாதீன ஆவியுள்ளவனாக இருப்பான். நான் செய்வது சரியென்று கூறுவான். அவர்கள் செயல்களோ கொந்தளிக்கும் கடலைப்போல் இருக்கிறது.

    ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்திய போது அவன் விழுந்தான். அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். தன் ஆயுதத்தால் மரித்துப் போனான். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார்.

    தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ள ஒரு மனிதன் பரிகாசிக்கப்படும் போது, நிந்திக்கப் படும்போது, துன்புறுத்தப்படும்போது, அவமானப்படுத்தப் படும்போது தன் உணர்வால் தன் மனதை புண்படுத்தமுடியாது. ஏனென்றால் அவன் தாழ்மையின் சுபாவத்தை அணிந்திருக்கிறான். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.

    தாழ்மையுள்ளவன் ஒருபோதும் இடறல் அடைவதில்லை. தாழ்மை இளைப்பாறுதலான ஜீவிதம். பரிசுத்தமான வாழ்க்கை. தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளை பேசுவார்கள். அவர்கள் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார். இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். பிதா அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார்.

    கண்ணீரின் ஜெபத்திற்கு

    கிருபையும் இரக்கமும் கிடைக்கும்

    ‘ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். (II இரா.20:3)

    எசேக்கியா ராஜா மரணத்துக்கேது வான வியாதியில் இருந்தார். ஏசாயா தீர்க்கத்தரிசி அவரிடத்தில் வந்து ‘நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ என்றார்.

    அப்பொழுது எசேக்கியா ராஜா தன் முகத்தை சுவர்புறமாக திருப்பிக்கொண்டு ஆண்டவரை நோக்கி ‘நான் உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன்’ என்று விண்ணப்பம் பண்ணி அழுது ஜெபித்தார்.

    சர்வ வல்லமையுள்ள தேவன் ஏசாயா தீர்க்கத்தரிசி மூலமாக உடன் பதில் கொடுத்தார். ‘உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரின் ஜெபத்தைக் கண்டேன். இதோ நான் உன்னை குணமாக்குவேன். உன் ஆயுசு நாட்களில் 15 வருடங்கள் அதிகப்படுத்துவேன்’ என்றார்.

    மரணத்தின் வியாதி வந்தபோதும் கண்ணீரின் ஜெபத்தால் பிதாவாகிய தேவனிடத்திலிருந்து இரக்கமும் கிருபையும் கிடைத்தது, அவர் பிழைத்தார்.

    நீடிய பொறுமையுள்ளவர்களுக்கு

    கிருபையும் இரக்கமும் கிடைக்கும்

    கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். (யாத்.34:6)

    கர்த்தர் ஒரு மேகத்தில் சீனாய் மலையின் மேல் இறங்கினார். மோசேயின் அருகே நின்று கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். அவர் தமது 5 குணாதிசயங்களை வெளிப்படுத்தினார். பொறுமையோடு நீடிய சாந்தமுள்ள சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார். நீங்கள் பிறருக்கு நன்மை செய்து அதனால் பாடுபடும்போது பொறுமையோடு சகித்தால் அதுவே தேவனுக்கு பிரியம். இன்று மனிதர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை இல்லை, பொறுமை இல்லை, சாந்தகுணம் இல்லை. அவருடைய குணாதிசயங்களை பெற்று வாழ்கின்றவர்களுக்கு எல்லா செயலிலும் சமாதானம் உண்டாகும். நீடிய பொறுமையுடையவர் களுக்கு அவரிடத்திலிருந்து இரக்கமும் கிருபையும் கிடைக்கும். ஆமென்.

    ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.
    குமரி மாவட்டம் பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் திருத்தலமாக உயர்த்தப்படும் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    குமரி மாவட்டம் பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் திருத்தலமாக உயர்த்தப்படும் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதற்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் செல்வராஜ் தலைமையில் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.

    12-ந் தேதி இரவு கலைத்திறன் போட்டியும், 15-ந் தேதி திருவிழிப்பு நற்செய்தி கொண்டாட்டமும் நடக்கிறது.

    16-ந் தேதி காலை முதல் தொடர்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. இதில் பென்சிகர் தலைமையில் ஜெகன் மறையுரையாற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்கு அருட்பணிப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    எந்த குற்றத்தையும் செய்யாத இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக்கொடுத்தார். அப்படி இயேசுவை சிலுவையில் அறைந்த போது அவருடைய கைகள் மற்றும் கால்கள் ஆணிகளால் அறையப்பட்டது.
    ரோமநாட்டின் சட்டத்தின்படி கொடிய குற்றத்தை செய்தவர்கள் சிலுவையில் அடித்து கொல்லப்படுவர். ஆனால் எந்த குற்றத்தையும் செய்யாத இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய பிலாத்து ஒப்புக்கொடுத்தார். அப்படி இயேசுவை சிலுவையில் அறைந்த போது அவருடைய கைகள் மற்றும் கால்கள் ஆணிகளால் அறையப்பட்டது.

    இப்படி ஆணிகளால் அறையப்பட்ட இயேவின் கைகள் மற்றும் கால்களை குறித்து நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்ப்போம்.

    இயேசுவானவர் குஷ்டரோகிகளை தன் கைகளால் தொட்டு சுகப்படுத்தினார், பசியோடிருந்த 5 ஆயிரம் பேரை போஷித்த கரங்கள் இப்படி அநேக நன்மைகளை செய்த கரங்கள் ஆணிகளால் அறையப்பட்டது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இயேசுவின் கால்களை குறித்து பார்த்தால் கடல் மேல் நடந்த கால்கள், ஒரு தேசத்தில் இருந்து மற்றொரு தேசத்திற்கு செல்ல மக்களை அழைத்துக்கொண்டு கடலை இரண்டாக பிரித்து கடலின் நடுவே நடந்து சென்றனர் என்று வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம்.

    இப்படி இயேசுவின் கைகள் மற்றும் கால்களில் ஆணிகளை பாய்த்து சிலுவையில் அறைந்தனர். அந்த நாட்களில் உலகில் அதிகமாக பேசப்பட்ட மூன்று முக்கிய மொழிகளான கிரேக்க, லத்தீன், எபிரேயு எழுத்துக்களில் இவர் யூதருடைய ராஜா என்று எழுதி அந்த சிலுவைக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எதற்காக என்றால் நமக்காகத்தான் என்று நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    இப்படி இயேசு ஒரு குற்றமும் செய்யாமல் நமக்காக அவருடைய ரத்தம் கல்வாரி சிலுவையில் சிந்தப்பட்டது உண்மையானால், நாம் இப்போது இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் தவறு செய்து கொண்டிருக்கிறோம். நமக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று நாம் இப்போதே சிந்தித்து பார்ப்போம்.

    எனவே, நாங்கள் செய்த தவறுகளுக்காக அன்றே சிலுவை பாடுகளை அனுபவித்தீரே என்று நாம் ஒவ்வொருவரும் இந்த தவக்காலத்தை நினைவு கூர்ந்து இப்போதே இந்த உலகத்தை வெறுத்து இயேசுவின் பிள்ளைகளாய் வாழ நம் வாழ்க்கையை இன்றே ஒப்புக்கொடுப்போம் ஆமென்.

    சகோ.டாக்டர்.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.
    இந்த நூல் இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிக முக்கியமான பல படிப்பினைகளைத் தருகிறது. முக்கியமான மூன்று சிந்தனைகளாக, வலிகளின் வேளைகளிலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.
    திருத்தூதர் பவுலின் வாழ்க்கையின் கடைசி கட்டம். மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த முறை சிறை அனுபவம் அவருக்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அவரை சாதாரண குற்றவாளியாக நடத்துகிறார்கள்.

    பல்வேறு இன்னல்கள், துன்பங்கள், வலிகளுக்கு மத்தியிலும் அவருக்கு திருச்சபை மீதான தாகம் சற்றும் குறையவில்லை. திமொத்தேயுவுக்கு இரண்டாவதாய் ஒரு மடல் எழுதுகிறார். இந்த மடல் கி.பி. 67 -ல் எழுதப்பட்டதாய் நம்பப்படுகிறது.

    பவுல் தனது வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்டு பல அறிவுரைகளை இளையவரான திமொத்தேயுவுக்கு வழங்குகிறார்.

    இந்த மடலின் மிக முக்கியமான மூன்று வார்த்தைகளைக் குறிப்பிட வேண்டுமெனில், ‘பாடுகள்-உண்மை-புனிதம்’ என சொல்லலாம். பாடுகளின் மத்தியிலும் எப்படி விசுவாசத்தையும், உண்மையையும் பற்றிக் கொள்வது?, எப்படி புனிதத்தின் பாதையில் நடைபோடுவது என்பதைப் பவுல் விளக்குகிறார்.

    எந்த வசதியும் இல்லாத கடினமான சூழலில் அவர் இருந்தார் என்பதை, “நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டு வந்த போர்வையையும் நூல்களையும், குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா” எனும் வரிகள் விளக்குகின்றன.

    ஒரு போர்வை கூட இல்லாத சூழலில் குளிர்காலத்தை சந்திக்க இருந்தார் அவர்.

    “குளிர் காலத்திற்குமுன் வர முழு முயற்சி செய்” எனும் அவரது வரிகளில் அந்த வலி புலப்படுகிறது. அந்த சூழலிலும் கூட இறைவார்த்தையை பரப்பவேண்டும் எனும் அவரது தீவிரம் வியக்க வைக்கிறது.

    இறுதி நாட்களில் கொடிய காலங்கள் வரும் எனவும், “தன்னலம் நாடுவோர், பண ஆசையுடையோர், வீம்புடையோர், செருக்குடையோர், பழித்துரைப்போர், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதோர், நன்றியற்றோர், தூய்மையற்றோர், அன்புணர்வு அற்றோர், ஒத்துப்போகாதோர், புறங்கூறுவோர், தன்னடக்கமற்றோர், வன்முறையாளர், நன்மையை விரும்பாதோர், துரோகம் செய்வோர், சிற்றின்பத்தை அதிகம் விரும்புவோர், தற்பெருமை பேசுவோர் ஆகியோர் தோன்றுவர்” எனவும் இறுதி நாளுக்கான எச்சரிக்கையை இந்த நூலில் தருகிறார்.

    தனது கடிதங்கள் ஒவ்வொன்றிலுமே பவுல் கடவுளின் குணாதிசயங்களை விளக்கத் தவறுவதில்லை. இயேசு எனும் மீட்பரைக் குறித்தும், அவருடைய அன்பு, இரக்கம் குறித்தும் பவுல் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் அவருடைய ‘தீர்ப்பு’ குறித்தும் பவுல் எழுதி ஒரு சமநிலையை உருவாக்குகிறார். அதே போல தூய ஆவியானவரைக் குறித்தும், அவரது ஆற்றலைக் குறித்தும் பவுல் எழுதுகிறார்.

    திருச்சபையில் தலைவர்களாக ஆண்களே இருக்க வேண்டும் எனும் சிந்தனை பவுலுக்கு உண்டு. அது அவருடைய ஆயர்பணித் திருமுகங்களான திமொத்தேயு, தீத்து நூல்களில் வெளிப்படுகிறது.

    “பவுலுக்கு அப்படிப்பட்ட சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. இந்த நூலை பவுல் எழுதியிருக்க மாட்டார்” என வாதிடும் விவிலிய அறிஞர்களும் உண்டு.

    பவுல் தனது சிந்தனையில் தெளிவாக இருக்கிறார். ஆண்களும், பெண்களும் இறைவன் படைப்பில் சமம் என்றாலும், இருவருக்கும் இறைவனின் முன்னிலையில் ஒரே அங்கீகாரம் என்றாலும், பணிகளைப் பொறுத்தவரை வெவ்வேறு.

    ஆண்களாகப் பெண்களும், பெண்களாக ஆண்களும் பணி செய்வது இறைவன் உருவாக்கிய சமநிலை அழகை சிதைப்பது என்பது அவருடைய பார்வை.

    திருச்சபையில் உலவிய தவறான போதனைகளுக்கு எதிராக சரியான ஆன்மிக விளக்கம் கொடுப்பதை பவுல் தனது கடிதங்களில் தவறாமல் செய்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் திருச்சபையில் உலவிய தவறான போதனைகள் என்னென்ன என்பதைக் குறித்து வேறுபட்ட சிந்தனைகள் உண்டு.

    இரண்டாம் நூற்றாண்டில் வலுப்பெற்ற ‘நாஸ்டிசிசம்’ எனப்படும் ஞானக்கொள்கையே அந்த தவறான போதனை என்பது பலருடைய முடிவு.

    உதாரணமாக, ‘உடல் என்பது பாவமானது. ஆன்மா என்பது புனிதமானது. எனவே உடலியல் சார்ந்த செயல்கள் எல்லாமே பாவம். புனித வாழ்க்கை வாழவேண்டுமெனில் திருமணம் செய்யக்கூடாது, திருமண உறவில் ஈடுபடக் கூடாது’ என்பது அப்போது பரவியிருந்த ஒரு சிந்தனை. இது கிரேக்க மரபிலிருந்து முளைத்தது.

    உணவு என்பது புனிதத்தின் பிரதிபலிப்பு. எதை உண்ண வேண்டும், எதை உண்ணக் கூடாது எனும் பட்டியலைப் பின்பற்றுவது மிக முக்கியம். சில உணவுகள் தீட்டானவை. உணவே நம்மை புனிதமானாகவோ, அசுத்தமானவனாகவோ மாற்றுகிறது என்பது அப்போது பரவியிருந்த இன்னொரு கொள்கை. இது யூத மரபிலிருந்து பெறப்பட்டது. இந்த இரண்டு சித்தாந்தங்களையும் பவுல் தனது விளக்கத்தின் மூலம் எதிர்கொள்கிறார்.

    இந்த நூல் இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிக முக்கியமான பல படிப்பினைகளைத் தருகிறது. முக்கியமான மூன்று சிந்தனைகளாக, வலிகளின் வேளைகளிலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். புறத்தூய்மையை விட அகத்தூய்மைக்கே மதிப்பு கொடுக்க வேண்டும். எப்போதும் இறைவனை பற்றிக்கொள்ள வேண்டும். என்பனவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த நூலுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. இது தான் திருத்தூதர் பவுல் கடைசியாக எழுதிய திருமுகம்.

    சேவியர்
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன.

    9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு இத்தாலி அருட்பணியாளர் சத்திய நேசன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், 10 மணிக்கு புனித அந்தோணியாரின் தேர்பவனி ஆகியவையும், 10-ம் திருவிழாவான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மெழுகுவர்த்தி பவனி, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2.30 மணிக்கு புனித காணிக்கை அன்னையின் தேர்பவனி, இரவு 8.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் போன்றவையும் நடந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்றோ சர்ச்சில், பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    திருச்சபையின் மூப்பர்களும், உறுப்பினர்களும், விசுவாச வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூலாய் நிலைபெறுகிறது இந்த நூல்.
    திமொத்தேயு எனும் பெயருக்கு, இறைவனை மகிமைப்படுத்துதல், அல்லது இறைவனுக்கு விலைமதிப்பற்றது எனும் பொருள் உண்டு. பெயருக்கு ஏற்றார்போல இறைவனை மகிமைப்படுத்தும் வாழ்வை வாழ்ந்தவர் தான் திமொத்தேயு.

    பவுல் எழுதிய திருமுகங்களில், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு மற்றும் தீத்து ஆகிய மூன்று திருமுகங்கள் ‘ஆயர் பணித் திருமுகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்த திமொத்தேயு முதலாம் மடலை கி.பி. 62, கி.பி. 63-களில் பவுல் எழுதினார்.

    இந்த நூலை பவுல் நேரடியாக எழுதவில்லை. அவரது சிந்தனைகளை உள்வாங்கி அவருடைய சீடர் ஒருவர் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதியிருக்கலாம் எனும் மாற்று சிந்தனையும் விவிலிய அறிஞர்களிடையே உண்டு. அதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் நூலின் எழுத்து நடை, கட்டமைப்பு, இறையியல் சிந்தனை ஆகியவை முக்கியமானவை.

    எனினும் இதை பவுலே எழுதினார் என்பதே பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. இது பவுலின் முதுமைக் காலத்தில் எழுதப்பட்டது என்பதால் மொழிநடையில் மாற்றம் நேர்ந்திருக்கலாம். திருச்சபையும் இயங்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆனதால் அதன் தேவைக்கேற்ப இறையியல் சிந்தனைகளில் மாற்றம் உருவாகியிருக்கலாம், எனும் சிந்தனைகள் ஏற்றுக்கொள்ள வைக்கின்றன.

    விவிலியம் திமொத்தேயுவைப் பற்றி ஏராளமான குறிப்புகளை நமக்குத் தருகிறது. திமொத்தேயுவின் தாய் யூதப் பரம்பரையில் வந்தவர், தந்தையோ கிரேக்கர். லிஸ்திராவைச் சேர்ந்த திமொத்தேயு இரட்டைக் கலாசாரம், நல்ல மொழிஅறிவு போன்றவற்றுடன் வளர்ந்தார். அதுவே நற்செய்தி அறிவித்தல் பணியில் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

    பவுலின் முதல் நற்செய்திப் பயணத்தின் போது கிறிஸ்தவராக மாறிய திமொத்தேயு, அடுத்தடுத்த பயணங்களில் பவுலின் நம்பிக்கைக்குரிய பணியாளராய் உருமாறினார். பின்னர் எபேசுவில் உருவாக்கப்பட்ட திருச்சபையைக் கண்காணிக்கும் ஆயராக அவர் நியமிக்கப்பட்டார். திமொத்தேயு மீது பவுலுக்கு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு என்பதை அவரது மடலின் மூலம் அறிந்து கொள்ளலாம். “என் பிள்ளை” என அவர் திமொத்தேயுவை கனிவுடன் அழைக்கிறார்.

    எபேசுவில் திருச்சபையை வழிநடத்தி வந்த திமொத்தேயுவுக்கு, மாசிடோனியாவிலிருந்து பவுல் எழுதிய கடிதம் இது. திமொத்தேயுவுக்கு வழிகாட்டவும், கடமைகளை நினைவுறுத்தவும் எழுதப்பட்ட மடல்.

    “தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்” என பவுல் தனது திருமுகத்தின் தொடக்கத்திலேயே தவறான போதனையில் மக்கள் வீழ்ந்து விடாதபடி எச்சரிக்கிறார்.

    திருச்சபையைக் கட்டமைக்கும் வழிமுறைகளை பவுல் இந்த நூலில் தருகிறார். எனினும் திமொத்தேயு ஏற்கனவே பவுலிடமிருந்து நிறைய வழிகாட்டல்களைப் பெற்றதால் அதற்கு மேல் என்ன தேவையோ அவற்றையே பவுல் பதிவு செய்கிறார். உதாரணமாக, பல மூப்பர்களின் வழிநடத்தலை பவுல் ஆதரிக் கிறார். அதே நேரம், எத்தனை பேர்? அவர் களின் பணிகள் என்ன? என்பதைப் பற்றிய முழுமையான விளக்கங்களை அவர் கொடுக்கவில்லை. அவற்றை திமொத்தேயு ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்.

    திருச்சபையின் மூப்பர்கள் திறமையாய் திருச்சபையை வழிநடத்துவதும், இறை விசுவாசிகள் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ்வதும், உலகிற்கு வெளிச்சமாய் கிறிஸ்தவர்கள் மாறவேண்டும் என்பதும், முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன. தவறான போதனைகளால் திருச்சபை கறைபடாமல் இருப்பதும், திருச்சபையின் சரியான போதனைகள் பொதுமக்களிடம் பகிரப்பட வேண்டியதும் முக்கியம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருச்சபை எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல, எந்த அளவுக்கு விசுவாசத்தில் ஆழமாக இருக்கிறது என்பதே முக்கியம். வலிமையான தலைமையும், வலிமையான உறுப்பினர்களுமே முக்கியம். ஏராளமான உறுப்பினர்கள் அல்ல, என்பதை பவுலின் வார்த்தைகளின் ஊடே விளங்கிக் கொள்ளலாம்.

    பவுலின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளவும் இந்த கடிதம் நமக்கு உதவுகிறது. இறைவனுக்காகவே வாழ்கின்ற அவரது வாழ்க்கையும், பிறரையும் இறைவனுக்காய் வாழவைக்க வேண்டும் எனும் அவரது விருப்பமுமே அவரது தனிமடல்களில் வெளிப்படுகின்றன.

    சட்டத்துக்கும் இரக்கத்துக்கும் இடையேயான வேறுபாடு, ெஜபத்தின் தேவை, ஆயர் பணிகள், தவறான போதனைகளை அறிதல், இறைவனைப் போல வாழ்தல், விதவைகள் மற்றும் முதியவர் மீதான கரிசனை, புனிதம் பேணல் என பல சிந்தனைகளை திமொத்தேயு முதல் நூலில் பவுல் அழகாகப் பதிவு செய்கிறார்.

    திமொத்தேயு இளம் வயதிலேயே இறைவன் பால் திரும்பியவர், பவுல் மூலம் விருத்தசேதனம் செய்யப்பட்டவர், பவுலின் பயணத்தில் உடன் சென்றவர், துடிப்பானவர், சுறுசுறுப்பாய்ப் பணிசெய்பவர், தூய வாழ்க்கை வாழ்ந்தவர், பவுலின் தீவிரமான ஜெபத்தைப் பெற்றவர், பவுலினால் வலிமைப்படுத்தப்பட்டவர் என திமொத்தேயு பற்றி பல்வேறு விஷயங்களை விவிலியம் பதிவு செய்து வைத்திருக்கிறது.

    திருச்சபையின் மூப்பர்களும், உறுப்பினர்களும், விசுவாச வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூலாய் நிலைபெறுகிறது இந்த நூல்.

    சேவியர்
    மெஞ்ஞானபுரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா நடந்தது. விழாவில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங் களில் ஒன்றான மெஞ்ஞான புரம் பரிசுத்த பவுலின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை, அசன விழா கடந்த 21-ந்தேதி தொடங் கியது. விழா நாட் களில் தினமும் இரவில் பட்டி மன்றம், பார்வையற்றோர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, நற்செய்தி கூட்டம் போன்றவை நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பேரா யர் தேவசகாயம் தலைமையில், 173-வது பிரதிஷ்டை பண் டிகை ஆராதனை, பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடை பெற்றது. இதில் திரளான வர்கள் கலந்து கொண்டனர்.

    காலையில் போதகர் ஜான் தாமஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அசனத்துக்கு உலை ஏற்றப்பட்டது. மதியம் 3 மணி அளவில் அசன விருந்து தொடங் கியது. தொடர்ந்து நள்ளிரவு வரையிலும் பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு அசன விருந்து வழங்கப் பட்டது. இரவில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது.
    நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெறச் செய்ய இயலும் என்பதை நன்கு அறிந்த ஆண்டவர் இயேசு, கனிவான வார்த்தைகளையே பயன்படுத்தினார்.
    ஒருவர் வெகுநாட்களாக கொடியநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒருநாள் அவரைப் பார்க்க, சமயகுரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.

    வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்த நோயாளியை பார்த்த சமயகுரு, ‘நாம் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்’ எனக்கூறி மனமுருக அவருக்காக வேண்டிக்கொண்டார். அங்கிருந்த அனைவரும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

    பிறகு சமயகுரு, ‘இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகிவிடும். இத்தனை பேரும் உங்களுக்காக வேண்டியிருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும்’ எனக் கூறினார்.

    அந்த கூட்டத்தில் ஒருவன் சமயகுரு சொன்னதைக் கேட்டதும் நையாண்டித்தனமாக சிரிக்கத் தொடங்கினான்.

    ‘வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா?’ எனக்கூறி சிரித்தான்.

    அதற்கு அந்த சமயகுரு, ‘இந்தக் கூட்டத்திலேயே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்’ எனச் சொன்னார்.

    இதைக் கேட்டதும் அவன், ‘நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை அடித்துக் கொன்று விடுவேன்’ என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

    பதற்றமே இல்லாத அந்த சமய குரு, ‘முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, இந்தக் கடுமையானச் சொற்கள் உங்களை கொலை செய்யுமளவிற்குத் தூண்ட முடியுமென்றால், நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்’ என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான்.

    நம் வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தவை. ‘கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்’ (நீதிமொழிகள் 15:1).

    இனிமையான வார்த்தைகள் நேர்மறையான மாற்றங்களையும், தீமையான வார்த்தைகள் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

    வார்த்தைகள் கூர்மையானப் பட்டயம் போன்றவை. பயன்படுத்துகின்றவரைப் பொறுத்து அதன் தன்மை வெளிப்படுகிறது.

    தூய பவுல் அடிகளார் ‘உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக’ (கொலோசேயர் 4:6) என்கிறார்.

    ஆண்டவராகிய இயேசு தன்னிடம் உதவிக்காக, உடல் நலம் பெறுவதற்காக தன்னை நாடி வந்தவர்களிடத்தில் இனிமையான வார்த்தைகளையே எப்பொழுதும் பயன்படுத்தினார்.

    ஆண்டவர் பயன்படுத்திய கனிவான வார்த்தைகள்:

    “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க”. (லூக்கா 7:50)

    “மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ”. (லூக்கா 8:48)

    “அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்”. (லூக்கா 8:50)

    “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது”. (லூக்கா 17:19)

    “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று”. (லூக்கா 18:42)

    “அழாதீர்கள்; இவள் இறக்கவில்லை, உறங்குகிறாள்”. (லூக்கா 8:52)

    நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெறச் செய்ய இயலும் என்பதை நன்கு அறிந்த ஆண்டவர் இயேசு, கனிவான வார்த்தைகளையே பயன்படுத்தினார். தம் வார்த்தைகளின் வாயிலாகவே நம்பிக்கை விதையை வேரூன்றினார். அவ்வாறே நலம் பெறச் செய்தார்; மன மகிழ்வுடன் கடந்து சென்றனர்.

    ‘மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்’ (நீதிமொழிகள் 12:25).

    தீய வார்த்தைகளைத் தவிர்ப்போம்

    உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நாம் பேசுகின்ற வார்த்தைகளை வைத்தே நாம் தீர்மானிக்கப்படுகிறோம். நல்லோர் நல்லவைகளையும், தீயோர் தீமையானவைகளையும் பேசுகின்றனர்.

    நாம் பேசுகின்ற வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில், ‘மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்’ (மத்தேயு 12:36,37) என்கிறார் ஆண்டவர் இயேசு.

    அறிவியல் ஆய்வுகளின்படி, சராசரியாக ஒரு நாளில் ஆண்கள் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வார்த்தைகளையும், பெண்கள் பதினைந்தாயிரம் முதல் இருபதாயிரம் வார்த்தைகளையும் பேசுகின்றனர். நம் வார்த்தைகள் பல நேரங்களில் பிறரைக் காயப்படுத்துவதாக, கலங்க வைப்பதாக, கண்ணீர்விட வைப்பதாக அமைந்துவிடுகிறது.

    இன்னும் சில நேரங்களில் பரிகாசம், தூஷணம், சபித்தல் நிறைந்தவைகளாக, செவிகளில் கேட்கவியலாத கெட்ட வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

    ‘கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்றவாறு நல்ல வார்த்தைகளையே பேசுங்கள். மனக்கசப்பு, சீற்றம், சினம், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்’ (எபேசியர் 4:29,31).

    தூய யோவான் நற்செய்தியாளர் ஆண்டவர் இயேசுவை ‘வார்த்தை வடிவில் வந்த கடவுளாகவே’ அறிமுகம் செய்கிறார். வார்த்தைகளின் வலிமை உணர்ந்து பிறருக்கு மகிழ்வைத் தருகின்ற, ஆறுதலளிக்கின்ற இனிமையான வார்த்தைகளையேப் பேசுவோம்.

    ‘தக்க வேளையில் சொன்ன சொல், வெள்ளித்தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்’ (நீதிமொழிகள் 25:11).

    அருட்பணி ம பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

    ×