என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

    இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள், இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூறும் விதமாக 40 நாட்களுக்கு மேலாக நோன்பிருப்பது வழக்கம். இந்த நோன்பு காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று அழைக்கிறார்கள். தவக்காலம் சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் நாளை ஆகும். இந்த நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். அன்றைய தினம் கடந்த ஆண்டில் குருத்தோலை தினத்தன்று வழங்கப்பட்ட குருத்தோலைகள் அனைத்தையும் சேகரித்து, எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை, நாளை நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகளால் சிலுவை அடையாளமிடுவது வழக்கம்.

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நாளை காலை நடைபெறும் சாம்பல் புதன் பிரார்த்தனையில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார். இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

    இந்த தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை தொடங்குகிறார்கள். இந்த ஆண்டு 46 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கிறார்கள். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஜெபிப்பார்கள். பெரும்பாலானோர் அசைவ உணவுகளையும் தவிர்ப்பார்கள். தவக்காலத்தில் பிரிக்கப்படும் காணிக்கைகள் ஏழை, எளியவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும். மேலும் இந்த நாட்களில் ஏழை, எளியவர்களுக்கு தான, தர்மங்களையும் கிறிஸ்தவர்கள் மேற்கொள்வார்கள். தவக்காலத்தில் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. வெள்ளிக்கிழமைதோறும் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகளை நடத்தி ஜெபிப்பார்கள்.

    தவக்காலத்தின் இறுதி வாரத்தில் பெரிய வியாழக்கிழமை (ஏப்ரல் 9-ந் தேதி) அன்று இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியதின் நினைவாக ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சியும், பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளிக்கிழமையில் (ஏப்ரல் 10-ந் தேதி) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் விதமாக மும்மணி ஆராதனை, சிலுவைப்பாடு ஆராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்ரல் 12-ந் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
    பவுலின் எழுத்துகளுக்கும், இறையியல் சிந்தனைகளுக்கும், நடைக்கும், கட்டமைப்புக்கும் இணையாத பல விஷயங்கள் இந்த திருமுகத்தில் உள்ளன.
    இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பவுல் எழுதியிருக்கலாம் எனும் ஆரம்ப கால நம்பிக்கைகள் இப்போது வெகுவாக வலுவிழந்து விட்டன. காரணம் பவுலில் பிற நூல்களோடு ஒப்பிடுகையில் இந்த நூல் பெருமளவு வேறுபடுகிறது. பவுலின் எழுத்துகளுக்கும், இறையியல் சிந்தனைகளுக்கும், நடைக்கும், கட்டமைப்புக்கும் இணையாத பல விஷயங்கள் இந்த திருமுகத்தில் உள்ளன.

    இதை ஒருவேளை அப்பல்லோ எழுதியிருக்கலாம் என்பது சிலருடைய கருத்து. லூக்கா, பர்னபா, கிளமந்து, சீலா இவர்களில் ஒருவர் என்பது வேறு சிலருடைய கருத்து. அதே போல இது எழுதப்பட்ட காலம் எது என்பதிலும் பல மாற்றுக்கருத்துகள் உண்டு. எருசலேம் ஆலயத்தின் அழிவுக்கு முன்பா, பின்பா என்பதில் விவாதங்கள் உண்டு. எனினும் கி.பி. 64 க்கும் கி.பி. 85 க்கும் இடைப்பட்ட காலம் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்த நூல் எழுதப்பட்டதின் நோக்கத்தைப் புரிந்து கொண்டால் இந்த நூலின் சிந்தனைகளைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். யூதக் கிறிஸ்தவர்களும், பிற இனக் கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ ஆரம்பித்திருந்த காலகட்டம். கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அச்சுறுத்தல் வருகிறது. அது நீரோ மன்னனின் ஆட்சிக் காலமாக இருக்கலாம். மக்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களுடைய குடும்பங்கள் கொல்லப்படுகின்றன.

    இப்போது, யூதக் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் உயிர்தப்ப ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் கிறிஸ்துவை வெளிப்படையாக மறுதலித்து, மீண்டும் யூத மதத்துக்குத் திரும்பி தொழுகைக்கூடத்துக்கு வந்தால் தண்டனை இல்லை என்பதே அந்த வாய்ப்பு.

    தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என விரும்பிய யூதர்கள் இயேசுவை மறுதலிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய விசுவாசம் உடைபட ஆரம்பித்தது. இந்த சூழலில் “இயேசுவே எல்லாரையும் விடப் பெரியவர். பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள், வழிகாட்டிகள், வானதூதர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர் இயேசுவே. அவர் நமக்குத் தந்திருக்கும் மீட்பைப் பெற்றுக்கொள்வதே மேலானது. என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த மடல் எழுதப்பட்டது.

    பழைய ஏற்பாட்டைப் பற்றிய புரிதல் உள்ள யூத மக்களுக்கான நூல் இது. குறிப்பாக லேவியர் நூலோடு பரிச்சயமற்றவர்கள் இந்த நூலின் அழகையும், ஆழத்தையும் புரிந்து கொள்ள முடியாது.

    இறைமகன் இயேசு முழுமையான மனிதராகவும், முழுமையான கடவுளாகவும் இருப்பவர். அவரே நமக்கு தந்தையாம் கடவுளை வெளிப்படுத்தினார். அவருடைய பலியினால் தான் நாம் மீட்கப்படுகிறோம். இல்லையேல் நம்முடைய பாவங்களுக்காக நியாயத் தீர்ப்பு நாளில் நாம் நரகத்தில் தள்ளப்படுவோம். காணாத இறைவனை நம்புவது மிக முக்கியம். இறைவனுடைய இரண்டாம் வருகை கடைசி நாட்களில் நிகழும். அவருடைய வாக்குறுதிகள் பொய்யாவதில்லை என்பது போன்ற முக்கியமான இறையியல் சிந்தனைகள் இந்த நூலில் நிரம்பியிருக்கின்றன.

    இரண்டு முக்கியமான எச்சரிக்கைகள் இந்த நூலில் தரப்படுகின்றன. ஒன்று இறைமகன் இயேசு மீது கொண்ட விசுவாசத்தை விட்டு விலகிச் செல்வது. இன்னொறு அவர் கடவுளே இல்லையென மறுதலிப்பது. முதலாவது பிழை நிவர்த்தி செய்யக் கூடியது. இரண்டாவது பிழையோ மீட்பையே இழக்கச் செய்யக் கூடியது.

    மீட்பு பற்றிய முக்கியமான ஒரு புரிதலும் இதில் தரப்பட்டிருக்கிறது. “ஒரு முறை மீட்கப்பட்டவர், எப்போதுமே மீட்கப்பட்டவர்” எனும் சிந்தனை தவறு என புரியவைக்கப்படுகிறது. அதே போல, இறைவனோடு நடக்கும் போது நாம் மீட்கப்பட்டோமா எனும் சந்தேகமே தேவையில்லை, இறைவன் நம்மை மீட்டுக்கொண்டுவிட்டார் என்பதே உண்மை என்பதும் விளக்கப்படுகிறது.

    அடையாளக் கிறிஸ்தவர்களாக இல்லாமல் ஆழமான கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டும் என்பது எபிரேயர் நூலின் மைய இழை எனக் கொள்ளலாம். பயணத்தைத் தொடங்குவது மட்டுமல்ல, நன்றாக முடிப்பதும் மிக முக்கியம். எபிரேயர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டது முடிவல்ல, வாக்களிக்கப்பட்ட தேசத்தை வந்தடைவதே லட்சியத்தின் நிறைவு. அப்படியே விசுவாசமும், என்பது விளக்கப்படுகிறது.

    பயணத்தின் தொடக்கத்தில் பெற்றுக்கொண்ட மீட்பை நாம் இழந்து விடாமல் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இழந்து போன பின் மீண்டெடுக்கும் வாய்ப்பு தரப்படாமலேயே போகலாம். இறைவன் நமக்கென முன்குறித்து வைத்த வாழ்க்கையானது நமது அர்ப்பணிப்பு இல்லாமல் கிடைக்காது. நம் பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, நாம் புனித வாழ்க்கை வாழ்வதும் விண்ணக வாழ்வுக்கு மிக முக்கியம். இவையெல்லாம் எபிரேயர் நூல் நமக்கு விளக்குகின்ற மிக முக்கியமான இறையியல் சிந்தனைகள்.

    புதிய ஏற்பாட்டின் நிழலே பழைய ஏற்பாடு எனும் மிகப்பெரிய சிந்தனை, ஒட்டு மொத்த பைபிளையும் நாம் புரிந்து கொள்ளத் தரப்பட்ட சாவி.

    விசுவாசத்தைக் குறித்த மிக அற்புதமான சிந்தனைகளும், பழைய ஏற்பாட்டைக் குறித்த தெளிவான ஒப்பீடுகளும், இயேசுவைப் பற்றி விளக்குகின்ற பகுதிகளும் இந்த நூலை மிக முக்கியமான நூலாக மாற்றியிருக்கின்றன. இந்த நூலை ஐந்தாவது நற்செய்தி என அழைப்பவர்களும் உண்டு.

    சேவியர்
    தேவையற்ற அச்சமும், பயஉணர்வும் எதையும் சாதித்து விடுவதில்லை என்பதனை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கிறது. வீணாக தமது மனங்களை குழப்பிக்கொள்கிறவர்கள், பெரிதாக எதையுமே சாதித்ததில்லை என்பதே வரலாறு.
    வாழ்க்கை என்பது ஏற்றங்களையும், இறக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு அன்புப்பாதையாகும். இதனை சரியாக அடையாளம் கண்டுகொண்டவர், தனது வாழ்வினை நேரிய பாதையில் அமைத்து கொள்கிறார். வீரம் விளைந்த பூமி என கருதப்பட்ட இந்தியதேசம், இன்று கோழைகளின் இடமாய் மாறி நிற்கிறது. தோல்வி, அவமானம், வீழ்ச்சி போன்றவற்றை நினைத்தே பலர் அஞ்சி நடுங்கி கொண்டு நிற்கின்றனர்.

    இன்னொரு புறத்தில் உண்மையை பேசுவதற்கே அச்சப்பட வேண்டிய சூழல் மிக அதிகமாக காணப்படுகிறது. பணம் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதால் பணவெறி பிடித்த அதிகாரிகளை கண்டே அஞ்சி நடுங்க வேண்டியுள்ளது. மாணவப்பருவத்தில் இருந்தே தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் தைரியமாக ஏற்றுக்கொள். சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க எவ்வளவு பெரிய மனிதரை பார்க்க நேர்ந்தாலும் துணிவுடன் நேராகப்பார். அச்சஉணர்வினை முழுமையாய் தவிர்த்துவிடு. அவுரங்கசீப் டில்லி பேரரசனாக இருந்த போது அம்பர் என்ற சிறிய நாட்டிற்கு ஜெயசிங் என்னும் 13- வயது சிறுவன் பட்டத்திற்கு வந்தான். அவனை பயமுறுத்தும் நோக்கில் டில்லிக்கு அவுரங்கசீப் அழைத்தார். அவனது தாயும் அமைச்சரவையினரும் அஞ்சி நடுங்கினர்.

    டெல்லி வந்த ஜெய்சிங்கை பேரரசன் உற்றுப்பார்த்தார். நிதானமாக நின்று கொண்டிருந்த ஜெய்சிங்கை பார்த்து கோபமடைந்த அவுரங்கசீப் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்து அவனது கரம் பற்றி பற்களை நறநற வென கடித்தார்.

    அப்போதும் எவ்வித அச்சமும் அடையாது ஜெயசிங் நிதானமாய் இருந்தான். உடனே அவுரங்கசீப் இப்போது நான் உன்னை தண்டித்தால் என்ன செய்வாய்? என்று கேட்டார். ஜெயசிங் சிரித்து க்கொண்டே இவ்வளவு பெரிய பேரரசன் என்னை அழைத்து விருந்து கொடுக்க முன்வந்திருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? என கேட்டான்.

    ஜெயசிங்கின் அச்சமின்மையை கண்டு அவுரங்சீப் வியந்தார்.

    தேவையற்ற அச்சமும், பயஉணர்வும் எதையும் சாதித்து விடுவதில்லை என்பதனை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கிறது. வீணாக தமது மனங்களை குழப்பிக்கொள்கிறவர்கள், பெரிதாக எதையுமே சாதித்ததில்லை என்பதே வரலாறு. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் தேவையற்ற மனநிலையினை உடைத்து எறிவோம். உண்மையினை நெருக்கமாய் பின்பற்ற இறைவனை பற்றி பிடித்திடுவோம். அஞ்சாதே, கலங்காதே நான் உன் னோடு இருக்கிறேன் என்ற ஏசாயாவின் இறைவார்த்தையினை எப்போதும் நினைவில் வைத்திடுவோம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்(எபேசியர் 4:31-31).
    ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்(எபேசியர் 4:31-31). ரிச்சட் ஸ்வென்சன் தன்னுடைய புத்தகமாக மார்ஜினில் நாம் வாழ்ந்து கெண்டு இருக்கும் சமுதாயம் தொல்லைகள் நிறைந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் நாம் பதில்களை விட கேள்விகளை அதிகமாகவும், தீர்வுகளை விட பிரச்சனைகளை அதிகமாவும் பெற்றிருக்கிறோம். சிலருக்கு மட்டுமே எண்ணத்தை கேட்டு செயல்பட வேண்டும் என்று தெரியும் என்கிறார்.

    மனஅழுத்தம் என்பது எதிர்மறையான ஒரு மனோநிலை அல்ல. சரியான முறையில் அதனை கையாளும் போது அது நம்மை முன்னேற்றத்திற்கான பாதையில் இட்டு செல்லும். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது. அதனால் உமது பிரமாணங்களை கற்றுக்கொள்ளுகிறேன்(சங்கீதம் 119:71).

    வெளிப்புற சூழ்நிலைகளால் மனஅழுத்தம் ஏற்படுவதில்லை. வெளிப்புற சூழ்நிலைகளுக்கு ஆழ்மனதிலிருந்து நாம் கொடுக்கும் பதிலே மனபுழுக்கத்திற்கு காரணம்.

    இதற்கு எல்லாம் மூலகாரணம் கடவுள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை குறைவு தான். கடவுளை முதலாவதாக நம் வாழக்கையில் கொண்டு வரும் போது அவர் எல்லாவற்றையும் பொறுப்பெடுத்து கொள் சித்தமாயிருக்கிறார். உன் சுயபுத்தியின் மேல் சாயாமல் உன் முழுஇருதயத்தோடும், கர்த்தரின் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளில் எல்லாம் அவரை நினைத்து கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார். (நீதி மொழிகள் 35-6).

    எல்லாம் வல்ல தேவனிடம் நாம் நம் குறைகளையும், பாரங்களையும் அனுதினமும் அவர் பாதத்தில் ஊற்றிவிடும் போது அவர் நம் வாழ்க்கையை பொறுப்பெடுத்து கொள்கிறார். கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார். பல நேரங்களில் கீழ்படியாமையும், பாவங்களும் உண்மையான சமாதானம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து நம்மை துண்டித்து விடும். கடவுளின் வார்த்தையை நம் மனங்களில் நிறைப்பதன் மூலமும அனைத்தையும் ஜெபத்தில் ஏறெடுப்பதன் மூலமும மட்டுமே மனஅழுத்தத்திற்கு உண்மையான தீர்வை கொண்டு வர இயலும். இதனுடைய பயனாக தேவனுடைய கிருபையும், சமாதானமும், அன்பும் நம் உள்ளத்தை ஆளுமை செய்து மனஅழுத்தத்தை வெளியேற்றும்.
    சில நேரங்களில் எனக்காக என் பெற்றோர், என் போதகர் ஜெபம் பண்ணுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு சரிவர பாடங்களை படிக்காமல் விட்டு விட்டால் அது மிகுந்த குழப்பத்தை உண்டாக்கிவிடும்.
    ‘அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்’. (I கொரிந்தியர் 1:31)

    நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொரு வருக்கும் ஞானத்தின் தேவனாயிருக்கிறார். தம்மிடத்தில் வருகிற ஒருவரையும் அவர் புறம்பே தள்ளாமல் தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் பலத்த அற்புதங்களை செய்கிறார்.

    உங்கள் வாழ்வில் ஆண்டவர் பலத்த அற்புதங்களைச் செய்ய விரும்புகிறார். அவரால் கூடாதது ஒன்றுமேயில்லை. உங்களுடைய தேர்வை குறித்தோ அல்லது உங்கள் சரீர பலவீனங்களைக் குறித்தோ பயந்து கலங்கிக் கொண்டிருந்தால் ஆண்டவராகிய இயேசுவை மனப்பூர்வமாய் நம்பி ஆண்டவருக்குள் சந்தோஷமாயிருங்கள். தொடர்ந்து நீங்கள் வாசிக்கும் ஆலோசனைகளுக்கு உங்களை அர்ப்பணியுங்கள்.

    தேவனுக்குப் பயப்படுங்கள்

    ‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்’. (நீதிமொழிகள் 1:7)

    இவ்வசனம் சொல்லுகிறது, ‘நாம், நம்மை உண்டாக்கின ஆண்டவருக்கு முதலாவது பயப்படவேண்டும். என்னை உண்டாக்கின ஒரு தெய்வம் இப்பூமியில் இருக்கிறார். அவர் தான் ஆண்டவராகிய இயேசு நாதர். அவருக்கு விரோதமாக ஒன்றையும் செய்யக்கூடாது’ என்கின்ற ஒரு பயம் எப்போதும் உங்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும்.

    நம்மில் அநேகர் மனிதனுக்கு பயந்து, பயந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் சொல்லு கிறார், ‘அவருக்கு நாம் பயந்திருக்க வேண்டும்’. இப்படிப்பட்ட ஆலோசனையை மூடர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

    உங்களுடைய தேர்வை குறித்தோ அல்லது மற்ற எந்த காரியங்களைக் குறித்தோ பயப்படுவதை நிறுத்தி தேவனுக்குப் பயப்படுங்கள். இது தேவனை கனம் பண்ணுவதற்கு அடையாளம்.

    அனுதினமும் ஜெபியுங்கள்

    “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” யாக்கோபு 1:5

    மேற்கண்ட வசனத்தில் நாம் தெளிவாய் வாசிக்கிறோம். நமக்கு ஞானம் இல்லாவிட்டால் ஜீவனோடு இருக்கிற ஆண்டவரை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏன் என்றால் அவரே நமக்கு ஞானமாயிருக்கிறார். உங்கள் பாடங்களை படிக்கும் போது அநேக காரியங்கள் உங்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாமல், புரிந்து கொள்ள முடியாமல் கலக்கத்தோடு இருக்கலாம் இதற்கு ஞானம் வேண்டுமல்லவா?

    யோவான் 14:14-ல் ஆண்டவர் சொன்னார், “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” இது ஆண்டவருடைய வாக்குத்தத்தம். அதே வேளையில் நாமும் ஆண்டவரை நோக்கி விசுவாசத்தோடு ஜெபம் பண்ண வேண்டும். இப்படி ஜெபம் பண்ணும்போது சந்தேகம் அவநம்பிக்கை உங்களுக்குள் உண்டாகலாம். இதைக் கொண்டு வருகிறவன் பிசாசு. ஆகவே பிசாசுக்கு இடங்கொடாமல் தினந்தோறும் ஜெபத்தோடு உங்கள் பாடங்களை கருத்தாக படியுங்கள். கட்டாயம் ஆண்டவர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு அற்புதங்களைச் செய்வார்.

    வேதத்தை தியானியுங்கள்

    “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக, அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்”. யோசுவா 1:8

    “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்மாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.” சங்கீதம் 19:7

    ஞானமில்லாத உங்களுக்கு வேதமே ஞானத்தின் பொக்கிஷமாகும். ஆகவே தேர்வுக்கு ஆயத்தப்படுவதற்கு முன்பாக காலையில் வேதத்தை எடுத்து வசனத்தை வாசித்து சில நிமிட நேரம் தியானியுங்கள். அதற்கு பிறகு உங்கள் பாடங்களை படிக்கத் தொடங் குங்கள். தேவன் அற்புதமாய் உங்களுக்குள் கிரியைச் செய்வார். வேதத்தை ஒருநாளும் நீங்கள் மறக்கக்கூடாது.

    ஆண்டவரை விசுவாசியுங்கள்

    “அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.” ஆதியாகமம் 15:6

    நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான காரியம் ஆண்டவரை நீங்கள் மனப்பூர்வமாய் விசுவாசிக்க வேண்டும். எப்படியெனில் இயேசு கிறிஸ்து எனக்காக சிலுவையிலே அடிக்கப்பட்டார், ரத்தம் சிந்தினார், எனக்காக மரித்தார். மூன்றாவது நாள் உயிரோடு எழும்பினார். இன்றைக்கும் அவர் ஜீவிக்கிறார். அவர் தான் எனக்கு அற்புதங்களைச் செய்கிற தேவன் என்று முழு நிச்சயமான நம்பிக்கையோடு அவரை விசுவாசிக்க வேண்டும்.

    ஆபிரகாம் நூறு வயது முதியவராயிருந்தபோது ஈசாக்கை பெற்றெடுத்தார். காரணம் அவர் ஆண்டவரை மட்டும் விசுவாசித்தார். ஆகவே நீங்களும் உங்கள் தேர்வில் அற்புதங்களை காண ஆண்டவரை மாத்திரம் நம்பிக்கையோடு விசுவாசியுங்கள். உங்களுக்கு அற்புதம் நிச்சயம்.

    பிரயாசப்படுங்கள்

    “சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு, உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.” நீதிமொழிகள் 14:23

    இறுதியாக ஆண்டவருடைய கிருபையினால் நான் உங்களுக்கு கூறும் முக்கிய ஆலோசனை என்னவென்றால், விடா முயற்சியோடு பிரயாசப்படுங்கள். இது முக்கியம். நாம் ஜெபித்தாலும், வேதம் வாசித்தாலும் படிக்க வேண்டிய நேரத்தில் கருத்தாக பாடங்களைப் படிக்க வேண்டும். இது நம்முடைய கடமை. நாம் செய்ய வேண்டியதை கட்டாயம் நாம் தான் செய்ய வேண்டும்.

    சில நேரங்களில் எனக்காக என் பெற்றோர், என் போதகர் ஜெபம் பண்ணுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு சரிவர பாடங்களை படிக்காமல் விட்டு விட்டால் அது மிகுந்த குழப்பத்தை உண்டாக்கிவிடும். நம்பிக்கையற்ற தன்மை உங்களுக்குள் வந்து விடும். ஆகவே ஆண்டவரை முற்றிலும் நம்பி பிரயாசப்படுங்கள். உங்கள் பிரயாசத்திற்கு மிகுந்த பலன் உண்டு. மேலும் நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான மதிப்பெண்களை நீங்கள் பெற்று கட்டாயம் தேர்ச்சியடைவீர்கள்.

    ஞானமுள்ள தேவன் உங்களை சகல ஞானத்தினாலும் நிரப்புவாராக.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், சென்னை-54.
    பவுல் எழுதிய நூல்களிலேயே மிகச் சிறிய நூல் இந்த பிலமோன் தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரமும், 25 வசனங்களும் அடங்கியுள்ளன.
    திருத்தூதர் பவுல் தனி நபர்களுக்கு எழுதிய கடிதங்களில் மொத்தம் நான்கு கடிதங்கள் விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று பிலமோன். மற்றவை 1 திமொத்தேயு, 2 திமோத்தேயு மற்றும் தீத்து.

    பவுல் எழுதிய நூல்களிலேயே மிகச் சிறிய நூல் இந்த பிலமோன் தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரமும், 25 வசனங்களும் அடங்கியுள்ளன. கிரேக்க மொழியில் கணக்கிட்டால் வெறும் 334 வார்த்தைகளால் ஆன நூல் இது. கி.பி. 61 களில் இதை ரோம சிறைச்சாலையில் இருந்து பவுல் எழுதினார் என்பது பொதுவான நம்பிக்கை. இதை அவர் எபேசிலிருந்து எழுதியிருக்கக் கூடும் என்பதும் பல அறிஞர் களின் வாதம்.

    இந்தக் கடிதம் ஏன் எழுதப்பட்டது எனும் பின்னணி சுவாரசியமானது. கொலோசை நகரில் பிலமோன் எனும் நபர் இருக் கிறார். அவர் வசதி படைத்த நபர். அவரிடம் அடிமையாக வேலை பார்க்கிறார் ஒனேசிம் என்பவர். அங்கிருந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும்போது எஜமானரின் பணத்தையும் கொஞ்சம் சுருட்டியிருக்க வாய்ப்பு உண்டு.

    தப்பி ஓடும் அவர் பவுலிடம் வந்து சேர்கிறார். பவுலின் போதனைகளும், வாழ்க்கையும் அவரை மாற்றுகின்றன. கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொள்கிறார். பவுல் மகிழ்ச்சியடைகிறார். இருந்தாலும் அவர் அடிமை நிலையிலிருந்து தப்பி ஓடியதால் மீண்டும் தலைவரிடமே திருப்பி அனுப்ப முடிவெடுக்கிறார்.

    அந்தக் காலங்களில் தப்பி ஓடும் அடிமைகள் கொலை செய்யப்படுவது வாடிக்கை. சிலுவை மரணம் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதுண்டு. ஒருவேளை தலைவர் ரொம்ப இளகிய மனதுடையவராக இருந்தால் “தப்பி ஓடியவன்” எனும் எழுத்தை அடிமையின் நெற்றியில் பொறித்து வைத்து மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்.

    இந்த இரண்டு விஷயங்களும் நடக்கக் கூடாது. ஒனேசிம் தலைவரிடம் திரும்ப சென்று சேர்ந்து ஒரு சகோதர உறவில் வளரவேண்டும் என பவுல் விரும்புகிறார். பவுலுக்கு பிலமோனைத் தெரியும். பிலமோனும் கிறிஸ்தவராக மாறியவர் தான். அவரது இல்லத்திலேயே கிறிஸ்தவ சந்திப்புகளை நடத்துபவர் தான். எனவே பவுல் அவருக்கு உரிமையுடன் கடிதம் எழுது கிறார்.

    கிறிஸ்தவ அன்பு என்பது ஆழமான மன்னிப்பின் மீதும், பிறரை ஏற்றுக்கொள்வதன் மீதும் கட்டமைக்கப்பட வேண்டும் எனும் சிந்தனையை அவர் தனது கடிதத்தில் பதிவு செய்கிறார்.

    இந்தக் கடிதம் கிடைத்தபின் பிலமோன் என்ன செய்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். ஒருவேளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இந்தக் கடிதத்தையே கிழித்து எறிந்திருக்கக் கூடும். அப்படியெனில் விவிலியத்தில் இந்த நூல் இடம்பெறாமல் போயிருக்கும்.

    பவுல் ஏன் அடிமையை மீண்டும் தலைவரிடமே அனுப்புகிறார்? ஏன் அவர் அடிமை நிலையை ஒழிப்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது? அவர் அடிமை நிலையை ஆதரித்தாரா? என்றெல்லாம் விவாதங்கள் எழுவதுண்டு. அன்றைய ரோம வீரர்களிலேயே மூன்றில் இரண்டு பங்கு பேர் அடிமையாய் இருந்த சூழலில் பவுல் சமூகப் போராளியாய் களம் புகவில்லை. ஆன்மிகப் போராளியாகவே இயங்கினார். அதுவே அவருக்கு இடப்பட்ட பணி என புரிந்து கொள்ளலாம். எனினும், அவர் அடிமை நிலையை எதிர்த்தார் என்பதை அவரது பிற கடிதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    ஒனேசிமை தனது மகன் எனவும், தன்னை ஏற்றுக்கொள்வதைப் போல அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பவுல் பிலமோனுக்கு கடிதம் எழுதுவதில், பவுலின் அன்பு வெளிப்படுகிறது. கிறிஸ்து எனும் கொடியில் விசுவாசிகள் எல்லோரும் கிளைகளாக இருக்கிறார்கள் என்பதை அவரது கடிதம் வெளிப்படுத்துகிறது. “அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத் திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். “நானே அதற்கு ஈடு செய்வேன்’ எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்” எனும் பவுலின் வார்த்தைகள் அவருடைய பரிந் துரையின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது.

    சரி, பவுல் ஒரு தனி நபருக்கு, ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, எழுதிய இந்தப் பரிந்துரைக் கடிதம் ஏன் இந்த புனித நூலான பைபிளில் இடம்பெற வேண்டும்? இந்தக் கேள்வி நமக்குள் எழுவது வெகு இயல்பே. அதற்கு இந்த நூலில் பொதிந்துள்ள ஆன்மிக சிந்தனை தான் காரணம்.

    இது நமது மீட்பின் பயணத்தை அற்புதமாய்ப் பதிவு செய்கிறது. நாம் எல்லோருமே இறைவனின் அன்பை விட்டு விலகி ஓடுகின்ற அடிமைகளாய் இருக்கிறோம். கடவுளுக்கு உண்மையாய் இருக்கவில்லை. இறைவனுக்கு பயனற்ற ஊழியக்காரர்களாக இருக்கிறோம். இயேசு நம்மை மீட்டுக் கொள்கிறார். நம் பாவத்தின் தண்டனையை தானே ஏற்கிறார். நம்மை பயனுள்ள மனிதனாக மாற்றி மீண்டும் இறை பிரசன்னத்தில் அனுப்பி வைக்கிறார்.

    இந்த இறை சிந்தனையுடன் நூலை வாசிப்போம்.

    சேவியர்
    காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்பவனி விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை வேளையில் கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னேஸ் அம்மாள் சொரூபம் வைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த பவனியானது கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று, மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் இருதயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.
    கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சப்பர பவனி நடைபெற்றது.
    கொடைக்கானல் அந்தோணியார் கோவில் தெருவில் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 99-வது ஆண்டு திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி பூஜைகள், உறுதிபூசுதல் ஆகியவை நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 15-ந்தேதி சப்பர பவனி நடைபெற்றது. அதற்கு முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் முன்னாள் பங்குதந்தை ஆனந்தம் முன்னிலை வகித்து, திருப்பலியை நடத்தி வைத்தார்.

    வட்டார அதிபர் எட்வின் சகாயராஜ் தலைமை தாங்கினார். இதில் உதவி பங்குத்தந்தை சாம் ரிச்சர்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்றைய தினம் இரவு புனித பதுவை அந்தோணியாரின் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் சப்பர பவனி நடந்தது. இதில் புனித பதுவை அந்தோணியார் சப்பரத்தை பெண்கள் இழுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், புனித அந்தோணியார் ஆலய சங்கத்தினர், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர். 
    மார்த்தாண்டம், வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நாளை (18-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.
    மார்த்தாண்டம் வெட்டுமணியில் கோடி அற்புதர் என போற்றப்படும் தூய அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 10.15 மணிக்கு அருட்பணியாளர் சுஜின்குமார் தலைமையில் திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் ஜெரால்டு ஜெஸ்டின் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றமும், திருப்பலியும் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் மறையுரை வழங்குகிறார். பங்குத்தந்தை அந்தோணி முத்து, இணைப்பங்குத்தந்தை மரிய மார்ட்டின், ஆன்மீக வழிகாட்டி டென்சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    19-ந் தேதி மாலை அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும், 20-ந் தேதி அலோசியஸ் தலைமையிலும், 21-ந் தேதி காலை 10.15 மணிக்கு எக்கர்மென்ஸ் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.

    21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மனோகியம் சேவியர் மறையுரை வழங்குகிறார். 23-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜாண் குழந்தை தலைமையில் நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், அருட்பணியாளர் மரியதாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாலையில் பெனடிக்ட் அனலின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தூய அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.

    24-ந் தேதி மாலையில் டோமினிக் சாவியோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 9.30 மணி முதல் சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில திருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மத நல்லிணக்க விழா நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி முத்து தலைமையில் பங்கு இறை மக்கள், பங்கு பேரவை, சிறப்பு நிதிக்குழு இணைந்து செய்துள்ளனர்.
    ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மையாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 20-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு கார்மல் பள்ளி அருட்பணியாளர் சேவியர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சப்பர பவனி, 23-ந்தேதி காலை 6 மணிக்கு மதுரை ஆயர் சகாய ஆனந்த் தலைமையில் தேர்த் திருப்பலி, 8.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு அன்னையின் அலங்கார தங்கத்தேர் பவனி, 11 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    இந்த உலகமானது தங்களுக்கு மட்டுமானது என்ற உணர்வோடு மனிதநேயமற்ற முறையில் திரிகிறார்கள். அது தவறானது. உலக வாழ்க்கை நிலையற்றது, விண்ணக வாழ்வே நிலையானது.
    எந்த ஒரு மாற்றத்துக்கும் விதையாக இருப்பவர்கள் இளைஞர்களே. சரியான சிந்தனைகளை, சரியான செயல்களோடு செயல்படுத்தும் இளைஞர்களே இல்லத்தையும், நாட்டையும் கட்டியெழுப்புகின்றனர்.

    பணிவாழ்வில் நுழைந்த போது இயேசு ஒரு இளைஞர். அவரது இளமை துடிப்பும் கடவுளின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றியோடு முடிக்க வழிவகுத்தன. அவர் தனது விண்ணகத் தந்தையோடு எப்போதும் செபத்தில் நிலைத்திருந்தார். மண்ணகப் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்திருந்தார்.

    இப்போதைய காலக்கட்டத்தில் தெய்வபக்தி உடைய இளைஞர்களை காண்பது அரிதாக மாறிவிட்டது. இளைஞர்கள் கடவுளைப் பின்பற்றுவதை விட்டு விட்டுப் பிரபலங்களைப் பின்பற்றுகிறார்கள். பெற்றோருக்குக் கீழ்ப்படியும் குணாதிசயமும் அவர்களிடம் குறைந்து வருகிறது. அவர்கள் உலகத்தின் வசீகரங்களுக்குக் கீழ்ப்படிகின்றனர்.

    இரவில் உறங்கும் முன்பும் பகலில் எழுவதற்கு முன்பும் விவிலியத்தை வாசிப்பதற்கு பதிலாக சமூக வலைதளத்தில் நேரத்தை செலவு செய்கின்றார்கள். பெற்றோரோடு நேரம் செலவிடுவதற்கு பதிலாக ஸ்மார்ட்போன் செயலிகளோடு நேரத்தை செலவிடுகிறார்கள். இவையெல்லாம் இக்கால இளைஞர்கள் தம் வாழ்க்கையையும் நேரத்தையும் வீணான செயல்களில் செல வழிக்க வழிவகுக்கிறது.

    இவையெல்லாம் அவர்களைத் தவறான வழிக்கும் அழைத்துச் செல்கின்றது. இயேசு இளைஞராக ஆன பின் அவரிடம் இருந்த அந்த வேகம் அவர் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற உதவியது. அந்த வேகமும் சிந்தனையும் நம்மிடமும் உள்ளது. அதை சரியான இடத்தில் ஒருமுகப்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி.

    இன்றைக்கு, திருச்சபையின் மீது காட்டவேண்டிய ஈடுபாட்டை இளைஞர்கள் தேவையற்ற இடங்களில் காட்டுகின்றனர். அவை அவர்களுடைய ஆன்மிக வாழ்க்கைக்கோ, சமூக முன்னேற்றத்துக்கோ எந்த வகையிலும் உதவுவதில்லை. இவ்வுலகில் அன்பையும் அமைதியையும் பரப்ப வேண்டிய முக்கிய பொறுப்பு இளைஞர்களின் கைகளில் உள்ளது. ஏனெனில் இவ்வுலகம் இளைஞர்களால் நிரம்பி வழிகிறது.

    இளைஞர்கள் சரியான பாதையில் வழி நடத்தப்பட்டால் கடவுள் விரும்பும் அமைதியின் இல்லமாக உலகம் மாறும் விவிலியம் வாசித்தல், தேவாலயத்தில் நேரம் செலவிடுதல், சுற்றாரோடு நல்ல உறவு கொண்டிருத்தல் ஆகியவற்றை கடைபிடித்தால் போர்களாலும் பிரிவினைகளாலும் சுக்குநூறாகியிருக்கும் இவ்வுலகம் சீராகும். காரணம் உறவுகளால் கட்டப்படும் எதுவும் அழிவதில்லை.

    இறைவன் தன் படைப்புகள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாகவே படைத்துள்ளார். வெப்பத்தை தணிக்க மழை. இருளைப்போக்க சூரியன். அது போலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலிலேயே படைத்துள்ளார் என்றால் கேட்கவா வேண்டும். அந்த மனிதனின் இளமைப் பருவம் மிகவும் முக்கியமானது.

    இளமைக்காலத்தில் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. அந்தப் பருவத்தில் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த பருவத்தில் உள்ளவர்கள் கடவுளிடம் தங்களை முழுமையாக ஒப்பு கொடுத்துவிட்டால் அவர்கள் கவலைப்படு வதற்குரிய அவசியம் இல்லாமல் போய்விடும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் நேரத்தில் அவர்கள் பதற்றப்படவேண்டிய தேவையிருக்காது.

    நாம் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாகவும், உடன்பிறப்புகளுக்கு நல்ல சகோதரன், சகோதரியாகவும், நண்பர்களுக்கு நல்ல தூண்டுகோலாகவும் விளங்க, இயேசு உதவுகின்றார். பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி இளமைக்காலத்தை நல்ல முறையில் நாம் செலவிடவும் அவர் நமக்கு துணை செய்கின்றார்.

    இறைமகன் இயேசு கொண்டிருந்த பொறுப்புணர்வு பெரியது. அவர் தனக்கு அடுத்துள்ள மக்கள் நல்ல நிலையை அடைய வேண்டும் என அயராது பாடுபட்டார். பிறரை மன்னித்தார். இன் றைக்கு பழிவாங்குதல் நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. பாவம் செய்பவர்களை இறைவன் மன்னிக்காமல் இருந்தால் நரகத்தில் கூட இடமில்லாமல் போய் விடும். எவ்வளவு பாவம் செய்தாலும் கடவுளிடம் உருக்கமாக மன்றாடினால் அவர் நிச்சயம் நம்மை மன்னிப்பார். கூடவே, நாம் அந்தப் பாவத்தை விட்டு விலகி வெளிவர, நல்லதொரு பாதையை அமைத்து தருவார்.

    ஒரு குற்றம் செய்தவுடன் அதை விட கொடூரமான குற்றத்தை பழிக்குப் பழியாய் செய்வதை இன்றைய தலைமுறையினர் பெருமையாக கருதுகிறார்கள். அது தவறு, மன்னிப்பே முக்கியமானது.

    பிறர் தங்களை பற்றி உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக தங்கள் பெற்றோர், உறவினர், ஏன் கடவுளை கூட பழிக்க இளைஞர்கள் தயாராக உள்ளனர். அது இறைவனின் சித்தத்துக்கு எதிரானது.

    இந்த உலகமானது தங்களுக்கு மட்டு மானது என்ற உணர்வோடு மனிதநேயமற்ற முறையில் திரிகிறார்கள். அது தவறானது. உலக வாழ்க்கை நிலையற்றது, விண்ணக வாழ்வே நிலையானது.

    இளைஞர்கள் தங்கள் பாதைகளைச் சரியாக தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் சரியான வழியில் நடக்க முயலும் போது இறைவன் அவர்களுக்குத் துணையாய் இருக்கிறார். அந்தப் பாதை குறுகலானது. அந்தப் பாதை மேடு பள்ளம் நிறைந்தது. அந்தப் பாதை, முட்களும் பாறைகளும் நிரம்பியது. எனினும் அன்பினால் அதைக் கடந்து செல்ல வேண்டும். அதுவே இளைஞருக்கான இறைவனின் அழைப்பு. இதுவே, அவரது திருவுளம்.

    சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.
    ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஈத்தாமொழி அருகே உள்ள புத்தன்துறை புனித செபமாலை அன்னை ஆலய தங்கத்தேர் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மையாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 20-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சப்பர பவனிநடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு கார்மல் பள்ளி அருட்பணியாளர் சேவியர் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சப்பர பவனி, 23-ந்தேதி காலை 6 மணிக்கு மதுரை ஆயர் சகாய ஆனந்த் தலைமையில் தேர்த் திருப்பலி, 8.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 10.30 மணிக்கு அன்னையின் அலங்கார தங்கத்தேர் பவனி, 11 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6.30 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    ×