search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    அச்சத்தை தவிர்ப்போம்

    தேவையற்ற அச்சமும், பயஉணர்வும் எதையும் சாதித்து விடுவதில்லை என்பதனை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கிறது. வீணாக தமது மனங்களை குழப்பிக்கொள்கிறவர்கள், பெரிதாக எதையுமே சாதித்ததில்லை என்பதே வரலாறு.
    வாழ்க்கை என்பது ஏற்றங்களையும், இறக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு அன்புப்பாதையாகும். இதனை சரியாக அடையாளம் கண்டுகொண்டவர், தனது வாழ்வினை நேரிய பாதையில் அமைத்து கொள்கிறார். வீரம் விளைந்த பூமி என கருதப்பட்ட இந்தியதேசம், இன்று கோழைகளின் இடமாய் மாறி நிற்கிறது. தோல்வி, அவமானம், வீழ்ச்சி போன்றவற்றை நினைத்தே பலர் அஞ்சி நடுங்கி கொண்டு நிற்கின்றனர்.

    இன்னொரு புறத்தில் உண்மையை பேசுவதற்கே அச்சப்பட வேண்டிய சூழல் மிக அதிகமாக காணப்படுகிறது. பணம் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதால் பணவெறி பிடித்த அதிகாரிகளை கண்டே அஞ்சி நடுங்க வேண்டியுள்ளது. மாணவப்பருவத்தில் இருந்தே தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் தைரியமாக ஏற்றுக்கொள். சமுதாயத்தில் அந்தஸ்து மிக்க எவ்வளவு பெரிய மனிதரை பார்க்க நேர்ந்தாலும் துணிவுடன் நேராகப்பார். அச்சஉணர்வினை முழுமையாய் தவிர்த்துவிடு. அவுரங்கசீப் டில்லி பேரரசனாக இருந்த போது அம்பர் என்ற சிறிய நாட்டிற்கு ஜெயசிங் என்னும் 13- வயது சிறுவன் பட்டத்திற்கு வந்தான். அவனை பயமுறுத்தும் நோக்கில் டில்லிக்கு அவுரங்கசீப் அழைத்தார். அவனது தாயும் அமைச்சரவையினரும் அஞ்சி நடுங்கினர்.

    டெல்லி வந்த ஜெய்சிங்கை பேரரசன் உற்றுப்பார்த்தார். நிதானமாக நின்று கொண்டிருந்த ஜெய்சிங்கை பார்த்து கோபமடைந்த அவுரங்கசீப் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்து அவனது கரம் பற்றி பற்களை நறநற வென கடித்தார்.

    அப்போதும் எவ்வித அச்சமும் அடையாது ஜெயசிங் நிதானமாய் இருந்தான். உடனே அவுரங்கசீப் இப்போது நான் உன்னை தண்டித்தால் என்ன செய்வாய்? என்று கேட்டார். ஜெயசிங் சிரித்து க்கொண்டே இவ்வளவு பெரிய பேரரசன் என்னை அழைத்து விருந்து கொடுக்க முன்வந்திருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? என கேட்டான்.

    ஜெயசிங்கின் அச்சமின்மையை கண்டு அவுரங்சீப் வியந்தார்.

    தேவையற்ற அச்சமும், பயஉணர்வும் எதையும் சாதித்து விடுவதில்லை என்பதனை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கிறது. வீணாக தமது மனங்களை குழப்பிக்கொள்கிறவர்கள், பெரிதாக எதையுமே சாதித்ததில்லை என்பதே வரலாறு. இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் தேவையற்ற மனநிலையினை உடைத்து எறிவோம். உண்மையினை நெருக்கமாய் பின்பற்ற இறைவனை பற்றி பிடித்திடுவோம். அஞ்சாதே, கலங்காதே நான் உன் னோடு இருக்கிறேன் என்ற ஏசாயாவின் இறைவார்த்தையினை எப்போதும் நினைவில் வைத்திடுவோம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×