search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திமொத்தேயு முதல் நூல்
    X
    திமொத்தேயு முதல் நூல்

    திமொத்தேயு முதல் நூல்

    திருச்சபையின் மூப்பர்களும், உறுப்பினர்களும், விசுவாச வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூலாய் நிலைபெறுகிறது இந்த நூல்.
    திமொத்தேயு எனும் பெயருக்கு, இறைவனை மகிமைப்படுத்துதல், அல்லது இறைவனுக்கு விலைமதிப்பற்றது எனும் பொருள் உண்டு. பெயருக்கு ஏற்றார்போல இறைவனை மகிமைப்படுத்தும் வாழ்வை வாழ்ந்தவர் தான் திமொத்தேயு.

    பவுல் எழுதிய திருமுகங்களில், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு மற்றும் தீத்து ஆகிய மூன்று திருமுகங்கள் ‘ஆயர் பணித் திருமுகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்த திமொத்தேயு முதலாம் மடலை கி.பி. 62, கி.பி. 63-களில் பவுல் எழுதினார்.

    இந்த நூலை பவுல் நேரடியாக எழுதவில்லை. அவரது சிந்தனைகளை உள்வாங்கி அவருடைய சீடர் ஒருவர் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதியிருக்கலாம் எனும் மாற்று சிந்தனையும் விவிலிய அறிஞர்களிடையே உண்டு. அதற்கு அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் நூலின் எழுத்து நடை, கட்டமைப்பு, இறையியல் சிந்தனை ஆகியவை முக்கியமானவை.

    எனினும் இதை பவுலே எழுதினார் என்பதே பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. இது பவுலின் முதுமைக் காலத்தில் எழுதப்பட்டது என்பதால் மொழிநடையில் மாற்றம் நேர்ந்திருக்கலாம். திருச்சபையும் இயங்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆனதால் அதன் தேவைக்கேற்ப இறையியல் சிந்தனைகளில் மாற்றம் உருவாகியிருக்கலாம், எனும் சிந்தனைகள் ஏற்றுக்கொள்ள வைக்கின்றன.

    விவிலியம் திமொத்தேயுவைப் பற்றி ஏராளமான குறிப்புகளை நமக்குத் தருகிறது. திமொத்தேயுவின் தாய் யூதப் பரம்பரையில் வந்தவர், தந்தையோ கிரேக்கர். லிஸ்திராவைச் சேர்ந்த திமொத்தேயு இரட்டைக் கலாசாரம், நல்ல மொழிஅறிவு போன்றவற்றுடன் வளர்ந்தார். அதுவே நற்செய்தி அறிவித்தல் பணியில் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

    பவுலின் முதல் நற்செய்திப் பயணத்தின் போது கிறிஸ்தவராக மாறிய திமொத்தேயு, அடுத்தடுத்த பயணங்களில் பவுலின் நம்பிக்கைக்குரிய பணியாளராய் உருமாறினார். பின்னர் எபேசுவில் உருவாக்கப்பட்ட திருச்சபையைக் கண்காணிக்கும் ஆயராக அவர் நியமிக்கப்பட்டார். திமொத்தேயு மீது பவுலுக்கு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் உண்டு என்பதை அவரது மடலின் மூலம் அறிந்து கொள்ளலாம். “என் பிள்ளை” என அவர் திமொத்தேயுவை கனிவுடன் அழைக்கிறார்.

    எபேசுவில் திருச்சபையை வழிநடத்தி வந்த திமொத்தேயுவுக்கு, மாசிடோனியாவிலிருந்து பவுல் எழுதிய கடிதம் இது. திமொத்தேயுவுக்கு வழிகாட்டவும், கடமைகளை நினைவுறுத்தவும் எழுதப்பட்ட மடல்.

    “தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று, வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்” என பவுல் தனது திருமுகத்தின் தொடக்கத்திலேயே தவறான போதனையில் மக்கள் வீழ்ந்து விடாதபடி எச்சரிக்கிறார்.

    திருச்சபையைக் கட்டமைக்கும் வழிமுறைகளை பவுல் இந்த நூலில் தருகிறார். எனினும் திமொத்தேயு ஏற்கனவே பவுலிடமிருந்து நிறைய வழிகாட்டல்களைப் பெற்றதால் அதற்கு மேல் என்ன தேவையோ அவற்றையே பவுல் பதிவு செய்கிறார். உதாரணமாக, பல மூப்பர்களின் வழிநடத்தலை பவுல் ஆதரிக் கிறார். அதே நேரம், எத்தனை பேர்? அவர் களின் பணிகள் என்ன? என்பதைப் பற்றிய முழுமையான விளக்கங்களை அவர் கொடுக்கவில்லை. அவற்றை திமொத்தேயு ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும்.

    திருச்சபையின் மூப்பர்கள் திறமையாய் திருச்சபையை வழிநடத்துவதும், இறை விசுவாசிகள் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ்வதும், உலகிற்கு வெளிச்சமாய் கிறிஸ்தவர்கள் மாறவேண்டும் என்பதும், முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன. தவறான போதனைகளால் திருச்சபை கறைபடாமல் இருப்பதும், திருச்சபையின் சரியான போதனைகள் பொதுமக்களிடம் பகிரப்பட வேண்டியதும் முக்கியம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருச்சபை எந்த அளவுக்குப் பெரியதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல, எந்த அளவுக்கு விசுவாசத்தில் ஆழமாக இருக்கிறது என்பதே முக்கியம். வலிமையான தலைமையும், வலிமையான உறுப்பினர்களுமே முக்கியம். ஏராளமான உறுப்பினர்கள் அல்ல, என்பதை பவுலின் வார்த்தைகளின் ஊடே விளங்கிக் கொள்ளலாம்.

    பவுலின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளவும் இந்த கடிதம் நமக்கு உதவுகிறது. இறைவனுக்காகவே வாழ்கின்ற அவரது வாழ்க்கையும், பிறரையும் இறைவனுக்காய் வாழவைக்க வேண்டும் எனும் அவரது விருப்பமுமே அவரது தனிமடல்களில் வெளிப்படுகின்றன.

    சட்டத்துக்கும் இரக்கத்துக்கும் இடையேயான வேறுபாடு, ெஜபத்தின் தேவை, ஆயர் பணிகள், தவறான போதனைகளை அறிதல், இறைவனைப் போல வாழ்தல், விதவைகள் மற்றும் முதியவர் மீதான கரிசனை, புனிதம் பேணல் என பல சிந்தனைகளை திமொத்தேயு முதல் நூலில் பவுல் அழகாகப் பதிவு செய்கிறார்.

    திமொத்தேயு இளம் வயதிலேயே இறைவன் பால் திரும்பியவர், பவுல் மூலம் விருத்தசேதனம் செய்யப்பட்டவர், பவுலின் பயணத்தில் உடன் சென்றவர், துடிப்பானவர், சுறுசுறுப்பாய்ப் பணிசெய்பவர், தூய வாழ்க்கை வாழ்ந்தவர், பவுலின் தீவிரமான ஜெபத்தைப் பெற்றவர், பவுலினால் வலிமைப்படுத்தப்பட்டவர் என திமொத்தேயு பற்றி பல்வேறு விஷயங்களை விவிலியம் பதிவு செய்து வைத்திருக்கிறது.

    திருச்சபையின் மூப்பர்களும், உறுப்பினர்களும், விசுவாச வாழ்க்கை வாழ விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூலாய் நிலைபெறுகிறது இந்த நூல்.

    சேவியர்
    Next Story
    ×