என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மயிலாடுதுறை கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை ஜெ.ஜெ.பிரிட்டோ அடிகளார் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார் புனித அந்தோணியார் உருவக்கொடியை புனிதம் செய்து ஏற்றினார். 

    வாணவேடிக்கை முழங்க, இன்னிசை இசைக்க, ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

    விழாவின் தொடக்க நாள் வழிபாட்டு நிகழ்வுகளை புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி மற்றும் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் பங்கு மக்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். கொடியேற்று விழா மற்றும் திருப்பலி நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கிய ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. 

    தினசரி மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. வருகிற 16- ந் தேதி (சனிக்கிழமை) இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து தேர் பவனியும் நடைபெற உள்ளது. 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    புதுக்கடை அருகே இலவுவிளை தூய ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது. விழாவில் அருட்பணியாளர் ஜாண் மைக்கிள்ராஜ் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி நடைபெறும் திருப்பலியில் வேங்கோடு பங்குதந்தை ஆன்டனி கோமஸ் தலைமை தாங்குகிறார். திருவிழாவின் இறுதி நாளான 17-ந் தேதி காலை 8.30 மணிக்கு வளனூர் பங்குதந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைைமயில் திருவிழா திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. மாலையில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆண்டனி ஜெயக்கொடி தலைைமயில் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா, பங்கு குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் ேததி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. அருட்பணியாளர் யேசுரெத்தினம் தலைைம தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு தொடர்ந்து மாலை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 17-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறும்.

    நாளை மற்றும் 16, 17-ந் ேததிகளில் நடைபெறும் திருப்பலி நாஞ்சில் நாதம் வலைத்தள தொலைக்காட்சியிலும், நாஞ்சில் நாதம் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிப்பரப்பாகும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் எம்.போர்ஜியா, பங்கு மேய்ப்புப்பணி பேரவை மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது.
    இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று (ஏசாயா 7:14) முன்னுரைத்து விட்டார். கடவுள் மனித உருவமாய் பிறந்தார். 

    இந்த செயல் கடவுள் மனிதருள் மனிதராய் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாயிருக்கிறது. ஏசாயா 8:8ல் இமானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விலாசத்தை மூடும் என்றான். இது அசீரியா ராஜாவால் ஆகாஷின் நாட்களில் யூதருக்கு வந்த கெடுதியை குறிக்கிறது என்றும், இதன்படி இமானுவேல் பாடனுவிப்பார் என்றும் விளங்கப்பட்டு உள்ளது. 

    ஆகவே மேசியா வருவாரென்றும், அவர் நமக்காக பாடுபடுவார் என்றும் நம்பி இமானுவேல் ரட்சகர் என்று நினைத்தார்கள். இது சரித்திரம் கூறும் சான்று. ஏசாயா தீர்க்கனால் உரைக்கப்பட்டது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழ விடாமலும் அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததை போல நம்மோடு இருக்கிறார். (ராஜா 8:57) .

    கிறிஸ்துமஸ் பண்டிகை கொடுத்து மகிழ்வதே. இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக. 

    டாக்டர் நெல்சன் ஜேசுதாசன். இயக்குனர்-திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
    கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார்.
    யூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால், இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து, கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.

    அவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணய மாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.

    புறா விற்பவர்களை நோக்கி, “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றி எரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். ‘பொறுமையும் சாந்தமும் மிகுந்த, தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது?’ என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.

    இயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அவரிடம் “இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருடங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள்.

    ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆம்.. மனிதர்களின் உள்ளமும், கோவில்தான். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். இயேசு சொன்னபடியே, மூன்று நாட்களில் மனக்கோவிலை எழுப்பி காட்டினார்.

    கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோவில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.
    மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.
    கடவுள், தம் மக்களை பாவம் என்னும் இருளில் இருந்தும், அடிமை வாழ்வில் இருந்தும் விடுவிக்க தொடக்க காலம் முதல் பல இறைவாக்கினர்கள் வழியாக முயற்சித்தார். ஆனால், நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் தன் ஒரே மகன் வழியாக அந்த மீட்பு என்னும் பேரொளியை அளிக்கின்றார். ஆனால், நாமோ அவரது அன்பை உதறித்தள்ளி விட்டு பாவ வழியில் வாழ்கிறோம். எளிய முறையில் குழந்தை வடிவில் பிறந்த கடவுள், அவரிடம் இருக்கின்ற வாழ்வு தான், இன்று மனிதர்களாகிய நம் அனைவருக்கும் ஒளியாக விளங்குகிறது. கடவுள் மனிதராக பிறந்தது மானிட குலத்துக்கு மாபெரும் கொடையாக அமைந்துள்ளது.

    மனுகுலம் பாவத்தில் இருந்து முழு விடுதலைபெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்து பிறப்பின் நோக்கமாக இருந்தது. இயேசு என்ற பெயருக்கு பாவத்தில் இருந்து விடுதலை அளிப்பவர், அதாவது மீட்பர் என்று பொருள். இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல் வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு, இறைத்தூதரால் அறிவிக்கப்பட்டது.

    இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் என்பதை மேய்ப்பர்கள் மட்டுமே முதலாவது கண்டனர். ஏழைகளுக்கு காட்சியளிப்பவராய், ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவில் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரின் தாழ்மை அனைத்து ஏழை-எளிய மக்களோடு ஒன்றிணைந்து வாழ அறைகூவல் விடுக்கிறது. இப்படிப்பட்ட வாழ்வே இம்மண்ணில் நமக்கு முழுமையான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அனுதினமும் அருளச்செய்யும்.

    இயேசு பிறந்த போது ஏரோது அரசன் கலங்கினான்(மத்தேயு 2:3), மீட்பரின் பிறப்பால் தனது ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் என்று அஞ்சிய ஏரோதின் சதியும், சூழ்ச்சியும் வீழ்ச்சியுற்றன. மாநிலம் மாட்சி கண்டது. விண்ணவர் வாழ்த்திட, மன்னவர் மகிழ்ந்தனர்.

    ‘உன்னை நீ அன்பு செய்வது போல உன் அயலானையும் அன்பு செய்’ என்று இயேசு சொன்னதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கிற போது நம்மால் கடவுளின் விண்ணுலகை அடைய முடியும்.

    தற்போது, கொரோனா என்னும் கொடிய நோய்தொற்றின் காரணமாக உறவுகளை இழந்து, பொருளாதாரத்தை இழந்து வறுமையில் வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்கும் மக்களின் அச்சம் அகன்று ஆறுதல் பெறவும், இழப்பை மறந்து மீட்பு பெற, இயலாமை என்பது இல்லாமல் போக எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற அவர்களோடு உடனிருப்போம், அன்பு செய்வோம், ஆறுதல் கூறுவோம்.

    மீட்பர் இயேசுவின் மீட்பின் செயலை அவனிக்கு உணர்த்துவோம். இந்த நற்செயல்களால் ஒவ்வொரு இல்லங்களிலும், உள்ளங்களிலும் பாலன் இயேசு பிறக்கட்டும்.

    எளிமையின் சின்னமாய் உலகை மீட்க கடவுள் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். தொழுவத்தில் பிறந்த கிறிஸ்து நம் உள்ளங்களில் பிறக்க வழி செய்வோம்.

    கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை நம் வாழ்வில் கடைபிடித்து செயல்படுவோம். உலக மீட்பர் பாலன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக.

    எழில் மிகு காட்சியளிக்கும் குமரியில் பண்பான தலைசிறந்த பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் சீரும் சிறப்புமாக செயல்பட்டு வரும், கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக என் இனிய கிறிஸ்து பிறப்பு திருநாள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் "லூர்து நகர்" என்று அழைக்கப்படுவதால் வேளாங்கண்ணிக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் வந்து மாதாவை வழிபட்டு செல்கின்றனர்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் "பசிலிக்கா" என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் இரவு 10.30 மணியளவில் நன்றி அறிவிப்பு வழிபாடும் 11 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    முன்னதாக பாதிரியார்களின் திருப்பலி ஆயத்த பவனி நடந்தது. பின்னர் 11.30 மணியளவில் பேராலய அதிபர் பிரபாகர் மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி ஆங்கில புத்தாண்டு பிறப்பை அறிவித்தார். தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மன்றாட்டுகள் நடந்தது.

    புத்தாண்டையொட்டி பேராலயம் அருகில் தியான மண்டபம் செல்லும் சாலை, விண்மீன் ஆலயம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
    திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. ஆயரின் செயலர் ஆபேல், பேராலய பங்குத்தந்தைகள் சகாயராஜ், ஜெபசீலன் பிரபு, ஜெபராஜ் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர். 

    இரவு 10.30 மணிக்கு திருப்பலி தொடங்கியது. இதில் நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் நடைபெற்று, 12 மணி அளவில் உன்னதங்களிலே பாடல் பாடப்பட்டு புத்தாண்டு நிகழ்வுகள் நடந்தன. அதன்பிறகு ஆயர் மறையுரை ஆற்றினார். அதேபோல் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனை தலைமை போதகர் டேவிட்சன் பால்ஜேக்கப் தலைமையில் நடந்தது. 

    அதேபோன்று திண்டுக்கல் டி.இ.எல்.சி திருத்துவநாதர் ஆலயத்தில் தலைமை போதகர் காருண்யா தலைமையில் ஆண்டுஇறுதி நன்றி ஆராதனை மற்றும் புத்தாண்டு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
    2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு திருவிருந்து ஆராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு 2020-ம் ஆண்டு இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராதனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு 2021-ம் ஆண்டு புதுவருட சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையை சபை ஆயர் பிரைட் பிராங்கிளின் நடத்தினார். பயிற்சி ஆயர் சாம்மேத்யூ ஆராதனையில் உதவி செய்தார்.

    இதில் சேகர குழு உறுப்பினர்கள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. புத்தாண்டையொட்டி ஆலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆராதனையில் பங்கேற்றவர்கள் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை தலைமை ஆயர் சாலமோன், உதவி ஆயர் சாம்நியூபிகின் ஆகியோர் தலைமையில் நடந்தது. புத்தாண்டு பிறந்தவுடன் ஆலய மணி ஒலிக்கப்பட்டது.

    தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் நேற்றுஇரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி பாதிரியார் வில்சன், பாதிரியார் அமர்தீப் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் புனித வின்சென்ட் தே பவுல்சபை தலைவர் பிரான்சிஸ் மெய்யப்பா உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சை குழந்தை ஏசு திருத்தலத்தில் நன்றி வழிபாடு பாதிரியார் ஜஸ்டின் சுதாகர் தலைமையில் நடந்தது. அதைத்தொடர்ந்து புத்தாண்டு கூட்டுத்திருப்பலி திருத்தல அதிபர் அன்புரோஸ், திருச்சி பாதிரியார் ஜோசப் ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்றுஇரவு நன்றி வழிபாடு பேராலய பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. தொடர்ந்து புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்கு தந்தை அலெக்சாண்டர், பாதிரியார் கித்தேரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். கொரோனா தொற்று காரணமாக பல தேவாலயங்களில் நள்ளிரவுக்கு முன்பாக கூட்டு திருப்பலி நடந்தது. பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இருந்தனர்.
    எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
    நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம், ஏறக்குறைய 12 கிலோமீட்டர். வழக்கமாக ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கால்நடையாகவும், கழுதைகள் மீதும், வசதியிருப்போர் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்தனர். இப்படிப் பயணம் செய்வோர் தங்குவதற்காக ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமாக சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது.

    மரியாளும், சூசையும் நீண்ட பயணத்திற்குப் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகிக் கசங்கியிருந்தன. மரியாள் மிகவும் சோர்வுற்று, தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திருந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களில் இருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மரியாளும், சூசையும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் அவர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. மரியாவும், சூசையும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்குக் கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை.

    அந்த இடத்தில்தான் இயேசு பிறந்தார். இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்குக் கிடைத்த இடம், இந்த எளிய பகுதிதான். மாட்டுத் தொழுவத்தை தன் பிறப்பிடமாக மனு மகன் தேர்ந்தெடுத்துக் கொண்டது, தன்னை எளிமையின் நாயகனாக உலகுக்கு அறிவிப்பதற்காகத்தான். ‘மீட்பர், அரண்மனையில் அரசியின் வயிற்றில்தான் பிறப்பார்’ என்ற புரட்டு ஆட்சியாளர்களின் தீர்க்க தரிசனங்களை, கடவுள் தன் பிறப்பின் மூலமாக ‘பொய்’ என்று காட்டினார்.

    மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தையான இயேசுவை, காண்பதற்காகவும், வணங்குவதற்காகவும் இடையர்களே முதலில் செல்கிறார்கள். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். ‘உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை. மாறாக, எளியமக்களே இறைவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது’ என லூக்கா விளக்குகிறார்.

    விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர், அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து இசைத்த பண்புயர் கீதம் ‘உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக..’ எனத் தொடங்குகின்ற புகழ்பாடல்.

    கன்னி மரியாளிடம் “பிறக்கவிருக்கும் குழந்தை, ‘இம்மானுவேல்’ என அழைக்கப்படும்” என்று வான தூதரில் ஒருவரான கப்ரியேல் அறிவிக்கிறார். ‘இம்மானுவேல்’ என்றால், ‘இறைவன் நம்மோடு’ என்று பொருள். இதுதான் கிறிஸ்மஸ் தினத்தின் நம்பிக்கையூட்டும் நற்செய்தி. இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதற்கு அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் கடவுள் நம் முன் தோன்றுகிறார். எனவே, விரக்தியை விரட்டுங்கள். நம்பிக்கை இழந்திருந்தால் அதை மீட்டுக்கொள்ளுங்கள். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
    நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சமூக இடைவெளி கடைப்பிடித்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    ஏசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக டிசம்பர் 25 அன்று உலகம் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். நள்ளிரவு பிரார்த்தனை, ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும்.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதவழிபாடுகளுக்கு பல்வேறு தடுப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைந்த அளவில் வழிபாட்டில் பங்கேற்க வேண்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் கையாளப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் எளிமையாகவே கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த தேவாலயங்களில் நேற்று காலையில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனை கூட்டத்துக்கு குறைவான அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    குறைவான அளவில் மக்கள் கூடும் சில தேவாலயங்களில் மட்டுமே நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து தேவாலயங்களிலும் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியே பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அமரும் நாற்காலிகளும் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தன. இதுதவிர வழிபாட்டுக்கு அனுமதி தரப்பட்ட தேவாலயங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    சென்னையில் சாந்தோம் தேவாலயத்தில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர். மேலும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனை வழக்கத்தைவிட சுருக்கமாகவே நடந்தது.

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. தாமஸ்மவுண்ட் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. எழும்பூர் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.

    நுங்கம்பாக்கம் சி.எஸ்.ஐ. கதீட்ரல் தேவாலயத்தில் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    பல தேவாலயங்களில் பக்தர்கள் குறைவான எண்ணிக்கையில் கலந்துகொள்வதற்காக முன்கூட்டியே டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டன. தேவாலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப சோதனை நடத்திய பிறகே தேவாலயங்களில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்களுக்காக தேவைப்பட்ட நேரங்களிலும் பிரார்த்தனை கூட்டங்கள் சுருக்கமாக முன்னெடுக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பவர்கள் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பும்போது ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து சொல்வதும், கட்டி தழுவுவதும் வாடிக்கை. ஆனால் நேற்றைய தினம் வழிபாடு முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் மட்டும் கூறி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பிரார்த்தனை கூட்டம் எளிமையாக நடந்தாலும் அதில் கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர். மொத்தத்தில் எளிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

    எப்பொழுதும் விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவுரையின்படி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் அருகில் உள்ள சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தை சுற்றி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காணப்பட்டது. ஏசு பிறப்பு நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்று சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து இருந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி ேவளாங்கண்ணி ேபராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது குழந்தை ஏசு சொரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு அதை பேராலய அதிபர் பிரபாகரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அதை பங்குத்தந்தை அற்புதராஜ் பெற்று அருகில் உள்ள குடிலில் 11.30 மணிக்கு வைத்து ஏசு பிறந்ததாக அறிவித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து ெகாண்டனா். அதற்கான ஏற்பாடுகளை பேராலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா். திருப்பலியில் ேவளாங்கண்ணி ேபராலய பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
    ×