search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவன் நம்முடனேயே இருக்கிறார்
    X
    இறைவன் நம்முடனேயே இருக்கிறார்

    இறைவன் நம்முடனேயே இருக்கிறார்

    எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
    நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம், ஏறக்குறைய 12 கிலோமீட்டர். வழக்கமாக ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கால்நடையாகவும், கழுதைகள் மீதும், வசதியிருப்போர் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்தனர். இப்படிப் பயணம் செய்வோர் தங்குவதற்காக ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமாக சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது.

    மரியாளும், சூசையும் நீண்ட பயணத்திற்குப் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகிக் கசங்கியிருந்தன. மரியாள் மிகவும் சோர்வுற்று, தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திருந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களில் இருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மரியாளும், சூசையும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் அவர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. மரியாவும், சூசையும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்குக் கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை.

    அந்த இடத்தில்தான் இயேசு பிறந்தார். இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்குக் கிடைத்த இடம், இந்த எளிய பகுதிதான். மாட்டுத் தொழுவத்தை தன் பிறப்பிடமாக மனு மகன் தேர்ந்தெடுத்துக் கொண்டது, தன்னை எளிமையின் நாயகனாக உலகுக்கு அறிவிப்பதற்காகத்தான். ‘மீட்பர், அரண்மனையில் அரசியின் வயிற்றில்தான் பிறப்பார்’ என்ற புரட்டு ஆட்சியாளர்களின் தீர்க்க தரிசனங்களை, கடவுள் தன் பிறப்பின் மூலமாக ‘பொய்’ என்று காட்டினார்.

    மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தையான இயேசுவை, காண்பதற்காகவும், வணங்குவதற்காகவும் இடையர்களே முதலில் செல்கிறார்கள். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். ‘உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை. மாறாக, எளியமக்களே இறைவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது’ என லூக்கா விளக்குகிறார்.

    விண்ணகத்தில் கடவுளின் பணியாளர்களாக விளங்குவோர், அவருடைய தூதர்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து இசைத்த பண்புயர் கீதம் ‘உன்னதத்தில் இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக..’ எனத் தொடங்குகின்ற புகழ்பாடல்.

    கன்னி மரியாளிடம் “பிறக்கவிருக்கும் குழந்தை, ‘இம்மானுவேல்’ என அழைக்கப்படும்” என்று வான தூதரில் ஒருவரான கப்ரியேல் அறிவிக்கிறார். ‘இம்மானுவேல்’ என்றால், ‘இறைவன் நம்மோடு’ என்று பொருள். இதுதான் கிறிஸ்மஸ் தினத்தின் நம்பிக்கையூட்டும் நற்செய்தி. இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதற்கு அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் கடவுள் நம் முன் தோன்றுகிறார். எனவே, விரக்தியை விரட்டுங்கள். நம்பிக்கை இழந்திருந்தால் அதை மீட்டுக்கொள்ளுங்கள். எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும், நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை நெஞ்சில் நிரம்புங்கள்.
    Next Story
    ×