search icon
என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய 94-வது பிரதிஷ்டை அசன பண்டிகை விழா 4 நாட்கள் நடைபெற்றது.
    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தலைமை பேராலயமான நாசரேத் தூய யோவான் பேராலய 94-வது பிரதிஷ்டை அசன பண்டிகை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் பேராலய மைதானத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் இயேசுவுக்காக குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மூன்றாம் நாள் குடும்ப உபவாச கூடுகை ஆலயத்தில் நடைபெற்றது. அன்று இரவு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, பாடகர் குழு சிறப்பு பாடல்கள் நடைபெற்றது. மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரதிஷ்டை விழா அசன பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அசன வைபவம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பேராலய தலைமை குருவானவர் ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ் தலைமையில் உதவி குருவானவர் ஜெபஸ்டின் தங்கபாண்டி மற்றும் அசனகமிட்டியினர்,  பேராலய சபை மக்கள் செய்திருந்தனர்.

    காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    காவல்கிணறு இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் புனித உபகார அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் கொடியேற்றினார். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 8-ம் திருநாள் காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.

    9-ம் திருநாள் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் உறுதிப்பூசுதல் விழா நடக்கிறது.

    பிற்பகல் 3 மணிக்கு அன்னையின் தேர் பவனியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 11-ம் திருநாள் மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் ஆரோக்கியராஜ், வினித்ராஜா மற்றும் பங்கு மேய்ப்பு பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

    மறைசாட்சி தேவசகாயத்துக்கு வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இதையொட்டி கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆலயங்களில் 3 நாட்கள் திருப்பலி நடந்தது.
    குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர் மறைசாட்சி தேவசகாயம். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1745-ம் ஆண்டு தேவசகாயம் என்ற பெயரில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மாறினார். அதன்பிறகு மக்களுக்கு நற்செய்தி அறிவித்ததோடு, மக்கள் அனைவரும் சமம் என்றும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என பேசுவதும், செயல்படுவதும் தவறு என்றும் போதித்தார்.
    இதனால் அவர் பல கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டு இறுதியாக 1752-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    மறைசாட்சியாக, ஏசுவின் கொள்கைகளுக்காக ரத்த சாட்சியாக இறந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதை ஏற்றுக்கொண்ட கத்தோலிக்க திருச்சபை அவருக்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலய சதுக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணியளவில் (இந்திய நேரப்படி) புனிதர் பட்டம் வழங்குகிறது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். அவருடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேலும் 9 மறைசாட்சிகளுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

    இந்த விழாவில் மத்திய- மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் கலந்து கொள்கிறார்கள். கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் அருட்பணியாளர்கள், கோட்டார், குழித்துறை மறைமாவட்ட மக்கள் என ஏராளமானோர் விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.

    இந்த விழாவையொட்டி கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களுக்கு உட்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் முன்தயாரிப்பு திருப்பலிகள் கடந்த 3 நாட்களாக நடந்தன. 3-வது நாளான நேற்று கோட்டார் மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமான புனித சவேரியார் பேராலயம் உள்ளிட்ட 2 மறைமாவட்டங்களின் அனைத்து ஆலயங்களிலும் காலை, மாலை வேளைகளில் முன்தயாரிப்பு திருப்பலி நடந்தது.

    இன்று புனிதர் பட்டம் வழங்கப்படுவதையொட்டி நன்றி திருப்பலி பல ஆலயங்களில் நடைபெற இருக்கிறது. குறிப்பாக தேவசகாயம் தொடர்புடைய பகுதிகளான கோட்டார் புனித சவேரியார் பேராலயம், நட்டாலம் ஆலயம், புலியூர்குறிச்சி ஆலயம், காற்றாடிமலை ஆலயம், மேலப்பெருவிளை ஆலயம், ராமன்புதூர் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களில் நன்றி திருப்பலிகள் நடைபெற உள்ளது. இந்த நன்றி திருப்பலி வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளன. தொடர்புடைய ஆலயங்கள் தவிர பிற ஆலயங்களிலும் நன்றி திருப்பலி நடைபெற உள்ளது.
    மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், வியாகுல அன்னை, புனித செபஸ்தியார், தூய அடைக்கல அன்னை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.
    திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி கிராமத்தில் தூய அடைக்கல அன்னை ஆலய திருவிழா நடைபெற்றது. பங்குத் தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் வசந்த், ஞானதாசன் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆலய திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.

    இதில் தினமும் நவநாள் திருப்பலி சிறப்பு மறையுரை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் ஞானதாசன், லூயிஸ், ஜெயசீலன் ஜெயக்குமார், அருளானந்து ஆகியோர் நிறைவேற்றினர்.

    தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், வியாகுல அன்னை, புனித செபஸ்தியார், தூய அடைக்கல அன்னை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, சப்பர பவனி மற்றும் கொடி இறக்கம் நடைபெற்றது. இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்ன தானம் நடைபெற்றது.
    வாடிகனில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, அவருடைய கல்லறை அமைந்துள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நடந்தது.
    குமரி மண்ணில் பிறந்து, வளர்ந்து, கிறிஸ்தவத்துக்காக மறைசாட்சியாக மடிந்தவர் தேவசகாயம். அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக ஆயர் மன்றம் சார்பிலும், கோட்டார், குழித்துறை மறைமாவட்ட ஆயர்கள் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான ரோமில் உள்ள புனிதர் பட்ட பேராயத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    அதைத்தொடர்ந்து திருச்சபையின் பல்வேறு ஆய்வுகளுக்குப்பிறகு அவர் புனிதராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று வாடிகனில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதையொட்டி சனிக்கிழமை வரையிலான 3 நாட்கள் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்கள் சார்பில் முன்னேற்பாட்டு திருப்பலி நடைபெற்றது.

    நேற்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி காலையில் தேவசகாயம் கல்லறை அமைந்துள்ள நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தேவசகாயத்துக்கான புனிதர் பட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று இந்த திருப்பலியில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
    திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கினார். புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டேன்லி சகாயசீலன், இணை பங்குத்தந்தை பிராங்கோ சிலுவை, அருட்பணியாளர் அமலநாதன் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

    திருப்பலி முடிவில் பேராலய பலிபீடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள புனித தேவசகாயம் கல்லறைக்கு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் நாகர்கோவில் நகரில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயம், புனிதர் தேவசகாயம் சுட்டுக்கொல்லப்பட்ட தேவசகாய மவுண்டில் உள்ள ஆலயம், நட்டாலம், புலியூர்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்புத் திருப்பலிகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் நடந்த நிகழ்ச்சியில் ரோமில் தேவசகாயம் புனிதராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் (இந்திய நேரம் 1.30 மணி) தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை நிர்வாகிகள் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமையில் கிரீடத்தை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.அந்த கிரீடத்தை மேடையில் வைக்கப்பட்டிருந்த புனிதர் தேவசகாயம் சொரூபத்திற்கு சூட்டினர். இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    புனித அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் பவனி அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு வழியாக சென்றது.
    வால்பாறை அக்காமலை எஸ்டேட் பகுதியில்  புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நவநாள், சிறப்பு ஜெப வழிபாடு, ஜெபமாலை பக்தி ஆகியவை நடைபெற்றது.

    ஆலய பங்கு குரு மரியஜோசப் தலைமையில் முடீஸ் புனித அந்தோணி யார் ஆலய பங்கு குரு மரியஅந்தோணிசாமி மற்றும் உதவி பங்கு குரு மரியபினிட்டோ ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினார்கள்.

    இதையடுத்து புனித அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேர் பவனி அக்காமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு வழியாக சென்றது.

    பின்னர் ஆலயத்தில் திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பங்கு குருக்கள் தலைமையில் அக்காமலை எஸ்டேட் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    பூண்டி மாதா பேராலய பெருவிழாவில் இன்று(சனிக்கிழமை) தேர்பவனி நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்துள்ளனர்.
    திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், பல்வேறு அருட்தந்தையர்களால் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    விழாவில் நேற்று மாலை சிறு சப்பரபவனி நடந்தது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெற்றது. மரியா -பாவிகளின் அடைக்கலம் என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய அதிபர் இருதயராஜ் அடிகளார் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பூண்டி பேராலய அதிபர் பாக்கியசாமி மற்றும் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று(சனிக்கிழமை)  தேர்பவனி நடைபெறுவதையொட்டி ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலயத்தில் குவிந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை  பேராலய அதிபர் பாக்கிய சாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன்,  உதவி  பங்கு தந்தையர்கள் ஜான்சன், இனிகோ, ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர். 
    பூண்டிமாதா பேராலயத்தில் தேர்பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் கும்பகோணம் பிஷப் கலந்துகொள்கிறார்.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே எழில் மிகு  சூழலில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் தரும் பூலோகம் போற்றும் பூண்டிமாதா என போற்றிவணங்கப்படும் பூண்டி மாதா  பேராலயத்தின் வருடாந்திர திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
    நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறிய சப்பர பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டன. திருவிழாவின் 8-வது நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மரியா-பாவிகளின் அடைக்கலம் என்ற தலைப்பில் வேளாங்கண்ணி ஆலய அதிபர் இருதயராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நாளை(சனிக்கிழமை) காலை பூண்டி மாதா பேராலயத்தில் மறைந்த லூர்து சேவியர், ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி மரியா-விசுவாசத்தின் மாதிரி என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 9.30 மணியளவில் மல்லிகை மலர் அலங்காரத்தில், வண்ண மின்விளக்குகள் ஜொலிக்க பூண்டி மாதாவின் தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார். தேர்பவனி முடிந்ததும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை மரியா-அனைவரின் தாய் என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் நிறைவேற்றுகிறார். அன்று மாலை  கொடி  இறக்கப்பட்டு  பூண்டிமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர்கள் ஜான்சன், இனிகோ, அருளாநந்தம்,  மற்றும் பங்கு  மக்கள் செய்து வருகின்றனர். ஆண்டுவிழாவையொட்டி பேராலய வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது. நாடெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பூண்டி மாதா பேராலய தேர்பவனியை காண குவிந்து உள்ளனர்.
    வள்ளியூரில் புனித பாத்திமா அன்னைக்கு 53 பவுனுக்கு தங்க கிரீடத்தை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அணிவித்தார்.
    வள்ளியூர் புனித அன்னை பாத்திமா திருத்தல திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழாவில் தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலையில் மறையுரையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 9-ம் திருநாளான நேற்று காலையில் சகாய மாதா மற்றும் சவேரியார் அன்பியம் சார்பில் ஜெபமாலையும், நவநாள் திருப்பலியும் நடந்தது.

    பின்னர் பாத்திமா அன்னைக்கு 53 பவுனுக்கு தங்க கிரீடத்தை கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அணிவித்தார்.

    தொடர்ந்து தனித்தனி சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், புனித பாத்திமா அன்னை எழுந்தருளி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் மறையுரை நடந்தது.

    இதில் பங்குத்தந்தைகள் அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், ஜெபநாதன், தேவராஜன், நெல்சன், மரிய அரசு, ராபின், பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தென்மண்டல பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் ராதாபுரம் பங்குதந்தை ராபின் மறையுரை வழங்குகிறார். மாலையில் ஜெபமாலை பவனியும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி மிக்கேல் லாரன்ஸ், அன்பிய பொறுப்பாளர் குழு, அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    ஆலங்குடி அருகே உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து தினமும் காலை 7 மணிக்கு தேர்பவனி மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    இதையடுத்து இன்று இரவு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் செபஸ்தியாரின் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி, பவனி பூஜை ராசியமங்கலம் பங்குத்தந்தை அருட்திரு கறம்பை செபஸ்தியான் தலைமையில், அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் அனைவரின்  கூட்டுப்பாடல் பூஜையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து ஆலயத்தை வந்தடைந்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராசியமங்கலத்தில் உள்ள பங்கு அருள் பணியாளர், கிராம கமிட்டி ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
    ஆண்டவர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார். பிரியமானவர்களே, ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கிறவர்.
    நம் அருமை ஆண்டவரை எப்போது வேண்டுமென்றாலும் நாம் கூப்பிடலாம். எப்போது வேண்டுமென்றாலும், அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், அவர் உறங்குவது இல்லை.

    “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமு. 22:4).

    “நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை விடுவிப்பார்” என்பதுதான் வேதத்திலே தாவீது ராஜாவின் சாட்சியாய் இருந்தது. எத்தனை முறை அவர் திரும்பத் திரும்ப அவ்விதமாய் சொல்லுகிறார் என்பதை வேதத்திலே சங்கீத புஸ்தகத்தில் வாசித்து அறியலாம்.

    சிங்கங்களும், கரடியும் அவருக்கு எதிராய் வந்தபோது, ‘கர்த்தரை அல்லாமல் வேறு யாரை நோக்கிக் கூப்பிடுவது?’. பெரிய கோலியாத் இஸ்ரவேலரை நடுங்க வைத்துக் கொண்டிருந்தபோது தாவீது கர்த்தரைத் தவிர வேறு யாரையும் நோக்கிக் கூப்பிடவில்லை. அவர் மனித உதவியையும் நாடவில்லை. தன் சுய பலத்தையும் சார்ந்து கொள்ளவில்லை. அவர் சொல்லுகிறார், “நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்”. (சங். 18:6).

    நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். பிரச்சினை சிறியதோ, பெரியதோ போராட்டம் கொடியதோ, பயங்கரமானதோ, ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள், உங்களுக்கு விடுதலை உண்டு. ஏனென்றால் விடுதலையை கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

    ஆண்டவர் சொல்லுகிறார், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”. (சங். 50:15).

    ஆண்டவர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையானவை.

    “கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்”. (ஏசா. 65:24).

    “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும், உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3) என்று சொல்லுகிறார்.

    வேதத்திலே, எசேக்கியா ராஜா வியாதிப்பட்டார். ‘நீர் மரித்துப்போவீர், குடும்ப காரியங்களை ஒழுங்குபடுத்தும்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி திட்டமும் தெளிவுமாய் கூறிவிட்டார். அந்த நேரத்தில் எசேக்கியா செய்தது என்ன? தம்முடைய முகத்தை சுவர் பக்கமாய் திருப்பி ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார்.

    ஆண்டவர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார். பிரியமானவர்களே, ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கிறவர்.

    வேதம் சொல்லுகிறது: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18). “அவர் சமீபமாய் இருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (ஏசா. 55:6). “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்” (சங். 86:7).
    2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சவேரியாரை வழிபட்டனர்.
    ஓட்டப்பிடாரம் அருகே கல்லத்திக்கிணறு கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலய சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் திருப்பலியும், ஆராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சவேரியாரை வழிபட்டனர். தேர் பவனியில் கூடவே ஈரத்துணியுடன் சென்று கீழே விழுந்து வழிபட்டால் தாங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

    இதனால் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுடன் திரளான பெண்கள் தேர் முன்பு ஈரத்துணியுடன் விழுந்து வணங்கி வழிபட்டனர்.
    ×