என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித தோமையார் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது.
    சென்னை சைதாப்பேட்டை, சின்னமலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித தோமையார் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 3-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு கொடி ஏற்றம், தேர்பவனி, நவநாள் திருப்பலி பாதிரியார் அந்தோணி செபாஸ்டின் தலைமையில் நடக்கிறது.

    அதேபோல், ஒவ்வொரு நாளும் காலை 6 மணி, 11.30 மணி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனையும், திருப்பலியும் நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் ஆடம்பர திருப்பலியும், தேர்பவனியும் நடக்கிறது.



    விழாவின் இறுதி நாளான 3-ந்தேதி அன்று தோமையார் பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை பாதிரியார் பி.ஜே.லாரன்ஸ் ராஜ், உதவி பங்கு தந்தை பாதிரியார் ஜஸ்டின் திரவியம், பங்கு பேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    நெய்வேலி அருகே ரோமாபுரியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் ஆலய பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் ஆலயத்தை சுற்றி சிறிய தேர் பவனியும் நடைபெற்றது. விழாவில் 19-ந்தேதி மாலை நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, மாலை 6 மணிக்கு தேனிமலை பங்குதந்தை லாசர் சவரிமுத்து, கூனங்குறிச்சி பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு, ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

    தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடலூர் மெயின்ரோடு வழியாக நெய்வேலி மேம்பாலம் வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நெய்வேலி, விருத்தாசலம், வடலூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    இயேசு பெருமானின் நற்செய்திகள் உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
    இயேசு பிரான் இம்மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில், தம் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறினார்:

    “என்னைப் பார்த்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று சொல்பவர்கள் எல்லாம், விண்ணரசுக்குள் செல்வது கிடையாது. வானுலகில் உள்ள, என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுகின்றவர்களே விண்ணரசுக்குள் செல்வர்”.

    “அந்நாளில் பலர் என்னைப் பார்த்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ உம் பெயரால் நாங்கள், இறைவாக்கைச் சொல்லவில்லையா? உம்முடைய பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம்முடைய பெயரால் வல்லமையான செயல்களைச் செய்யவில்லையா? என்று கேட்பர்”.

    “அப்பொழுது நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி தவறிச்செயல்படுவோர்களே, என்னை விட்டுத் தள்ளிப் போங்கள்’ என்று வெளிப்படையாகவே அறிவித்து விடுவேன்”.

    “ஆகவே, நான் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளைச் செவிமடுத்து, இவற்றின்படி செயல்படுகின்றவர் யாராக இருந்தாலும், பாறையின் மீது தம்முடைய வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாக இருப்பார்கள். மழை நன்றாகப் பொழிந்தது. ஆறானது; பெருகி ஓடியது. பெருங்காற்று வீசியது. அவை அனைத்தும் அவ்வீட்டின் மீது மோதியும் அது விழவில்லை. ஏனென்றால், அந்த வீட்டின் அடித்தளம் பாறையின் மீது அமைந்திருந்தது”.

    “நான் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவற்றவர்களுக்குச் சமமாவர். மழை நன்றாகப் பெய்தது. ஆறு பெருக்கெடுத்து ஓடியது. பெரிய காற்று வீசியது. அவ்வீடு விழுந்தது. இப்படியாகப் பேரிழப்பு ஏற்பட்டது”.

    இவ்வாறு அவர் பேசி முடித்த சமயம், அவரது பேச்சைக் கேட்ட மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனென்றால், அவர் மறைநூல் அறிஞர்கள் பேசியதைப் போலப் பேசாமல், அதிகாரத்தோடு அவர்களுக்குப் போதித்தார்.

    இயேசு பெருமான் போதித்த இந்நற்செய்தியை மீண்டும் கவனமாகப் படியுங்கள். பெயருக்கு என்னைப் பார்த்து, ‘ஆண்டவரே, ஆண்டவரே,’ என்று சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. விண்ணுலகில் வீற்றிருக்கும் என் தந்தையின் விருப்பப்படி செயல்பட வேண்டும். அவர்கள்தான் விண்ணரசைத் தரிசிக்கவும் முடியும். அங்கு சேரவும் முடியும் என்கிறார்.

    என் பெயரால் இறைவாக்கைச் சொல்வதும், என் பெயரால் பேய்களை ஓட்டுவதும், என் பெயரால் வல்லமையான செயல் களைச் செய்வதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. என் தந்தையின் சித்தப்படி நடப்பதே ஏற்றுக் கொள்ளக்கூடியது என்று விரித்துக் கூறுகிறார்.

    நான் சொல்லும் வார்த்தைகளைச் செவியில் தாங்கி, செயல்படுகின்றவர்கள், பாறையின் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவர் என்று கூறுகிறார்.

    பாறையின் மீது எழுப்பப்படும் கட்டிடமோ, வீடோ எந்தவித இயற்கை சீற்றத்துக்கும் அவ்வளவு எளிதாகப் பாழாகி விடாது. காரணம் அது பாறையின் மேல் எழுப்பப்பட்டுள்ள கட்டிடம் ஆகும். பாறையின் மீது அடித்தளம் அமைந்துள்ளதால் அது தாங்குகிறது. மழை தொடர்ந்து பெய்தாலும், மழையின் காரணமாக ஆற்றிலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், இவற்றைத் தொடர்ந்து பெரிய காற்று, திசை மாறி அடித்தாலும் வீட்டிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.



    தான் சொல்லக்கூடிய வார்த்தைகளைக் கேட்டு விட்டு, இவற்றின்படி செயல்படாதவர்கள், மணலின் மீது தன் வீட்டைக் கட்டிய அறிவற்றவர்களுக்குச் சமமாவர் என்கிறார். காரணம், மணலின் மீது கட்டப்பட்ட வீட்டிற்கு அஸ்திவாரம் பலமாக இருக்காது. மழைக்கும், அதனால் ஏற்படும் வெள்ளத்துக்கும், பெருங்காற்றிற்கும் தாங்காமல் விழுந்து விடும்; பேரழிவு ஏற்படும் என்கிறார்.

    எவ்வளவு அருமையான உவமையை எடுத்தாள்கிறார் என்பதை ஒருகணம் சிந்திப்போம். பாறை மேல் கட்டப்பட்ட வீடு; மணலின் மீது கட்டப்பட்ட வீடு. இரண்டு வீட்டிற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பாருங்கள்.

    மனித சமுதாயத்தை நல்வழிப்படுத்த, அவர்களுக்கு நற்செய்தியைப் போதித்து, அவர்களை விண்ணரசில் தன் தந்தையோடு வீற்றிருக்கச் செய்யவே, அவர் இவ்வுலகிற்கு வந்தார். இவ்வுலகில் வாழ்வோரின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் கவனிக்கிறார். எளிமையாக விண்ணரசை அடைந்து விடலாம் என்று எண்ணுவோரைச் சிந்திக்க வைக்கிறார். ‘என் தந்தையின் திருவுளப்படி’ என்ற ஒரு வார்த்தையை எடுத்துக் கூறுகிறார். தந்தையின் திருவுளப்படி நடந்தால்தான், விண்ணரசை அடைய முடியும் என்று அதிகாரமாகப் பேசுகிறார்.

    அவரின் பேச்சு அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை உயர்த்திக் கொள்ளாமல், தன் தந்தையைப் பற்றிப் பேசுகிறாரே என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள். இவ்வுலகில், இக்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்களைக் கவனியுங்கள். நிரந்தரமில்லாத இவ்வுலகில் வாழும் இவர்களுக்கு, மனதில் ஏற்படும் அதிகார மமதையை எண்ணிப் பாருங்கள்.

    இயேசு பெருமான் இப்படிப்பட்டவர்களை எல்லாம் மனதில் வைத்துதான், இவ்விதம் பேசுகிறார். மறைநூல் அறிஞர்கள் பேசுவது வேறு. அவர்களைப் போல அவர் பேசவில்லை. எதையும் எதிர்பார்த்தும் பேசவில்லை.

    இயேசு பெருமான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், வெளிப்படையாகவே பேசுகிறார். நெறி தவறிச் செயல்படுகின்றவர்கள் யாராக இருந்தாலும் என்னை விட்டுச் சென்று விடுங்கள். அப்படிப்பட்டவர்களை நான் என் தந்தையின் முன்னால், உங்களை எனக்குத் தெரியாது என்று அறிவித்து விடுவேன் என்கிறார்.

    என் வார்த்தைகளைக் கேளுங்கள். கேட்டால் மட்டும் போதாது. கேட்டபடி நடங்கள். கேட்பதும் நடப்பதும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    இயேசு பெருமானின் நற்செய்திகள் உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது என்பதை அனைவரும் உணர வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத இவ்வாசகங்கள் எல்ல வகையான மனிதர்களுக்கும் சாதி சமய வேறுபாடு இன்றி சொல்லப்பட்டது. அன்பைப் போதிக்கும்போது இது ஒரு சாராருக்கு மட்டும் உரியது என்று எண்ணி ஒதுக்க வேண்டியதில்லை.

    நற்செய்தி என்றாலே, நம் எண்ணங்களோடு, ஒத்துழைக்கக் கூடிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்படும் ஐவகை பொறிகளின் வழியாக உட்புகுந்து மனித மனங்களை ஆளுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு பிரானின் நற்செய்தியை செவிமடுப்போம். வாழ்க்கையில் நடந்து காட்டுவோம்.

    செம்பை சேவியர்.
    ஜெபமும், நற்செயல்களும் இணைந்தால் நமது மனித வாழ்வு சிறக்கும். “ஜெபியுங்கள் நீங்கள் கடவுளிடம் செல்வீர்கள். நற்செயல் செய்யுங்கள். கடவுள் உங்களை தேடி வருவார்“ என்றார் அன்னை தெரசா.
    தவக்காலம் என்பது அருளின் காலம். இறை ஆற்றலின் காலம். ஒருவர், தான் செய்த தவறை உணர்ந்து தன்னை திருத்திக்கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட மன்னிப்பின் காலம். இவற்றிற்கெல்லாம் மேலாக இறை-மனித உறவை மேம்படுத்தும் காலம்.

    இத்தகைய சிறப்பு பெற்ற தவக்காலத்தின் மைய பொருளாக அமைவது மனமாற்றம். இந்த சொல், தீமையிலிருந்து விலகி நல்லவராம் கடவுளை நோக்கி திரும்புவதையும், ஒருவனின் நடத்தையிலும் முழு மனிதனில் உண்டாகும் மனமாற்றத்தை குறிக்கின்றது. இயேசுவின் பொதுப்பணி தொடக்கமே மனமாற்றத்தின் அழைப்பும், கடவுளின் அரசின் வருகையை பற்றியதாக தான் இருக்கின்றது. (மாற்கு 1,15)

    அந்த மனமாற்றத்தை செயலில் காட்டிய விவிலிய மனிதர்களில் சக்கேயு என்பவரும் ஒருவர். அவரிடம் பதவி, புகழ், பணம், அரசியல், செல்வாக்கு அனைத்தும் இருந்தன. ஆனால் அவருக்குள் மகிழ்ச்சி இல்லை. உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லை. உள்ளத்தில் எப்போதும் ஒரு விரக்தியை உணர்ந்தார். ஆனால் இவரின் மனமாற்றமே இயேசுவை இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என அறிவிக்க செய்தது.



    மனம் மாறுகிறவர்களுக்கு மன்னிப்பும், மீட்பும் உண்டு என்பதையும், நிறைவான மனமாற்றம் நிலையான மகிழ்ச்சியை தருகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் மனமாற்றம் என்பது செயலில் வெளிப்பட வேண்டும். “ஜெபியுங்கள் நீங்கள் கடவுளிடம் செல்வீர்கள். நற்செயல் செய்யுங்கள். கடவுள் உங்களை தேடி வருவார்“ என்றார் அன்னை தெரசா.

    ஜெபமும், நற்செயல்களும் இணைந்தால் நமது மனித வாழ்வு சிறக்கும். கடவுளின் இரக்கம் சிறப்பாக நம்மை தேடி வரும். தவக்காலத்தில் நமது வாழ்வை ஜெபத்தினாலும், நற்செயல்களினாலும் நிரப்புவோம். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன் (யோவான் 15:11). எனவே தவக்காலத்தில் மனமாற்றம் பெற்று, பிறருக்கு செய்யும் நற்செயல்களால் இறை ஆசீர்பெறுவோம்.

    அருட்திரு ஆல்பர்ட் ஜோசப், பங்குத்தந்தை, குட்டத்து ஆவாரம்பட்டி.
    கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் திருப்பலி நிகழ்ச்சி, நேற்று முன்தினம் புதுநன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடந்த திருவிழா திருப்பலியில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

    அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அந்தோணியார் சொரூபம் மின்ஒளியில் ஜொலித்தது. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர், ஆலய வளாகத்தில் இருந்து அந்தோணியார் வீதி உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

    பின்னர் இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. தேர்பவனி நிகழ்ச்சியில் பங்கு குருக்கள் ஜார்ஜ் தனசேகர், ஆண்டனி பெலிக்ஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
    கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவனோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை.
    “என் சொந்த திராட்சை தோட்டத்தையோ நான் காக்கவில்லை-உன்னதப்பாட்டு 1:6”

    இரண்டு பெண்கள் பதநீர் பானைகளை சுமந்தபடி சென்று கொண்டிருந்தனர். திடீரென்று ஒருத்தியின் கால் எங்கோ இடற தலையில் இருந்த பானை சாய்ந்தது. அதற்குள் மற்றவள் அது விழுந்துவிடாதபடி கைகளால் தாங்கச் சென்ற போது அந்த பானையும் விழுந்து உடைந்தது. இவள் தலையில் இருந்த பானையும் விழுந்து உடைந்தது.

    மற்றவளின் பானையை விழுந்துவிடாதபடி தடுக்கப்போனது நல்லதுதான் ஆனால் தன் தலையிலும் பானை இருப்பதை அவள் நினையாமல் போனதால் இரண்டும் நஷ்டம் அடைந்தது. சில நேரங்களில் மற்றவர்கள் தவறக்கூடாது, தடம்புரளக்கூடாது, தகாத விதமாய் போய்விடக்கூடாது என்று அதிகமாக நாம் ஜாக்கிரதை பட்டு செயல்படுகிறோம்.

    ஆனால் மற்றவர்கள் சரியாக இருக்கும்படி எதிர்பார்ப்போடு செயல்படுகிற நாம் சரியாக இருக்கிறோமா என்பதை கவனித்து செயல்பட மறந்துவிடுகிறோம். உண்மை, நேர்மை, நாணயம், அன்பு, பரிசுத்தம், தாழ்மை, ஒழுக்கம் என்று மற்றவர்கள் இருக்கும்படி பிரசங்கிக்கும் எத்தனையோ இறைப்பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் அவைகளை தவறவிட்டுவிட்டு சிறப்பற்றவர்களாய் நிற்பதை காண்கின்றோம். எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான மனம் மாற்றம் ஏற்பட்டதா என்று சிந்திக்காமல் இருக்கின்றனர்.



    சாலமோனுடைய நீதிமொழிகள் யாரையும் சிந்திக்கத் தூண்டும் தன்மையுள்ளவை. அவை மனிதன் எப்படி நடக்க வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள் எவ்விதம் இருந்தால் கடவுள் அவனை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக கூறுகின்றன.

    ஆனால் கடவுளுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்க வேண்டிய அவசியத்தை குறித்து விழிப்புணர்வு ஊட்டிய அவனோ, தன்னுடைய வாழ்க்கையை அவ்விதம் வைக்க விழிப்பாய் இருக்கவில்லை. கடவுளுடைய வழிகளில் நடப்பதற்கு அனேகருக்கு தூண்டுதல்கள் கொடுத்த அவனோ, ஒருநாள் தேவனுடைய வழிகளை விட்டு விலகிப்போய் கடவுளால் வரும் மகிமையை இழந்து போனான். தங்களை எந்த விதத்திலும் செம்மை படுத்தாத பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் அதிக அக்கரை கொண்டு, அவர்கள் ஒழுங்காக இருக்கும்படி அதிக ஜாக்கிரதை காண்பிக்கிறார்கள். ஆனால் பயனில்லை. பெற்றோர் வழியே பிள்ளைகளும் போகிறார்கள். ஆம். மற்றவர்கள்மேல் கரிசனை கொள்வது நல்லது. அதேவேளையில் நம்மை குறித்தும் தேவையான அளவு கரிசனை வேண்டும்.

    “உயர்ந்த கருத்துக்களை மனிதன் காதலிக்கிறான். கரம்பிடிக்க சொன்னாலோ நைசாக நழுவி விடுகிறான்.”

    - சாம்சன் பால்.
    சிலுவை மரணம் வரை எந்த இடத்திலும் இயேசுவின் இறைப்பணி தோல்வி அடையவில்லை என்பதோடு கேலிப்பொருளும் ஆகவில்லை. சிந்தித்து செயல்படுவோம்.
    வாழ்க்கையில் நடக்கும் நல்லது மற்றும் கெட்ட சம்பவங்களை ஒவ்வொருவரும் அவர்கள் கேட்டு, படித்து அறிந்த அளவில் எடைபோட்டுப் பார்ப்பது வழக்கம்.

    இறை பக்தியுள்ளோர் ஒரு விதமாகவும், இயல்பு வாழ்க்கையில் இருப்போர் மற்றொரு விதமாகவும், நாத்திகவாதிகள் இன்னொரு கோணத்திலும் அந்தந்த சம்பவங்கள் பற்றி வியாக்கியானம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் பேய், பிசாசு, சாத்தான், தீயோன், சோதனைக்காரன் என்பவற்றுக்கும் ஆளாளுக்கு ஒரு கருத்தை உருவாக்கி வைத்துள்ளோம். இறைவனால் உருவாக்கப்பட்டவன் என்ற வகையில் நற்குணங்களும், அவரது எதிராளியான சாத்தானின் தூண்டுதலுக்கு கீழ்ப்படிந்தவன் என்ற வகையில் கெட்ட குணங்களும் கலந்திருப்பவனே மனிதன் என்பது கிறிஸ்தவம் கூறும் அறிவாகும்.

    எந்த மனிதனிடமும் அந்தந்த சந்தர்ப்பத்தில், நல்ல மற்றும் கெட்டகுணங்களின் அடிப்படையிலான செயல்பாட்டை மாறி மாறி காணமுடியும். இப்படி பிறப்பின் மூலம் வரும் பிறவிக் குணங்கள்தான் பெரும்பாலும் ஒரு மனிதனின் இயல்புத்தன்மையை காட்டுகின்றன. அதிகமாக கெட்ட குணங்களை வெளிப்படுத்துபவனை ‘கெட்டவன்’ என்று உலகம் முத்திரை குத்தி விடுகிறது.

    ஆனால் அனைத்து வகை இயல்பு குணங்களில் இருந்தும் விடுபட்டு, முழுமையாக இறைகுணங்களை ஒருவனால் அடைய முடியும் என்பதற்கு கிறிஸ்தவமே வழிகாட்டுகிறது. அதாவது எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் இறை குணங்களை வெளிப்படுத்துதலே கிறிஸ்தவம் ஆகும்.

    அதாவது, பகைப்பவனை நேசிப்பது; அடித்தவனை அணைப்பது; காதலை, காமத்தை எதிர்பாலினத்தவர் வெளிப்படுத்தினாலும் அவர் களிடமும் இறைஅன்பை மட்டுமே வெளிப்படுத்துவது; பாகுபாடு இல்லாமல் தேவைப்பட்டோருக்கு உதவுவது, என எத்தனையோ இறைகுணங் களை வேதம் மூலம் இயேசு வெளிப்படுத்தியுள்ளார்.

    பகைக்குப் பகை, கோபத்துக்கு கோபம், காமத்துக்கு காமம், சாதிமதஇன பாகுபாடு போன்றவையெல்லால், எந்த மதத்திலும் அல்லது நாத்திகராக இருந்தாலும், மனித வாழ்க்கையின் இயல்பு நிலையில் வெளிப்படுத்தப்படும் குணங்களாக காணப்படுகின்றன. ஆனால் இந்த இயல்பு குணங்களில் ஒன்றுகூட ஒரு மனிதனின் இறைவாழ்க்கையில் குற்றங்களாகக் குறுக்கிடாத அளவுக்கு வாழ வேண்டுமானால், அந்த வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை இயேசு சொன்னதோடு மட்டும் அல்ல செய்தும் காட்டியுள்ளார்.

    ஆன்மிகத்துக்கு வெறும் வாய்ப்போதனை மட்டுமே போதுமானதாக அமைந்துவிடாது.



    வெறும் அறிவுரை தருவதோடு மட்டுமே நின்றுவிடாமல் உயிர்போகும் அளவுக்கான இக்கட்டான சூழ்நிலையிலும் பகையாளிகள் மீது அன்பை நடத்திக் காட்டிச்சென்றவர் இயேசு. கிறிஸ்தவ மதத்தில் இருந்தாலும் கிறிஸ்து காட்டிய இந்தப்பாதையை பின்பற்றாதவர் கிறிஸ்தவர் அல்ல.

    இயேசு இறைப்பணிக்கு வருவதற்கு முன்பு சாத்தானால் சோதிக்கப்பட்டார் (மத்.4:111). ஒரு பொறுப்பு தரப்படுவதற்கு முன்பு சோதனை அவசியமாக உள்ளது. அதனால்தான் அந்த சோதனைக்காக இறைவனால் இயேசு அழைத்துச் செல்லப்பட்டார். 3 விதமான சோதனைகளை இயேசுவுக்கு சாத்தான் கொண்டு வந்தான். முதலில், சரீர ரீதியான பசி ஏற்படும்போது வேத வசனங்களை சுயலாபத்துக்காக மாற்றிக் கொள்வதைப் பற்றிய சோதனை; இரண்டாவது, எந்த கட்டத்திலும் வசனங்களை பின்பற்ற முடியுமா? அல்லது, இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டு மற்றவர் ஏற்படுத்தும் சூழ் நிலைக்கு ஏற்றபடி செயல்படுதலுக்கான சோதனை:

    மூன்றாவதாக, உயர்ந்த அந்தஸ்து, சகலவித வசதிகள், பணபலம் போன்ற உலக ஆதாயங்கள் கிடைப்பதாக இருந்தால், வசனங்களை விட்டு விலகி, பொய், லஞ்சம், தவறாக போதித்தல், இறைவன் கூறாததை கூறி சுயமேன்மை அடைவது போன்றவற்றை சாஷ்டாங்கமாக பணிந்து கொள்வதற்கான சோதனை.

    இந்த சோதனைகளின் முடிவில் வெளிப்படும் மிகப் பெரிய உண்மை என்னவென்றால், மூன்றையும் ஜெயித்தவனை விட்டு சாத்தான் விலகிப் போய்விடுவான் (11 ம் வசனம்) என்பதாகும். அந்த வசனத்தை அர்த்தம் மாறாமல் மாற்றி வாசித்தோம் என்றால், அந்த சோதனைகளில் ஏதாவது ஒன்றில் தோற்றுவிட்டோம் என்றால் இறைப்பணியாளனை விட்டு சாத்தான் விலகவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும்.

    இப்படித்தான் பலரது இறைப்பணியை விட்டு சாத்தான் விலகாமல் தனது தந்திரங்களால் அவர்களின் பாதையை மாற்றிவிட்டுக் கொண்டிருக்கிறான். இதனால் அவர்களும் அவர் களின் இறைப்பணியும் கேலி, கிண்டல், அவமானத்துக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.

    மற்றவனுக்கு போதனை செய்வதைவிட, இதுபோன்ற சோதனைகளில் எந்த இடத்தில் தோல்வி அடைகிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, அதை சரிப்படுத்திக் கொண்டு அதன் பிறகு இறைப்பணியை மேற்கொள்வதே சிறந்தது. இறைப்பணியில் சுயமேன்மை, சுயலாபம் அடைதல் என்பது இறைவனால் ஏற்கமுடியாத தன்மை. எனவே அந்த எண்ணமுள்ளவன் மேற்கொள்ளும் இறைப்பணியில் சாத்தானின் இடற்பாடு வந்துகொண்டே இருக்கும்.

    அனைத்து சோதனைகளையும் ஜெயித்ததால் இயேசுவை விட்டு சாத்தான் விலகிப்போனதோடு, தூதர்கள் வந்து அவருக்கு சேவை செய்யத் தொடங்கினர். எனவே சிலுவை மரணம் வரை எந்த இடத்திலும் இயேசுவின் இறைப்பணி தோல்வி அடையவில்லை என்பதோடு கேலிப்பொருளும் ஆகவில்லை. சிந்தித்து செயல்படுவோம்.
    நாகர்கோவில் வேப்பமூடு அருகே அசிசி வளாகத்தில் உள்ள இயேசுவின் திருஇருதய ஆலய விழா நாளை தொடங்கி 25-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வேப்பமூடு அருகே அசிசி வளாகத்தில் உள்ள இயேசுவின் திருஇருதய ஆலய குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு செபமாலை, இயேசுவின் திருஇருதய புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இவற்றுக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    17-ந்தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஜான்குழந்தை மறையுரையாற்றுகிறார். 18-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் நித்திய சகாயம் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் இவாஞ்சலின் பெஸ்கி மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. 20-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பக்தசபை ஆண்டு விழா நடக்கிறது.



    23-ந்தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குருகுலமுதல்வர் சாலமன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    24-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் மைக்கல் ஏஞ்சலஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஆனந்த் மறையுரையாற்றுகிறார். 25-ந்தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து மற்றும் பெருவிழா திருப்பலி நடக்கிறது.

    நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள நசரேன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு திருப்பலியும், கொடியிறக்கமும் நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் செல்வராஜ் தலைமை தாங்க, மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார்.
    பிறர் குற்றம் காணாமல், தன் குற்றம் பார்த்து, தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொண்டு, வாழ்ந்து, பிறர் வாழ்த்த நற்கதி அடைய வேண்டும்.
    மத்தேயு என்ற நற்செய்தியாளர் எழுதியதை சிந்தனையாகப் பகிர்ந்து கொள்வோம்.

    இயேசு பிரான் தன் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார்:

    “பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் எந்தத் தீர்ப்பைப் பிறருக்கு அளிப்பீர்களோ, அந்தத் தீர்ப்பைத்தான் நீங்களும் பெறுவீர்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் எந்த அளவைக் கொண்டு அளக் கிறீர்களோ, அந்த அளவையால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”.

    “நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரிகளின் கண்களில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பது எதனால்? அவர்களிடம் உங்கள் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? என்று எப்படி உங்களால் கேட்க முடிகிறது?”.

    “இதோ! நீங்கள் பாருங்கள். உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக் கிறதே? வெளி வேடக்காரர்களே! முதன் முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதற்குப் பிறகு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருந்து துரும்பை எடுங்கள். உங்களுக்கு அப்பொழுது தெளிவாய்க் கண் தெரியும்” என்கிறார்.

    எல்லா நற்செய்திகளையும் போல, இந்த நற்செய்தியையும், ஆழ்ந்து கவனமாகச் சிந்திக்க வேண்டும். பிறரைக் குறை சொல்வதும், பிறரிடம் இருக்கும் குற்றங்களைப் பெரிது படுத்துவதும் மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. இவ்வுலகில் மனிதராகப் பிறந்தவர்கள், சக மனிதர்களின் குறைகளை மட்டுமே பார்த்து அவர்களை ஏளனமாகப் பார்க்கும் ஒரு மனநிலையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

    இப்படிப்பட்ட எண்ணங்கள் தவறானது என்பதைச் சுட்டிக்காட்டத்தான், மரக்கட்டை களையும், துரும்பையும் எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். பிறரிடம் இருக்கும் சிறுகுற்றங்களைப் பெரிதுபடுத்தக் கூடாது என் கிறார். ஆகவேதான் உன் கண்ணில் மரக்கட்டை போல, அதிகமாகக் குற்றங்கள் இருக்கிறபொழுது, அடுத்தவர் கண்ணில் இருக்கும், துரும்பைப் பார்ப்பது என்ன காரணத்தால் என்று கேள்விக்கணை தொடுக்கிறார். எப்பொழுதுமே பிறரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடக்கூடாது என்கிறார்.

    இயேசு பெருமானின் நற்செய்திப் போதனைகளை மீண்டும் மீண்டும் உற்று நோக்கினால், பிறர் குற்றம் காணாதே என்ற வாசகத்தைத்தான் அடிக்கடி வலியுறுத்துகிறார். அதோடு அவர் நின்று விடவில்லை. தொடர்ச்சியாகப் பல நற்செய்தி வாசகங்களை எடுத்துரைக்கிறார். பல இடங்களில் தீர்ப்பிடுவது பற்றிக் கூறுகிறார். யாரையும் யாரும் தீர்ப்பிடக் கூடாது; தீர்ப்பிட்டால், தனக்கும் அத்தகைய தீர்ப்பே கிடைக்கும் என்கிறார்.



    அடுத்து வரும் நற்செய்தி, இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. ‘எந்த அளவைக் கொண்டு அளப்பீர்களோ’ என்ற வாசகத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனியுங்கள்.

    பொதுவாக நீங்கள் வாரி வழங்கினால், உங்களுக்கும் அதுபோலவே வழங்கப்படும் என்பதைப் போல, இந்த அளவையைப் பற்றிப் பேசுகிறார்.

    பிறரையும் அவர் தம் குறைகளையும் காண்பதற்கு முன்பு, உங்களிடம் இருக்கும் குறைகளை எண்ணிப் பாருங்கள். உங்களிடம் நிறைய குறைகளை வைத்துக் கொண்டு, அடுத்தவரிடம் குறை காணத் துடிப்பது எதற்காக? அதோடு மட்டுமா இருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா? என்று ஒரு வினாவையும் தொடுக் கிறீர்கள்.

    இவ்வாசகத்தின் உள்ளர்த்தம் என்ன என்பதை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்த்துத் தெளிவடையுங்கள். முதலில் மனிதராகப் பிறந்த யாரும், தன் குற்றத்தையும், குறை களையும் என்றுமே ஒப்புக் கொள்வதில்லை. அப்படி ஒப்புக் கொள்வது இழிவானது என்று கருதுகிறார்கள். இப்படி இருக்கும்பொழுது, பிறரிடம் மட்டும் மன்னிப்பை எப்படி எதிர்பார்க்கிறார்கள்? சீர்திருத்தம் என்பது முதன் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். இயேசு பெருமானார் இவ்வுலகத்தில் எளிமையாக மட்டும் பிறந்தவரல்லர். எளிய வாழ்க்கையை வாழ்ந்தும் காட்டுகிறார். எளிய வாழ்வைப் பிறருக்கும் எடுத்துரைக்கிறார். எளிய வாழ்க்கையில் பொய் இல்லை. பொறாமை இல்லை. திருட்டு இல்லை. நேர்மை மட்டுமே கோலோச்சும்.

    பிறரிடம் குறை காண்பவர்களை ‘வெளி வேடக்காரர்கள்’ என்கிறார். வேடக்காரர்கள் என்று மட்டும் சொல்லவில்லை. வெளி வேடக்காரர் என்று அழுத்தமாகக் கூறுகிறார். இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. வெறும் வேடக்காரர்கள் நாடகத்தில் மட்டும், ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்திற்கேற்ப நடித்துச் செல்வார்கள். ஆனால் ‘வெளி வேடக்காரர்கள்’ என்போர், வெளியே மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும் நிரந்தரமாக இத்தகைய வேடத்தையே தரித்து வலம் வருவார்கள். ஆகவே இப்படிப்பட்ட கடுமையான வார்த்தையைக் கூறுகிறார்.

    ‘நீங்கள் முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டை போன்ற அளவுடைய குறைகளைக் களைந்து விடுங்கள். பிறகு பிறரை நோக்கலாம். அந்தத் துரும்பை எடுக்கலாம்’ என்கிறார்.

    இந்த நற்செய்தியைச் சிந்திப்பவன், பிறர் குற்றம் காணவும் மாட்டான். அவர்களை இழிவாக எண்ணவும் மாட்டான்.

    மனிதப் பிறவி ஓர் உயர்ந்த பிறவி என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவன் உயர்ந்த நிலையையும், உன்னத நிலையையும் அடைய வேண்டுமானால், சில கட்டுப்பாடுகளைத் தனக்குத் தானே அமைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

    கட்டுப்பாடு அற்ற வாழ்க்கை என்பது கடிவாளம் இல்லாத குதிரையைப் போன்றது. அது எப்பக்கமும் செல்லும்; இடறியும் விழும்.

    இயேசு பெருமான் இந்த உலகில் அவதரித்த நோக்கமே, மனிதர்களைப் பாவ வழிகளில் இருந்து விடுபெறச் செய்து, வீடு பேறு அடைய வைப்பதேயாகும். அந்த நல்ல நோக்கம் நிறைவேற வேண்டுமானால், மனித வர்க்கம் இணைந்து இயல்பாகவும், எளிமையாகவும் வாழ வேண்டும்.

    தான் மட்டுமே சரியானவனைப் போலவும், ஏனையோர் குற்றமுள்ளவர்களைப் போலவும் எண்ணும் நிலையே இன்றைக்கு மனிதர்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால், பிறர் குற்றம் காணாமல், தன் குற்றம் பார்த்து, தங்களைத் தாங்களே சீர்திருத்திக் கொண்டு, வாழ்ந்து, பிறர் வாழ்த்த நற்கதி அடைய வேண்டும்.

    இயேசு பெருமானின் இந்நற்செய்தி சிந்தனையை ஏற்போம். அவர்தம் வழியைப் பின்பற்றுவோம். அவ்வழியில் நலம் பெறுவோம்.

    - செம்பை சேவியர்.
    மானிடர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன்னையே இந்த உலகிற்கு வழங்கிய இயேசுவின் ஒப்பற்ற தியாக பலியை நினைத்து நன்றி கூறுவோம்.
    ‘தண்ணீரை விட ரத்தம் கடினமானது.‘ ஒரு வகையில் பார்த்தால் ரத்தத்தின் அடிப்படையும் தண்ணீர் தான். அதனால் ரத்தத்தை, ‘செந்நீர்‘ என தமிழ் மரபு கூறுகிறது. உடலின் தட்ப வெப்ப மாற்றத்தால், ரத்தம் உயிருக்கு ஆதாரமாக இருக்கிறது. மனிதனோ, விலங்குகளோ எதுவாயினும் அந்தந்த உடலுக்குள் இருக்கும் வரை ரத்தம் என்பது ஒரு சக்தி வாய்ந்த திரவம். உயிர் வாழ்வதற்கு தவிர்க்க முடியாத ஆதாரமாக இருப்பது ரத்தம் தான்.

    ஆனால் உடலில் இருந்து ரத்தம் வெளியேறிய பிறகும், அதற்கு அதே வல்லமை உண்டா? அதிலும் மனிதர்களை தூய்மைப்படுத்தும் அளவிற்கு அந்த ரத்தம் சக்தி பெற்றதா? ஆம். சக்தி பெற்றது தான். அது எப்படி? இயேசு தம்முடைய ரத்தத்தினாலேயே மனித குலத்தை தூய்மைப்படுத்தி, அதை கரை சேர்க்க சித்தமானார். அப்பத்தையும், திராட்சை ரசத்தையும் பகிர்ந்தளித்து “இது என் உடல் - இது என் ரத்தம்“ என்று இயேசு கூறினார். அது வெறும் உருவகமல்ல. அது ஓர் உண்மை.



    அந்த உண்மை, இயேசுவினுடைய முழு வாழ்வின் பண்புகளையும் தூய லட்சியத்தையும் அப்படியே சித்தரிப்பதாகும். அது அவைகளின் சாரமும் ஆகும். இயேசுவின் உண்மையான உடல், மெய்யான ரத்தம் இவை இரண்டும் மக்களுக்காக தகனப்பலி ஆகிறது. இவ்விதமாக அவர் தன் ஊனையும், உதிரத்தையும் நமக்கெல்லாம் பங்கிட்டு தந்ததின் மூலம் தம்முடைய உள்ளத்தையே உலகிற்கு (நமக்கு) தந்திருக்கிறார்.

    பணம் படைத்த செல்வந்தருக்கு, பணத்தின் அருமை தெரிவதில்லை. பெற்றோரின் பாசத்தால் தாலாட்டப்படும் குழந்தைகளுக்கு, பல தருணங்களில் பெற்றோரின் அருமை தெரிவதில்லை. சுதந்திர நாட்டில் வாழ்பவர்களுக்கு, சுதந்திரத்தின் அருமை புரிவதில்லை. ‘கோவில் பூனை தெய்வத்திற்கு அஞ்சாது‘ என்ற நிலையிலேயே நம்முடைய வாழ்க்கை செல்கிறது.

    மானிடர் மீது கொண்ட அன்பின் காரணமாக தன்னையே இந்த உலகிற்கு வழங்கிய இயேசுவின் ஒப்பற்ற தியாக பலியை நினைத்து நன்றி கூறுவோம். அவர் காட்டிய பாதையில் நம் காலடி தடங்களை பதிப்போம்.

    அருட்சகோதரி. பேர்ட்டில் ஜான்சிராணி, மரியின் ஊழியர் சபை, திண்டுக்கல்.
    கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்து டன் தொடங்கியது. இதையொட்டி காலை 8 மணிக்கு திருப்பலி, கொடியேற்று விழா நடைபெற்றது. கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் கொடியேற்றி வைத்தார்.

    பங்கு குரு ஜார்ஜ்தனசேகர் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) 8-ம் நாள் நவநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) புனித அந்தோணியார் திருநாள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.



    வருகிற 17-ந் தேதி திருப்பலி, புதுநன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொள்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

    திருவிழாவையொட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி, 7.30 மணி, 11.30 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி, நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணிக்கு சுகமளிக்கும் திருப்பலி, 11.30 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.
    பாதகமான சூழல்களை துணிவோடு எதிர்கொள்வோம். புனித பவுலடியார் கூறுவதுபோல ஏசுவோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம் என்பதே நம் நம்பிக்கை.
    வீரம் என்பது வெற்றிகளை வைத்து வழங்கப்படும் பட்டமல்ல. மாறாக அச்சுறுத்தும் களங்களை எதிர்கொள்ளும் பண்பிலும் கையாளுகின்ற பாணியிலும் அது படிந்து கிடக்கிறது. களங் களில் வெற்றி பெற்றவர்களையும் வீரர்கள் என்றே அழைக்கிறோம். தோல்வியுற்றவர்களையும் வீரர்கள் என்றே அழைக்கிறோம்.

    வீரத்தின் முத்திரையாக வெற்றி தோல்வியை விட ஒருவரின் அஞ்சாமை உணர்வும், எதிர்கொள்ளும் திராணியும் சோர்வுறாத மனப்பக்குவமும் ஒருவரை வீரர் என்று அழைக்க வைக்கிறது. ஏசுபிரான் அஞ்சாதீர்கள் என்று ஆயிரம் முறை சொல்லியிருக்கிறார். நாம் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை.

    பாவத்தை தவிர வேறு எதற்கும் நாம் அஞ்சத்தேவையில்லை. கடவுள் நம்மோடு இருக்கும்வரை நாம் கடவுள்பக்கம் இருக்கும்வரை நாம் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. பகைவர்களை பழிவாங்குவது வீரம் அல்ல. அவர்களை மனமாற்றி நண்பர்களாக்குவதே வீரம்.



    இது வீரத்துக்கு ஏசு வகுத்த இலக்கணம். கெத்சமணித் தோட்டத்தில் எதிரிகள் அவரை சூழ்ந்தபோது துணிவோடுதான் அவர்களை எதிர்கொண்டார். ஒரு கோழையாக அவர் ஓடி ஒளியவில்லை. பதுங்கவில்லை. தப்பிக்கவில்லை. அச்சூழலை துணிவோடு எதிர்கொண்டார்.

    தான் சிலுவையில் தொங்கியபோதும் அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த முத்துக்கள் இறைவா இவர்களை மன்னியும் (லூக் 23:34) என்பதுதான் இந்த வார்த்தைகள் வரலாற்றை புரட்டிப்போட்டன. மரணச்சூழலிலும் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்ப்பதற்கு தனிப்பட்ட வீரம் தேவைப்படும். ஏசு சிலுவையில் இறந்ததால் அவர் ஒரு கோழை அல்ல.

    அவர் ஒரு வெற்றி வீரர். சாவைக்கொன்றவர், வாழ்வை வென்றவர். நாமும் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. வியாதிகளுக்கும், வறுமைக்கும், தோல்விக்கும், மரணத்துக்கும் கூட நாம் அஞ்சவேண்டியதில்லை. கடவுள் இந்த சூழல்களை நமக்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய சக்தி படைத்தவர். ஏற்படுகின்ற பாதகமான சூழல்களை துணிவோடு எதிர்கொள்வோம். புனித பவுலடியார் கூறுவதுபோல ஏசுவோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம் என்பதே நம் நம்பிக்கை.

    - அருட்தந்தை.சி.குழந்தை, காணியிருப்பு.
    ×