என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து சமபந்தி விருந்து நடக்கிறது.

    4-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியில் மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு தேர் பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா கொடியை சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை அருளப்பன் ஏற்றி வைத்தார்.

    விழாவை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந்தேதி வரை தினமும் சிறுதேர் பவனி மற்றும் திருப்பலி ஆகியவை நடக்கிறது. மே மாதம் 1-ந்தேதி காலை 8 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் நற்கருணையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 9 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது.
    போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார்.
    ஆண்டவர் ஏசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருந்த போது அவர் உச்சரித்த கடைசி ஏழு வார்தைகளில் ஆறாவது வார்த்தை “எல்லாம் நிறைவேறிற்று” (யோவான் 19:30) எல்லாம் நிறைவேறிற்று என்பதற்கு என் வாழ்க்கை முடிந்து விட்டது என்று பொருள் அல்ல, மாறாக அது வெற்றியின் முழக்கம். நாம் நம்முடைய சாதாரண பார்வையில் அது தோல்வியின் குரலாக விரக்தியின் உச்சத்தில் கதறுபவரின் சத்தம் போலத்தான் பார்க்க வேண்டும்.

    அதாவது நான் முயற்சி செய்தேன், ஆனால் தோற்று விட்டேன் என்பது போல தோன்றும். இதற்கு காரணம், உலகை மீட்க வந்த உன்னத தேவன் சிலுவையில் தொங்கிக்கொண்டு இருக்க அவரை கொலை செய்பவர்கள் அவருக்கு முன்பு திடமாக நின்றுகொண்டு அவரை எள்ளி நகையாடிக்கொண்டும், அவரை சிலுவையில் இருந்து இறக்கி வரசொல்லி சவால் விட்டுக்கொண்டும் இருப்பது ஆண்டவர் இயலாமல் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு உருவாக்கலாம்.

    அவருடைய சீடர்களும் கூட இவ்வாறு தான் பார்த்தார்கள். அவர்கள் நினைத்ததைபோல அவர் செய்யவில்லை என்று கோபமும் விரக்தியும் அடைந்தனர். கசையால் அடிகள் வாங்கி தசைகள் கிழிந்து குருதி வழிந்தோடும நிலையில் சிலுவை மரத்தில் தொங்கிக்கொண்டு எப்படி அவர் வெற்றியின் குரலாக முழங்க முடியும் என்று எண்ணத்தோன்றும். அது வேதனையின் குரல் விரக்தியின் கதறல் என்று தான் பார்க்க தோன்றும்.

    இறைவன்ஏன் இடிமின்னல் கொண்டு தன் மகனை கொலை செய்பவர்களை அழிக்கவில்லை அல்லது இவரே என் அன்பார்த்த மகன் என்று அவர் பணியை தொடங்கியப்போது கூறியவர் இப்போது குரல் கொடுக்கவில்லை என்ற மனித பார்வைகள் எல்லாம் நிறைவேறிற்று என்பதை ஒரு வெற்றியின் குரலாக பார்க்க விடாது. மீட்பின் வரலாற்றோடு விவிலியத்தின் முன்னறிவிப்புகளோடு இறை நம்பிக்கையோடு நாம் அதைப்பொருத்தி பார்த்தால் தான் அது வெற்றயின் முழக்கம் என்பது தெளிவாக தெரியும்.

    போரில் வெற்றி பெற்ற வீரன் எல்லாம் முடிந்தது என்று கொண்டாட்டமாய் கூறுவது போல ஆண்டவர் ஏசு தன் தந்தையிடம் தன்னுடைய மீட்பின் பணிகள் அனைத்தும் மிகச்சரியாய் முடிந்து விட்டது என்று கூறுகிறார். எல்லாம் நிறைவேறியது ஒரு வெற்றியின் குரல் கீழ்படிதலின் குரல் மற்றும் நமக்கு நம்பிக்கை அளிக்கும் குரல் மனித சமூகத்தின் விடுதலைக்காக எல்லாம் நிறைவேறிற்று. மண்ணகத்தில் போரினை முடித்து விட்டு உன்னருபே வருகின்றேன் தந்தையே என்ற வெற்றியின் முழக்கம். அதனால் தான் நாம் அந்த நாளை புனித வெள்ளி என்று போற்றுகிறோம்.

    அருள்திரு.தேவதாஸ், பங்குத்தந்தை,
    தூய அலங்கார அன்னை பேராலயம், குடந்தை.
    இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.
    திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரசியமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு.

    பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்களில் தான் கடவுளின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஒன்று, உன்னத சங்கீதம், இன்னொன்று இந்த எஸ்தர் நூல்.

    வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டு வாழ்ந்த காலத்தில் தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க இது வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே நடந்த கதை தான். அப்படிப்பட்ட களத்தில் அமைந்த பிற நூல்களாக எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களைச் சொல்லலாம்.

    எஸ்தர் நூலின் சாரம்சம் இது தான். அகஸ்வேர் மன்னன் இந்தியா முதல் எகிப்து வரை விரிந்து பரந்த‌ மாபெரும் வலிமையான சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கிறான். தன்னுடைய வீரதீர பராக்கிரமங்களை எல்லோருக்கும் பறைசாற்ற மாபெரும் விருந்தொன்றை அளிக்கிறான். அந்த அரசவையில் அரசி வஸ்தி ஆட வேண்டும் என அழைப்பு விடுக்கிறான்.

    அரசனின் அழைப்பை வஸ்தி நிராகரிக் கிறாள். மன்னனையே மனைவி மதிக்காவிடில் எந்த மனைவி தான் கணவனை மதிப்பாள் என விவாதம் நிகழ்கிறது. வஸ்தி அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறாள். அந்த இடத்துக்கு இன்னொரு இளம் கன்னிப்பெண் தேடப்படுகிறாள்.

    அந்த இடத்தில் மொர்தக்காய் எனும் யூதரிடம் ஆதரவாய் இருக்கும் எஸ்தர் எனும் பெண் வருகிறாள். பல்வேறு தயாரிப்பு நிகழ்வுகளுக்குப் பின் அவள் அரசியாகிறாள். பிற இன நாடு ஒன்றின் அரசியாகிறாள் யூதப் பெண். உண்மை வெளிப்பட்டால் உயிருக்கே ஆபத்து எனும் நிலை.

    மொர்த்தக்காய்க்கு அரச வாயிலில் நிற்கும் பணி. அவரது வளர்ப்பு மகளுக்கு அரசவையின் மிக உயரிய நிலை. அப்போது வருகிறான் வில்லன், ஆமான். அரசனின் உயரதிகாரி. எல்லோரும் அவனுக்கு தலைகுனிந்து வணக்கம் செலுத்துகின்றனர். ‘ஆண்டவரை மட்டுமே வணங்குவேன்’ என மொர்த்தக்காய் வணங்காமல் நிற்கிறார்.

    ஆமானுக்கு சினம் தலைக்கேறுகிறது. மொர்த்தக்காயை மட்டுமல்ல, யூத இனத்தையே ஒட்டு மொத்தமாய் அழிக்க வேண்டும் என திட்டமிடுகிறான். அரசனின் அனுமதியும் பெற்று விடுகிறான். மொர்த்தக்காயைக் கொல்ல மிகப்பெரிய கழுமரத்தையும் உண்டாக்குகிறான்.

    அரசி எஸ்தர் இந்த நிலையை மாற்ற முயல்கிறார். யூதர்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். அந்த சூழலில் மொர்த்தக்காய் ஒரு முறை மன்னனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்வு தெரிய வருகிறது. ஆமானைக் கொண்டே மொர்த்தக்காயை மரியாதை செலுத்த வைக்கிறார் மன்னன்.

    எஸ்தர் அரசி திட்டமிட்டு விருந்தொன்றை உருவாக்கி மன்னனையும், ஆமானையும் அழைக்கிறாள். அந்த விருந்தில் ஆமானின் மீது மன்னனுக்கு கோபம் உருவாகும் சூழலை ஏற்படுத்து கிறாள். ஆமான், மொர்த்தக்காய்க்காய் தான் உருவாக்கிய கழுமரத்தில் உயிர் விடுகிறான்.

    இந்தக் கதையின் முழுமையான சுவாரசியத்தைப் பெற்றுக்கொள்ள எஸ்தர் நூலை ஒரு முறை வாசித்தாலே போதும்.

    கடவுள் எப்படி சூழல்களை தமக்குப் பிரியமானவர்களுக்குச் சாதகமாக மாற்றுகிறார் என்பது வியப்பூட்டும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை மட்டுமே வணங்கவேண்டும் எனும் மனநிலை கொண்ட மன்னன், கடைசியில் யூதர்கள் மீது யாரும் கை வைக்கக் கூடாது என மாறுகிறார்.

    எதேச்சையாக நடப்பதைப் போல நடக்கின்ற விஷயங்கள் உண்மையில் இறைவன் உருவாக்குகின்ற சூழல்கள் என்பதை நாம் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம். எல்லாம் சுமுகமாக மாற ஒரு எதேச்சையான நிகழ்வு தான் காரணம்.

    ஒரு இரவில் மன்னனுக்கு தூக்கம் வரவில்லை. அவர் குறிப்பேட்டை வாசிக்கிறார். தனது உயிரை மொர்த்தக்காய் காப்பாற்றியதை அறிகிறார். அவரை கவுரவிக்க விரும்புகிறார். அந்த தூக்கமற்ற ஒரு இரவு தான் யூதர்களை ஒட்டு மொத்தமாய்க் காப்பாற்றியது.

    மோசேயின் காலத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாம் படுகொலை செய்யப்பட மோசே ஒரு கூடையில் வைக்கப்பட்டு நதியில் மிதக்க விடப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

    பெத்லேகேமில் இயேசு பிறந்த போது, பாலகர்களை எல்லாம் படுகொலை செய்ய அரசன் ஆணையிட்டான். இயேசு, இரவில் ஒரு கனவின் மூலம் காப்பாற்றப்பட்டார். எஸ்தர் கதையில் யூத இனத்தை தூக்கமற்ற ஒரு கனவு காப்பாற்றுகிறது.

    இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே இருக்கும் நாம் உண்மையும், இறையச்சமும் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதையும், கடவுள் தனிநபர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார் என்பதையும் இந்த நூல் நமக்குப் பாடமாகத் தருகிறது.

    சேவியர்
    மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
    மும்பை பாண்டுப் மேற்கு டெம்பிபாடாவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் 60-வது ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 28-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆடம்பர பவனியும், 4-ந் தேதி மாலை 6 மணியளவில் தேர் பவனியும் நடக்கிறது. ஆண்டு விழா பெருவிழா 5-ந் தேதி நடக்கிறது.

    விழாவையொட்டி நடைபெறும் சிறப்பு திருப்பலிகளை மேதகு ஆயர் தேர்மனிக் சாவியோ பெர்னாண்டஸ், பீட்டா் ஜெயகாந்தன், பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் நிறைவேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர் செபாஸ்டின், தனம், அருட்சகோதரர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிலுவையில் உயிர்விட்ட ஏசு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு 3-ம் நாள் உயிர்த்து எழுந்த உயிர்ப்பு நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகையாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பேராலய கலை அரங்கத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக பாஸ்கா திருவிழிப்பு சடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் “பாஸ்கா ஒளி“ ஏற்றப்பட்டது.

    கலையரங்க வளாகத்தின் மைய பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய அதிபர் பிரபாகர் அரங்கத்தின் மேடைக்கு எடுத்து சென்றார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, கையில் மெழுகுவர்த்திகளை ஏந்தியப்படி ஜெபம் செய்தனர். இரவு 11.45 மணியளவில் வாண வெடிகள் முழங்க, மின்னொளியில் பேராலய கலையரங்கின் மேல்கூரையில் சிலுவை கொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜெயராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, பிரார்த்தனை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று பேராலயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெற்றன. இதைத்தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு தேர்பவனியும், 7.45 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
    இயேசுநாதர் நற்போதனைகள் மனிதர்களை வாழவைக்கும் மந்திர சொற்களாக அமைந்தன. இதனைக்கண்டு இயேசுநாதர் மீது பொறாமை கொண்டவர்கள், அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கதா மலையில் சிலுவையில் அறைந்தனர்.

    இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடை பிடித்து வருகிறார்கள். அதுபோல் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நாள் வெற்றி திருநாளாகவும், மகிழ்ச்சி திருநாளாகவும் ஈஸ்டர் பண்டிகை என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆயர் வில்சன் குமார் தேவசெய்தி வழங்கினார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலையில் இருந்தே பலர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.

    இதுபோல் சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 
    பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு தவக்கால நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதில் நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள், ஏசுவின் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.
    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் விழாவாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு தவக்கால நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.

    இதில் நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள், ஏசுவின் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. தவக்காலத்தின் நிறைவாக நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறிவிக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி, ஒளி வழிபாடு நடந்தது.

    அதைத்தொடர்ந்து ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. பேராலயத்தின் எதிரில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் மெழுகு வர்த்தியை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். நேற்று காலையிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் பூதலூர், கோட்டரப்பட்டி, மைக்கேல்பட்டி, மணத்திடல், மேகளத்தூர், முத்தாண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் தின திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
    ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் திருநாளும் ஒன்று. இந்த திருநாளுக்காக கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் அனுஷ்டிப்பார்கள். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடுவதற்காக காத்திருப்பார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒரு வரலாற்று நிகழ்வாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

    ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு கொடுத்ததற்காக, நீதியை நிலைநாட்ட தூண்டியதற்காக, ஏழைகளை வாழவைத்ததற்காக, பாவிகளை மன்னித்ததற்காக, பிணிகளை போக்கியதற்காக, உண்மைகளை பேசியதற்காக இயேசு கொல்லப்பட்டார். அநீதியின், பாவத்தின் சக்திகள் அனைத்தும் சேர்ந்து அவரைக் கொலைக்குட்படுத்தின. ஆனால் இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்தார். இறந்த மூன்றாம் நாள் வெற்றி வீரராய்க் கல்லறையில் இருந்து உயிரோடு வெளியே வந்தார். நம்மோடே இருக்கிறார்.

    உயிர்ப்பின் சாட்சி

    கிறிஸ்து உயிர்ப்பெற்றெழுந்த காட்சியை பார்த்தவர்கள் யாருமில்லை.. உயிர்ப்புக் காட்சியைப் பார்த்த ஒரே சாட்சி இரவு என்று திருச்சபை சொல்கிறது. எனவே தான் பாஸ்கா புகழுரையை குருவானவர் பாடும்போது “ஓ... மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே, கிறிஸ்து பாதாளத்திலிருந்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்” என்று அந்த இரவை புகழ்ந்து பாடுகிறார்.

    இயேசுவின் உடல் திருடப்படவில்லை

    இயேசுவின் கல்லறை காலியாக இருந்தது. அவரது உடல் எங்கே? கயவர்கள் அவரது உடல் திருட்டு போய் விட்டு என்று கதை கட்டினார்கள். ஆனால் அவரது உடல் திருடப்படவில்லை. மாறாக உயிர்த்தெழுந்தது. இயேசுவின் உடலை சுற்றியிருந்த துணிகளும் தலையைச் சுற்றியிருந்த துண்டும் கல்லறையில் கிடந்ததாக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் உடலை திருடியிருந்தால் உடலை சுற்றியிருந்த துணிகளையும் திருடியிருப்பார்கள். துணிகளை திருடாவிட்டால் கூட அவற்றை அலங்கோலமாய்ப் போட்டிருப்பார்கள். ஆனால் இங்கு துணிகள் எல்லாம் ஒழுங்கான நிலையில் இருந்ததாக நற்செய்தி கூறுவது அவரது உயிர்ப்பை உறுதியாக்குகிறது.

    இயேசுவின் உயிர்ப்பும் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பும்:

    எகிப்திய புராணத்தில் பீனிக்ஸ் என்ற ஒரு பறவை வருகின்றது. இந்தப் பறவை உயிரோடு இருக்கிறபோது தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளாது. மாறாக அதன் இனம் பெருகுவது அந்த பறவையின் இறப்பிற்குப் பின் தான். பீனிக்ஸ் பறவை இறந்து மண்ணில் மடிந்து மட்கிப் போகும்போது அது புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவைகள் உருவாகுமாம். அதுபோல கிறிஸ்தவ மதம் இயேசுவின் காலத்தில் உருவானதல்ல. கிறிஸ்தவ மதம் உருவாகி பெருகியது அவரது உயிர்த்தெழுதலின் பிறகுதான். கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால், கல்லறையோடு அவரது கதை முடிந்திருந்தால் கிறிஸ்தவ மதம் இல்லை. எனவே கிறிஸ்துவின் உயிர்ப்புதான் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பு.

    உயிர்த்த இயேசுவைப் பார்த்த முதல் பெண் - மதலேன் மரியா:

    யூத முறைப்படி இறந்த உடலை அடக்கம் செய்யும்போது நறுமண பொருட்களால் அவ்வுடல் பூசப்படவேண்டும். இயேசு இறந்தது வெள்ளிக்கிழமை மாலை. ஓய்வு நாள். அதாவது சனிக்கிழமை வெள்ளி மாலையில் ஆரம்பமாகிறது. ஆனால் யூதமுறைப்படி மாலையும், பகலும் சேர்ந்து தான் ஒருநாள். இதைத்தான் தொடக்க நூலில் படைப்பின்போது “மாலையும், காலையும் சேர்ந்து முதல் நாள் ஆயிற்று” (ஆதி.1:5) என்று படிக்கிறோம்.

    எனவே ஓய்வு நாள் ஆரம்பமானதால் இயேசுவின் இறுதிச்சடங்கை சரியாக செய்ய முடியாமல் அவசர, அவசரமாக கல்லறையில் புதைத்து விட்டார்கள். இயேசுவின் மீது அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் வாரத்தின் முதல்நாள் விடியலுக்காக காத்திருந்து அதிகாலையிலே நறுமண பொருட்களுடன் கல்லறைக்குச் சென்றார்கள். அவரது உடலை எடுத்து தகுந்த மரியாதையோடு, பரிமளத்தைலம் பூசி சிறப்பான விதத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக கல்லறை அருகில் வரும்போது தான் காலியான கல்லறையைப் பார்த்து திகைத்துப் போயினர்.

    இயேசுவின் உடல் அங்கே இல்லாததால் மற்றவர்கள் எல்லோரும் போய் விட்டனர். ஆனால் மதலேன் மரியாள் மாத்திரம் எப்படியாவது இயேசுவின் உடலைத் தேடி கண்டுபிடித்து, செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்க வேண்டும் என்று தனிமையில் கல்லறை அருகில் அழுதுகொண்டே இருக்கும்போது தான் உயிர்த்த இயேசுவை முதன்முறையாக பார்க்கின்ற பாக்கியம் மதலேன் மரியாளுக்குக் கிடைத்தது. மனம் திரும்பிய பாவிப்பெண்ணுக்கு கிடைத்த இந்த பேறு, மனந்திரும்பும் ஒவ்வொருவரும் இயேசுவைக் காண்பர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    சாட்சிகளை உருவாக்க பல காட்சிகள்:

    உயிர்த்தெழுந்த இயேசு இன்னும் நம்மை சிலுவையில் அறைந்தோ அல்லது கல்லால் எறிந்தோ கொன்று விடுவார்கள் என்று பயந்து தலைமறைவாக இருக்க விரும்பவில்லை. பலருக்கு காட்சி கொடுக்கின்றார். ஆண்களுக்கு, பெண்களுக்கு, சீடர்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு என்று பல தரப்பட்ட மக்களுக்கு காட்சி கொடுக்கின்றார். இந்தக் காட்சிகள் எதற்காக? கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளை உருவாக்க. உயிர்த்த
    இயேசுவை காட்சியில் கண்டவர்கள் எல்லாம் சாட்சியாக மாறினர்.

    சீடர்களிடத்தில் இயேசு உண்டாக்கிய மாற்றமும் உயிர்ப்புக்கு சாட்சியாக மாறுகின்றது. படைவீரர்களுக்கு பயந்து ஓடியவர்கள் வீதிக்கு வந்து உயிரைப் பணயம் வைத்து இயேசுவின் உயிர்ப்புக்கு சான்று பகிர்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு சீடர்கள் இயேசுவுக்கு நிகராகவோ, அவரை விட பெரியவராகவோ யாரையும் அவர்கள் கருதவில்லை. இயேசு மட்டுமே அவர்களது மூச்சு. ஊருக்கு அஞ்சியவர்கள் நடுத்தெருவில் நின்று போதித்தார்கள். கிறிஸ்துவை பின்பற்றுகிறவனை அழித்து விடுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்த சவுலுக்கு உயிர்த்த இயேசு காட்சி அளித்து “நீ துன்புறுத்தும் இயேசு நானே” (தி.பணி. 9:5) என்று கூறியவுடன் மனமாற்றம் பெற்று கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடுக்கவும் துணிந்து கிறிஸ்துவின் உன்னத சாட்சியாக மாறினார்.



    உயிர்த்த கிறிஸ்து கட்டுவோர் விலக்கிய மூலைக்கல்:

    பழைய ஏற்பாட்டில் சூசை எல்லோராலும் வெறுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, சிறையில் வீசப்பட்டு, எகிப்தியர்களுக்கு விற்கப்பட்டு “இவன் வேண்டாம்” என்று அப்புறப்படுத்திய சூசையிடம் இறுதியில் யாரை வெறுத்து தள்ளினார்களோ அந்த சூசையிடம் உணவிற்காக கையேந்தி நின்றது போல “இவன் வேண்டாம், இவனை சிலுவையில் அறையும்” என்று எல்லோராலும் வெறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இயேசு இன்று எல்லோருக்கும் வாழ்வளிக்கும் வள்ளலாக உயிர்த்தெழுந்தது கட்டுவோர் விலக்கிய கல் மூலைக்கல்லாக மாறும் என்ற இறைவார்த்தையை உண்மையென நிரூபித்துக் காட்டுகிறது.

    இறந்தும் வாழும் இயேசு

    இறந்த இயேசு இன்றும் என்றும் வாழ்கிறார். இயேசு இன்று நினைவில் வாழ்பவர் அல்ல, உண்மையாகவே வாழ்கிறார். இறந்தவர்கள் மக்களின் எண்ணத்தில், நினைவில் வாழலாம். தொடர்ந்து கடைபிடிக்கப்படும் தம் போதனைகளின் வழி வாழலாம். ஆனால் இறந்த இயேசுவின் வாழ்வு என்பது எண்ணத்திலும், நினைவிலும், கொள்கையிலும் அவர் வாழ்கிறார் என்பதன்று, அவர் உண்மையில் உயிர் வாழ்கிறார். தொடர்ந்து வாழ்கிறார். இயேசு வெறும் நினைவிலோ, கொள்கையிலோ அல்ல. மாறாக உண்மையிலே உயிர் வாழ்கிறார் என்பதை வலியுறுத்தத்தான் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் அவர் உடலோடு உயிர் பெற்றெழுந்தார் என்பதை மீண்டும் மீண்டும் அறுதியிட்டு கூறினர்.

    எனினும் சாவுக்கு முன்னிருந்த இயேசுவின் அதே உடல் அப்படியே இருந்தது எனக் கூற முடியாது. உயிர்த்த இயேசு காலம், இடம் ஆகியவற்றை கடந்து நிற்கிறார். அடைபட்டிருந்த அறைக்குள் அவரால் நுழைய முடிந்தது. யூதேயாவிலும், கலிலேயாவிலும் பலருக்கு ஒரே காலத்தில் காட்சியளிக்க முடிந்தது. இவ்வாறு உயிர்த்த இயேசுவின் உடல் திருத்தூதர் பவுல் கூறுவது போல “அழியாதது, மாண்புரிக்குரியது. வலிமையுள்ளது. ஆவிக்குரியது”- (1 கொரி. 15: 42).

    உயிர்த்தெழுதலும் திருச்சபையின் அழியாத் தன்மையும்:

    உயிர்த்த இயேசு இனி சாகமாட்டார். அவர் என்றும் வாழ்பவர். திருச்சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து. திருச்சபையையும், இயேசு வையும் பிரிக்க முடியாது. அழிவில்லாத உயிர்த்த கிறிஸ்து திருச்சபையின் தலைவராக இருக்கும் வரை திருச்சபைக்கு அழிவில்லை. திருச்சபையின் உடலாகிய கிறிஸ்தவர்கள் அழிந்தாலும் அதன் தலையாகிய கிறிஸ்து அழியாதவராக இருக்கிறார். எனவே தான் இயேசுவின் உயிர்ப்பு திருச்சபையின் அழியாத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.

    இயேசு மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு ‘வித்து’. வித்து முளைத்து வாழ்வதுபோல் உயிர்த்த கிறிஸ்து இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இயேசு உயிர்த்து இன்று நம்மோடே வாழ்கிறார். நம்மில் வாழ்கிறார்.  குறிப்பாக ஏழை, எளியவரோடும், துன்ப துயரம் அடைந்தோரோடும், கடைநிலையில் இருப்பாரோடும் வாழ்கிறார்.

    வதைக்கப்பட்டோரோடும், நோயுற்றோரோடும், அன்னியராக்கப்பட்டோ ரோடும், அடிமைப்படுத்தப்பட்டோரோடும் வாழ்கிறார். ஈஸ்டர் திருநாளில் இயேசுவின் உயிர்தெழுதலை கொண்டாடும் நாம். அவர் நமக்கு போதித்த அன்பையும், இரக்கத்தையும் பிறருக்கு அளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
    புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
    கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்துவின் தலையில் முட்கிரீடம் அணிவித்து, சிலுவையை சுமக்க செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்து பட்ட துயரங்களை விளக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் சிலுவையை சுமந்தவாறு உள்ள ஏசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு சென்றனர். சிலுவை பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

    மாலையில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது மக்கள் சிலுவையில் முத்தமிட்டு வழிபாடு செய்து பசிப்பிணி காணிக்கை செலுத்தினர். அதன்பிறகு ஏசு உயிர்நீத்ததன் அடையாளமாக ஆலயங்கள் மூடப்பட்டன.
    புனித வெள்ளியையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இயேசுவை சிலுவை அறைந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடித்து வருகிறார்கள். இந்த தவக்கால உபவாச நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள். தவகால உபவாச நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். யார் மீதும் கோபப்படாமல் அன்பு காட்டுவார்கள். தவக்காலத்தின் போது தான் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன் போன்ற விசேஷ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில் புனித வெள்ளி முக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூரில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.

    திருப்பூர் பங்களா பஸ்நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது, இதை ஆயர் வில்சன்குமார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயத்தில் ஆயர் அசோக்குமார் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் திரளானவர் கள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது சிலுவைப்பாதை வழிபாடு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வு நடந்த தினம் ஆண்டுதோறும் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த நாளில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, அந்த சிலுவையை சுமந்து கொண்டு ஜெருசலேம் நகரில் இருந்து கொல்கதா மலைக்கு சென்றதையும் அப்போது அவர் அடைந்த துன்பம், வேதனைகளை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நேற்று புனித வெள்ளியையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பகல் 11.30 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு தொடங்கியது.

    பங்குத்தந்தையும், ஈரோடு வட்டார முதன்மை குருவுமான ஜான் குழந்தை சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை சுந்தரம் சிலுவைப்பாதை வழிபாட்டினை வழிநடத்தினார். 14 சிலுவை பாடுகளை தியானித்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு, சிலுவை முத்தம் வழிபாடு நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு பாஸ்கா பெருவிழா, கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் புதுப்பித்தல் விழாவும் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்ட திருப்பலியும் நடக்கிறது. இதுபோல் ஈரோட்டில் உள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் நேற்று புனிதவெள்ளி சிறப்பு நிகழ்வுகள் நடந்தன.
    ×