என் மலர்
தரவரிசை
முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் தொடர் படுகொலைகள் அதிகமாகி வருகிறது. நீதிபதி, மருத்துவர் என்று பிரபலமான நபர்கள் இதில் கொல்லப்படுகிறார்கள். சரியான சாட்சியம் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. இதனால் காவல்துறையிலிருந்து தண்டிக்கப்பட்ட நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவை மீண்டும் பணியில் சேர அழைக்கிறார்கள்.
வேண்டா வெறுப்பாக பணியில் சேரும் பிரபுதேவா ஒரு கட்டத்தில் கொலைக்கான காரணத்தையும் அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கும்பலோடு நெருக்கமாகி மேலும் சிலரைக் கண்டுபிடிக்கிறார்.
ஆனால் அதற்கு மேலும் ஒரு வில்லன் இருக்கிறார். அவர் யார் என்பது தெரிந்து திகைத்து நிற்கிறார் பிரபுதேவா. இறுதியில் அவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

பிரபுதேவா மிடுக்காக வருகிறார். காவல்துறை மீது இருக்கும் வெறுப்பைக் காட்டுவதும், மனைவி நிவேதா பெத்துராஜ் மீது அன்பைப் பொழிவதுமாக இருக்கிறார். வில்லன் கும்பலோடு அமைதியாக மோதும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.
நிவேதா பெத்துராஜ் மனைவியாக வந்து முத்தங்களை நினைவாக வைத்துத் தேர்வு எழுதுகிறார். டூயட் பாடுகிறார். பிரபுதேவாவுக்காக வில்லன்களிடம் சண்டை போடுகிறார். மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

ஒரு நேர்மையான அதிகாரியான பிரபுதேவாவிற்குக் காவல் துறையில் நடக்கும் இக்கட்டான சூழலை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் முகில் செல்லப்பன். இந்த மாதிரி கதைகள் 90களில் அதிகம் வந்திருப்பதால் பெரியதாக இப்படம் கவரவில்லை. புதிய கற்பனையும் காட்சிகளும் இல்லாததால் மெதுவாக திரைக்கதை நகர்கிறது. நகைச்சுவைக்காக வரும் கான்ஸ்டபிள், ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை. சஸ்பென்ஸ் என்று நினைத்து கதையை மறைப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் வரவில்லை.
டி,இமானின் இசையில் பின்னணி இசை படம் முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு நிறைவு.
மொத்தத்தில் ‘பொன் மாணிக்கவேல்’ கம்பீரம் குறைவு.
நிஷாந்த் வர்மா இயக்கத்தில் வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கடைசீல பிரியாணி’ படத்தின் விமர்சனம்.
அப்பா, அம்மா மூன்று மகன்கள் இருக்கும் குடும்பத்தில், அப்பா தனது கடைசி மகனை நல்லவனாக வளர்க்க ஆசைப்பட்டு தனியாக அழைத்து சென்று வாழ்கிறார். அப்போது ரப்பர் எஸ்டேட் ஓனர் அப்பாவை கொன்று விடுகிறார். இதனால், கோபப்படும் 3 மகன்கள் ரப்பர் எஸ்டேட் ஓனரை கொலை செல்ல கிளம்புகிறார்கள்.
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து செல்லும் மூன்று மகன்கள், எதிர்பாராத விதமாக வீட்டில் ஓனர் மகன் இருப்பதை கண்டு பயப்படுகிறார்கள். இறுதியில் மகன்கள் மூன்று பேரும், ஓனரை கொன்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அண்ணன் தம்பிகளாக வசந்த் செல்வம், தினேஷ் மணி, விஜய் ராம் நடித்துள்ளார்கள். இவர்களின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் வசந்த் செல்வம் இடைவேளை வரை தன்னுடைய பழி வாங்கல் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். தினேஷ் மணிக்கு அதிக வேலையில்லை. இடைவேளைக்குப் பின் கடைசி தம்பி விஜய் ராம் படத்தின் நாயகனாக ஜொலிக்கிறார். ஓனர் மகன் ஹக்கீம் ஷாஜகான் தனது நடிப்பால் இடைவேளைக்குப் பின் அவரை கவனிக்க வைக்கிறார். போலீசை டீல் செய்யும் விதம் அருமை.
பழிக்குப் பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நிஷாந்த் வர்மா. இடைவேளை வரை பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கும் திரைக்கதை, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் சுவாரசியமாக நகர்கிறது. சில காட்சிகளில் கைதட்டல் வாங்கும் அளவிற்கு இருக்கிறது. கதை முழுவதும் கேரளாவிலேயே நடப்பதாலும், வில்லன் ஹக்கீம் மலையாளமே பேசுவதாலும் ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது.

அசீம் முகமது ஒளிப்பதிவில் எஸ்டேட், மற்றும் காடு லொகேஷன் ஆகியவற்றை படமாக்கிய விதம் சிறப்பு. நீல் செபஸ்டியன் இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘கடைசீல பிரியாணி’ சுவைக்கலாம்.
மனோ கார்த்திக்கேயன் இயக்கத்தில் சதீஷ்குமார், மிருணாளினி ரவி, கருணாகரன், வேலு பிரபாகர், ஹரீஷ் பெராடி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் விமர்சனம்.
டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒருநாள் சதீஷ்குமார் காரில் செல்லும்போது, பூமியில் எரிக்கல் ஒன்று விழுவதை பார்க்கிறார். இதைப் பார்த்ததிலிருந்து டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார்.
அதாவது, அவரது வாழ்க்கை ஒரே நாளில் சிக்கிக் கொள்கிறது. இந்நிலையில் மனைவி மிருணாளினி ரவியை மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். இதை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சதீஷ்குமார் தனது மனைவி மிருணாளினி ரவியை காப்பாற்றினாரா? டைம் லூப்பில் இருந்து மீண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சதீஷ்குமார், புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். முழுக்கதையும் இவரை சுற்றியே நடப்பதால், கதாப்பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கவலை, வெறுப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். நாயகி மிருணாளினி ரவி துணிச்சல் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார்.
போலீசாக வரும் கருணாகரன், விஞ்ஞானியாக வரும் வேலு பிரபாகர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் பெராடி அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். டேனியல் பாப், ரமேஷ் திலக், தங்கதுரை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

டைம் லூப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன். முதல் பாதி திரைக்கதை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், இரண்டாம் பாதியில் தெளிவுபடுத்துகிறார். இந்த மாதிரி கதையை திரைக்கதையாக்குவது மிகவும் கடினம், அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால், கொஞ்சம் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல் கார்த்திக் கே தில்லையின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஜாங்கோ’ புதிய முயற்சி.
ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி இருக்கும் குருப் படத்தின் விமர்சனம்.
கேரளாவில் சுகுமார குருப் என்பவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து குரூப் என்னும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குருப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.
நாயகன் துல்கர் சல்மான் விமான படையில் பயிற்சி எடுத்து பாம்பேயில் வேலை செய்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக விடுமுறை எடுத்து செல்லும் துல்கர் சல்மான், சில நாட்களில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் துல்கர் சல்மான், தனது பெயரை குருப் என்று மாற்றி வெளிநாடு செல்கிறார்.

வெளிநாட்டில் தனது பெயரில் இன்ஸ்சுரன்ஸ் செய்து விட்டு இந்தியா திரும்பும் துல்கர் சல்மான், அந்த இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி அபகரிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து முயற்சி செய்கிறார். இறுதியில் இன்ஸ்சுரன்ஸ் பணத்தை ஏமாற்றி கைப்பற்றினாரா? இல்லையா? தற்கொலை செய்து கொண்டதாக ஊரை நம்ப வைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், நெகடிவ் வேடத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். படத்திற்காக பல கெட்-டப் போட்டு அசத்தி இருக்கிறார். அந்த கெட்-டப்புகளும் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது. நடை, உடை என தன் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஷோபிடா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துல்கரின் உறவினராக வரும் ஷைன் டாம் சாக்கோவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவரது கதாபாத்திரம் திரைக்கதை ஓட்டத்திற்கு அதிகம் உதவி இருக்கிறது. போலீசாக வரும் இந்திரஜித் சுகுமாரன், நண்பராக வரும் பரத் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தை சினிமாவிற்கு ஏற்றார்போல் திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். 1980களில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதால், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அனைத்திலும் பாராட்டை பெற்றிருக்கிறார். முதல் பாதி பல முடிச்சுகளுடன் மெதுவாக செல்ல, பிற்பாதியில் அந்த முடிச்சுகளை கழட்டும் விதம் அருமை.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும், கலை இயக்குனரின் வேலையும் படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது. சுசின் ஷாம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘குருப்’ பாராட்டலாம்.
இயக்குனர் சோலி ஜாவோ இயக்கத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இட்டர்னல்ஸ் படத்தின் விமர்சனம்.
பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழிக்கவும் மனித இனத்தை காப்பாற்றவும் அனுப்பப்படுகிறார்கள். 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் தனி சக்தி இருக்கிறது. இவர்களுக்கு வயதும் ஆகாது, கொல்லவும் முடியாது.
இந்த 10 சூப்பர் ஹீரோக்களும் போராடி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதே 10 சூப்பர் ஹீரோக்களை அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று, ஒவ்வொருத்தராக அழிக்கிறது. மேலும் சூப்பர் ஹீரோக்களின் சக்தியையும் எடுத்துக் கொள்கிறது.

இறுதியில் அழிக்கப்பட்ட டிவியண்ட்ஸ் எப்படி வந்தது? சூப்பர் ஹீரோக்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டார்களா? டிவியண்ட்ஸ்களை அழித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இட்டர்னல்ஸ். ஆனால், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். சாகச காட்சிகள், சண்டைக்காட்சிகள் சிறிது நேரமே இடம்பெறுகிறது.
சாகச காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. எண்ட்கேம் படத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் புதிய கதை என்பதால், கதைக்கு மட்டுமே அதிக முக்கியத்தும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சோலி ஜாவோ.

ஒளிப்பதிவாளர் பென் டேவிஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. இசையமைப்பாளர் ராமின் டிஜவாடி பின்னணி இசை சிறப்பு.
ஏஞ்சலினா ஜூலி, ஜெம்மா சான், ரிச்சர்ட் மடடேன், கிட் ஹரிங்டன், குமைல் நஞ்சினி, லியா மேக்ஹுக், டான் லீ, ஹரிஷ் படேல், பாரி கியோகன், லாரன் ரிட்லோஆஃ என பலர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘இட்டர்னல்ஸ்’ சுவாரஸ்யம் குறைவு.
பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார், சமுத்திரகனி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் எம்.ஜி.ஆர்.மகன் படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வைத்தியராக இருக்கிறார் சத்யராஜ். இவர் மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகை நிறைந்த ஒரு மலையை பழ.கருப்பையா என்பவர் விலைக்கு வாங்குகிறார். இதனால் சத்யராஜூக்கும், பழ கருப்பையாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுடைய பிரச்சனை நீதிமன்றம் வரை செல்கிறது.
இந்த வழக்கில் வெற்றி பெறுவதற்காக சத்யராஜ் தனது மகன் சசிகுமாரை வக்கீலுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவரோ 12ஆம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிரார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ் தன் மகன் சசிகுமாரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.

அதன்பின் இருவருக்கும் இடையே சில சில தகராறுகளும், பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கடைசியில் அந்த மூலிகை மலையை சத்யராஜ் கைப்பற்றினாரா? தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சத்யராஜ் காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார். சசிகுமாரின் மாமாவாக வரும் சமுத்திரகனி காமெடியில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக இவருக்கு பெண் பார்க்க செல்லும் காட்சி ரசிக்க வைக்கிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம், தன் படங்கள் பாணியிலேயே இப்படத்தையும் இயக்கி இருக்கிறார். வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வாக்குவாதம், கடைசியில் தந்தைக்காக மகன் போராடுவது என்று பல படங்களில் பார்த்த கதையை கொஞ்சம் கூட மாற்றாமல் இயக்கியிருக்கிறார். தந்தை - மகன் பாச கதையாக இருந்தாலும் திரைக்கதையில் வித்தியாசம் காண்பித்து இருக்கலாம்.
அந்தோனி தாசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ பழமையானவன்.
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எனிமி’ படத்தின் விமர்சனம்.
தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் பயிற்சி கொடுக்கிறார்.
திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கும் விஷால், சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார். கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது.

இறுதியில் ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரகாஷ் ராஜின் கொலை பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் போட்டி போட்டு நடித்து அசத்தியிருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் இருவரும் அதகளப்படுத்துகிறார்கள்.

நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் மம்தா மோகன்தாஸ் மனதில் நிற்கிறார். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த் சங்கர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். துப்பறியும் காட்சிகளின் திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம்.

தமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சாம்.சி.எஸ் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எனிமி’ நல்லவன்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் விமர்சனம்.
யாருக்கும் அஞ்சாமல் அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். இதேபோல் கீர்த்தி சுரேஷும் அண்ணன் மீது பாசமழை பொழிகிறார்.



உயிருக்கு உயிராக இருக்கும் தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு வழியாக மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் ரஜினிக்கு வந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார்? கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் காளையன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஊர் மக்களுக்கு போராடுவது, தங்கை மீது பாசம் காட்டுவது, எதிரிகளை துவம்சம் செய்வது, நயன்தாராவுடன் ரொமான்ஸ் என்று திரையில் ஜொலிக்கிறார்.

தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணன் மீது பாசம், காமெடி என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
வழக்கறிஞராக வரும் நயன்தாரா, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ரஜினியுடன் நடிக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்து இருக்கிறார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வில்லனாக வரும் ஜெகபதி பாபு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், ரஜினிக்கேற்ற கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிவா. முதல் பாதியை ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியலாக கொடுத்து இருக்கிறார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. இடைவேளைக்கு 10 நிமிடத்திற்கு முன்பாக கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குனர், பிற்பாதியில் ரசிகர்களை கட்டிப் போட முயற்சி செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவோடு திரையில் பார்க்கும் போது கலர்புல்லாக இருக்கிறது.
மொத்தத்தில் 'அண்ணாத்த' ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்விகா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘4 சாரி’ படத்தின் விமர்சனம்.
நான்கு வித்தியாசமான கதைகள். வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி சாரி கேட்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும் டேனியல், அதனால் ஏற்படும் நிகழ்வுகளை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருக்கிறார்கள். இதில் பிக்பாஸ் டேனியல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், காமெடியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

சாக்ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்சனை முளைக்கிறது. அதை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். சாக்ஷி அகர்வால் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
காளி வெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். இதில் காளி வெங்கட், ரித்விகா இருவரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஜான் விஜய், சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் பஸ் பயணம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஜான் விஜய்யின் எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
வாழ்க்கையில் தெரியாமல் ஒருவர் செய்த செயல்களால் ஏற்படும் விளைவுகளை இயக்குனர் சக்திவேல் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார். நான்கு கதைகள் ஏற்கும் படி இருந்தாலும், அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.
பிரசன்னா சிவராமன் இசையும், வெங்கடேஷ் பிரசாத் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘4 சாரி’ பாராட்டலாம்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் விமர்சனம்.
கோணமலை பகுதியில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). இவர் மனைவி செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்) மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ஊர் தலைவர் வீட்டிற்கு பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. அதன்பின் சில நாட்களில் ஊர் தலைவர் வீட்டில் இருக்கும் நகைகள் திருடுபோகிறது. இதற்கு காரணம் ராஜாக்கண்ணுதான் என்று முடிவு செய்து போலீஸ் அவரை தேடுகிறது.
ராஜாக்கண்ணு அதே நேரம் வெளியூரில் வேலைக்கு செல்கிறார். வீட்டில் அவர் இல்லாததால் மனைவி செங்கேணி மற்றும் உறவினர்களை போலீஸ் அழைத்து சென்று கொடுமை படுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, திருடியதை ஒப்புக்கொள்ள சொல்லி அடித்து துன்புறுத்துகிறார்கள்.

இந்நிலையில், ராஜாக்கண்ணு மற்றும் உறவினர்கள் லாக்கப்பில் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக போலீஸ் சொல்கிறார்கள். ராஜாக்கண்ணுவை தேடும் மனைவி, வழக்கறிஞர் சந்துரு (சூர்யா) உதவியை நாடுகிறார். இறுதியில் ராஜாக்கண்ணுவை கண்டுபிடித்தார்களா? ராஜாக்கண்ணுக்கு என்ன ஆனது? நகைகளை திருடியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா. வழக்கமான நடிப்பு இல்லாமல் வேறொரு சூர்யாவை பார்க்க முடிகிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத இவரின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.

ராஜாக்கண்ணு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் மணிகண்டன். போலீசிடம் அடிவாங்கும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். மணிகண்டனுக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. படத்திற்காக மிகவும் சிரமப்பட்டிருக்கும் மணிகண்டனுக்கு பெரிய சபாஷ் போடலாம். இவரது மனைவியாக வரும் லிஜோமோல் ஜோஸ், செங்கேணி கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். கணவனுக்காக ஏங்குவது, போலீசிடம் அடிவாங்குவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். எஸ்.ஐ.யாக வரும் தமிழரசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்.எஸ்.பாஸ்கரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என படத்தை செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பழங்குடியின மக்கள் காவல்துறையால் அனுபவித்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். காவல்துறையின் அயோக்கியத்தனத்தை முதல்காட்சியிலேயே இயக்குனர் தோலுரித்துக் காட்டுகிறார். அதே சமயம் நல்ல போலீஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையும் காண்பிக்க தவறவில்லை.
கதிரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் கதையை தாங்கி பிடித்திருக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு இவர்கள் பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘ஜெய் பீம்’ ஜெய்.
ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் நந்திதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஐபிசி 376’ படத்தின் விமர்சனம்.
நாயகி நந்திதா நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு இரவு நேரத்தில் மர்ம நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வருகிறது. அந்த மர்ம நபர், நந்திதாவிடம் குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுக்கிறார். போனில் வரும் குருஞ்செய்தியில் வருவது போல் நிஜத்திலும் நடக்கிறது. இந்த சமயத்தில் ஒரு தொழிலதிபர் குறித்து நந்திதாவிற்கு துப்பு கிடைக்கிறது.
அவர் கொலை செய்யப்பட உள்ளதாகவும் அந்த மர்ம நபர் நந்திதாவிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை நேரில் சந்தித்து, “உங்களது உயிருக்கு ஆபத்து” இருப்பதாக சொல்கிறார் நந்திதா. அந்த தொழிலதிபரோ, நந்திதாவின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அசால்டாக இருக்கிறார். நந்திதா சொன்னபடி அந்த தொழிலதிபர் கொல்லப்படுகிறார்.

இதையடுத்து மற்றொருவரும் இதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நந்திதா. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன. இறுதியில் கொலையின் பின்னணியில் உள்ளவரை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகி நந்திதா, வழக்கமான கிராமத்து பெண்ணாக படங்களில் காட்சிதந்த இவர், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கச்சிதமான தேர்வு. புதுவிதமான கதாபாத்திரம் என்றாலும் திறம்பட நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்து அசத்தி இருக்கிறார். மதுசூதன் ராவ், மகாநதி சங்கர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன், கதையில் ஹாரர், சேஸிங், ஆக்ஷன் என பல்வேறு அம்சங்களுடன் கதையை அமைத்துள்ள அவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். கதபாத்திரங்கள் தேர்வு கச்சிதம்.
சூப்பர் சுப்பராயனின் ஸ்டண்ட் காட்சிகள் அருமை. யாதவ் ராமலிங்கத்தின் பின்னணி இசையும், தில்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஐபிசி 376’ வேகமில்லை.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் நிதின், மேகா ஆகாஷ், அர்ஜுன், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜென்டில்மேன் சத்யா படத்தின் விமர்சனம்.
நாயகன் நிதின், உழைக்காமலே முன்னேற வேண்டும் என்கிற முனைப்புடன் இருக்கிறார். மேலும் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தால், செட்டில் ஆகி விடலாம் என திட்டமிடுகிறார். இதேபோல் நாயகி மேகா ஆகாஷும், வெளிநாட்டுக்கு சென்று லாட்டரி மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்தால் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அந்த திட்டமெல்லாம் தோல்வியில் முடிகிறது. அந்த சமயத்தில் நாயகனும், நாயகியும் ஒன்றாக அமெரிக்கா செல்லும் சூழல் உருவாகிறது. அப்போது அவர்கள் இருவரிடையே காதல் மலர்கிறது.
மறுபுறம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் வில்லன் அர்ஜுனை பிடிக்க போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான குழு முயன்று வருகிறது. அர்ஜுன் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விடுகிறார். அவரை பிடிக்க ஸ்ரீகாந்த்தும் தன்னுடைய குழுவினருடன் அங்கு செல்கிறார்.

அமெரிக்காவில் அர்ஜுன் - ஸ்ரீகாந்த் இடையே நடக்கும் மோதலில் எதிர்பாராத விதமாக நிதின் சிக்குகிறார். இதையடுத்து என்ன ஆனது? அர்ஜுன் பிடிபட்டாரா? நிதின் - மேகா ஆகாஷ் இடையேயான காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் நிதின், பொறுப்பற்ற இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். நாயகி மேகா ஆகாஷ், அழகு பதுமையுடன் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் ஸ்ரீகாந்த், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். அர்ஜுன், ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டி உள்ளார்.

இயக்குனர் ஹனு ராகவபுடி, கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது பின்னடைவு.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், இருப்பினும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. யுவராஜின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் ‘ஜென்டில்மேன் சத்யா’ கவர்கிறார்.






