என் மலர்
தரவரிசை
பிரபு ஜெயராம் இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், ரோகினி நடிப்பில் வெளியாகி இருக்கும் என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் விமர்சனம்.
இரண்டாம் பாதியில் ஏழை பிராமணர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படுகிறார். அதேநேரம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வந்தவுடன் கோயிலில் உள்ள உயர் சாதியினர் மனமுவந்து அவர்களுக்கு வேலை கொடுத்து விடுகிறார்கள்.
அதிலும் உயர்ந்த குலத்தில் உள்ள ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வேறு ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் வேலைகளை பெறுகிறார். உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இட ஒதுக்கீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் ஏழைக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததா? இல்லையா? ஏமாற்றப்பட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் ஜாதி, மதம், காதல், காமெடி என கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஜாதி ரீதியாக ஏற்படும் இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்து, கலவரம், சண்டை, பிரச்சனை என்று நகர்கிறது. இதை திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம். முதல் படம் என்று தெரியாதளவிற்கு காட்சியிலும், திரைக்கதையிலும் தெளிவு படுத்தி இருக்கிறார். வேலை இட ஒதுக்கீட்டால் தற்போது ஏற்படும் நிலவரத்தை இயக்குனர் அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

படத்தில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் பொறுப்பில்லாமல் பெண்கள் பின்னாடி சுற்றுவது, கேலி செய்வது, கிண்டல் செய்வது, பின் அவர்களை காதலித்து கழட்டி விடுவது என்று இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது. படத்தில் நான்கு ஹீரோயின்கள். அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார் ரோகினி.
குணா பாலசுப்ரமணியம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ஜெகன் கவிராஜ் எழுதிய ஜீரக பிரியாணி பாடல் தாளம் போட வைக்கிறது. அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘என்னங்கசார் உங்க சட்டம்’ சிறப்பு.
அப்பு என்.பட்டாத்ரி இயக்கத்தில் குஞ்சகோ போபன், நயன்தாரா, இஸின் ஹஷ், லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாய நிழல் படத்தின் விமர்சனம்.
மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.
நீதிபதியாக இருக்கும் குஞ்சகோ போபன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது நிதின் என்ற சிறுவனின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. 6-7 வயதே ஆகும் அந்தச் சிறுவன் கொலை கதைகளைச் சொல்கிறான். அந்தக் கொலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவையாக இருக்கின்றன.

அந்தக் கொலைகள் குறித்து அந்தச் சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற புதிரை விடுவிக்க முயல்கிறார் குஞ்சகோ போபன். ஆனால், அதற்குப் பிறகுதான் ஒன்றின் பின் ஒன்றாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியில் குஞ்சகோ போபன் கொலைகள் பற்றிய புதிரை கண்டுபிடித்தாரா? அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக வரும் குஞ்சக்கோ போபனுக்கு எந்த அலட்டலும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் கலக்கியிருப்பது சிறுவன் நிதினாக வரும் இஸின் ஹஷ். நிதினின் தாய் ஷர்மிளாவாக வரும் நயன்தாராவுக்கு பெரிய சவாலான கதாபாத்திரமில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சாதாரணமான ஒரு சைக்கோ திரில்லராகத் துவங்கி, பேய்க் கதையைப் போல மாறி, மீண்டும் சைக்கோ திரில்லராகவே இந்த படம் முடிகிறது. பேய்ப் படங்களில் வருவதைப் போல, ஒன்றிரண்டு திகில் காட்சிகள் வைத்து மிரள வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமைதியாக அமர்ந்து ரசிக்கக்கூடிய நல்ல சைக்கலாஜிகல் திரில்லராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அப்பு என்.பட்டாத்ரி.
சூரஜ் எஸ் குருப் இசையும், தீபக் டி மேனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாய நிழல்’ நிஜ திரில்லர்.
சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கத்தில், மோகன், மேனகா நடிப்பில் வெளியாகி இருக்கும் இன்ஷா அல்லாஹ் படத்தின் விமர்சனம்.
இஸ்லாமின் ஐந்து கடமைகள் பற்றி கூறும் படம் இன்ஷா அல்லாஹ். தம்பிக்கு சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிய பணக்காரன் நரகத்தின் பாதைக்கும், அனாதையாக இருந்தாலும் பள்ளிவாசலில் பணிவிடை செய்த ஆதரவற்ற மனிதர் சொர்க்கத்தின பாதைக்கும் செல்வார்கள் என்பதை கதை வலியுறுத்துகிறது. அத்துடன் படத்தில் சில கிளைக் கதைகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆதரவற்று பிச்சை எடுத்து திரியும் முதிய தம்பதி, இந்து மதத்தை சேர்ந்த பணக்கார பெண்ணை காதலித்து மணந்த இஸ்லாம் வாலிபன் என்று கிளைக்கதை தொடர்கிறது. காட்சிகள் எதுவும் நேரடி வசனங்களால் சொல்லப்படாமல் புரிதில் மூலமாக உணரும் வகையில் சீன்களை அமைத்திருக்கிறார்கள்.

அந்த புரிதல் பெரியதாக எடுபடவில்லை. பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவாக உணரும் வகையில் காட்சிகள் அமையாதது வருத்தம். எல்லா காட்சிகளும் தத்ரூபமாகவே படமாக்கப்பட்டிருக்கிறது. காட்சிகள் படமாவது அதில் நடித்த சம்பந்தப்பட்ட நபர்களுக்காவது தெரியுமா என்பது கூட சந்தேகம் என்பதுபோல் இருக்கிறது.
மெலிதாக குழாயில் விழும் தண்ணீர் ஒரு குடம் நிறையும் வரை கேமராவை அசைக்காமல் சுமார் 3 நிமிடத்துக்கும் மேலாக காட்டும் காட்சி பார்வையாளர்களை சோதிக்கிறது.

விதவை பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் புதிய சமுதாய அறக்கட்டளை வீடுகள் கட்டி தருவது என சமூக பணிகளை சமுதாயத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.
இசை என்ற தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லை எல்லாமே ஷூட்டிங்கின்போது பதிவு செய்யப்பட்ட ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கதையின் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் மோகன், மேனகா இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘இன்ஷா அல்லாஹ்’ சுவாரஸ்யம் குறைவு.
ஹரிஷ் கல்யான் நடிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படத்தின் விமர்சனம்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண், ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார். முதலீடு தேவை என்பதால் திருமணம் செய்துக் கொண்டு, வரதட்சணையை வைத்து செட்டிலாகி விடலாம் என்று நாயகி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கிறார்.
அப்போது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர். அந்த அறையின் கதவை திறக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இருவரும் அங்கேயே அமர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசிக்கொள்கின்றனர். அதில் இருவருக்குமே தங்களை பற்றியும் தங்கள் முன்னாள் காதல் முறிந்தது, தங்களின் வாழ்க்கையின் லட்சியம் என்ன போன்றவற்றை பரிமாறிக் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தவறுதலாக வீடு மாறி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க வந்த விஷயம் ஹரிஷ் கல்யாணுக்கு தெரிய வருகிறது. இறுதியில், அவர் பார்க்க வேண்டிய பெண்ணை தேடி சென்றாரா? பிரியா பவானி சங்கரை திருமணம் செய்தாரா? ஓட்டல் வைத்து செட்டிலாகும் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அஸ்வின். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பெல்லி சுப்பலு என்ற படத்தை தமிழ் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர். இந்த காலத்திலும் ஜோதிடம் சாஸ்திரம் போன்றவற்றை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ். மேலும், வரதட்சணை குறித்தும் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்.
விஷால் சந்திரசேகர் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரைக்கதை ஓட்டத்திற்கு இவர்களின் பங்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ அழகான பெண்.
சுரேஷ் குமார் இயக்கத்தில் ஜான் விஜய், அஞ்சலி நாயர், சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அகடு’ படத்தின் விமர்சனம்.
சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானலுக்கு ‘ஜாலி டூர்’ செல்கிறார்கள். அங்கு ஒரு டாக்டர், அவரது மனைவி, 12 வயது மகள் ஆகியோரும் வருகிறார்கள். 4 நண்பர்களும், டாக்டர் குடும்பமும் நண்பர்களாகி விடுகிறார்கள்.
இந்த நிலையில், டாக்டரின் மகளும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். நண்பர்கள் மீது டாக்டர் சந்தேகப்பட்டு, அவர்களின் சட்டையை பிடிக்கிறார். நண்பர்கள் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்த சூழலில், டாக்டரின் மகளுடன் காணாமல் போன இளைஞர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

போலீஸ் அதிகாரி ஜான் விஜய்க்கு ‘செக் போஸ்ட்’டில் இருக்கும் வன பாதுகாவலர் மீதும், காட்டுக்குள் கஞ்சா கடத்தும் 3 பேர் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது தெரிய வருகிறது. உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கமான அலட்டல்களுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவர் விசாரணை செய்யும் ‘ஸ்டைல்’ புதுசு.

டாக்டராக வரும் விஜய் ஆனந்த், டாக்டரின் மனைவியாக அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ்சில், அஞ்சலியா இவர்? என்று ஆச்சரியப்படுத்துகிறார். நண்பர்களாக வரும் சித்தார்த், ஶ்ரீராம் கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
போதையால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார். கதை முழுவதும் காட்டுக்குள் முடங்கிப்போனது, படத்தின் ஒரே பலவீனம். குறிப்பாக, ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.

கடத்தல்காரன் மற்றும் கொலையாளி யார்? என்பதை மூடுமந்திரமாக வைத்து, கடைசி வரை காப்பாற்றி இருப்பதற்காக இயக்குனர் சுரேஷ்குமாருடன் கைகுலுக்கலாம். படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம்? என்று புரியாமல் தியேட்டருக்குள் சென்றால்... ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
சாம்ராட் ஒளிப்பதிவில், மலைகள் சூழ்ந்த காடுகள் கண்களுக்குள் நிற்கின்றன. இசையமைப்பாளர் ஜான் சிவநேசனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்த்து இருக்கிறது.
மொத்தத்தில் ‘அகடு’ ஆச்சரியம்.
விஜய பாஸ்கர் இயக்கத்தில் சாந்தி, டோரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பில்டர் கோல்டு’ படத்தின் விமர்சனம்.
திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் விஜி கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அவர்களுக்கு முன்னால் நின்று தண்டனை கொடுக்கிறார். தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். அதன் விளைவுகளே மீதிக்கதை.
விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கர் முரட்டு சுபாவம் சக தோழிகள் மீது அவர் காட்டும் பாசம், தங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முன்னால் நிற்கும் அடிதடி குணம் என்று மைய பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். டோரா, சாந்தி கதபாத்திரங்களின் இயல்பான நடிப்பு நம்மை அவர்கள் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. சுகு என்ற பாத்திரத்தில் வரும் சிறுவன் பயமுறுத்துகிறான். மரக்கடை முதலாளியாக வரும் சிவ இளங்கோ நல்ல தேர்வு.

முதல் முறையாக தமிழ் சினிமாவில் திருநங்கைகளைப் பற்றிய இவ்வளவு வெளிப்படையான ஒரு படம் வந்ததிருக்கிறது. சமூகத்தில் தங்களைப் புறக்கணிக்கும் மனிதர்கள் மீது கோபத்தில் கொந்தளிக்கும் விஜி, போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டதால் பாதிக்கப்படும் சாந்தி, பெண் உணர்வு தோன்றியதால் வீட்டிலிருந்து விரட்டப்படும் டோரா ஆகியோரின் மன உணர்வுகள் மூலம் ஒட்டு மொத்த திருநங்கைகள் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய பாஸ்கர்.

அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் கொச்சையான வார்த்தைகள் மௌனிக்கப்பட்டாலும் அது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். முழுவதும் திருநங்கைளை வைத்து எடுத்திருந்தாலும் திரைக்கதையில் சுணக்கம் இல்லாமல் கையாண்டு இருக்கிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும் திருநங்கைகள் உலகத்தைக் காட்டிய இயக்குனர் விஜய் பாஸ்கர் பாராட்டுக்குரியவர். பரணிக்குமார் ஒளிப்பதிவும், ஹூமர் எழிலன் இசையும் சிறப்பு.
மொத்தத்தில் ‘பில்டர் கோல்டு’ - புது உலகம்
வெனம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து டாம் ஹார்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெனம் 2’ படத்தின் விமர்சனம்.
வெனம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெனம் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. நாயகன் டாம் ஹார்டி ரிப்போர்ட்டராக இருக்கிறார். இவரது உடலுக்குள் இருக்கும் வெனம் உதவியாக செயல்பட்டு வருகிறது. டாம் ஹார்டியின் செய்தியால் சீரியல் கில்லராக இருக்கும் வில்லனுக்கு மரண தண்டனை கிடைக்கிறது.
கடைசி நேரத்தில் வில்லன், டாம் ஹார்டியை சந்திக்க அழைக்கிறார். இவரது அழைப்பை ஏற்று செல்கிறார் டாம். அங்கு ஏற்படும் மோதலில் சீரியல் கில்லர் டாமின் கையை கடித்து விடுகிறார். அதன்பின் வில்லனுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் கார்னேஜ் என்னும் வேறொரு ஆளாக மாறி அனைவரையும் கொல்கிறார்.

அதே சமயத்தில் டாம் உடலினுள் இருக்கும் வெனம், அவரை விட்டு செல்கிறது. இறுதியில், வெனம் இல்லாமல் டாம் எப்படி வில்லனை எதிர்த்தார்? கார்னேஜாக மாறிய வில்லனை வெனம் கொன்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் டாம் ஹார்டி, வில்லனாக வரும் வூடி ஹாரெல்சன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். வெனம், கார்னேஜ் வரும் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு ஏற்றவாறு இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆண்டி செர்கிஸ். திரைக்கதையும், காட்சி அமைப்புகளும் ரசிக்கும் படி உள்ளது. மார்வல் படங்களில் அடுத்த படத்திற்கான முன்னோட்டம் காண்பிக்கப்படும். இந்த படத்தில் அது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வெனம் 2’ வெறித்தனம்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவில் வெளியீட்டில் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அரண்மனை 3’ படத்தின் விமர்சனம்.
ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா.
மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்கு திரும்புகிறார்.

இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறுவிறுப்படைகிறது. அரண்மனையில் அமானுஷ்ய சக்தி இருப்பதை அறியும் இவர்கள், இரண்டு பேய்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இறுதியில் அந்த இரண்டு பேய்கள் யார்? எதற்கு அரண்மனையில் தங்கி இருக்கின்றன? பேய்களை விரட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நாயகியாக வரும் ராஷி கன்னா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அழகால் கவரும் ஆண்ட்ரியா, பின்னர் பேயாக வந்து மிரட்டவும் செய்கிறார்.

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி ஆகியோரின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜமீன்தார் சம்பத், மந்திரவாதி வேலராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. முந்தைய பாகங்களை விட இப்படத்தை பிரம்மாண்டமாக கொடுத்து இருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடித்தும் அசத்தி இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு. படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். பல இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாக உருவாக்கி அதகளப்படுத்தி இருக்கிறார் சுந்தர்.சி.

சத்யா இசையில் பாடல்கள் சிறப்பாகவும் பின்னணி இசை மிரட்டலாகவும் அமைந்திருக்கிறது. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அருமை.
மொத்தத்தில் ‘அரண்மனை 3’ பேய் வெற்றி.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி, ஜோதிகா, கலையரசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘உடன் பிறப்பே’ படத்தின் விமர்சனம்.
சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று விடுகிறார். இதனால், அண்ணன் சசிகுமாரும், தங்கை ஜோதிகாவும் பிரிந்து பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.
இறுதியில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? பிரிய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சசிகுமார். ஊர் மக்கள் பிரச்சனையில் தலையிடுவது, அடிதடி என்று கெத்தாகவும், தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் பாசமிகு அண்ணனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கையாக வரும் ஜோதிகா பல இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவரது அறிமுக காட்சி சிறப்பு. அண்ணன் மீதான பாசத்தில் இவரது செயல்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.

ஆசிரியராக மனதில் பதிகிறார் சமுத்திரகனி. சாதுவாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமான சமுத்திரகனியாக இல்லாமல் வித்தியாசமாக நடித்து கவர்ந்திருக்கிறார். சூரியின் காமெடி காட்சிகள் படத்திற்கு பலம். அதுபோல் கலையரசன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக வரும் சிஜா ரோஸ் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன். பல இடங்களில் சென்டிமென்ட் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் என்னப்பா இது என்று சலிப்படைய வைக்கிறது. ஒரு கட்டத்தில் மெகா சீரியல் போல் திரைக்கதை நகர்கிறது.

இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கிராமத்து அழகு மாறாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் வேல்ராஜ்.
மொத்தத்தில் ‘உடன்பிறப்பே’ சீரியல்.
சமுத்திரகனி இயக்கத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘விநோதய சித்தம்’ படத்தின் விமர்சனம்.
நடிகர் தம்பி ராமையா, ஒரு கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி சிடு சிடுவென இருக்கிறார். அவரது 25-வது திருமண நாளை கொண்டாட குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். அந்த சமயத்தில் அவருக்கு அலுவலகத்தில் அவசர வேலை ஒன்று வருகிறது.
இதற்காக வெளியூர் செல்லும் அவர், வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது விமானத்தை தவறவிடுகிறார். இதையடுத்து காரில் சென்னைக்கு வரும் தம்பி ராமையா, விபத்தில் சிக்கி இறந்து விடுகிறார்.
அந்த நேரத்தில் என்ட்ரி கொடுக்கிறார் சமுத்திரகனி. அவர் தன்னை நேரம் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர் தம்பி ராமையாவிடம் ‘நீங்கள் இறந்துவிட்டதால் உங்களின் நேரம் முடிந்துவிட்டது, அதனால் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்’ என சொல்கிறார்.

தனக்கு முடிக்க வேண்டிய கடமைகள் இருக்கு, அதை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என சமுத்திரகனியிடம் வேண்டுகோள் விடுக்கிறார் தம்பி ராமையா. இதையடுத்து அவருக்கு 90 நாட்கள் அவகாசம் தருகிறார் சமுத்திரகனி. அந்த 90 நாட்கள் என்ன நடந்தது? தம்பி ராமையா என்னவெல்லாம் செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
சமுத்திரகனி, தம்பி ராமையா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமாக புரட்சிகரமான வசனங்களை பேசும் சமுத்திரகனி, இந்த படத்தில் வாழ்க்கையின் நிதர்சனங்களை சொல்லி ஸ்கோர் செய்து இருக்கிறார். இவர்களை தவிர சஞ்சிதா ஷெட்டி, தீபக், ஷெர்லினா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது வசனம் தான். ஸ்ரீவட்சன், விஜி, சமுத்திரகனி ஆகிய மூவரும் வசனம் எழுதி உள்ளனர். திரைக்கதையையும் திறம்பட கையாண்டிருக்கிறார்கள். காமெடிகள் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. படத்தின் திரைக்கதைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் பாடல்கள் இன்றி படத்தை எடுத்துள்ள விதம் அருமை.
படத்தில் பாடல்கள் இல்லாததால், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘விநோதய சித்தம்’ காலத்தின் கண்ணோட்டம்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாக்டர் படத்தின் விமர்சனம்.
ராணுவத்தில் டாக்டராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஒரு நிகழ்ச்சியில் நாயகி பிரியங்கா மோகனை சந்தித்து காதல் வயப்படுகிறார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன், சில காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில், பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.
இவரின் அண்ணன் மகளை தேடும் பணியில் சிவகார்த்திகேயன் ஈடுபடுகிறார். இந்த தேடுதலில் பல திடுக்கிடும் தகவல்களும், மர்மங்களும் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வருகிறது. இறுதியில் நாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகளை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து விலகி வேறொரு கோணத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். கலகலப்பு காமெடி என இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், நல்ல அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் வினய். பல இடங்களில் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லியின் காமெடி படத்திற்கு பெரிய பலம். அர்ச்சனா, தீபா சங்கர், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்குப் பிறகு டாக்டர் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக நகரும் திரைக்கதை முதல்பாதியிலேயே அதிக விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. ஆனால், பிற்பாதியில் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்து காணப்படுகிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘டாக்டர்’ சிறப்பானவர்.
கார்த்திக் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா நடிப்பில் வெளியாகி இருக்கும் முகிழ் படத்தின் விமர்சனம்.
விஜய் சேதுபதி தனது மனைவி ரெஜினா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்க்கிறார்கள். இந்த நாயுமும் குடும்பத்துடன் பாசமாக இருக்கிறது. ஒரு நாள் விபத்தில் மகள் கண்முன் அந்த நாய் இறக்கிறது.


இதனால் விஜய் சேதுபதியின் குடும்பம் சோகத்தில் ஆழ்கிறது. குறிப்பாக மகள், நாய் இறப்புக்கு தான்தான் காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறார். இறுதியில் சோகத்தில் இருந்து விஜய் சேதுபதி குடும்பம் மீண்டதா? மகளின் குற்ற உணர்ச்சியை விஜய் சேதுபதி போக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி மகள் மீது காட்டும் பாசத்தில் கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரெஜினா, மகளை திட்டுவது, பாசம் காட்டுவது, விஜய் சேதுபதியுடன் கோபப்படுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை சிறப்பாகவே செய்திருக்கிறார் ரெஜினா.
மகளாக வரும் ஶ்ரீஜா விஜய் சேதுபதி, அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோஷம், துக்கம், நாயுடன் விளையாடுவது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.

சிறிய கதையை சிறப்பாக இயக்கி இருக்கிறார் கார்த்திக் சுவாமி நாதன். தந்தை, மனைவி, மகள், நாய் பாசத்தை அழகாக சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களை நடிக்க வைக்காமல் வாழ வைத்திருக்கிறார்.
சத்யா பொன்மார் ஒளிப்பதிவும், ரெவாவின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் 'முகிழ்' மகிழ்ச்சி.






