என் மலர்
தரவரிசை
டாம் மெக்ராத் இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘தி பாஸ் பேபி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் குழந்தைகளாக இருந்த டிம்மும், அவரது பாஸ் பேபி சகோதரரான டெட்டும் இரண்டாம் பாகத்தில் இளசுகளாக இருக்கின்றனர். இதில் டிம்முக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. டெட் ஒரு கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். டிம்முடைய குழந்தை டீனா, ஒரு சீக்ரெட் மிஷன் செய்வதற்காக டெட்டை அழைக்கிறார்.
இது ஒருபுறம் நடக்க மறுபுறம், டாக்டர் எட்வின் ஆம்ஸ்ட்ராங், தான் நடத்தி வரும் பள்ளியில் உள்ள குழந்தைகளை வைத்து சில விநோதமான விஷயங்களை செய்து வருகிறார். அதன்மூலமாக உலகத்தை தன் வசப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் செய்யும் விஷயங்களை கண்டுபிடித்து, உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காகவே சீக்ரெட் மிஷனை நடத்துகிறார் டீனா.

எட்வின் ஆம்ஸ்ட்ராங்
இதற்காக டிம், டெட் இருவரையும் குழந்தை உருவத்துல ஆம்ஸ்ட்ராங்கோட பள்ளிக்கு டீனா அனுப்புகிறார். டிம், டெட் இருவரும் இணைந்து ஆம்ஸ்ட்ராங்கோட பிளான் என்ன என்பதை கண்டுபிடித்து அதை தடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இது ஒரு அனிமேஷன் படம், இந்த படத்தின் மிகப்பெரிய பலமே அனிமேஷன் தான். முதல் பாகத்தைப் போலவே இதிலும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குழந்தைகளை கவரும் வகையில் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார் இயக்குனர் டாம் மெக்ராத்.

டிம், டீனா, டெட்
குறிப்பாக டிம், டெட் இருவரும் குழந்தைகளாக மாறும் காட்சி வேற லெவல். தொழிநுட்ப ரீதியாக பலமாக இருந்தாலும், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர். முதல் பாகத்தை போன்று இந்தப் படம் விறுவிறுப்பாக இல்லாதது பின்னடைவு.
ஹேன்ஸ் சிம்மர் மற்றும் ஸ்டீவ் மசாரோவின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘தி பாஸ் பேபி 2’ விறுவிறுப்பில்லை.
2018ம் ஆண்டு வெளியான எ கொயட் பிளேஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
எ கொயட் பிளேஸ் முதல் பாகத்தில் ஏலியன்கள் உலகத்திற்கு வந்து மக்களை அழிக்கிறார்கள். இதில் தப்பிக்கும் ஒரு குடும்பம் எலியன்களிடம் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொண்டு ஏலியன்களை அழிக்கிறார்கள் என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
ஊரை அழித்து இருக்கும் ஏலியன்களுக்கு கண் தெரியாது. சத்தம் கேட்டால் அங்கு வந்து மனிதர்களை தாக்கும். இந்த ஏலியன்களிடம் இருந்து தனது குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக் கொள்ள நாயகி எமிலி பிளண்ட் மக்கள் வசிக்கும் ஊருக்கு செல்ல வேண்டும் என திட்டமிடுகிறார். இவருடன் இருக்கும் மில்லிசென்ட் சிம்மண்ட்ஸ், ரேடார் கருவி மூலம் மக்கள் வசிக்கும் ஊரை கண்டுபிடிக்கிறார்.
இறுதியில், நாயகி எமிலி பிளண்ட் குடும்பம் ஏலியன்களிடம் இருந்து தப்பித்து மக்கள் வசிக்கும் ஊருக்கு சென்றார்களா? ஏலியன்களை கொன்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருக்கும் எமிலி பிளண்ட், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட நடிப்பு திறனை காட்டி இருக்கிறார். குழந்தைகளை காப்பாற்ற போராடும் போது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார். சிறுமியாக வரும் மில்லிசென்ட் சிம்மண்ட்ஸ் காதுகேளாத மற்றும் வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். துணிச்சலாக இவர் எடுக்கும் முடிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.
சிறுவனாக வரும் நோவா ஜூப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். காலில் அடிபட்டவுடன் வலியை தாங்கமுடியாமல் தவிக்கும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சிலியன் மர்பி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

சைலண்ட் திரில்லர் கதையை ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜான் கிராசின்ஸ்கி. படத்திற்கு பெரிய பலம் திரைக்கதை. சத்தமே இல்லாமல் நகரும் திரைக்கதை, பல இடங்களில் பார்ப்பவர்களை பயத்தில் சத்தம் போட வைத்திருக்கிறது. குறைந்த கதாபாத்திரங்களை வைத்து திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
போலி மோர்கனின் ஒளிப்பதிவும், மார்கோ பெல்ட்ராமியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘எ கொயட் பிளேஸ் 2’ சைலண்ட் வெற்றி.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்திருக்கும் கடைசி திரைப்படம் நோ டைம் டு டை படத்தின் விமர்சனம்.
இத்தாலியில் ஜேம்ஸ் பாண்ட் தனது காதலியுடன் இருக்கும்போது, திடீரென ஸ்பெக்டர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவரைத் தாக்குகிறார்கள். தான் இருக்குமிடத்தை காதலி காட்டிக் கொடுத்ததால்தான் அந்தத் தாக்குதல் நடந்ததாகக் கருதும் ஜேம்ஸ் பாண்ட் காதலியை விட்டு பிரிகிறார்.


சில ஆண்டுகளுக்குப் பிறகு, எம்ஐ6ன் ஆய்வகத்தில் 'புராஜெக்ட் ஹெர்குலிஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்திவரும் அப்ருஷேவ் என்ற விஞ்ஞானி கடத்தப்படுகிறார். அந்தத் தருணத்தில் ஓய்வில் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட்டை சிஐஏ தொடர்பு கொண்டு, அந்த விஞ்ஞானியை மீட்க உதவ முடியுமா எனக் கேட்கிறது. அதே நாளில் எம்ஐ6ன் புதிய உளவாளி நோமியும் ஜேம்ஸ் பாண்ட்டை தொடர்பு கொண்டு பிரிட்டனுக்கு உதவும்படி கேட்கிறார்.
இறுதியில், புராஜெக்ட் ஹெர்குலிஸ் என்றால் என்ன? விஞ்ஞானியை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? ஜேம்ஸ் பாண்ட் விஞ்ஞானியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜேம்ஸ் பாண்ட்டாக வரும் டேனியல் கிரேக்கின் நடிப்பு பாராட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தப் படம் அவருடைய இறுதி படம் என்பதால், தனக்கே உரிதான முரட்டுத்தனம், நகைச்சுவையில் நம்மை ஆட்கொள்கிறார். கதாநாயகியாக வரும் அனா டி அர்மாஸ், தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். டேனியலுடன் இணைந்து பணிப்புரியும் காட்சிகள் வேற லெவலில் உள்ளன.
இந்த படத்தின் திரைக்கதை நம்மை ஆட்கொண்டாலும், ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கே உரிய சில அம்சங்கள் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல இடங்களில் படம் மெதுவாக செல்கிறது போன்ற உணர்வை கொடுக்கின்றது. சுவாரஸ்யமான சில காட்சிகள் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இப்படத்தில் நவீன கால கருவிகள் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தாலும், மந்தமான காட்சிகளால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவு நீளம் தான். இரண்டு மணிநேரம் 43 நிமிடங்கள் என்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே அதிக நீளம். இவ்வளவு நீளமான படத்தில் முக்கிய வில்லனான ரமி மாலெக் கொஞ்ச நேரம் மட்டும்தான் வருகிறார்.
ஹான்ஸ் சிம்மரின் இசை படத்திற்கு அதிக மதிப்பை உண்டாக்குகிறது. மேலும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் தீம் மியூசிக்கை சரியான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். இப்படத்தின் காட்சியமைப்பு அழகியல் காட்சிகளாக அமைந்துள்ளன. சண்டை காட்சிகள் அனைத்து விசில் அடித்து கொண்டாடும் அளவிற்கு அமைந்துள்ளன.
மொத்தத்தில் 'நோ டைம் டு டை' சுவாரஸ்யம் குறைவு.
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கவுதம் மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் விமர்சனம்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரியான ரிச்சர்ட், சென்னை துறைமுகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார். போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக அவரை நியமிக்கின்றனர். தனது அதிரடி நடவடிக்கை மூலம் பல கோடி மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்கிறார் ரிச்சர்ட். இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கவுதம் மேனனுக்கும், நாயகன் ரிச்சர்டுக்கும் இடையே பகை உண்டாகிறது.
இதையடுத்து கஞ்சா கடத்தியதாக இரண்டு இளைஞர்களைப் பிடிக்கிறார் ரிச்சர்ட். அவரிடம் இருந்து எஸ்கேப் ஆக முயலும் அந்த இளைஞர்கள் விபத்தில் சிக்குகின்றனர். அதில் ஒரு இளைஞர் மரணமடைந்துவிடுகிறார். அந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் தான், அவரை வேண்டுமென்றே விரட்டிப் பிடித்து, அவரது மரணத்துக்கு ரிச்சர்ட் காரணமாகிவிட்டதாக சர்ச்சை எழுகிறது.

இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படும் ரிச்சர்ட், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதையடுத்து ரிச்சர்ட் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? இல்லையா? இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ரிச்சர்ட். மிடுக்கான தோற்றத்துடன் இருக்கும் அவர் போலீஸ் கதாபாத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆக்ஷன், எமோஷனல் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ரிச்சர்ட்டின் மனைவியாக நடித்திருக்கிறார் தர்ஷா குப்தா. முதல் படத்திலேயே கர்ப்பமான பெண் வேடம் ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். அவருக்கு அதிக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.

கவுதம் மேனன், வில்லனாக மாஸ் காட்டி இருக்கிறார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்திற்கு மேலும் பலம் சேர்த்து இருக்கிறது. போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் தம்பி ராமையா, வக்கீலாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், ராதாரவி, நீதிபதியாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
திரௌபதி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி, இப்படத்தை இயக்கி இருக்கிறார். திரெளபதி படத்தில் நாடக காதலைப் பற்றி திரைக்கதை அமைத்திருந்த அவர், ருத்ர தாண்டவத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் திறம்பட கையாண்டுள்ளார். வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

ஜூபினின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். பரூக் பாஷாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘ருத்ரதாண்டவம்’ ரசிக்கலாம்.
புதுமுக இயக்குனர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'லிப்ட்' படத்தின் விமர்சனம்.
ஐடி ஊழியரான கவின் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வருகிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பனியில் டீம் லீடராக பணியாற்றுகிறார். அதே கம்பெனியில் ஹெச்.ஆர் ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவினுக்கும், அம்ரிதாவுக்கும் இடையே ஒரு சிறு மோதல் இருக்கிறது. ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருக்கின்றனர். பின்னர் அம்ரிதாவிற்கு கவின் மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், கவின் அதை மறுத்துவிடுகிறார்.
இப்படி சென்று கொண்டு இருக்க, கம்பெனியில் ஒரு முக்கிய புராஜெக்டை முடிக்க வேண்டி இருப்பதால், கவின் மட்டும் இரவு கம்பெனியிலேயே இருந்து வேலை செய்து கொண்டிருக்கின்றார். நள்ளிரவில் வேலை முடிந்த பிறகு தரைத்தளத்திற்கு செல்ல கவின் லிப்டில் ஏறுகிறார். அப்போது லிப்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இதனால் அவரால் தரைத்தளத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை.

இந்தநிலையில், நாயகி அம்ரிதாவும் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் சிக்கி இருப்பதை அறியும் கவின் அவரை காப்பாற்றி விடுகிறார். ஆரம்பத்தில் கவின் தான் இவ்வாறு செய்ததாக சந்தேகப்படும் அம்ரிதா, பின் அவரை புரிந்து கொள்கிறார். இதையடுத்து இருவரும் படி வழியாக தரைத்தளத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
அப்போதும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இதனால் இருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கின்றனர். இறுதியில், அவர்கள் வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கும் படம் தான் லிப்ட்.
நாயகன் கவின், ஸ்மார்ட்டான ஐடி ஊழியர் கதாபாத்திரத்திற்கு கசித்தமாக பொருந்தி இருக்கிறார். கோபம், பயம், கொஞ்சம் நகைச்சுவை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகி அம்ரிதா அழகிலும் சரி, நடிப்பிலும் சரி திறம்பட நடித்து கவர்ந்திருக்கிறார்.

ஐடி ஊழியர்களுக்கு உள்ள வேலை பலு, அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சளையும் சொல்லி இருக்கிறது இந்த படம். இயக்குனர் வினீத் வரப்பிரசாத், அவருக்கு இது அறிமுக படம். இப்படத்தின் திரைக்கதை ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் திகில் மற்றும் அமானுஷ்ய விஷயங்களை புகுத்தி விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பது பின்னடைவு.
படத்தில் ஒரே பாடல் தான். அதையும் படத்தின் இறுதியில் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுக்க பின்னணி இசை மூலமே பயமுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல். யுவ குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் 'லிப்ட்' திகிலூட்டுகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரித்து இருக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் விமர்சனம்.
காஞ்சிபுரத்தில் பட்டு செய்வதில் சிறந்தவர் வரதராஜன். இவர்கள் குடும்பம் பாரம்பரியமாக பட்டு செய்து வருகிறார்கள். இவருடன் வேலை பார்த்து வந்த சந்திரசேகர் சூழ்ச்சி செய்து சென்னையில் பெரிய துணிக்கடை ஆரம்பித்து விடுகிறார். வரதராஜனின் மகன் முருகன், சந்திரசேகர் பெண்ணை திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாகிறார்.
ஒரு பிரச்சனையில் முருகனை, சந்திரசேகர் வீட்டை விட்டு துரத்தி விடுகிறார். இவருடன் இருக்கும் வரதராஜனின் பேரன் சிவகுமார், சந்திரசேகருக்கு சபதம் போடுகிறார். இறுதியில் சிவகுமார் போட்ட சபதம் என்ன? அதை சிவகுமார் நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக சிவகுமார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. வழக்கமாக குறும்பு தனம் செய்து ஜாலியாக இருக்கும் ஆதியை இப்படத்திலும் பார்க்க முடிகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், தயாரிப்பு என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இத்தனை பொறுப்புகளை ஏற்று இருப்பதால், சரியாக எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்திருக்கிறார் போல...
காஞ்சிபுரம் பட்டின் பெருமை, தறி செய்யும் தொழிலாளர்கள் என்று நல்ல கதையை எடுத்துக் கொண்ட ஆதி, அதைப்பற்றி ஆழமாக சொல்லாமல் சென்றது வருத்தம். முதல் பாதியின் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான். நிறைய தத்துவங்கள் பேசுவதை குறைத்து இருக்கலாம். முதல் பாதியில் அடுத்தடுத்து நான்கு பாடல்கள் வருகிறது. அவை அனைத்தும் பெரிதாக கவரவில்லை. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் ஆதி. ஆனால், காமெடி அதிகமாக கைகொடுக்கவில்லை. ஒரு காட்சி மிகவும் சீரியசான என்று நினைத்தால் அது காமெடியாக இருக்கிறது. காமெடியான காட்சிகள் சீரியசாக இருக்கிறது. படம் பார்க்கும் போது அதிக குழப்பம் ஏற்படுகிறது. நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் கவர்ந்திருக்கிறார் ஆதி.
நாயகியாக வரும் மாதுரி கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். முருகன் சித்தப்பாவாக வரும் பிராங்ஸ்டர் ராகுல், ஒரு சில இடங்களில் சிரிக்கவும், கடுப்பேற்றவும் செய்திருக்கிறார். ஆதியின் நண்பராக வரும் கதிர், ரசிக்கும் படியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல இடங்களில் காட்சிகள் தெளிவாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘சிவகுமாரின் சபதம்’ ஜெயிக்கவில்லை.
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் இட்ரிஸ் எல்பா, மார்கட் ராபி, அலைஸ் பிராகா, ஜான் சீனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தி சூசைடு ஸ்குவாடு’ படத்தின் விமர்சனம்
தவறு செய்து அமெரிக்க சிறையில் இருப்பவர்களில் சூப்பர் பவர் கொண்ட சிலரை ஒன்று சேர்ந்து, ஒரு மிஷனை செய்து முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிடுகிறது. அந்த மிஷனில் இருந்து பின் வாங்கினால், ‘உங்கள் தலைக்குள் ஒரு சிப் வச்சிருக்கோம். அது வெடிச்சு நீங்க உயிரிழக்க நேரிடும்’ என மிரட்டி சூப்பர் பவர் கொண்ட சிறைக் கைதிகளை சம்மதிக்க வைக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கைதிகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அவர்களில் சிலர் ஏற்கனவே சண்டையிட்டும் இருக்கின்றனர். இந்த சிக்கல்களை எல்லாம் மீறி அந்த மிஷனை அவர்கள் செய்து முடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் இட்ரிஸ் எல்பா, மார்கட் ராபி, அலைஸ் பிராகா, ஜான் சீனா, வில் ஸ்மித் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சூசைடு ஸ்குவாடு படத்தைவிட இந்த படத்தை இன்னும் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஜேம்ஸ் கன். இப்படத்தில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும், அவர்களை திறம்பட கையாண்ட விதத்திலேயே இயக்குனர் பாதி வெற்றி அடைந்துவிட்டார் என்றே சொல்லலாம். பக்கா கமர்ஷியல் படமாக கொடுத்துள்ளார்.

கதாபாத்திரங்கள் இடையேயான எமோஷனும் சிறப்பாக கையாளப்பட்டு உள்ளது. இட்ரிஸ் எல்பாவும் அவரது மகளுக்குமான உறவு, டேனியெல்லாவுக்கும் அவரது தந்தைக்குமான உறவு, கிங் ஷார்க் கதாபாத்திரம் என அனைத்தும் ரசிகர்களோடு ஒன்றக்கூடியவாறு இருப்பது படத்துக்கு பலமாக அமைந்துள்ளது.
ஹென்ரி பிரஹாம் மற்றும் டக்காஷியின் கச்சிதமான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஜான் மர்பியின் பின்னணி இசை திரைக்கதைக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது.
மொத்தத்தில் ‘சூசைடு ஸ்குவாடு’ ஆக்ஷன் விருந்து.
ஜோம் காலெட் செரா இயக்கத்தில் டிவைன் ஜான்சன், எமிலி பிளண்ட் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜங்கிள் குரூஸ்’ படத்தின் விமர்சனம்.
அமேசான் காட்டில் உள்ள அதிசய மரம் ஒன்றில், எப்பேர்பட்ட நோய்யையும் குணப்படுத்தும் அதிசய மலர் ஒன்று வளர்கிறது. மிகவும் ஆபத்து நிறைந்த அந்த பகுதிக்கு சென்று, அதிசய மலரை எடுக்க வேண்டும் என்று படத்தின் நாயகி எமிலி பிளண்ட் புறப்படுகிறார். அவருக்கு நாயகன் டிவைன் ஜான்சனும் உதவி செய்கிறார்.
அதே சமயம், வில்லன் கும்பலும் அந்த அதிசய மலரைத் தேடி அமேசான் காட்டுக்குள் நுழைகிறது. அவர்களை சமாளித்து அந்த அதிசய மலரை நாயகனும், நாயகியும் எடுத்து வந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் டிவைன் ஜான்சன், படகோட்டியாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். ஆங்காங்கே காமெடியிலும் கலக்கி இருக்கிறார். நாயகி எமிலி, திறம்பட நடித்து இருக்கிறார். காமெடிக்காக களமிறக்கப்பட்டுள்ள எட்கர் ராமிரெஸ் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி தான்.

இயக்குனர் ஜோம் காலெட் செரா, அமேசான் காட்டு பகுதியில் அமைக்கப்பட்ட பழங்காலத்து சுற்றுலா படகுத்துறைமுகம், நீரிழ் மூழ்கியிருக்கும் கட்டிடம், ‘நிலவின் கண்ணீர்’ என்று சொல்லக்கூடிய அதிசய மலர் பூக்கும் பிரம்மாண்ட மரம், ஆதிவாசி மக்களின் சாபத்தால் 400 வருடங்களாக அமேசான் காட்டில் இருந்து வெளியேறவும் முடியாமல், இறக்கவும் முடியாமல் வாழும் வித்தியாசமான உடலை கொண்ட போர் வீரர்கள், வித்தியாசமான டால்பின் என சிறுவர்களை குஷிப்படுத்துவதற்கான அத்தனை அம்சங்களையும் படம் முழுக்க வைத்து, காட்சிக்கு காட்சி ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறார்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, காட்சிகளின் பிரம்மாண்டத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. அதே சமயம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவு இருப்பது சில இடங்களில் பொம்மை படத்தை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுகிறது.
மொத்தத்தில் ‘ஜங்கிள் குரூஸ்’ சாகச பயணம்.
பி செந்தில் குமார் இயக்கத்தில் மகேஷ், மேகனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வீராபுரம் 220’ படத்தின் விமர்சனம்.
நாயகன் மகேஷும், அவரது தந்தையும் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஓட்டல் எதிரே நாயகி மேக்னாவின் பியூட்டி பார்லர் உள்ளது. நாயகி மீது காதல் வயப்படும் மகேஷ், அதனை அவரிடம் சொல்ல முடியாமல் தயங்கி வருகிறார். நாயகன் மகேஷுக்கு 5 நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, மது அருந்துவது என பொறுப்பின்றி சுற்றி வருகிறார்.
இந்த சமயத்தில் மணல் திருடும் லாரி மோதுவதால் தனது தந்தையை இழக்கிறார் நாயகன். இதனை அடுத்து மணல் திருட்டை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் இறங்குகிறார் மகேஷ். அதனால் அவருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சனைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்? இவரின் காதல் கைகூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் மகேஷ், கிராமத்து இளைஞராக நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஊரில் நடக்கும் விபத்துகள் குறித்த ரகசியம் தெரியும்போது பொங்குகிறார். நாயகி மேகனா, வழக்கமான நாயகி போல் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். பாடல்களுக்கு மட்டும் வந்து செல்கிறார். நாயகனின் நண்பர்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதீஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் பி செந்தில் குமார், சமுதாய அக்கறையுடன் கூடிய கதையை சொல்ல முயற்சித்திருக்கும் அவர், திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார். குறும்படத்திற்கான கதையை பெரிய படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத காட்சிகள் அதிகம் சேர்த்திருப்பது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் வீராபுரம் வெற்றிவாகை சூடி இருக்கும்.

இரட்டையர்கள் ரித்தேஷ் - ஸ்ரீதர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் கிராமத்து அழகை கண்முன் நிறுத்துகிறார்.
மொத்தத்தில் ‘வீராபுரம்’ வீரமில்லை.
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் சிண்ட்ரெல்லா படத்தின் விமர்சனம்.
சென்னையில் சவுண்ட் இன்ஜினியராக இருக்கும் ராய் லட்சுமி, பறவைகளின் சத்தத்தை பதிவு செய்ய நண்பர்களுடன் கொடைக்கானல் பகுதிக்கு சென்று காட்டு பங்களாவில் தங்குகிறார். அந்த பங்களாவில் அமானுஷ்ய சக்தி இருப்பதை ராய்லட்சுமி உணருகிறார்.



அதேசமயம் அந்த ஊரில் இரண்டு மர்மக் கொலைகள் நடக்கிறது. இதற்கு காரணம் ராய் லட்சுமிதான் என்று போலீசார் அவரை கைது செய்கின்றனர். இறுதியில் அந்தக் கொலைகளை செய்தது யார் ? எதற்காக செய்தார்கள்? அந்த பங்களாவில் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. மாடர்ன் பெண்ணாகவும், வெகுளித்தனமான பெண்ணாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். வேலை பெண்ணாக பணிவிடை செய்வது, ஆடைக்காக பணம் சேர்ப்பது, நடனம் ஆடுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார்.
மற்றொரு நாயகியாக வரும் சாக்ஷி அகர்வால் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். காதல், வெறுப்பு, கோபம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். பேய்க்கு பயப்படும் போது பரிதாபத்தையும், ராய் லட்சுமியை திட்டும்போது கோபத்தையும் ஏற்படுத்துகிறார். வில்லி கதாபாத்திரம் சாக்ஷி அகர்வாலுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

ரோபோ சங்கர் இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். கல்லூரி வினோத் மற்றும் நண்பர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
பேய் கதைகளில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து எடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ். முதல் பாதி விறுவிறுப்பாகவும், திகிலாகவும் நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மெதுவாகவும், சுவாரஸ்யம் இல்லாமலும் நகர்கிறது. திகில் காட்சிகள் கைகொடுத்த அளவுவிற்கு காமெடி காட்சிகள் கைகொடுக்கவில்லை.

அஸ்வமித்ராவின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் பல காட்சிகளில் இவருடைய பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. அதுபோல் ரம்மியின் ஒளிப்பதிவு, கொடைக்கானல் பகுதியை அழகாக படம் பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் சிண்ட்ரெல்லா மிரட்டல்.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, மொட்ட ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேய் மாமா’ படத்தின் விமர்சனம்.
ஒரு பங்களாவில் எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட சில பேய்கள் வசித்து வருகின்றனர். அங்கு யோகிபாபு தன் குடும்பத்துடன் செல்கிறார். அந்த பேய்கள் தங்கள் பிளாஷ்பேக்கை சொல்லி யோகிபாபு உடலில் சென்று வில்லன் கோஷ்டிகளை பழி திட்டமிடுகிறார்கள்.
இறுதியில் யோகிபாபு வில்லன்களை பழிவாங்கினாரா? எம்.எஸ்.பாஸ்கர், ரேகா, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் எப்படி பேயாக மாறினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். ரஜினியின் சந்திரமுகி மற்றும் பேட்ட பட சாயலில் அறிமுகமாகிறார் யோகிபாபு. பல படங்களில் காட்சிகளை எடுத்து அதில் தன் பாணி டயலாக்கை சொல்லி நடித்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. மற்ற கதாபத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
பேய் பங்களா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். மற்ற படங்கள் போல் இப்படமும் வழக்கமான பேய் கதையாகவே இருக்கிறது. கதை மற்றும் காட்சிகளில் புதுமை இல்லை. வடிவேலு பேசிய டயலாக்குகளை எல்லாம் வைத்து பாடலாக உருவாக்கியுள்ளனர். இந்த பாடலை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. டி.வி. நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் காட்சிகள், யோகிபாபு பலரை திட்டும் காட்சிகள் கடுப்பை ஏற்படுத்துகிறது.

ராஜ் ஆர்யன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஓரளவிற்கு கொடுத்து இருக்கிறார். ஒளிப்பதிவில் எம்.வி.பன்னீர்செல்வம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘பேய் மாமா’ சிரிக்க முடியலமா.
ஷாரங் இயக்கத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நடுவன்’ படத்தின் விமர்சனம்.
கொடைக்கானலில் பரத்தும் அவரது நண்பர் கோகுல் ஆனந்தும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள். கோகுல் ஆனந்த், ஒரு முழு நேர குடிகாரர் என்பதால், பரத் தான் அங்கு அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்கிறார். . பரத்துக்கு ஒரு மனைவியும், பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
பரத்தின் மனைவி அபர்ணா வினோத்தும், நண்பன் கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்கள். இந்த விவகாரம் பரத் வீட்டில் தங்கி வேலை பார்க்கும், உறவுக்கார இளைஞர் அருவி பாலாவுக்கு தெரிந்துவிடுகிறது. இதையடுத்து அவரை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார். இறுதியில் கள்ளக் காதல் விவகாரத்தை பரத்திடம் பாலா சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நடித்திருக்கிறார். கம்பெனியே கதி என கிடக்கும் அப்பாவியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பரத்தின் மனைவியாக, நடித்துள்ள அபர்ணா வினோத் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார். பரத்தின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரர், கள்ளக் காதலர் என வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
இயக்குனர் ஷாரங், கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் அருமை. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, அபர்ணா, கோகுல் கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் வேகம் எடுக்கிறது. பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

திரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்கும். ஆனால் இப்படத்தில் அது சரிவர அமையாதது பின்னடைவு. தரண் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஒளிப்பதிவாளர் யுவாவின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகை கண்முன் கொண்டு வந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நடுவன்’ சோபிக்கவில்லை.






