என் மலர்tooltip icon

    தரவரிசை

    மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வசிக்கும் ரம்யா பாண்டியன், பக்கத்து ஊரில் இருக்கும் மிதுன் மாணிக்கத்தை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ரம்யா பாண்டியன் திருமணம் செய்யும் போது அவர்கள் வளர்த்து வந்த கருப்பன், வெள்ளையன் என்ற இரண்டு மாடுகளை சீதனமாக எடுத்து செல்கிறார்.

    மிதுன் மாணிக்கமும், ரம்யா பாண்டியனும் கருப்பன், வெள்ளையனை குழந்தைகளை போல் வளர்த்து வருகிறார்கள். ஒரு நாள் கருப்பன், வெள்ளையன் என இரண்டு மாடுகளும் காணாமல் போகின்றன. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் கருப்பன், வெள்ளையனை மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன் இருவரும் கண்டு பிடித்தார்களா? காணாமல் போக என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கம், அறிமுகம் என்று தெரியாதளவிற்கு நடிப்பில் பளீச்சிடுகிறார். பல இடங்களில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மாடுகள் மீது அக்கறை காட்டுவது, அவர்களுடன் பழகுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மிதுன் மாணிக்கத்தின் நண்பராக வரும் வடிவேல் முருகன், டைமிங் காமெடியில் அசத்தி இருக்கிறார். செய்தியாளராக வரும் வாணி போஜன், அளவான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். 

    கிராமத்து பின்னணியில் அழகான கதையை பாசம், அரசியல் கொண்டு இயக்கி, அறிமுக படத்திலேயே அசத்தி இருக்கிறார் அரிசில் மூர்த்தி. மாடுகளுக்கும், குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். மாடுகளை வைத்தே முழு திரைக்கதையும் நகருவதால், ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்துகிறது.

    விமர்சனம்

    கிரிஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் பாடகர் கிரிஷ், சிறந்த இசையமைப்பாளராக வலம் வருவார் என்று சொல்லலாம். சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ சுமாரான ஆட்சி.
    ஈஸ்வர் கொற்றவை இயக்கத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ச்சூ மந்திரகாளி’ படத்தின் விமர்சனம்.
    படத்தின் கதை 2 கிராமங்களை சுற்றியே நடக்கின்றன. ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். எல்லோரும் அண்ணன்-தம்பி உறவு முறை கொண்டவர்கள். இருப்பினும் பொறாமை குணம் கொண்டவர்கள். ஒருவருக்கொருவர் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள். 

    இவர்களின் பக்கத்து ஊரில், ஒரு சாபக்கேடு. எந்த பெண்ணும் கர்ப்பம் தரிப்பதில்லை. சூனியம் வைத்துக்கொள்ளும் கிராமத்தை சேர்ந்தவர் கதாநாயகன். அந்த பழக்கத்தில் இருந்து ஊர் மக்களை காப்பாற்ற பக்கத்து ஊருக்கு சென்று மாந்திரீகம் தெரிந்த ஒரு பெண்ணை அழைத்துவர முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ச்சூ மந்திரகாளி விமர்சனம்

    கதாநாயகனாக கார்த்திகேயன் வேலு, புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு நடித்து இருக்கிறார். மாந்திரீகம் தெரிந்த பெண்ணாக சஞ்சனா புர்லி அறிமுகமாகி இருக்கிறார். வசீகர முகம். நடிப்பிலும் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களிலும் அசல் கிராமத்து ஜனங்களை நடிக்க வைத்து இருக்கிறார்கள். 

    படத்தின் முதல் பாதியை கலகலப்பாக கதை சொன்ன இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை, இரண்டாவது பாதியில், ‘கிராபிக்ஸ்’ உதவியை நாடியிருக்கிறார். படம் முழுக்க ஏராளமான புது முகங்கள் நடித்திருந்தாலும் அவர்களை திறம்பட கையாண்டுள்ளார். 

    ச்சூ மந்திரகாளி விமர்சனம்

    சதிஷ் ரகுநாதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் நவிப் முருகன் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முகமது பர்ஹாணின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

    மொத்தத்தில் ‘ச்சூ மந்திரகாளி’ ரசிக்க வைக்கிறது.
    சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் செந்தில்நாதன், சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் சின்னஞ்சிறு கிளியே படத்தின் விமர்சனம்.
    நாயகன் செந்தில்நாதன் கிராமத்தில் இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் மீது அதிக நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் சாண்ட்ரா நாயரை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் செந்தில்நாதன். பிரசவத்தின் போது, ஆங்கில மருத்துவத்தால் சாண்ட்ரா இறந்துவிடுகிறார்.

    தனக்கு பிறந்த பெண் குழந்தையை அதிக பாசத்துடன் வளர்த்து வருகிறார் செந்தில்நாதன். 6 வயதில் இருக்கும் போது, செந்தில்நாதனின் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இறுதியில், செந்தில்நாதனின் மகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? மகளை செந்தில்நாதன் கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், ஒரு சில இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்க முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக வரும் சாண்ட்ரா நாயர் அழகாக சிரித்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அர்ச்சனா சிங் நடிப்பில் பளிச்சிடுகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பதிவத்தினி, நடிப்பில் கவர்ந்திருக்கிறார். தந்தையை செல்லமாக மிரட்டுவது, பாசம், அக்கறை என நெகிழ வைத்திருக்கிறார். பாலாஜி சண்முகசுந்தரம், குள்ளபுலி லீலா, செல்லதுரை, விக்ரமாதித்யன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    கிராமத்து பின்னணியில் அப்பா மகள் பாசம், இயற்கை மருத்துவத்தின் மகிமை, காதல், மெடிக்கல் கிரைம் என கலந்துக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன். முதல்பாதி திரைக்கதை, எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம்பாதி மெடிக்கல் கிரைம் பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார். கதையில் இருக்கும் வலு, திரைக்கதையிலும்,  கதாபாத்திரங்களின் நடிப்பிலும் அதிகம் இல்லை. இப்படம் பல விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளது. பல விருது படங்கள் ஆவணப் படங்கள் போல் இருக்கும். ஆனால், இப்படம் அதுபோல் இல்லாமல் இருப்பது சிறப்பு.

    மஸ்தான் காதரின் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். பாண்டியன் கருப்பனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘சின்னஞ்சிறு கிளியே’ ரசிக்கலாம்.
    ரோடோ சயாகியூஸ் இயக்கத்தில் ஸ்டீபன் லேங், பிரெண்டன் செக்ஸ்டான், மேட்லின் கிரேஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டோன்ட் பிரீத் 2’ படத்தின் விமர்சனம்.
    ராணுவப் போரில் கண் பார்வை இழந்த ஸ்டீபன் லேங் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டையும் வீட்டில் இருக்கும் பொருட்களையும் திருட, திருட்டு கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து ஓட விடுகிறார் ஸ்டீபன் லேங். முதலில் ஹீரோவாக காட்டிவிட்டு பின்னர் அவர் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் முதல்பாகத்தில் சொல்லி இருப்பார்கள்.

    தற்போது வந்துள்ள இரண்டாம் பாகம், எட்டு வருடங்கள் கழித்து நடப்பது போல் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் ஸ்டீபன் லேங் தனது வளர்ப்பு மகளுடன் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவளை எங்கும் வெளியே செல்ல அனுமாதிக்காமல் பாதுகாத்து வருகிறார். அந்த சமயத்தில் குழந்தையைத் தேடி ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைகிறது. யார் இந்த கும்பல்?, அவர்கள் ஏன் ஸ்டீபன் லேங் வளர்க்கும் குழந்தையைத் தேடுகிறார்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை. 

    டோன்ட் பிரீத் 2 விமர்சனம்

    ஃபெட் அல்வரெஸ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் ஆன ‘டோன்ட் பிரீத்’ படத்தின் இரண்டாம் பாகம் இது. நாயகன் ஸ்டீபன் லேங் முதல் பாகத்தைப் போல் இந்தப் பாகத்திலும் மாஸ் காட்டி இருக்கிறார். கண் தெரியாத ஒருவரின் நடவடிக்கைகளை அழகாகவும், மிரட்டும் விதமாக செய்திருப்பது சிறப்பு. மேலும் பிரெண்டன் செக்ஸ்டான், மேட்லின் கிரேஸ் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம்.

    ரோடோ சயாகியூஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். மொத்தக் கதையும் இருட்டில் சேஸிங், ஆக்‌ஷன் என சென்று கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைப் போல் இந்த படத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை அமைத்துள்ள விதம் அருமை. நாய் சென்டிமென்ட் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. 

    டோன்ட் பிரீத் 2 விமர்சனம்

    படத்தின் கதை முழுக்க முழுக்க இருட்டில் பயணித்தாலும், ஒளிப்பதிவாளர் பெட்ரோ லூக் மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ரோக் பெனோஸின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘டோன்ட் பிரீத் 2’ விறுவிறுப்பு.
    விஜய் சேதுபதி, டாப்சி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், ராதிகா, மதுமிதா, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் அனபெல் சேதுபதி படத்தின் விமர்சனம்.
    இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தில் யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுகிறார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகி டாப்சி தனது குடும்பத்தினருடன் வந்து தங்குகிறார். 

    அதன்பின் வரும் பௌர்ணமி தினத்தில் டாப்சிக்கு என்ன ஆனது? அரண்மனையில் வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, 1940களின் பின்னணியில் வரும் காட்சிகள் வருகிறார். படத்தில் குறைவான காட்சிகள்தான் என்றாலுமே கூட நடிப்புக்காக எந்த ஒரு மெனக்கெடலும் அவர் எடுத்தது போல் தெரியவில்லை. படத்தின் முழுக் கதையுமே டாப்சியை சுற்றியே நகர்கிறது. எனினும் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு எந்த காட்சியும் இல்லாதது வருத்தம். 

    ராதிகா, ராஜேந்திர பிரசாத், சேத்தன், தேவதர்ஷினி என நல்ல நடிகர்கள் இருந்தாலும் அதிகம் ஜொலிக்கவில்லை. வழக்கமான வில்லனாக வந்து சென்றிருக்கிறார் ஜெகபதி பாபு. யோகி பாபுவின் காமெடி ஆங்காங்கே கைக்கொடுத்து இருக்கிறது.

    விமர்சனம்

    பேயையும் நகைச்சுவையையும் கலந்து வெளியான பல திரைப்படங்கள் பாணியில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன். அரண்மனை, அதற்குள் நடக்கும் மர்ம மரணங்கள், பேய்களிடம் சிக்கிக்கொள்ளும் திருடர்கள் என சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, போக போக அந்த சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. கதாபாத்திரங்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன்.

    கிருஷ்ண கிஷோர் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணியை ஓரளவிற்கு கவனிக்க வைத்திருக்கிறார். பிரம்மாண்ட அரண்மனையை கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் கௌதம். இவரின் உழைப்பு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘அனபெல் சேதுபதி’ ஜொலிக்கவில்லை.
    ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ், லாஸ்லியா நடிப்பில் வெளியாகி இருக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் விமர்சனம்.
    ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் லாஸ்லியா.

    சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ். காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.

    விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளளுடன் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ஜே.எஸ்.கே.சதீஷ்.

    நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா. அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது. ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது. அந்த காட்சியை கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இறுதியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியதற்கு வாழ்த்துகள்.

    விமர்சனம்

    உதயகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார். சாந்த குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.


    மொத்தத்தில் ‘பிரண்ட்ஷிப்’ நமத்துப்போன 'சிப்'ஸ்!
    ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் விமர்சனம்.
    நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறுகிறார். அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார். 

    இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கோடியில் ஒருவன் விமர்சனம்

    நாயகன் விஜய் ஆண்டனி, மிடுக்கான வேடம் ஏற்று நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கும் அவர் ரொமான்ஸ் காட்சிகளில் கோட்டை விட்டுள்ளார். நாயகி ஆத்மிகாவுக்கு, அதிகளவு காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். இருந்தாலும் வரும் காட்சிகளில் அழகு, பதுமையுடன் வந்து செல்கிறார்.

    இப்படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார். அதில் குறிப்பாக கே.ஜி.எப் வில்லன் ராமச்சந்திர ராஜு, உருவத்திலேயே பயமுறுத்தி வில்லத்தனத்திலும் மிரட்டி இருக்கிறார். மேலும் சூப்பர் சுப்பராயன், சூரஜ், பூ ராமு ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்துள்ள திவ்ய பிரபா, நேர்த்தியாக நடித்துள்ளார்.

    கோடியில் ஒருவன் விமர்சனம்

    இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அதனை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஒரு கவுன்சிலரால் என்னவெல்லாம் செய்ய முடியும், அவருக்கு வரும் தடைகள் என்னென்ன என்பதை புதுவிதமாக காட்டி இருந்தாலும், திரைக்கதை வேகத்தை கூட்டி இருந்தால் கோடியில் ஒருவனை இன்னும் ரசித்திருக்கலாம். ஹீரோ தோற்கும்படியான காட்சிகள் வைத்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம். 

    நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. ஹரீஷ் அர்ஜுனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    மொத்தத்தில் ‘கோடியில் ஒருவன்’ வேகம் குறைவு.
    ஜேம்ஸ் வான் இயக்கத்தில் அனபெல் வல்லிஸ், ஜார்ஜ் யங் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மலிக்னன்ட்’ படத்தின் விமர்சனம்.
    ‘மலிக்னன்ட்’ படத்தின் கதைப்படி, நாயகி அனபெல் வல்லிஸ், யாரோ ஒரு மர்ம நபர் அடுத்தடுத்து பல கொலைகளை செய்வதாகவும், அந்த கொலைகள் அனைத்து தன் கண்முன்னே நடப்பது போன்றும் உணர்கிறார். இந்த விஷயத்தை நாயகி அனபெல் வல்லிஸ், போலீசிடம் தெரிவிக்கிறார். 

    இந்த கொலைகள் குறித்து விசாரணை நடத்தும் போலீசார், ஒரு கட்டத்தில் நாயகியிடம், ‘அது எப்படி நடக்குற கொலைகள் அனைத்து உங்களுக்கு முன்கூட்டியே தெரிகிறது’ என போலீஸ் தங்களது சந்தேக பார்வையை நாயகி பக்கம் திருப்புகிறது. இதன் பின் என்ன ஆனது? அந்த கொலைகளை செய்தது யார்? அதனை போலீஸ் கண்டுபிடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மலிக்னன்ட் விமர்சனம்

    கதாபாத்திரங்கள் தேர்வு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாயகியாக நடித்துள்ள அனபெல் வல்லிஸ், திறம்பட நடித்து இருக்கிறார். போலீசாக வரும் ஜார்ஜ் யங் கச்சிதமான தேர்வு. இவரது கதாபாத்திரம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது.

    சா, கான்ஜுரிங் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் வான் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். திரில்லர் படமான இதில் முதலில் திரைக்கதை மெதுவாக நகர்வது சற்று தொய்வை தருகிறது. இருப்பினும் கிளைமாக்ஸில் அவர் வைத்த டுவிஸ்ட் விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ஒரே வீட்டில் நடப்பது போன்று இருந்தாலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்களை திறம்பட கையாண்டுள்ளார்.

    மலிக்னன்ட் விமர்சனம்

    மைக்கெல் பர்கஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டைக் காட்சியில் மெர்சல் காட்டி இருக்கிறார் என்றே சொல்லலாம். ஜோசப் பிசாராவின் பின்னணி இசையும் படத்தின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘மலிக்னன்ட்’  திரில்லர் ரசிகர்களுக்கானது.
    டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் விமர்சனம்.
    சிறுவயதில் தாய், தந்தையை இழந்த விஜய் சேதுபதி, தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் வாழ்ந்து வருகிறார். அரசியலில் ஆர்வம் கொண்ட விஜய் சேதுபதி, பார்த்திபன் இருக்கும் கட்சியில் தொண்டனாக நுழைகிறார்.

    பின்னர் சூழ்ச்சி செய்து கவுன்சிலர் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெறுகிறார். மேலும் தான் வெற்றி பெற்ற தொகுதியை பார்த்திபன் மூலம் ரூ.50 கோடிக்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்று விடுகிறார். இதற்கிடையில் ஒரு சண்டையில் விஜய் சேதுபதிக்கு மண்டையில் அடிப்பட்டு வித்தியாசமாக நடந்து கொள்கிறார். 

    விஜய் சேதுபதி

    இதனால் விஜய் சேதுபதி வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதேசமயம் ரூ 50 கோடி பணம் காணாமல் போகிறது. இதனால் கோபமடையும் பார்த்திபன், விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கிறார். இறுதியில் ரூ.50 கோடி கிடைத்ததா? யார் கொள்ளை அடித்தது? விஜய் சேதுபதி வித்தியாசமாக நடந்து கொள்ள காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் விஜய் சேதுபதி, 2 வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். 2 கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எந்த விஜய் சேதுபதியாக தற்போது இருக்கிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களில் 'பீட்சா' விஜய் சேதுபதி வந்து செல்கிறார். மேலும் நடிப்பில் அந்நியன் விக்ரம், அமைதிப்படை சத்யராஜ் ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார். 

    விமர்சனம்

    கதாநாயகியாக வரும் ராஷி கண்ணாவிற்கு அதிகம் வேலை இல்லை. அழகாக வந்து செல்கிறார். தங்கையாக வரும் மஞ்சிமா மோகன், நடிக்க வாய்ப்பு குறைவு. வசனம் இல்லாமல் மௌனத்தில் அதிகம் பேசி இருக்கிறார். தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் நடித்து அசத்தி இருக்கிறார் பார்த்திபன். கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சத்யராஜ், ஓட்டு மொத்த கைத்தட்டலை தட்டிச் செல்கிறார். கருணாகரனின் நடிப்பு படத்திற்கு பலம்.

    அரசியல் ஃபேன்டசி படத்தை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள். அதிக வித்தியாசம் இல்லாத விஜய் சேதுபதியின் 2 கதாபாத்திரம். ஏற்கனவே பார்த்த படங்களின் சாயல் ஆகியவை படத்திற்கு பலவீனம். அதிகமான லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். 'வாவ்' என்று ஆரம்பிக்கும் திரைக்கதை, மெல்ல மெல்ல 'ச்சே' எதை நோக்கி செல்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. சத்யராஜ்க்கு இன்னும் அதிக காட்சிகள் வைத்திருந்தால் ரசித்து இருக்கலாம்.

    விமர்சனம்

    கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரியதாக கவரவில்லை. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘துக்ளக் தர்பார்’... கொஞ்சம் BORE..!
    கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், அனகா, ஸ்ரின் காஞ்வாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் சந்தானம் 2020 ஆம் ஆண்டு தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஹாக்கி வீரராக வேண்டும் என்று நினைத்து வந்த சந்தானம், பெரியதாக ஜெயிக்க முடியாததால் ஈ.பி.மேனாக வேலை பார்த்து வருகிறார். மேலும் திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருப்பதால் விரக்தியில் வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில், 2027ஆம் ஆண்டு சந்தானத்திற்கு மின்சாரம் சரி செய்ய போன இடத்தில் டைம் மிஷின் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டுக்கு சென்று தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்த முற்படுகிறார். இறுதியில் தனது திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? 2027 ஆம் ஆண்டிற்கு திரும்பி வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    கதாநாயகன் சந்தானம் படம் முழுக்க தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய டைமிங் மற்றும் ரைமிங் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஆனால், பல இடங்களில் 'ஐயோ...' என்று புலம்ப வைக்கிறது. உடல் எடை கிடுகிடுவென குறைந்து மெலிந்து இருப்பதால் எனர்ஜி இல்லாத சந்தானமாக இருக்கிறார்.

    கதாநாயகிகளாக நடித்திருக்கும் அனகா, மற்றும் ஸ்ரின் காஞ்வாலா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார் யோகிபாபு. ஆனந்த் ராஜ் மற்றும் முனிஸ்காந்த்தின் நடிப்பு, படத்திற்கு பெரிய பலம். இவர்களுடைய காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஊக்குவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார்.

    விமர்சனம்

    டைம் டிராவலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. இதுபோன்ற கதைகளில் திரைக்கதையை கையாள்வது மிகவும் கடினம். அதை ஓரளவிற்கு சரியாக செய்து இருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் திரைக்கதை, கிளைமாக்ஸில் தெளிவடைகிறது. ஏற்கனவே வெளியான 'இன்று நேற்று நாளை', 'ஓ மை கடவுளே' போன்ற படங்களின் சாயல்கள் அவ்வப்போது வந்து செல்கிறது.

    விமர்சனம்

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ரீமேக் பாடல் ரசிகர்களை தாளம் போட வைக்கிறது. யுவனின் பின்னணி இசையும், அர்வியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    மொத்தத்தில் ‘டிக்கிலோனா’ ஜாலியாக விளையாடலாம்.
    விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமி, கங்கனா ரனாவத், சமுத்திரகனி, நாசர், பூர்ணா நடிப்பில் வெளியாகி இருக்கும் தலைவி படத்தின் விமர்சனம்.
    1965 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தலைவி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய்.

    1965ல் நடிகையாக இருக்கும் ஜெயா (கங்கனா), முன்னணி நடிகராக இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திராவுடன் (அரவிந்த் சாமி) இணைந்து நடிக்கிறார். அப்போது, எம்.ஜி.ராமச்சந்திராவின் நற்குணங்களை கண்டு வியந்து அவர் மீது ஜெயாவிற்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

    விமர்சனம்

    எம்.ஜி.ராமச்சந்திராவிடம் பயணிக்கும் ஆர்.என்.வீரப்பன் (சமுத்திரகனி), ஜெயாவை, எம்.ஜி.ராமச்சந்திராவிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார். அரசியல் காரணம் சொல்லி, ஜெயாவை விட்டு எம்.ஜி.ராமச்சந்திரா விலகுகிறார். ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருகிறார் ஜெயா. இறுதியில் எப்படி அரசியலில் ஜெயித்து முதலமைச்சர் ஆனார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரமாக கங்கனா வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். வெகுளித்தனமாக ஆரம்பிக்கும் இவரின் நடிப்பு, ஈர்ப்பு, பிரிவு, அழுகை, ஏக்கம், துணிச்சல், கம்பீரம் எனப் பளிச்சிடுகிறார். ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்து இருக்கிறார். எம்.ஜி.ஆர்.ஆக நடித்திருக்கும் அரவிந்த் சாமி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    விமர்சனம்

    அரவிந்த் சாமி மற்றும் கங்கனாவின் நடிப்பில் குறையில்லை. ஆனால், இவர்களை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆர்.என்.வீரப்பன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் சமுத்திரகனி. பார்க்கும் பார்வையிலேயே பல வசனங்கள் பேசுகிறார். கருணாவாக வரும் நாசர், எம்.ஆர்.ராதாவாக வரும், ராதாரவி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சசியாக வரும் பூர்ணாவிற்கு அதிகம் வேலையில்லை.

    சினிமாவிற்காக திரைக்கதையில் மாற்றம் செய்து இருக்கிறார் இயக்குனர் விஜய். கங்கனா நடிகையாக வரும் காட்சிகளை குறைத்து இருக்கலாம். அதுபோல் முதல் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை தவிர மற்ற காட்சிகள், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆழமாக பதியாதது வருத்தம். கலை மற்றும் வசனங்கள் படத்திற்கு பலம். 

    விமர்சனம்

    ஜிவி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். விஷால் விட்டலின் ஒளிப்பதிவு சிறப்பு. 

    மொத்தத்தில் 'தலைவி'-ஐ தலைவியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘லாபம்’ படத்தின் விமர்சனம்.
    பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் ஜெகபதி பாபு. பல வருடங்களுக்கு பிறகு பெருவயல் கிராமத்திற்கு வரும் விஜய் சேதுபதி, ஜெகபதி பாவுவை எதிர்த்து விவசாய சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

    இதனால் கோபமடையும் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழிக்க நினைக்கிறார். அதே சமயம் விஜய் சேதுபதி கிராம மக்களை திரட்டி கூட்டு பண்ணை திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார். இறுதியில் ஜெகபதி பாபு, விஜய் சேதுபதியை அழித்தாரா? விஜய் சேதுபதி பல வருடங்கள் கழித்து ஊருக்கு வர என்ன காரணம்? கூட்டு பண்ணை திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    லாபம் விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, விவசாய சங்க தலைவராக வலம் வருகிறார். விவசாயத்தின் நன்மை, விவசாயிகள் பணம் சம்பாதிப்பது பற்றி படம் முழுக்க பேசுகிறார். ஒரு கட்டத்தில் அதிகம் பேசுவது போல் தோன்றுகிறது. 

    நடனக் கலைஞராக வரும் ஸ்ருதி ஹாசன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியை காதலிப்பது, அவருக்கு உதவுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். காமெடியை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    லாபம் விமர்சனம்

    ஜெகபதி பாபு வழக்கமான வில்லனாக வந்து செல்கிறார். விஜய் சேதுபதி நண்பர்களாக வரும் கலையரசன், டேனி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். 

    விவசாயத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். விலை நிலங்கள், விவசாயத்தின் நன்மை, விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால், சொன்ன விதம் குழப்பமாக இருக்கிறது. 

    லாபம் விமர்சனம்

    இப்படத்திலும் விவசாயம், கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி இருப்பதால், பழைய படங்களின் தாக்கம் ஆங்காங்கே வந்து செல்கிறது. டி இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. 

    மொத்தத்தில் 'லாபம்' அதிக லாபம் இல்லை.
    ×