என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஜானகி ராமன் இயக்கத்தில் துருவா, பாலசரவணன், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியாகி இருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் விமர்சனம்
    வெவ்வேறு ஊர்களில் வசித்து வரும் துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், ஹரிகிருஷ்ணன் ஆகிய நான்கு பேரையும் சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், தீப்தி மன்னே, ஆரா ஆகிய நான்கு பெண்கள் துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள்.

    திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் பொழுது நான்கு பெண்களும் இவர்களை விட்டு பிரிகிறார்கள். மன வருத்தத்தில் இருக்கும் 4 ஹீரோக்களும் ஒயின்ஷாப்பில் சந்தித்து நண்பர்களாக மாறுகிறார்கள்.

    காதலில் தோல்வி அடைந்த 4 பேரும் ஒன்று சேர்ந்து நான்கு பெண்களையும் பழிவாங்கத் திட்டமிடுகிறார்கள். இறுதியில் இவர்களின் காதல் என்ன ஆனது? நான்கு பெண்களையும் பழி வாங்கினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தேவதாஸ் பிரதர்ஸ் விமர்சனம்

    நாயகன் துருவா இராணுவ பயிற்சி பெறும் இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். பாலசரவணன் கிராமத்து இளைஞனாகவும், அஜய் பிரசாத் மாடர்ன் வாலிபராகவும், ஹரி கிருஷ்ணன் வடசென்னை இளைஞனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களை காதலிக்கும் பெண்களாக சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், தீப்தி மன்னே, ஆரா ஆகிய நான்கு கதாநாயகிகளும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

    கதாபாத்திரங்களின் நடிப்பு அதிக இடங்களில் செயற்கைத்தனமாக அமைந்திருக்கிறது. காதலை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கும் இயக்குனர் கே.ஜானகி ராமன், கதாபாத்திரங்களிடையே வேலை வாங்க மறந்துவிட்டார். தேவையில்லாத காட்சிகள், தேவையற்ற வசனங்கள் படத்தின் திரைக்கதைக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

    தேவதாஸ் பிரதர்ஸ் விமர்சனம்

    தரன் இசையில் பாடல்கள் அனைத்தும் அதிகம் கவரவில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் 'தேவதாஸ் பிரதர்ஸ்' கூட்டணி சரியில்லை.
    டெஸ்டின் டேனியல் கிரிட்டன் இயக்கத்தில் சிமு லியூ, அக்வாஃபினா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஷாங் சி’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் ஷாங் சி-யின் அப்பாவான வென்வு என்கிற தி மேண்டரின், டென் ரிங்ஸ் என்கிற சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கொண்டு உலகையே தன் கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார். அப்போது பல அற்புத சக்திகள் நிறைந்த ஒரு கிராமத்தை அவர் பிடிக்க நினைக்கிறார். 

    அவருக்கு எதிராக அவரின் மகன் ஷாங் சி-யும், மகள் ஷியாலிங்கும் வந்து நிற்கிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றது?, இந்தக் குடும்பத்தின் பின்னணி என்ன? என்பதை தன் வழக்கமான பாணியிலான நக்கல், நையாண்டி, அதிரடி சண்டைக் காட்சிகள் கலந்து விடை தருகிறது இந்தப் படம்.

    ஷாங் சி-யாக சிமு லியூ நடித்துள்ளார். ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் திறம்பட நடித்துள்ள இவர் காமெடி காட்சிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவரின் சகோதரி ஷியாலிங்காக வரும் மெங்கர் ஜாங், தோழி கேட்டியாக வரும் அக்வாஃபினா ஆகியோர் நேர்த்தியாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக அக்வாஃபினா காமெடியில் கலக்கி இருக்கிறார்.

    ஷாங் சி விமர்சனம்

    ஷாங்க் சி-யின் தந்தை வென்வு என்னும் மேண்டரினாக நடித்துள்ள டோனி லியூங் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மார்வெல் சம்பந்தமான கதாபாத்திரங்களை ஆங்காங்கே பயன்படுத்தி இருப்பது சிறப்பு. 

    இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரிட்டன், கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ள விதம் அருமை. படத்தின் இரண்டாம் பாதி பிரம்மிப்பை ஏற்படுத்திய அளவுக்கு முதல் பாதி இல்லாதது பின்னடைவு. நிகழ்கால கதை, பிளாஷ்பேக் பின்னணி என மாறி மாறி கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பல இடங்களில் பிளாஷ்பேக் சென்டிமென்ட் காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இந்த பிளாஷ்பேக் காட்சிகள் அமைந்துள்ளது.

    ஷாங் சி விமர்சனம்

    மார்வெல் படங்களுக்கு வலு சேர்ப்பதே ஆக்‌ஷன் காட்சிகள் தான், வழக்கம்போல இந்த படத்திலும் அதனை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஆசியத் தற்காப்புக் கலைகள் படத்துக்கு பலமாக அமைந்திருக்கின்றன. அதேபோல் காட்சியமைப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். புதிய உலகம், வித்தியாச மிருகங்கள், மாறுபட்ட கலாசாரம் ஆகியவற்றை நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் பில் போப். ஜோயல் பி வெஸ்ட்டினின் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவி இருக்கின்றன. 

    மொத்தத்தில் ‘ஷாங் சி’ மார்வெல் ரசிகர்களுக்கானது.
    ஜஸ்டின் லின் இயக்கத்தில் வின் டீசல், ஜான் சீனா, மைக்கேல் ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9 படத்தின் விமர்சனம்.
    பாஸ் அண்ட் பியூரியஸ் 9-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்போது ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்று சொல்லி வேலை வருகிறது. இதற்காக பழைய கூட்டாளிகள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அந்த பொருளின் பாதி பாகத்தை வின் டீசலுக்கும் முன், ஜான் சீனா எடுத்து விடுகிறார். 

    இறுதியில் மீதிப் பாகத்தையும், ஜான் சீனா எடுத்த பாகத்தையும் வின் டீசல் தன் கூட்டாளிகளுடன் இணைந்து எப்படி எடுக்கிறார்? ஜான் சீனா யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 8 பாகங்களை தொடர்ந்து 9வது பாகம் தற்போது வெளியாகி இருக்கிறது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படங்கள் என்றாலே அழகான கார்கள், சேஸிங் காட்சிகள், பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் என ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். அதுபோல் இந்த பாகத்திலும் இவை அனைத்தும் இருந்தாலும், கொஞ்சம் ஓவராக இருப்பதுபோல் தோன்றுகிறது.

    வின் டீசல் வழக்கம் போல் அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஜான் சீனாவின் உடலமைப்பும், நடிப்பும் சிறப்பு. மற்ற கதாபாத்திரங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல், மற்ற பாகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை ஒருசில காட்சிகளுக்கு வரவைத்து நியாபகப்படுத்துவது ரசிக்கும்படி இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    விமர்சனம்

    பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 3, 4, 5, 6 பாகங்களை இயக்கிய ஜஸ்டின் லின் இந்த பாகத்தை இயக்கி இருக்கிறார். திரைக்கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் ஆங்காங்கே சற்று சோர்வை ஏற்படுத்துகிறது. பிளாஸ்பேக் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

    படத்தின் பின்னணி இசையில் ப்ரெயின் டெய்லர் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ப அவரது பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. ஸ்டீபன் எஃப்.விண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ஸ்டீபன் கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

    மொத்தத்தில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 9’ வேகம் குறைவு.
    ரசிகர்களை பயமுறுத்தி வெற்றிக்கண்ட தி கான்ஜுரிங் படங்கள் வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தி கான்ஜுரிங் 3 படத்தின் விமர்சனம்.
    படம் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பேய் பிடிக்கிறது. இவனை காப்பாற்ற பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் இருவரும் பாதரியாருடன் இணைந்து போராடுகிறார்கள். ஒருகட்டத்தில் அடங்கும் பேய், சிறுவனின் அக்காவை காதலிக்கும் இளைஞன், சிறுவனுக்கு பதிலாக தன்னை பேயிடம் அர்பணிக்கிறார், அதாவது பேய்யை தனுக்குள் வந்து சிறுவனை விட்டு விட சொல்கிறார்.

    இது ஒரு சாத்தானின் வேலை என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்கு காரணம் வீட்டில் வைத்திருக்கும் சூனியம் என்று தெரிய வருகிறது. இறுதியில் சூனியம் வைத்தது யார்? எதற்காக வைத்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் தம்பதிகள் மற்றவர்களுக்கு சூனியம் வைத்ததை கண்டுபிடிக்கும் போது, இவர்களுக்கும் சூனியம் வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். இதற்கு முன்னாடி நாம் பார்த்த கான்ஜுரிங் படத்தில், வீட்டில் இருக்கும் பேய்களை அடக்குவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், கூடவே பேயால் பாதிக்கப்பட்ட நபரின் வினோத செயல்கள் நம்மை திகிலூட்டும். 

    அனால், இந்தப் படத்தில் பேய்கள் இல்லை, மிக அச்சுறுத்தும் அளவிற்கு காட்சிகளும் இல்லை, அதற்கு பதிலாக ஒரு சூனியக்காரியை அடக்குகிறார்கள். எதிர்பார்த்த அளவிற்கு திகில் காட்சிகள் இல்லை என்றாலும், படமே இல்லாத இந்த சமயத்தில், ஒரு முறை திரையரங்கில் தி கான்ஜுரிங்: தி டெவில் மேட் மீ டூ இட் பார்க்கலாம்.

    விமர்சனம்

    டிரைலரில் வரும் காட்சிகள், நம்மை பேய்விரட்டலுக்கு வேறு கட்டத்திற்கு எடுத்து செல்வதை உணர்ந்தோம், ஆனால் இது ஒரு சாதாரண பழக்கப்பட்ட திகில் படமாக இருக்கிறது.

    கான்ஜுரிங் படத்தின் மற்ற பாகங்கள், மிக சிறந்த முறையில் நம்மை மிகவும் திகிலூட்டும், ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே வருத்தம்.

    மொத்தத்தில் ‘தி கான்ஜுரிங் 3’ பயம் இல்லை.

    கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற 6 கதைகளும் ஒரே படத்தில் சொல்லியிருக்கும் ‘கசட தபற’ படத்தின் விமர்சனம்.
    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘கசட தபற’. கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற என்ற 6 கதைகளை அறிவியல் கோட்பாடுகளை கொண்டு ஒரே கதையாக இயக்கி இருக்கிறார் சிம்பு தேவன்.

    தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரேம்ஜியின் உதவும் மனப்பான்மையை பார்த்து காதலிக்கிறார் ரெஜினா. இருவரும் காதலித்து வரும் நிலையில், ரெஜினாவின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேம்ஜி மீது திருட்டு பட்டம் கட்டி அடியாட்களை வைத்து கடத்திவிடுகிறார். கவசம் என்ற தலைப்புடன் தொடங்கும் இந்த கதை, மற்ற 5 கதைகளுடன் சேர்ந்து பயணிக்கிறது.

    விமர்சனம்

    இறுதியில் பிரேம்ஜி என்ன ஆனார்? பிரேம்ஜி, ரெஜினாவின் காதல் ஒன்று சேர்ந்ததா? மற்ற கதைகளின் கதாபாத்திரங்கள் எப்படி இவர்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நமக்கு நன்கு தெரிந்த பல முகங்கள் நடித்திருக்கிறார்கள். கவசம் கதையில் வரும் பிரேம்ஜி வெகுளித்தனமான நடிப்பையும், ரெஜினா அழகான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். யூகி சேது அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். சதியாடல் கதையில், மகன் மீது அதிக பாசம் வைத்து இருக்கும் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார் சம்பத். மகனாக வரும் சாந்தனுவின் நடிப்பு அசத்தல். செண்ட்ராயன் கவனிக்க வைத்திருக்கிறார்.

    தப்பாட்டம் கதையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் சந்தீப் கிஷன், மேல் அதிகாரியின் அழுத்தம், குடும்பத்தினரின் அழுத்தம் என்று நடிப்பில் அசத்தி இருக்கிறார். கணவர் மீது அக்கறை கொண்டவராக வரும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு அருமை.

    விமர்சனம்

    பந்தயம் கதையில், ஹரீஷ் கல்யாண் அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். அறம்பற்ற கதையில் விஜயலட்சுமியும், அக்கற கதையில் வெங்கட் பிரபுவும் நடிப்பில் பளிச்சிடுகிறார்கள். 

    இந்த கதையை திரைக்கதையாக உருவாக்க கடினமான உழைப்பை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன். தெளிவான திரைக்கதை படத்திற்கு பெரிய பலம். பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைத்தும் மனதில் பதியும் அளவிற்கு உருவாக்கி இருக்கிறார். 

    மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் ஆகிய 6 பேர் படத்தொகுப்பாளர்களாக பணியாற்றி உள்ளனர். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். இவர்களின் முழு பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘கசட தபற’ சிறப்பு.
    ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் விது, ஐஸ்வர்யா ராஜேஷ், மாதுரி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பூமிகா’ படத்தின் விமர்சனம்.
    ஊட்டியில் பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் இருக்கும் ஒரு இடத்தை பிளாட் போட்டு விற்கும் பிராஜெக்ட் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் விதுவுக்கு வருகிறது. இதற்காக விது, ஐஸ்வர்யா ராஜேஷ், விதுவின் தங்கை மாதுரி, தோழி சூர்யா கணபதி ஆகியோர் ஊட்டிக்கு செல்கிறார்கள்.

    அங்கு விதுவின் நண்பரிடம் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருகிறது. இறந்த நண்பன் செல்போனில் இருந்து சூர்யா கணபதிக்கு மெசேஜ் வருவதை கண்டு விது உள்ளிட்ட அனைவரும் வியக்கிறார்கள்.

    செல்போனை ஆப் செய்து வைத்தாலும் அந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறது. அதை தொடர்ந்து வீட்டில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில், அந்த செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது யார்? எதற்காக அனுப்புகிறார்கள்? அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பூமிகா விமர்சனம்

    படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விது, சூர்யா கணபதி, மாதுரி ஆகிய நான்கு பேர் மட்டுமே அதிகம் வருகிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். விது, சூர்யா கணபதி அளவான நடிப்பையும், மாதிரி அளவிற்கு மீறிய நடிப்பையும் கொடுத்து இருக்கிறார்கள். 

    காவலாளியாக வரும் பாவெல் நவகீதன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் அவந்திகா வந்தனபூ, வித்தியாசமான கதாபாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்து இருக்கிறார்.

    இயற்கை சமந்தப்பட்ட கதையை திகில் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரதீந்திரன். பேய் படங்களுக்கு உண்டான மலைப் பிரதேசம்,  பங்களா, பயங்கர அமைதி, இருட்டு என அதே பாணியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர். பூமிகா சம்பந்தப்பட்ட காட்சிகள், மரம், செடி, கொடிகளை ஓவியங்கள் வழியே காட்டியிருப்பது சிறப்பு. 

    பூமிகா விமர்சனம்

    படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். ஆனாலும் இயற்கைக்கு எதிராக செயல்படாதீர்கள் என்ற கருத்தை சொல்லியதற்கு பெரிய பாராட்டுக்கள்.

    பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசையும், ராபர்டோ ஜஸாராவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரில்லர் படத்திற்கு தேவையானதை சரியாக கொடுத்து இருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘பூமிகா’ இயற்கை அழகு.
    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் நெற்றிக்கண் படத்தின் விமர்சனம்.
    சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாரா, ஒரு விபத்தில் அவரது கண்களை இழக்கிறார். கண்களை இழந்ததால் வேலையும் பறிபோகிறது. கண் பார்வை திரும்ப பெற சிகிச்சை பெற்று வரும் நயன்தாரா, ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கிறார்.

    அப்போது இளம் பெண்களை கடத்தி சித்ரவதை செய்து வரும் அஜ்மல், நயன்தாராவை பார்த்தவுடன் அவரையும் கடத்த முயற்சி செய்கிறார். தன்னை டாக்ஸி டிரைவர் என்று அறிமுகம் செய்துக் கொண்டு நயன்தாராவை காரில் அழைத்து செல்கிறார் அஜ்மல். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது.

    விமர்சனம்

    இந்த விபத்தில் நயன்தாராவை ரோட்டில் விட்டு சென்று விடுகிறார் அஜ்மல். இந்த விபத்து குறித்து போலீசில் எஸ்.ஐ.யாக இருக்கும் மணிகண்டனிடம் புகார் கொடுக்கிறார் நயன்தாரா. போலீஸ் தேடுவதை அறிந்த அஜ்மல், நயன்தாராவை பழிவாங்க முயற்சி செய்கிறார். இறுதியில் நயன்தாராவை அஜ்மல் பழிவாங்கினாரா? போலீஸ் துணையுடன் அஜ்மலை நயன்தாரா கண்டுபித்தாரா? இளம் பெண்களை அஜ்மல் கடத்தி சித்ரவதை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா, பார்வையற்றவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் கம்பீரமாக தோற்றமளிக்கும் நயன்தாரா, கண்பார்வை போன பிறகு பரிதாபத்தை ஏற்படுத்துகிறார். பார்வையற்றவராக திரையில் தடுமாறும் போது, பார்ப்பவர்களையே பார்த்து பார்த்து என்று சொல்ல வைக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து உயிரூட்டிருக்கிறார்.

    விமர்சனம்

    சைக்கோ வில்லனாக அபாரமான நடிப்பை கொடுத்திருக்கிறார் அஜ்மல். பெண்களை கவரும் போது அப்பாவி போலவும், நயன்தாராவை பழி வாங்க துடிக்கும் போது வில்லத்தனமான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். போலீசாக வரும் மணிகண்டன் வெகுளித்தனமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.

    பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மிலிந்த் ராவ். தமிழுக்காக சில மாற்றங்கள் செய்திருக்கும் இயக்குனர், திரைக்கதையின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். பார்வையற்றவர்கள் எப்படி வாழ்க்கையில் நடந்துக் கொள்கிறார்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என்பதை தீவிரமாக ஆராய்ந்து காட்சிப்படுத்தி இருப்பது அருமை. படம் ஆரம்பத்திலேயே கதை தெரிந்துவிட்டதால், திரைக்கதையில் அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.

    விமர்சனம்

    ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். இவர்களின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 

    மொத்தத்தில் ‘நெற்றிக்கண்’ பார்வை சற்று குறைவு.
    நவரசா ஆந்தாலஜியில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘புராஜெக்ட் அக்னி’ படத்தின் விமர்சனம்.
    படத்தின் கதைப்படி விஞ்ஞானியாக இருக்கும் அரவிந்த்சாமி இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார். தான் ஒரு அதிசயமான விஷயத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், அதுபற்றி பேச தனது நண்பரான பிரசன்னாவுக்கு அழைப்பு விடுக்கிறார். அவர் கண்டுபிடித்தது என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதே புராஜெக்ட் அக்னி படத்தின் மீதிக்கதை.

    நவரசா விமர்சனம்

    விஞ்ஞானியாக வரும் அரவிந்த் சாமி ஹாலிவுட் நடிகரின் பாணியில் நடித்துள்ளார். மறுபுறம் பிரசன்னா, அலட்டிக்கொள்ளாத நடிப்பில் கவனிக்க வைக்கிறார். பூர்ணா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

    நவரசத்தில் ஆச்சரியம் என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்த 'நவரசா' ஆந்தாலஜியில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘புராஜெக்ட் அக்னி’ தனித்து நிற்கிறது. இதற்கு இயக்குனர் கார்த்திக் நரேனைப் பாராட்டலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காதது. கதைகருவுக்கு ஏற்றபடி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

    நவரசா விமர்சனம்

    ரான் எத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி இருப்பதோடு, கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ‘புராஜெக்ட் அக்னி’ ஆச்சரியம்.
    நவரசா ஆந்தாலஜியில் சர்ஜுன் இயக்கத்தில் அதர்வா, அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் துணிந்த பின் படத்தின் விமர்சனம்.
    அதர்வாவும், அஞ்சலியும் புதுமணத் தம்பதி. திருமணம் முடிந்த கையோடு ராணுவத்தில் சேர்கிறார் அதர்வா. அந்த சமயத்தில் ஒரு காட்டுப் பகுதியில் நக்சலைட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சண்டையிடுகிறார்கள். அந்த குழுவில் புதிதாக ராணுவத்தில் சேர்ந்துள்ள அதர்வாவும் இருக்கிறார். அந்த சண்டையில் நக்சலைட் கும்பலைச் சேர்ந்த கிஷோர் பிடிபடுகிறார்.

    நவரசா விமர்சனம்

    அப்போது குண்டடிபட்ட நிலையில் இருக்கும் கிஷோரை மருத்துவமனைக்கு அதர்வா அழைத்து செல்லும் சூழல் உருவாகிறது. மருத்துவமனை 30கி.மீ அப்பால் உள்ளது. இந்த பயணத்தின் போது இருவரும் தொலைந்து போகின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது? இறுதியில் இருவரையும் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    நாயகன் அதர்வா, ராணுவ வீரராக நடித்துள்ளார். அதற்கேற்ற உடல்மொழியுடன் இருப்பதால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் அதர்வா. நக்சலைட்டாக வரும் கிஷோர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அஞ்சலி பெரிதாக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தான்.

    நவரசா விமர்சனம்

    வீரம் என்ற உணர்வை வைத்து 'துணிந்த பின்' என்ற கதையை இயக்கியுள்ளார் சர்ஜுன். படத்தில் சில புரட்சிகரமான விஷயங்கள் இருந்தாலும், வீரம் என்கிற உணர்வை சரியாக வெளிப்படுத்த முடியாமல் திணறி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும், சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் அற்புதம்.

    மொத்தத்தில் ‘துணிந்த பின்’ வேகமில்லை.
    நவரசா ஆந்தாலஜியில் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் சித்தார்த், பார்வதி நடிப்பில் வெளியாகி இருக்கும் இன்மை படத்தின் விமர்சனம்.
    நடிகை பார்வதியின் கம்பெனியில் வேலை பார்க்கிறார் சித்தார்த். இவர் வேலை விஷயமாக ஒரு கையெழுத்து வாங்க பார்வதியின் வீட்டுக்கு செல்கிறார். அப்போது இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த சமயத்தில் பார்வதி இளம் வயதில் செய்த சில விஷயங்களை சித்தார்த் சொல்ல ஆரம்பிக்கிறார். 

    அதைக் கேட்டு பார்வதி அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் சித்தார்த்துக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்பதை பார்வதி கண்டுபிடித்தாரா? அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நவரசா விமர்சனம்

    சித்தார்த்தும், பார்வதியும் இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அதிலும் பார்வதியின் பழைய வாழ்க்கையைப் பற்றி சித்தார்த் சொல்லச் சொல்ல பார்வதி தவிக்கும் தவிப்பு, நடிப்பின் உச்சம். இவருக்கு இணையாக சிறு வயது பார்வதியாக வரும் அம்மு அபிராமியும் திறம்பட நடித்து இருக்கிறார்.

    நவரசா விமர்சனம்

    நவசரத்தில் ‘பயம்’ என்பதை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத். ஒரு 30 நிமிடக் கதையில் முழு நீளப் படத்துக்கு உண்டான சுவாரசியத்தைக் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக உள்ளது. விஷால் பரத்வாஜின் பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவும் கச்சிதம்.

    மொத்தத்தில் ‘இன்மை’ இனிமை.
    நவரசா ஆந்தாலஜியில் அரவிந்த் சாமி இயக்கத்தில் ரித்விகா, ஸ்ரீராம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெளத்திரம் படத்தின் விமர்சனம்.
    நடிகர் ஸ்ரீராம், தங்கை மற்றும் தாயாருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் சந்தோஷத்திற்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் காசு வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்ரீராமின் தாயார் செல்கிறார். 

    சொன்னபடியே அவர் காசு வாங்கிக் கொண்டு வந்தவுடன் குடும்பம் மகிழ்ச்சியாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் தனது தாயாருக்கு எப்படி காசு கிடைத்தது என்பது ஸ்ரீராமுக்கு தெரிய வருகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடையும் ஸ்ரீராம், கோபத்தின் உச்சத்துக்கு சென்று ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நவரசா விமர்சனம்

    பெண் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரித்விகா, அதற்கு ஏற்றார் போல் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஸ்ரீராமுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதனை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். கந்துவட்டிக்காரராக வரும் அழகம் பெருமாள், கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

    நவரசா விமர்சனம்

    ‘கோபம்’ என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார் அரவிந்த் சாமி. இது அவருக்கு முதல் படமாக இருந்தாலும், நேர்த்தியாக இயக்கி உள்ளார். அவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறதா என ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். ரித்விகாவின் கதாபாத்திரத்தை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

    மொத்தத்தில் ‘ரெளத்திரம்’ நேர்த்தி.
    நவரசா ஆந்தாலஜியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி இருக்கும் அமைதி படத்தின் விமர்சனம்
    ஈழத்தமிழர்களான கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் போர் சூழலில் எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் எல்லைப் பகுதியை கடக்க முயல்கிறான். இதைப் பார்த்த பாபி சிம்ஹா, அந்த சிறுவனைப் பிடித்து விசாரிக்கின்றார். எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டில் தனது தம்பி மாட்டிக்கொண்டதாகவும், அவனை மீட்க தான் செல்வதாகவும் அந்த சிறுவன் கூறுகிறான். 

    நவரசா விமர்சனம்

    ‘நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள்’ என அந்த சிறுவனை எச்சரிக்கும் பாபி சிம்ஹா, அவனுக்காக ரிஸ்க் எடுக்க துணிகிறார். எல்லைக்கு அப்பால், அந்த சிறுவன் கூறிய இடத்துக்கு உயிரைப் பணயம் வைத்து செல்லும் பாபி சிம்ஹாவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் ஈழத்தமிழர்களாக நடித்துள்ளனர். வழக்கமாக ஆங்கிலம் கலந்த தமிழை பேசும் கவுதம் மேனன், இந்த படத்தில் ஈழத்தமிழை பேசி அசத்தி இருக்கிறார். பாபி சிம்ஹாவும் நேர்த்தியாக நடித்துள்ளார். சிறுவன் தருணும் இயல்பாக நடித்து அசத்தி உள்ளார். 

    நவரசா விமர்சனம்

    ‘அமைதி’யை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். போர் சூழலில் இருக்கும் பதற்றத்தை நேர்த்தியான திரைக்கதை மூலம் திறம்பட கையாண்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. 

    மொத்தத்தில் ‘அமைதி’ அருமை.
    ×