என் மலர்
தரவரிசை
நவரசா ஆந்தாலஜியில் வசந்த் இயக்கத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாயாசம்’ படத்தின் விமர்சனம்.
டெல்லி கணேஷும், ரோகினியும் கணவன் - மனைவி. இவர்களது மகளாக அதிதி பாலன். திருமணமான 3 மாதங்களில் கணவரை இழந்து விதவை ஆகி விடுகிறார் அதிதி பாலன். மகளின் நிலைமையை நினைத்து தவித்து வருகிறார் டெல்லி கணேஷ். இந்த சமயத்தில் டெல்லி கணேஷின் அண்ணன் பேத்திக்கு திருமணம் நடக்கிறது.
தன் அண்ணன் குடும்பம் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்ற மனநிலையில் இருக்கும் டெல்லி கணேஷ், அந்த திருமணத்தில் வேண்டா வெறுப்புடன் கலந்து கொள்கிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகிணி ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பிளஸ். விதவையாக நடித்திருக்கும் அதிதி பாலன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். அவருக்கு கொஞ்சம் கூடுதல் காட்சிகள் வைத்திருக்கலாம். ஒரு கிராமத்து முதியவராக நடித்துள்ள டெல்லி கணேஷ், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.
அருவருப்பு என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த். 1960-களில் நடப்பது போன்று திரைக்கதையை அமைத்துள்ளார். 30 நிமிட குறும்படத்துக்காக அவரின் மெனக்கெடல் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மெதுவாக நகரும் திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன்கள் மிக அருமை. ஒவ்வொரு காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் நேர்த்தி மற்றும் துல்லியம் தெரிகிறது.
மொத்தத்தில் ‘பாயாசம்’ தித்திப்பில்லை.
நவரசா ஆந்தாலஜியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் யோகிபாபு, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சம்மர் ஆஃப் 92’ படத்தின் விமர்சனம்.
படத்தின் கதைப்படி சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருக்கிறார் யோகிபாபு. இவர் படித்த பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள யோகிபாபுவுக்கு அழைப்பு விடுக்கின்றனர். இதனை ஏற்று ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வருகிறார் யோகிபாபு. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அந்த விழாவில் சிறப்புரையாற்றும் யோகிபாபு, தான் பள்ளியில் படித்தபோது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். யோகிபாபுவின் பள்ளிப்பருவ ஆசிரியரான ரம்யா நம்பீசன் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். அவர் அவ்வாறு இருப்பதற்கும் யோகிபாபுவும் ஒரு காரணம். அது என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் யோகிபாபு, படத்திலும் காமெடி நடிகராக சிறிது நேரம் வந்தாலும், சிரிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. டீச்சராக வரும் ரம்யா நம்பீசன், இளம் வயது மற்றும் வயதான தோற்றம் இரண்டிலும் திறம்பட நடித்து, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். யோகிபாபுவின் சிறுவயது கதாபாத்திரத்தில் வரும் சிறுவன், கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

‘நகைப்பு’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். கதைக்கருவுக்கு ஏற்றார் போல் படத்தில் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசையும், வீரஜ் சிங்கின் ஒளிப்பதிவும் கதையுடன் ஒன்றி பயணிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘சம்மர் ஆஃப் 92’ காமெடி விருந்து.
நவரசா ஆந்தாலஜியில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ படத்தின் விமர்சனம்.
இசையமைப்பாளராக இருக்கும் சூர்யா, லண்டன் சென்று இசை மேதை ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் அவரது தாயார் அவருடன் வர மறுப்பதால் அவர் தன்னுடைய ஆசையை தள்ளி போட்டுக் கொண்டே வருகிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் ஆசையை புரிந்துகொண்டு அவரது தாயார் லண்டன் செல்ல சம்மதிக்கிறார்.
இந்த நிலையில், சூர்யா இசையில் பாடுவதற்கான வாய்ப்பு நாயகி பிரயாகாவுக்கு கிடைக்கிறது. அப்போது பிரயாகாவுடன் பேச ஆரம்பிக்கும் சூர்யா, அவரும் தன்னைப்போலவே லண்டன் சென்று இசையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பதை அறிகிறார்.

இசை மீது ஆர்வம் கொண்ட இருவரும், மனம்விட்டு பேச ஆரம்பிக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? சூர்யா லண்டன் போனாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சூர்யா, வாரணம் ஆயிரம் படத்தில் பார்த்ததை போன்று இளமை ததும்பும் ரொமாண்டிக் ஹீரோவாக பளிச்சிடுகிறார். அவருக்கும் பிரயாகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நாயகி பிரயாகா வாயால் பேசும் வசனத்தைவிட கண்களால் பேசும் வசனம் தான் அதிகம். தமிழில் முதல் படமாக இருந்தாலும் திறம்பட நடித்து இருக்கிறார்.

‘காதல்’ என்ற உணர்வை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். காதல் படம் எடுப்பதில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கார்த்திக்கின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ மனதில் நிற்கிறது.
நவரசா ஆந்தாலஜியில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரேவதி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் எதிரி குறும்படத்தின் விமர்சனம்.
நடிகர் பிரகாஷ் ராஜும், நடிகை ரேவதியும் கணவன் - மனைவி, இவர்களின் மகனாக அசோக் செல்வன். கருத்து வேறுபாடு காரணமாக ரேவதியும், பிரகாஷ் ராஜும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இருப்பினும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ரேவதியின் வீட்டுக்கு வருகிறார்.

அவரை வரவேற்று தனது அறைக்கு அழைத்து செல்கிறார் பிரகாஷ் ராஜ். அவர்கள் இருவரும் உள்ளே சென்ற சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து சத்தம் கேட்கிறது. இதையடுத்து ரேவதி அந்த அறைக்கு சென்று பார்க்கும் போது பிரகாஷ் ராஜ் இறந்து கிடக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி எதற்காக பிரகாஷ் ராஜை கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் விஜய் சேதுபதிக்கு இப்படத்தில் சற்று வில்லத்தனமான கதாபாத்திரம் தான். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். அதேபோல் கணவன் மனைவியாக நடித்திருக்கும் ரேவதியும், பிரகாஷ் ராஜும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கின்றனர். அசோக் செல்வன் குறைந்த காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

கருணை உணர்வை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் பிஜாய் நம்பியார். நடிகர்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. திரைக்கதையில் சற்று வேகத்தை கூட்டி இருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி உள்ளது. ஹர்ஷ்வீர் சிங் ஓப்ராய்யின் ஒளிப்பதிவு கச்சிதம்.
மொத்தத்தில் ‘எதிரி’ வேகமில்லை.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சுபாஷ் செல்வம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘திட்டம் இரண்டு’ படத்தின் விமர்சனம்.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இதற்காக ஊரில் இருந்து வரும் போது, நாயகன் சுபாஷ் செல்வத்தை பஸ்சில் சந்திக்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயம், அவரின் நெருங்கிய தோழி காணாமல் போகிறார்.
இதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, தோழி விபத்தில் இறந்ததாக தகவல் கிடைக்கிறது. ஆனால் இது கொலை என்று நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுபிடித்தாரா? அவரின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சுபாஷ் செல்வம், ஐஸ்வர்யா ராஜேஷ்
நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வழக்கம் போல் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் சிரித்து ரசிகர்களை கவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் சீரியஸாகவும் கவர்ந்திருக்கிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான அதிரடி இல்லையென்றாலும், ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால், பார்ப்பவர்களை கதைக்குள் கொண்டு செல்கிறார். போலீஸ் உடையில் அழகாக இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக வரும் சுபாஷ் செல்வம், கிளைமாக்சில் அதிர்ச்சி கொடுக்கிறார். பாவல் நவகீதனின் வேடம் சிறியதாக இருந்தாலும், படத்தின் திருப்புமுனையாக இருக்கிறது. மேலும் ஜீவா ரவி, கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், வித்தியாசமான கதையை அழகாக சொல்லி இருக்கிறார். படம் முழுவதும் யூகிக்க வாய்ப்பு கொடுத்து, நழுவியது அபாரம். பிளாஷ்பேக் கதைக்கான மெனக்கெடலும், அதை சர்ச்சைக்கு இடமின்றி சொன்ன விதமும் அற்புதம். முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்து, அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும், சதிஷ் ரகுநாதனின் இசையும் எளிமையாக இருந்தாலும், கதாப்பாத்திரங்களைப் போல், காட்சிகளுடனே பயணித்துள்ளது.
மொத்தத்தில் ‘திட்டம் இரண்டு’ சக்சஸ்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் விமர்சனம்.
1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது சார்பட்டா பரம்பரையின் கதைக்களம்.
அந்த காலக்கட்டத்தில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையில் தான் போட்டா போட்டி நடைபெறுகிறது. இடியாப்ப பரம்பரையின் வேம்புலி, சார்பட்டாவின் பாக்ஸர்களை அடித்து துவம்சம் செய்யும் போது என்ட்ரி கொடுக்கிறான் கபிலனாக நடித்திருக்கும் ஆர்யா.
எந்த குத்துச் சண்டையை தன் தாய் வேண்டாம் என்கிறாரோ அதே குத்துச் சண்டையின் முக்கியமான போட்டியில் விளையாடும்படி கபிலனின் சூழல் மாறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன், குத்துச் சண்டையில் ஜெயித்துவிடக் கூடாது என்று வெளி அழுத்தமும், 'பாக்ஸிங் மட்டும் கூடவே கூடாதுனு' சொல்ற அம்மாவினால் வீட்டுக்குள்ளே இருக்கும் அழுத்தமும் கபிலன் எனும் காட்டாற்றை அடக்க முயல்கிறது.

ஆனால் தன் மனைவி மாரியம்மாவின் முழு ஆதரவும் கபிலனுக்கு கிடைக்கிறது. சார்பட்டா பரம்பரையின் ஆதரவும் அவருக்கு முழுதாக கிடைக்கிறது. ஆனாலும் சூழ்ச்சிகளால் அவனின் வெற்றிப் பறிக்கப்படுவதால் குடி போதைக்கு அடிமையாகிறான் கபிலன். அதிலிருந்து மீண்டு வருகிறானா?, தன் உயிரினும் மேலான குத்துச் சண்டையில் ஜெயித்து பரம்பரையின் கவுரவத்தை நிலைநாட்டுகிறானா? என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறது சார்பட்டா.
நான் கடவுள், மகாமுனி என்று ஆர்யா இதற்கு முன்னர் பல்வேறு வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டாலும், அவருக்கு அதற்கான அங்கீகாரமும் வெற்றியும் கிடைத்ததா என்பது கேள்விக்குறியே. ஆனால் சார்பட்டா பரம்பரைக்கு அவர் உடலளவிலும் மனதளவிலும் சந்தித்த மாற்றங்களை நினைத்தாலே புல்லரிக்கிறது.

ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆர்யாவின் நடிப்பு தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிப்பின் உச்சம் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் படத்திற்கு ஆர்யாவுக்கு எத்தனை விருதுகள் கொடுத்தாலும் தகும். சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் உணர்வுகளை துள்ளியமாக வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
மாரியம்மாவாக நடித்திருக்கும் கதாநாயகி துஷாரா, ஆர்யாவுக்கு இணையாக ரொமான்ஸ் சீன்களிலும், எமோஷனல் சீன்களிலும் பளிச்சிடுகிறார். ராயன் வாத்தியார் கேரக்டரில் வரும் பசுபதியின் கம்பீரம், ஆர்யாவையும் தாண்டி மேலோங்குகிறது. மேலும் கலையரசன், ஜான் விஜய், அனுபாமா குமார், மாறன் என ஒவ்வொரு கேரக்டரிலும் அவ்வளவு டீடெய்லிங் செய்திருக்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் பெரிதாக இருக்கும் அரசியல் கட்சிகளின் கடந்த காலத்தை எந்தவித சமரசமுமின்றி பதிவு செய்ததற்கு படக்குழுவுக்கு ஒரு சல்யூட். பிரபல பாக்ஸர் முகமது அலி, வட சென்னையிலிருந்து வரும் குத்துச் சண்டை வீரர்களுக்கு எவ்வளவு பெரிய ஆதர்சமாக இருக்கிறார் என்பதை படம் நெடுகிலும் காட்சிப்படுத்தியுள்ளது அற்புதம்.

பா.இரஞ்சித்தின் 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்' போன்ற படங்கள் வரிசையில் இந்தப் படமும் அவரது சினிமா வாழ்க்கையில் தனி முத்திரைப் பதித்துள்ளது. அவருக்கு மிகவும் பரிட்சியமான வடசென்னை வாழ்க்கைச் சூழலில் படத்தை உருவாக்கியிருப்பதால் குறைகள் சொல்ல தேட வேண்டியுள்ளது.
சந்தோஷ் நாரயணின் இசையும், ஜி முரளியின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
குத்துச் சண்டையில் அதிக அனுபவம் இல்லாத ஹீரோ, திடீரென்று அனைவரையும் அடித்து துவம்சம் செய்வது, விரைவாக கம்-பேக் கொடுப்பது, கிளைமேக்ஸில் அடி வாங்கி பின்னால் அடித்து மாஸ் காண்பிப்பது என்பது இதற்கு முன்னால் வந்த குத்துச் சண்டை படங்களின் நீட்சியாகவே இருப்பது சற்று அலுப்புத் தட்டுகிறது.
மொத்தத்தில் சார்பட்டா பரம்பரை - தவிர்க்க முடியாத வெற்றி.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாலிக் படத்தின் விமர்சனம்.
பெரும்பான்மையாக இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் கேரளாவில் வசிக்கும் மீனவ கிராமம் ஒன்றின் உரிமைகளுக்காக சிறு வயது முதலே குரல் கொடுக்கிறார் அகமதலி சுலைமான் என்னும் அலி இக்கா (மாலிக்). மக்களின் நலன்களுக்காக போராடும் அவர் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். தன் மக்களுக்காக கொலை செய்யவும் துணிகிறார். இதன் காரணமாக ‘உள்ளூர் டான்’ ஆக உருவெடுக்கிறார் அலி இக்கா.
அவரை தீர்த்துக்கட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலரும், அரசு இயந்திரமும் திட்டம் போட்டுக் கட்டம் கட்டுகிறது. இதன் விளைவாக அலி இக்காவுக்கு என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

அலி இக்காவாக பகத் பாசில் முத்திரைப் பதித்துள்ளார். நாயகன், வட சென்னை படங்கள் பாணியில் ஆரம்பம் முதல் முடிவு வரை பல வயது தோற்றங்களில் வருகிறார். அனைத்திலும் அந்த வயதுக்கே உடைய உடல் மொழியுடனும், முதிர்ச்சியுடனும் நடித்து அசத்துகிறார். கமலின் சினிமா வாழ்க்கையில் நாயகன் அவருக்கு எப்படிப்பட்ட இடத்தைத் தந்ததோ, பகத்துக்கு ‘மாலிக்’ அப்படியொரு இடத்தைத் தந்துள்ளது. அவரின் மனைவியாக ரோஸ்லின் கதாபாத்திரத்தில் வரும் நிமிஷா சஜயன், படம் முழுக்க பகத்துக்குப் பக்க பலமாக இருக்கிறார்.
இயக்குநர் திலீஷ் போத்தன், ‘ஜகமே தந்திரம்’ புகழ் ஜோஜு ஜார்ஜ் வினய் போர்ட், தினேஷ் பிரபாகர் ஆகியோருக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள். அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் வெறும் லேப்டாப் கேமராவையும், ஸ்கிரீன் ஷாட்களையும் மட்டுமே வைத்து ‘சி யூ சூன்’ என்கிற படத்தை எடுத்து முத்திரைப் பதித்தவர் இயக்குநர் மகேஷ் நாராயணன். இவர் இயக்குநர் அவதாரம் எடுப்பதற்கு முன்னரே எடிட்டராக தென்னிந்திய திரையுலகில் தடம் பதித்தவர். இதன் காரணமாக படத்தின் முதல் பிரேம் முதல் கடைசி பிரேம் வரை தொழில்நுட்ப ரீதியில் மிகக் கச்சிதமாக இருக்கிறது.

இப்படி படத்திற்குப் பல பிளஸ்கள் இருந்தாலும், பழங்காலத்து ‘ராபின் உட்’ கதை போல ஹீரோ, இருப்பவர்கள் இடத்தில் இருந்து எடுத்து இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறார். தன்னைச் சார்ந்த மக்கள் கூட்டத்தை விடுவிக்க வந்த விடிவெள்ளி போல் நடந்து கொள்கிறார். டான் மற்றும் கேங்ஸ்டர் படங்களின் க்ளீஷேவான இந்த ஒன்லைனை வைத்தே ‘மாலிக்’ கதை உருவாக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய மைனஸ்.
பகத், தற்போது மலையாள சினிமா உலகில் மட்டும் பிரபலமான நடிகர் அல்ல. இந்தியாவைத் தாண்டியும் அவர் கலைஞனாக கவனிக்கப்படுகிறார். அப்படி இருக்கையில் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்டில் நடித்து தன்னை ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டதால், இனி அந்த லைனிலேயே பயணிப்பாரா அல்லது தன்னை ஒரு ‘கலைஞன்’ ஆகவே விஸ்தரித்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்கால இந்திய சினிமாக்களில் மாஸ் ஹீரோக்களுக்குப் பஞ்சம் இல்லை, நடிப்புத் திறமையுள்ள கலைஞர்களுக்கே வெற்றிடமே அதிகமாக உள்ளது.
மொத்தத்தில் ‘மாலிக்’ இனிப்பு டானிக்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழ் படத்தின் விமர்சனம்.
நாயகன் பிரதீப் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஒரு பெண் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் இவரோ அவர் மீது அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணமான நாயகி பாணுவை சந்திக்கிறார்.


பிரதீப்பும், பாணுவும் பழக ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கம் ஒரு நீண்ட தூர பயணத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் இந்த பயணம் எங்கு? எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

பிரதீப்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார். தன் கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நாயகியாக வரும் பாணுவிற்கு நடிக்க அதிக வாய்ப்பு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். குட்டி பையன் யாத்ரா, தாத்தாவாக வருபவர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

பாணு
அருவி என்கிற யதார்த்த சினிமாவை நமக்கு வழங்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், தற்போது வாழ் படம் மூலம் மனிதனின் யதார்த்த வாழ்க்கையை சொல்ல வந்திருக்கிறார். புரியாமல் ஆரம்பிக்கும் திரைக்கதை மெல்ல மெல்ல கதைக்குள் நம்மை ஒன்ற வைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலம் ஷெல்லேவின் ஒளிப்பதிவு. மனதிற்கு நெருக்கமாகும் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியுள்ளார். அதேபோல் பிரதீப் குமாரின் இசை, பார்ப்பவர்களை கதையோடு ஒன்ற வைக்கிறது.
மொத்தத்தில் 'வாழ்' வாழலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் விமர்சனம்.
மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன ரவுடிசமும் செய்து வருகிறார். இதேசமயம் லண்டனில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் என்ற இரண்டு மாபியா கும்பல் சண்டை போட்டு வருகிறார்கள்.



அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக ஜோஜு ஜார்ஜை அழிக்க, ஜேம்ஸ் காஸ்மோ கும்பலிடம் இணைந்து வேலை பார்க்க மதுரையில் இருந்து லண்டன் செல்கிறார் தனுஷ். அங்கு ஜோஜு ஜார்ஜிடமும் மறைமுகமாக டீல் பேசி வரும் தனுஷ், ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்து அவரை கொல்வதற்கும் காரணமாகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி - தனுஷ்
அதன் பின் லண்டனில் லிட்டில் மதுரை என்று உருவாக்கி பரோட்டா கடை வைத்து ஐஸ்வர்யா லட்சுமியை காதலித்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் தனுஷ். இந்நிலையில் கொல்லப்பட்ட ஜோஜு ஜார்ஜின் ஆட்களான கலையரசன் உள்ளிட்ட சிலர் தனுஷை துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.
தனுஷ் சுடப்படுவதற்கு காரணமாக ஐஸ்வர்யா லட்சுமி செயல்படுகிறார். இறுதியில் தனுஷ் உயிர் பிழைத்தாரா? ஐஸ்வர்யா லட்சுமி தனுஷுக்கு எதிராக செயல்பட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், தனக்கே உரிய நக்கல், நையாண்டி என்று நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பல காட்சிகளை சாதாரணமாக நடித்து அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். தனுஷின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ஆகியவை ரசிக்க வைக்கிறது.

ஜேம்ஸ் காஸ்மோ - சரத் ரவி - தனுஷ்
நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு, நடிப்பதற்கான அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் அதைப் புரிந்துகொண்டு சிறப்பாகவே நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் சொல்லும் காட்சியில் பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்திருக்கிறார்.
பீட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜேம்ஸ் காஸ்மோ, சிவதாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கதைக்கு சிறந்த தேர்வு. சிவதாஸ் அடியாளாக வரும் கலையரசன், தனுஷின் நண்பராக வரும் சௌந்தர ராஜா, சரத் ரவி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனிக்க வைத்திருக்கிறார்கள். தனுஷின் அம்மாவாக வரும் வடிவுக்கரசி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஜோஜு ஜார்ஜ்
கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து அதில் ஈழத்தமிழர்கள், அரசியல், காதல் என படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சிவதாஸ் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் காட்சிகளை சேர்த்திருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பல காட்சிகளை இவருடைய இசை தாங்கிப் பிடித்து இருக்கிறது. குறிப்பாக தனுஷ் துப்பாக்கி எடுத்து வரும் காட்சியில் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா, மதுரை மண்ணின் அழகையும், லண்டன் அழகையும் மாறாமல் படம் பிடித்திருக்கிறது.
மொத்தத்தில் 'ஜகமே தந்திரம்' ஜகஜால கில்லாடி.
ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ரியா சுமன், மயில்சாமி, சச்சு நடிப்பில் ஜீ5 தளத்தில் வெளியாகி இருக்கும் மலேசியா டூ அம்னீசியா படத்தின் விமர்சனம்.
வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன் இருக்கிறார். மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக சொல்லி பெங்களூருக்கு ரியாவை பார்க்க வைபவ் செல்கிறார். அவர் செல்வதாக சொன்ன மலேசிய விமானம் மாயமானதாக செய்தி வருகிறது. பெங்களூருவில் இருந்து வரும் வைபவ் நண்பன் கருணாகரன் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.


வைபவ்வுக்கு அனைத்து உணர்வுகளையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரை பார்த்து டாங்லீ என்று சொல்லும்போது எல்லாம் கைதட்டி சிரிக்க வைக்கிறார். கருணாகரன் யோசனைப்படி அம்னீசியா வந்தவராக நடிக்கும் காட்சிகளில் எல்லாம் வைபவ் வெளுத்து வாங்குகிறார். வாணி போஜனின் அன்பை பார்த்து தன் தவறை உணரும் காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பு.

வைபவ்வுக்கு இணையான கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். துப்பறியும் நிபுணராக வைபவ், கருணாகரன் கூட்டணி மீது சந்தேகபடும் காட்சிகளில் அனுபவ நடிப்பு. அந்த இறுதிக்காட்சி திருப்பத்தில் அபார நடிப்பு. அப்பாவி மனைவியாக வாணி போஜன் கணவருக்காக உருகும் இடங்களில் அசத்துகிறார்.
எம்.எஸ்.பாஸ்கரிடம் கோபம் கொள்ளும் கடைசிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். கருணாகரன் வைபவ்வுக்கான மூளையாக செயல்பட்டு கதையை கலகலப்பாக நகர்த்துகிறார். ஆங்காங்கே இவர் அடிக்கும் ஒன்லைன் பஞ்ச் வசனங்கள் வெடி சிரிப்பு.

மொழி, அபியும் நானும், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை கலந்த உணர்வுபூர்வமான படங்களை இயக்கி புகழ்பெற்ற ராதாமோகன் இயக்கத்தில் மீண்டும் அப்படி ஒரு படைப்பு. இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
பிரேம்ஜி அமரனின் இசையில் பாடலும் பிண்ணனி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் உயர்தர வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வருகிறார்.
குடும்பத்துடன் பார்த்து ரசித்து சிரித்து மகிழும் வகையில் ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் 'மலேசியா டூ அம்னீசியா' காமெடி டூர்.
சக்திவாசன் இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஆடுகளம் முருகதாஸ், ரோகேஷ், கிருஷ் நடிப்பில் வெளியாகி உள்ள நாயே பேயே படத்தின் விமர்சனம்.
நாயகன் தினேஷ், திருமணமாகி முதலிரவுக்கு காத்திருக்கும் சமயத்தில் மனைவி ஓடிப்போய் விடுகிறார். இதனால் விரக்தி அடையும் தினேஷ், நண்பர்கள் முருகதாஸ், ரோகேஷ், கிருஷுடன் சேர்ந்து விலை உயர்ந்த நாய்களை கடத்தி விற்கும் தொழிலில் இறங்குகிறார். அப்படி ஒரு நாயை கடத்தும்போது அதை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தர அதன் உரிமையாளரான புச்சிபாபு முன்வருகிறார்.
அதன்படி 5 லட்சம் பெற்றுக்கொள்கிறார்கள். நாயை கடத்தினாலே 5 லட்சம் தருகிறார். புச்சிபாபு பெண்ணான ஐஸ்வர்யாவை கடத்தினால்? என்று விபரீத யோசனை எழுகிறது. அதன்படி கடத்தினால் அங்கே ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. நான்கு பேரும் பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள். ஐஸ்வர்யா ஏன் பேயாகிறார்? பேயிடம் காதலில் விழும் தினேஷ் என்ன ஆகிறார்? போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமாக விடை தருகிறது படம்.

ஒரு குப்பை கதை படம் மூலம் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்ற தினேஷ் மாஸ்டர், இந்தப் படம் மூலம் பி, சி ரசிகர்களை எளிதில் சென்றடைவார். மனைவி ஓடிப்போன விரக்தியில் இருக்கும் கதாபாத்திரத்தை நன்றாக பிரதிபலித்துள்ளார். காமெடி, காதல், செண்டிமெண்ட் என நடிப்பால் கவர்கிறார்.
நாயகி ஐஸ்வர்யாவுக்கு கதையில் கனமான பாத்திரம். பந்தயம் கட்டி அவர் செய்யும் சாகச செயல்கள் ரசிக்க வைக்கின்றன. அதனாலேயே அவருக்கு ஏற்படும் சோகம் கலங்க வைக்கிறது. பேயான பிறகு அவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன.

நண்பர்களாக வரும் ஆடுகளம் முருகதாஸ், ரோகேஷ், கிருஷ் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு. முருகதாஸ் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
மக்கள் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் இந்த சூழலில் சிரித்து ரசித்து மகிழும்படி ஒரு படத்தை கொடுத்த எடிட்டர் கோபிகிருஷ்ணாவுக்கும் இயக்குனர் சக்திவாசனுக்கும் பாராட்டுகள். படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை சிரிக்க வைத்து கடைசி காட்சியில் மட்டும் கலங்க வைக்கிறது.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை கமர்சியல் படமாக்குகிறது. நிரன் சந்தரின் ஒளிப்பதிவும் கோபிகிருஷ்ணாவின் படத்தொகுப்பும் படத்துக்கு பலம். லாஜிக் பார்க்காமல் இரண்டு மணி நேரம் ஜாலியாக ரசித்து பொழுதை போக்க ஏற்ற படமாக நாயே பேயே அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘நாயே பேயே’ காமெடி கலாட்டா.
சைமன் மெகாய்டு இயக்கத்தில் லீவிஸ்டன், ஜெசிகா, மெக்கட் புரூக்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மொர்டல் காம்பட்’ படத்தின் விமர்சனம்.
உலகத்தை சேர்ந்த குறிப்பிட்ட சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவுக்கும், வேற்று உலகை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் மொர்டல் காம்பட். உலகத்தில் பிறக்கும் போதே, உடலில் டிராகன் வடிவிலான குறியீட்டுடன் பிறப்பவர்கள் இந்த சண்டைக்கு தகுதி உடையவர்களாக கருதப்படுகிறார்கள்.
வேற்று உலகத்தை சேர்ந்த கும்பல், உலகத்தை கைப்பற்ற பார்க்கிறார்கள். இதற்காக உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவுடன் அவர்கள் மோத வேண்டும். இதில் வெற்றியடைந்தால் மட்டுமே அவர்களால் உலகத்தை கைப்பற்ற முடியும். ஆனால் சதித் திட்டம் தீட்டும் வேற்று உலக கும்பல், சண்டைக்கு முன்பே உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்தவர்கள் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்களை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

அதேபோல் மறுபுறம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் உலகத்தை சேர்ந்த சக்திவாய்ந்த குழுவினரை ஒன்று சேர்த்து பயிற்சி அளிக்கும் முயற்சியும் நடக்கிறது. அந்தவகையில் தனக்குள் இருக்கும் சக்தியை அறியாமல் வாழ்ந்து வரும் நாயகனை, அழைத்து பயிற்சி கொடுக்கின்றனர். பயிற்சிக்கு பின்னரும் அவரால் சூப்பர் பவரை வெளிக்கொண்டு வர முடியவில்லை. இதன்பின் என்ன ஆனது? வேற்று உலகத்தை சேர்ந்த கும்பலுடன் சண்டையிட்டு நாயகன் உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் உள்ளன. அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக லீவிஸ்டன், ஜெசிகா, மெக்கட் புரூக்ஸ், ஜோஷ் லாஷன் ஆகியோரின் நடிப்பு அட்டகாசம்.

இயக்குனர் சைமன் மெகாய்டு, படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், திறம்பட கையாண்டுள்ளார். படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது ஆக்ஷன் காட்சிகள் தான். குறிப்பாக கடைசி அரைமணி நேரம் ஆக்ஷன் அதகளம் என்றே சொல்லலாம். படத்தில் சில காட்சிகளை ஜவ்வாக இழுத்திருப்பது பின்னடைவாக தெரிகிறது. குறிப்பாக நாயகன் பயிற்சி எடுக்கும் காட்சி ரொம்பவே நீளம்.
பெஞ்சமினின் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கின்றன. ஜெர்மைன் மெக்மைகிங், பீட்டர் மெக்காப்ரே ஆகியோரில் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மொர்டல் காம்பட்’ ஆக்ஷன் விருந்து.






