என் மலர்
தரவரிசை
ஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், சௌமியா நடிப்பில் வெளியாகி இருக்கும் பாப்பிலோன் படத்தின் விமர்சனம்.
நாயகன் ஆறு ராஜா தனது தாய் மற்றும் தங்கையுடன் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார். தங்கையின் தோழியான ஸ்வேதா ஜோயல், ஆறு ராஜாவை காதலித்து வருகிறார். முதலில் ஸ்வேதா ஜோயல் காதலை மறுக்கும் ஆறு ராஜா ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் கொள்கிறார்.


ஒரு நாள் ஆறு ராஜா தங்கையின் வீடியோ ஒன்று இளைஞர்களிடம் கிடைக்கிறது. இதை வைத்து ஆறு ராஜா தங்கை சௌமியாவை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இதை அண்ணனுக்கு தெரியாமல் மறைத்து அவர்களிடம் பணம் கொடுக்க செல்கிறார். அப்போது சௌமியாவை அவர்கள் கடத்த எதிர்பாராத விதமாக அந்த வாகனம் விபத்தில் சிக்குகிறது.

இதில் கோமா நிலைக்கு செல்லும் சௌமியா உயிர் பிழைத்தாரா? தங்கையை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தவர்களை ஆறு ராஜா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆறு ராஜா, அவரே இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். முதல் பாதி, கதை எங்கு செல்கிறது என்று தத்தளிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கரை சேர்கிறது. பட்டாம்பூச்சியை வைத்து சொல்லும் கதை, கேட்கவும் பார்க்கவும் அருமை.

ஆறு ராஜா இயக்கத்தில் செலுத்திய கவனத்தை நடிப்பிலும் செலுத்தி இருக்கலாம். கொஞ்சம் நடிக்க தெரிந்தவர்களை நடிக்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஜோயல், தங்கையாக வரும் சௌமியா, அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஷ்யாம் மோகன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. அருள்செல்வன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் 'பாப்பிலோன்' பார்க்கலாம்.
சங்கை குமரேசன், நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட் நடிப்பில் சங்கை குமரேசனே எழுதி இயக்கி இருக்கும் முன்னா படத்தின் விமர்சனம்.
சங்கை குமரேசன் நாடோடியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவர். சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் வளரும் அவருக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. ஆனால் பழமை மாறாத அவரது தந்தையோ மகனின் விருப்பத்துக்கு தடையாக இருக்கிறார்.
சங்கை குமரேசன் தனது லட்சியத்துக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதிஷ்டவசமாக அவர் பெரும் பணக்காரராகி நாகரீக வாழ்க்கைக்கும் செல்கிறார். ஆனால் பணம் வந்த பிறகு மனநிம்மதி பறி போகிறது. அதன்பின் இவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசன், தானே இயக்கி நடித்து இருக்கிறார். தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். அதே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால் நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை சங்கை குமரேசன் வலியுறுத்தி இருக்கிறார்.
கருத்து சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை பயணிக்கிறது. 2 மணி நேரம் படம் இருக்க வேண்டும் என்பதற்காக பல காட்சிகள் திணித்தது போல் இருக்கிறது.

நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து,ராஜாமணி, சண்முகம், வெங்கட் என பிற கதாபாத்திரங்களும் கதைக்கு ஓரளவிற்கு வலு சேர்த்துள்ளனர். டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சங்கை குமரேசனின் வரிகளில் தத்துவம், காதல் இரண்டுமே பெரியதாக எடுபடவில்லை. சுனில் லாசரின் பின்னணி இசையும் ரவியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
மொத்தத்தில் ‘முன்னா’ சுவாரஸ்யம் இல்லை.
விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எஹன் பாட், எட்ல்சி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘99 சாங்ஸ்’ படத்தின் விமர்சனம்.
சின்ன வயதில் இருந்தே இசையை உயிராக நேசிக்கும் இளம் பாடகரான நாயகன், ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். இந்த காதலை அந்த பெண்ணின் தந்தை விரும்பவில்லை. ‘‘நீ நூறு பாடல்களை இசையமைத்து கொண்டு வா... உனக்கு என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன்’’ என்கிறார்.
அவருடைய நிபந்தனையை நாயகன், ஏற்றுக்கொள்கிறார். நூறு பாடல்களை தேடி, அவர் தன் இசைப்பயணத்தை தொடங்குகிறார். மது பழக்கம் கூட இல்லாத அவரிடம், விளையாட்டாக போதை மருந்தை நண்பர் செலுத்துகிறார். அந்த போதையில் கார் ஓட்டிய நாயகன், விபத்துக்குள்ளாகிறார்.

போலீஸ் வருகிறது. சோதனையில், நாயகன் போதை மருந்து சாப்பிட்டது தெரியவர அவரை சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறார்கள். அதன் பிறகு நாயகன் என்ன ஆகிறார்? அவருடைய காதல் ஜெயித்ததா, இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் எஹன் பாட், மிக அருமையான தேர்வு. கதாநாயகி எட்ல்சி, தன் அழகால் வசீகரிக்கிறார். மனிஷா கொய்ராலாவை தவிர முக்கிய கதாபாத்திரங்களில் அத்தனை பேரும் புதுமுகங்கள்.

விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பு, முதல் பாதியில் இல்லாதது பின்னடைவு. ஒரே வரியில் சொல்லிவிடக் கூடிய எளிமையான கதை. ஏ.ஆர்.ரகுமானே எழுதியிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்ப திரைக்கதையை வளர்த்து இருப்பார்கள் போல தெரிகிறது. சில இடங்களில் வசனம் புரியவில்லை.

படத்தின் உண்மையான நாயகன் என்றால், அது ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பாடல்களும் தான். வசீகர இசையால் மாயாஜாலம் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாஸ் ஆச்சாரி மற்றும் டனே சதமின் ஒளிப்பதிவு, வேற லெவல். ஹாலிவுட் பாணியில், பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
மொத்தத்தில் ‘99 சாங்ஸ்’ இசை விருந்து.
வரலட்சுமி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா நடிப்பில் வீரக்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள சேஸிங் படத்தின் விமர்சனம்.
உயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல் மற்றும் போதை மருந்து கடத்தல் கும்பலைப் பற்றி உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, அவர்களை கைது செய்யும் பொறுப்பை வரலட்சுமி ஏற்கிறார்.
தனக்கென நம்பிக்கையான போலீஸ் டீம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அதற்கான வேட்டையை தொடங்குகிறார். இளம் பெண்களை போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யும் வில்லன். போதை மருந்து கடத்தி விற்கும் கூட்டம் என ஒவ்வொன்றையும் அழிக்கும் வேலையில் இறங்குகிறார் வரலட்சுமி.
இந்நிலையில் வரலட்சுமியின் டீமை கடத்துகிறது போதை மருந்து கூட்டம். அவர்களை வரலட்சுமி காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் துணிச்சலாக நடித்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இணையாக படம் முழுவதும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன், மலேசிய வில்லன் ஜெரால்டு, சோனா உள்பட படம் முழுக்க ஏராளமான வில்லன்கள் வந்து போகின்றனர். பால சரவணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

இயக்குனர் வீரக்குமார், புதுமுக இயக்குனரான இவர், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவர்களை திறம்பட கையாண்டுள்ளார். படத்திற்கு சேஸிங் என பெயர் வைத்ததாலேயோ என்னவோ, ஏராளமான சேஸிங் காட்சிகளை படத்தில் வைத்திருக்கிறார். சில இடங்களில் அது பின்னடைவாக அமைந்துள்ளது. திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் சேஸிங் விறுவிறுப்பாகி இருக்கும்.
படத்தின் 2ம் பாகம் முழுவதும் மலேசியாவில் படமாக்கி உள்ளனர். ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு மலேசியாவின் எழிலை அள்ளி வந்திருக்கிறது. தஷியின் பின்னணி இசை காட்சிகளை வேகப்படுத்தி இருப்பதுடன் படத்திற்கும் பலமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘சேஸிங்’ விறுவிறுப்பில்லை.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் விமர்சனம்.
பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது. இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மேலூர் எனும் ஊருக்கு சென்று பேருந்து ஏற வேண்டும். மேலூர் ஊரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரியை அசிங்கப் படுத்துகிறார்கள்.
இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை வெளுத்து வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.

இதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை துவம்சம் செய்கிறார். கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து தனுஷ் தப்பித்தாரா? ஊர் மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் தனுஷ், படத்தில் கர்ணனாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கர்ணனாக மனதில் நிற்கிறார். அசுரனை தாண்டி வேற ஒரு தனுஷை பார்க்க முடிகிறது. நாயகியாக வரும் ரஜிஷா விஜயன், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

குணசித்திர கதபாத்திரத்தில் நடித்துள்ள லால், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். பாட்டியிடம் திருடும் காட்சியில் கவர்கிறார். அதேபோல் யோகிபாபுவை நகைச்சுவைக்காக பயன்படுத்தாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி இருப்பது அருமை. தனுஷின் அக்காவாக வரும் லட்சுமி பிரியா பாசம் கோபம் என கைத்தட்டல் வாங்குகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் நட்டி நட்ராஜ், நடிப்பில் பளிச்சிடுகிறார். போலீஸ் அதிகாரிக்கு உண்டான மிடுக்கான கதாபாத்திரத்தை திறம்பட செய்தியிருக்கிறார்.
1990-களில் நடப்பதுபோல் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கிராமத்து மக்களின் வாழ்வியலையும் கஷ்டங்களையும் கண் முன் நிறுத்துகிறார். தலை குனிந்து வாழ்பவர்கள் நிமிர கூடாதா, கந்தசாமி மகனுக்கு கண்ணபிரான் பெயர் இருக்கலாம், மாடசாமி மகனுக்கு கர்ணன் பேர் இருக்க கூடாதா... என வசனங்கள் படத்திற்கு பலம். சின்ன சின்ன கதாபாத்திரங்களை கூட பேச வைத்து அழகு படுத்தி இருக்கிறார்.

கதாபாத்திர தேர்வும் அருமை. தனுஷ் போன்ற மாஸ் நடிகர் படத்தில் இருந்தாலும், அவருக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தான் சொல்லவந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். மெதுவான திரைக்கதை படத்திற்கு பலவீனம்.
படத்திற்கு பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்களில் அதிக கவனம் செலுத்திய இவர், பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் கவனித்து இருக்கலாம். கிராமத்து அழகை மாறாமல் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
மொத்தத்தில் ‘கர்ணன்’ அடக்க முடியாதவன்.
கடந்த ஆண்டு ஆங்கிலத்திலும் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் லெகசி ஆப் லைஸ் என்ற படத்தின் விமர்சனம்.
படம் ஆரம்பத்தில் 12 வருடங்களுக்கு முன்பு நாயகன் ஸ்காட் அட்கின்ஸ் (எம்.ஐ.6) சீக்ரெட் ஏஜெண்ட்டாக இருக்கிறார். ஆனால் பொது வெளியில் ரிப்போர்டராக இருக்கிறார். ஒரு முக்கியமான ஆவணம் கைமாற்றத்தின் போது, ஸ்காட் அட்கின்ஸின் மனைவி இறக்கப்படுகிறார்.
தற்போது நிஜ வாழ்க்கையில், ஸ்காட் அட்கின்ஸ் பாரில் வேலை பார்த்துக் கொண்டு தனது மகளை வளர்த்து வருகிறார். ஒருநாள் யூலியா சோபோல் என்ற பெண், ஸ்காட்டிடம் ஒரு முக்கியமான ஆவணம் எடுத்து வரசொல்லி கேட்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஸ்காட்டை, ஒரு மர்ம கும்பல் தாக்குகிறது. மேலும் ஸ்காட்டின் மகளை பணய கைதியாக வைத்து முக்கிய ஆவணத்தை கேட்கிறார்கள்.

இறுதியில் ஸ்காட் அட்கின்ஸ், முக்கிய ஆவணத்தை கைப்பற்றி தன் மகளை மீட்டாரா? இல்லையா? முக்கிய ஆவணத்தில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஸ்காட் அட்கின்ஸ் கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு பொருந்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் புதியதாகவும், சுவாரஸ்யமாகவும் இல்லை. சில காட்சிகள் மட்டும் ரசிக்கும் அளவிற்கு உள்ளது. மகளாக நடித்திருப்பவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அளவிற்கு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய அளவில் கைக்கொடுக்க வில்லை.

ஸ்பைக் திரில்லர் படத்தை ஹாரர், ஆக்ஷன் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்ரியன் பால். முதல் பாதி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் மெதுவாக நகர்கிறது. ஆர்காடியஸ் ரெய்கோவ்ஸ்கியின் பின்னணி இசையும், சைமன் ரவுலிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘லெகசி ஆப் லைஸ்’ விறுவிறுப்பு குறைவு.
தம்பா குட்டி பம்பராஸ்கி இயக்கத்தில் ஆதித்ய வர்மன், ரேணு செளந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மஞ்ச சட்ட பச்ச சட்ட படத்தின் விமர்சனம்.
ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும், சுயநல கார்போரேட் புரோக்கருக்கும் இடையே ஒரு விரோதம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெறுகிறது. அதே நாளில் தங்களை கண்டுக்கொள்ளாத சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்திக் காட்ட இரு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியை தழுவுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட இதில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகனும் அவன் நண்பனும்.

பணம் சம்பாதிக்க தெரியாத கதநாயகன், பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரி, சுயமாக சிந்திக்க தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள், சுயநினைவே இல்லாத இரண்டு மனநோயாளிகள், பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆதித்ய வர்மன், கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். நாயகியாக வரும் ரேணு செளந்தர், அழகு பதுமையுடன் வந்து செல்கிறார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துடையது தான், அரசியல்வாதியாக நடித்துள்ள அவர், தனது அனுபவ நடிப்பால் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி, நான்கு வெவ்வேறு கதைகளை திறம்பட கையாண்டுள்ளார். அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்த விதம் சிறப்பு. அதேபோல் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள விதம் அருமை. காமெடியும் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ஜெய் சுரேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது.
மொத்தத்தில் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட’ காமெடி கலாட்டா.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சுல்தான்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும் தாதாவாக இருக்கிறார். அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ரவுடிகளும் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட, தந்தையின் ரவுடி கூட்டத்திற்கு இடையில் தான் வளர்க்கிறார் நாயகன் கார்த்தி.
பின்னர் படித்து வெளியூரில் வேலை பார்த்து வரும் கார்த்தி, விடுமுறைக்காக ஊருக்கு வரும் சமயத்தில் நெப்போலியன் இறந்துவிடுகிறார். இதன்பின் அந்த ரவுடி கூட்டத்திற்கு தலைவனாகும் கார்த்தி, அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நினைக்கிறார்.

இதனிடைய, ஊர் விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் ஒரு நிறுவனம் பிரச்சனை கொடுக்கிறது. அவர்களை எதிர்க்க தன்னுடைய ரவுடி கும்பலை பயன்டுத்துகிறார் கார்த்தி. இதையடுத்து என்ன ஆனது? ரவுடிகளை வைத்து விவசாயத்தை காப்பற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கார்த்தி, படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் இவர், இப்படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், நடனம் என பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வந்து ஸ்கோர் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளில் எதிரிகளை பந்தாடி இருக்கிறார்.

நாயகி ராஷ்மிகா, இவருக்கு இதுதான் முதல் நேரடி தமிழ் படம், இதில் கிராமத்து பெண்ணாக வருகிறார். இவருக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும், தனது கியூட்டான நடிப்பால் ரசிக்க வைத்துள்ளார்.
கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியனும், இவருக்கு நண்பராக வரும் லாலும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். யோகி பாபுவும், சென்ராயனும் அவ்வப்போது வந்து சிரிக்க வைத்துள்ளனர்.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவற்றை திறம்பட கையாண்டுள்ளார். கதைக்களம் வித்தியாசமானதாக இருந்தாலும், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருந்தால், சுல்தானை இன்னும் ரசித்திருக்கலாம். கமர்ஷியல் படமாக இருந்தாலும் விவசாயத்தை பற்றிய கருத்துகளை கூறி பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது யுவனின் பின்னணி இசை தான். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது இசை வேற லெவல். விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் அருமை. சத்யன் சூரியனின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சுல்தான்’ ஆக்ஷன் விருந்து.
சந்தோஷ் சரவணன், அஸ்வினி, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் பா.பாண்டியன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கால் டாக்ஸி படத்தின் விமர்சனம்.
நகரத்தில் பல இடங்களில் கால் டாக்ஸி டிரைவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு அவர்களது கார்கள் திருடு போகிறது. கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் சந்தோஷ் சரவணனின் சக தோழர்களே ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். இதனால் கால் டாக்ஸி ஓட்டுவதற்கே அச்சம் ஏற்படுகிறது.
இதில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை கண்டுபிடித்து பழிவாங்க சந்தோஷ் சரவணன் முயல்கிறார். அவரது முயற்சி வெற்றி அடைந்ததா? மர்ம கும்பல் பிடிபட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் சந்தோஷ் சரவணன், தமிழ் சினிமாவிற்கு நல்ல அறிமுகம். ஆக்ஷன், உணர்வுபூர்வமான காட்சிகளில் நன்றாக நடிப்பவருக்கு, காதல் காட்சிகளில் நடிக்க மட்டும் பயிற்சி தேவை. நண்பர்கள் கொலையானதும் வெகுண்டெழுவதும் கொலைகார கும்பல் பற்றி விசாரிக்கும் காட்சிகளிலும் தேறுகிறார். கால் டாக்ஸி டிரைவர்களின் நிலையை எடுத்து சொல்லும்போது பரிதாபம் கொள்கிறார்.
அஸ்வினிக்கு வழக்கமான கதாநாயகி வேடம் தான். வழக்கறிஞராக வரும் அவரையும் விசாரணைக்கு பயன்படுத்தி இருக்கலாம். நான் கடவுள் ராஜேந்திரன், கணேஷ்கர் இருவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறார் பா.பாண்டியன். திரைக்கதையில் இன்னும் கூட வேகம் கூட்டி இருக்கலாம். இருந்தாலும் விழிப்புணர்வு தரும் படமாகவே கால் டாக்ஸி அமைந்துள்ளது.
பாணரின் இசையில் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசை மூலம் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார். எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. டேவிட் அஜய்யின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் ‘கால் டாக்ஸி’ வேகம் குறைவு.
நரேன், விஷ்வா, சௌமியா நடிப்பில் வசந்த் நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ரூம் மேட்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் நரேனும், விஷ்வாவும் நெருங்கிய நண்பர்கள். விஷ்வா காதலித்த பெண்ணை, நரேன் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார். இதனால் கோபமடையும் விஷ்வா, நரேனை பழிவாங்க முயற்சி செய்கிறார். சில தினங்களில் நரேனுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், ஆளில்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு அவரை வரவழைக்கிறார் விஷ்வா.
ஒரு வீட்டில் நரேனை அடித்து, போனை உடைத்து விட்டு வீட்டையும் பூட்டு போட்டு செல்கிறார் விஷ்வா. அதே வீட்டில், ஒரு விபச்சார பெண் சௌமியாவும் இருக்கிறார். இறுதியில் அந்த வீட்டில் இருந்து விஷ்வா மற்றும் சௌமியா எப்படி வெளியேறினார்கள். அந்த வீட்டிற்கு சௌமியா வர காரணம் என்ன? சௌமியாவிற்கும், விஷ்வாவிற்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நரேன், வில்லன் விஷ்வா, விபச்சார பெண் சௌமியா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் இவர்கள் மூன்று பேர் மட்டுமே வருகிறார்கள். நரேன், சௌமியா இரண்டு பேர் அதிக காட்சிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
பூட்டிய வீட்டிற்குள் இருப்பவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்ற கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்த் நாகராஜன். குறைந்த பட்ஜெட்டில் ஓரளவிற்கு ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார். இரண்டு பேரை அதிகளவிற்கு காண்பித்தாலும் பெரியதாக போரடிக்காமல் திரைக்கதை நகர்த்தி இருக்கிறார். லாஜிக் மீறல்கள், காமெடி காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

கரண் இசையில் பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் கவனிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு நந்தன்.
மொத்தத்தில் ‘ரூம் மேட்’ சுவாரஸ்யம் குறைவு.
அகில், இஷாரா நாயர், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் விமர்சனம்.
நாயகன் அகில், கிராமத்தில் வசித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த மொட்டை ராஜேந்திரனும் நாயகனுக்கு உதவியாக இருக்கிறார். அந்த சமயத்தில் நாயகன் அகிலுக்கு பட வாய்ப்பு வருகிறது. அந்த படத்திற்காக நடிப்பு பயிற்சியும் எடுக்கிறார் அகில். அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் செய்யும் சூழ்ச்சியால், அகில் அப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்.
இதனால் மனமுடைந்து போகும் நாயகன் அகில், மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று விடுகிறார். அகிலை ஹீரோவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மொட்டை ராஜேந்திரன், நாமே ஏன் படம் எடுக்க கூடாது என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து என்ன ஆனது, இவர்கள் படம் எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அகில், கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இஷாரா நாயர், கிருஷ்ண பிரியா, சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். அழகு பதுமையுடன் இருக்கும் மூவரும், சில காட்சிகளே வந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
மொட்டை ராஜேந்திரனை இந்தப் படத்தில் புதுவிதமாக காட்டி உள்ளனர். பல படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்த இவர், இந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் திறம்பட நடித்துள்ளார். யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வந்து தனக்குரிய பாணியில் சிரிக்க வைத்துள்ளார்.

புதுமுக இயக்குனர் கெவின் இயக்கி உள்ளார். படத்தில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது பின்னடைவு. கிளைமாக்ஸ் ரசிக்கும்படியாக அமைத்த அவர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
வர்சன் மற்றும் ஜேடனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ரஹீம் பாபுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ சுவாரஸ்யம் குறைவு.
லெஜண்டரி பிக்சர்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் டோஹோ தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் 'காட்ஸில்லா vs காங்' படத்தின் விமர்சனம்.
படம் ஆரம்பத்தில் காட்ஸில்லா, ஒரு ஆய்வு கூடத்தை தாக்குகிறது. காட்ஸில்லா ஒரு விஷயத்தை செய்தால் அதில் காரணம் இருக்கும் என்று ஒரு குழு கூறுகிறார்கள். இதை ஏற்காத மற்றொரு குழு, காட்ஸில்லா மக்களை தாக்காது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
காட்ஸில்லாவின் தாக்குதலை நிறுத்த, காங்-கை அழைக்கிறார்கள். காட்ஸில்லா - காங் இரண்டும் மோதிக்கொள்கிறது. இறுதியில் காட்ஸில்லாவின் தாக்குதலை காங் நிறுத்தியதா? இருவருக்கும் நடந்த மோதல் என்ன ஆனது? காட்ஸில்லா மக்களை தாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஆரம்பத்தில் எழும் கேள்விகளுக்கு எதிர்பாராத சில ட்விஸ்ட்களை வைத்து ஒரு ஆக்ஷன் மசாலாவை கொடுத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமாக இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. காட்ஸில்லாவும், காங்கும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டம். முதல் சண்டைக்காகச் சிறிது நேரம் நம்மைக் காக்க வைத்தாலும், நடுக்கடலில் இரண்டு ராட்சச உயிரினங்களுக்கு இடையே நிகழும் அந்த யுத்தம், தொழில்நுட்பத்தின் உச்சம்.
பழங்குடியின குட்டிப்பெண், இந்தக் குட்டிப்பெண்ணை வளர்க்கும் நடிகை ரெபெக்கா ஹால், மில்லி பாபி பிரவுன் ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்தையும் கொடுத்து இருக்கிறார் ஆடம் விங்கார்ட். காட்ஸில்லா, காங் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் வரும் போது சற்று சோர்வை ஏற்படுத்துகிறது.

பென் செரெசின் ஒளிப்பதிவும், டாம் ஹோல்கன்போர்க்கின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘காட்ஸில்லா vs காங்’ பிரம்மாண்டம்.






