என் மலர்tooltip icon

    தரவரிசை

    இளமாறன் என்னும் புளு சட்டை மாறன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் விமர்சனம்.
    இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர் பாட்ஷா. இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். பாட்ஷா உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்கிறார்கள். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்று கூறி முஸ்லிம் மதத்தினர் அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உடலை திருப்பி அனுப்புகிறார்கள்.

    இதன் பிறகு வீட்டுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்ட பாட்ஷாவின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்கு எடுத்து செல்கிறார்கள். அங்கு இறந்தவரின் பெயர் பாட்ஷா என்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. 

    இன்னொருபுறம் பாட்ஷா உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள். இறுதியில் பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் பாட்ஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இளமாறன் என்னும் புளு சட்டை மாறன். ஆரம்பம் முதல் இறுதிவரை பிணமாக இருப்பதால் இவரது நடிப்பை பார்க்க முடியவில்லை. ஆனால், கதை இவரை சுற்றியே நடக்கிறது. சடலம், அடக்கம் செய்ய மறுக்கும் மதத்தினர், அதை சுற்றி நடக்கும் அரசியல் என படத்தை இயக்கி இருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்கிறது. ஒரு சில இடங்களில் வசனங்கள் ‘நச்’ என்றும் சில இடங்களில் ‘ச்சே’ என்றும் இருக்கிறது.

    தேவையில்லாத காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. அதுபோல் நீண்ட காட்சிகளும் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. மதவாதிகள், காவல்துறை, அரசியல் கட்சிகள், மீடியா என அனைவரையும் சாடியிருக்கிறார். மதங்களுக்கிடையே உண்டாகும் சில பிரச்சனைகளையும், சலசலப்பையும் காட்டியதற்கும், மதத்தால் சில அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் செய்யும் சூழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கும் பாராட்டுகள்.

    இளமாறனே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஆனால், அதிகம் கவனம் பெறவில்லை. கதிரவனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘ஆன்டி இண்டியன்’ சுவாரஸ்யம் குறைவு.
    ஸ்ரீஜர் இயக்கத்தில், சாந்தனு, அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகிபாபு, முனிஸ்காந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் விமர்சனம்.
    சாந்தனுவுக்கும், அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் முதலிரவுக்கு முன் சாந்தனுவின் தாத்தா பாக்யராஜ் உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தால் பரம்பரை சொத்து முழுவதையும் ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன். மேலும் இருவரும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

    இன்னொரு பக்கம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி உங்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக கூறுகிறார். இறுதியில் சாந்தனுவுக்கும், அதுல்யாவுக்கும் இடையே முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகன் சாந்தனு துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார். அதுபோல் அதுல்யா ரவி துள்ளலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    முதலிரவை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர். படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. அதுவும், ஒரே அறையில் தான் கதை நகர்கிறது. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவை அதிகம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிந்தது. முதலிரவு குறித்து அட்வைஸ், பழைய படங்களில் வந்த டயலாக் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. 

    விமர்சனம்

    தரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. குறிப்பாக ரமேஷ் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவோடு பாடல்களை பார்க்கும் போது மிகவும் கலர்ப்புல்லாக இருக்கிறது. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ரமேஷ் சக்ரவர்த்தி. 

    மொத்தத்தில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ சுவை குறைவு.
    பாபு தமிழ் இயக்கத்தில் யோகேஷ், அனிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் க் படத்தின் விமர்சனம்.
    கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.

    கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

    விமர்சனம்

    படத்தில் வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் யோகேஷ். புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் முக அசைவுகளை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். இவரது மனைவியாக வரும் அனிகா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரம். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். மிகவும் சிக்கலான கதையை எடுத்து இயக்கியதற்கு பெரிய பாராட்டுகள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வசனங்கள் மற்றும் காட்சிகளை கவனித்தால் மட்டுமே படத்தின் கதை தெளிவாக புரியும் அளவிற்கு எடுத்து இருக்கிறார். சின்ன சின்ன வசனங்களுக்கு கூட இறுதியில் அர்த்தம் கொடுத்து இருக்கிறார். 

    கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைத்திருக்கிறார். ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

    மொத்தத்தில் 'க்' பாராட்டலாம்.
    வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயில் படத்தின் விமர்சனம்.
    தன் அம்மா ராதிகாவுடன் சென்னையில் வசித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவருக்கு நந்தன் ராம் மற்றும் பாண்டி என்று இரண்டு நண்பர்கள். திருடுவதை தொழிலாக வைத்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு பிரச்சனையில் நண்பன் நந்தன் ராமை இழக்கிறார். மேலும் மற்றொரு நண்பர் பாண்டி ஜெயிலுக்கு சென்று விடுகிறார்.

    தன் இரண்டு நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார். இறுதியில் திருட்டு தொழிலை கைவிட்டாரா? நண்பனை ஜெயிலில் இருந்து மீட்டாரா? நண்பரை இழக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    விமர்சனம்

    அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை இயக்குனர் வசந்தபாலன் கொண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக வட சென்னை பாஷையில் சிறப்பாக பேசி கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் சிறந்த தேர்வு. இவர்களின் மிகைப்படுத்தப்படாத நடிப்பு படத்திற்கு பலம். ராதிகாவிற்கு பெரிதாக காட்சிகள் இல்லாதது வருத்தம். 

    விமர்சனம்

    ஜி.வி.பிரகாஷின் இசையில் காத்தோடு காத்தானேன் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் விஷுவலில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அபர்ணதியின் ரொமான்ஸ் அதிகம். பாடல்கள் ரசிக்க வைத்தாலும், கதைக்கு சில பாடல்கள் தேவையா? என்று சொல்லு அளவிற்கு உள்ளது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.  

    குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வலிகளை இயக்குனர் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் செல்கிறது. 

    மொத்தத்தில் ‘ஜெயில்’ போகலாம்.
    சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்யா பாரதி நடிப்பில் வெளியாகி இருக்கும் பேச்சிலர் படத்தின் விமர்சனம்.
    பேச்சிலராக இருக்கும் ஜிவி பிரகாஷ் நாயகி திவ்யா பாரதியை சந்திக்கும் பொழுது இருவருக்கும் திடீரென ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பின் ஹீரோ சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்கிறார்கள். 

    தன் நெருங்கிய நண்பரின் உதவியுடன் திவ்யா பாரதியுடன் ஒரே வீட்டில் தங்க முயற்சி செய்கிறார் ஜிவி பிரகாஷ். ஒரே ஆபீசில் வேலை செய்வதாலும், தன் நண்பரின் சிபாரிசலும் ஜிவி பிரகாஷுடன் தங்க ஓகே சொல்கிறார் திவ்யா பாரதி.

    விமர்சனம்

    ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்கள், காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் எல்லை மீறுகிறார்கள். அதன்பின் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்களுடைய நெருக்கமே பிரிவுக்கு காரணமாக அமைகிறது. இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமா உலகில் பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் பேச்சிலர். தன்னை சுற்றி எது நடந்தாலும் சரி, தன்னால் மற்றவர்களுக்கு எது நடந்தாலும் சரி கொஞ்சம் கூட கவலைப் படாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது ஜிவி பிரகாஷ்.
    விமர்சனம்

    அறிமுக கதாநாயகி திவ்யா பாரதி, முதல் படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் தன் நண்பர்களுடன் வரும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. 

    அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் பேச்சிலரின் வாழ்க்கையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார். கதைக்கு ஏற்றார்போல் கதாபாத்திரங்களையும் அருமையாக தேர்ந்தெடுத்து இருப்பது படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆனால், திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது.

    தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சித்துகுமாரின் இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘பேச்சிலர்’ பார்க்கலாம்.
    பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படத்தின் விமர்சனம்.
    16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் சாமுத்ரி ராஜ்ஜியத்தில் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதையை மையமாக வைத்து ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சிறுவயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறார் முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர் (மோகன்லால்). இவருக்கு திருமணம் நடப்பதற்கு முதல் நாள், மணபெண்ணான கல்யாணி பிரியதர்ஷன் உட்பட ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பத்தையும் போர்ச்சுகீசிய படைகளின் உதவியுடன் எதிரிகள் கொல்கின்றனர்.

    விமர்சனம்

    இந்த தாக்குதலில் தனது சித்தப்பாவுடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல வாழ்கிறார் மோகன்லால். ஆட்சியாளர்களிடமிருந்து உணவு தானியங்களை கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு கொடுக்கிறார். போர்ச்சுகீசியப் படைகளை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர் மோகன்லாலின் உதவியை நாடுகிறார். 

    இறுதியில் மோகன்லால், சாமுத்ரி அரசருடன் இணைந்து போர்ச்சுகீசிய படைகளை வீழ்த்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால். கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி சின்ன சின்ன அசைவுகளில் கூட அசத்துகிறார். நெடுமுடிவேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பெரடி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். இவர்கள் அனைத்தும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். 

    விமர்சனம்

    இளவயது மரைக்காயராக வரும் ப்ரணவ் மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

    படத்தில் இத்தனை நடிகர்கள் இருந்தும் அவர்கள் யாருக்குமே பாத்திரப் படைப்பு சரியாக அமையாமல் போனது சோகம். கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, ஹரீஷ் பெரடி, சுனில் ஷெட்டி என அனைவரது கதாபாத்திரங்களும் சரியாக பயன்படுத்தபடவில்லை.

    விமர்சனம்

    1996ஆம் ஆண்டு மோகன்லால் - பிரியர்தர்ஷன் கூட்டணியில் வெளியான ‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு திட்டமிடப்பட்ட இப்படம் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி இருக்கிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பலவீனம். படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். இதற்கு துணையாக நின்ற கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோருக்கு பெரிய பாராட்டுகள். அதுபோல், படத்தில் போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்க வைக்கின்றன. 

    படத்துக்கு ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல் ஆகியோர் இசையமைத்து இருக்கிறார்கள். ஒரு வரலாற்றுப் படத்துக்கு எது தேவையோ அதைக் கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர். 

    மொத்தத்தில் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ ரசிக்கலாம்.
    கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, சிங்கம் புலி நடிப்பில் வெளியாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியில் பிறந்த சசிகுமார், சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறார். இவருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. தனது கனவு ப்ராஜக்ட்டாக நினைத்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். 

    இன்னொரு புறம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். திருமணமா, ப்ராஜக்டா என்ற நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். இறுதியில் சசிகுமார் எடுத்த முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்.

    யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.

    மொத்தத்தில் ‘ராஜவம்சம்’ குடும்பங்களின் கொண்டாட்டம். 
    ஸ்ரீ கண்டன் இயக்கத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் வனம் படத்தின் விமர்சனம்.
    நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி வெங்கட்டும் நட்பாகிறார்கள்.

    ஸ்மிருதி வெங்கட்டுடன் இணைந்து மர்ம மரணங்கள் குறித்து ஆராய முயற்சிக்கிறார். அப்போது, பல அமானுஷ்ய விஷயங்களும், திடுக்கிடும் அசம்பாவிதங்களும் வெளியே வருகிறது. இறுதியில் மர்ம மரணங்களுக்கான காரணங்களை வெற்றி கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    வெற்றி நடுத்தர குடும்பத்து இளைஞராக வருகிறார். கண்களாலேயே நமக்குத் திகிலூட்டுகிறார். 8 தோட்டாக்கள், ஜீவி படங்களைப் போலவே இதிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான கதாபாத்திரம். கதையின் சீரியஸ் தன்மைக்கு ஏற்றபடி உடல்மொழியும், வசன உச்சரிப்பும் பொருத்தமாக இருக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட் வந்த பிறகு படம் இன்னும் வேகமாக நகர்கிறது.

    புலமையான புத்தகத்தை வாசிக்கும் நிமிடங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஜமீனாக வேல ராமமூர்த்தியின் மிரட்டலான நடிப்பும், வனத்திற்குள் வாழும் பளியர்களின் பரிதாப வாழ்க்கையும் நெஞ்சில் பதிகிறது. வனப்பெண் மல்லியாக அனுசித்தாரா மேக்கப் முகம் உறுத்தல். அழகம் பெருமாளின் சஸ்பென்ஸ் கதாபாத்திரமும், அந்த மாயக்கண்ணாடியும் படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.

    விமர்சனம்

    வனத்தை மையமாக வைத்து திகில், பேண்டஸி, பீரியட் என படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கண்டன். இடைவேளைக்குப் பிறகு படத்தில் பல இடங்களில் டுவிஸ்ட் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. வனத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் காட்சி உருக்கம். இயக்குநர் ஸ்ரீ கண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில் ஆகியோர் திரைக்கதைக்காக உழைத்திருப்பது தெரிகிறது.

    ரான் ஈத்தன் பின்னணி இசையும், விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் படத்தில் ஒன்ற வைக்கிறது. 

    மொத்தத்தில் ‘வனம்’ திகில் குறைவு.
    ருத்ரன் இயக்கத்தில், பாரதி கிருஷ்ணகுமார், கராத்தே வெங்கடேஷ், ஷர்னிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ரூபாய் 2000 படத்தின் விமர்சனம்.
    விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதால், அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் சென்று பணம் எடுக்கிறார்.

    ஏ.டி.எம்.மிஷினில் இருந்து பேனாவினால் எழுதப்பட்டிருந்த 2000 ரூபாய் நோட்டு வருகிறது. அந்த ரூபாய் நோட்டு செல்லாது என்று மருந்து கடைக்காரர் கூறி, மருந்து கொடுக்க மறுத்துவிடுகிறார். அய்யநாதனிடம் வேறு பணம் இல்லை. 2000 ரூபாயை மாற்ற முடியாத நிலையில், மருந்து கிடைக்காமல் குழந்தை இறந்துபோகிறது.

    விமர்சனம்

    குழந்தையை இழந்த அய்யநாதன் கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். இறுதியில் அய்யநாதனின் குழந்தை மரணத்திற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை. 

    நாம் அன்றாடம் கைகளில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டில் என்னென்ன சட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன, அது நமக்கு எப்படியெல்லாம் சாதகமாக இருக்கின்றன என்பதையெல்லாம் தன் திரைக்கதை மூலம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ருத்ரன். நல்ல கதைக்களத்தோடு இறங்கியிருக்கும் இயக்குனர் ருத்ரன் கவனிக்க வைக்கிறார். 

    விமர்சனம்

    பாரதி கிருஷ்ணகுமார் நிஜமாக வழக்குரைஞராக வந்து நீதிமன்றத்தில் வாதிடுவது கம்பீரம். பணத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து மக்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதைக் கூறும் காட்சி புதிது. 

    அரசு வழக்கறிஞராக வரும் கராத்தே வெங்கடேஷ் கச்சிதமான தேர்வு. விவசாயியாக அய்யநாதன், வழக்கறிஞர் அஜிதாவாக ஷர்னிகா உள்படம் பலரும் தேர்ந்த திரைக்கலைஞராக நடித்திருக்கிறார்கள். முற்றிலும் புதுமுகங்களே நடித்திருப்பதால், அவர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள். பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தால் படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இடைவேளைக்குப்பின், வேகம் குறைகிறது. குறைகளை தாண்டி, அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    இனியவன் இசையையும் பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. 

    மொத்தத்தில் ‘ரூபாய் 2000’ புது நோட்டு.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மாநாடு படத்தின் விமர்சனம்.
    துபாயில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.

    இந்த விபத்து மூலம் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நண்பர்களை பணைய கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்ய சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டு கொல்கிறார் சிம்பு. அதன்பின், போலீஸ் சிம்புவை கொன்று விடுகிறது.

    விமர்சனம்

    விழித்து பார்த்தால் சிம்பு மீண்டும் விமானத்தில் பயணிக்கிறார். இந்த நிகழ்வு மீண்டும் நடக்கிறது. அப்போது, டைம் லூப்பில் தான் சிக்கி இருப்பதை சிம்பு உணர்கிறார். இதையடுத்து இதிலிருந்து விடுபட சிம்பு முயற்சி செய்கிறார்.

    இறுதியில் டைம் லூப்பில் இருந்து சிம்பு விடுபட்டாரா? தானும் தப்பித்து முதலமைச்சரையும் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    சிம்பு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். அவருக்கு இணையாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காட்சிகள் தான் அதிகம். இருவருக்கும் மாநாடு பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது. இவர்கள் தவிர ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். கதாநாயகியாக வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு பெரிய வேலையில்லை.

    ரொம்பவும் சிக்கலான, ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு இயக்குனர் வெங்கட் பிரபு, அதை புரியும் வகையில் படமாக்கியிருப்பது சிறப்பு. படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே சீரான வேகத்தில் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். கதாபாத்திரங்கள் தேர்வு, குழப்பம் இல்லாத திரைக்கதை என கைத்தட்டல் பெற்றிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்திற்கு பெரிய பலம் கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பு. தெளிவான திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறார்.

    விமர்சனம்

    யுவனின் இசையில் பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையை விட்டு நம்மால் பிரியமுடியவில்லை. அந்த அளவிற்கு அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மாநாடு’ சிறப்பு.
    சி.ஐ.ஏப் என்னும் ஆங்கிலப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
    ரகசிய உளவாளியாக செயல்பட்டு வருகிறது ஒரு குரங்கு. தகுந்த பயிற்சியுடன் செயல்பட்டு வரும் அந்த குரங்கு, ஒரு தீவில் ரகசியமாக தவறான வேலை செய்து வரும் ஒருவரை கண்காணிக்க அந்த குரங்கு அனுப்பப்படுகிறது. அங்கு எதிர்பாராத விதமாக அந்த குரங்கு சிக்கிக் கொள்கிறது.

    இறுதியில் அந்த தீவில் இருந்து குரங்கு தப்பித்ததா? தீவில் நடக்கும் மர்ம என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் கதையின் நாயகனாக குரங்கை வைத்து அனிமேஷன் முறையில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குரங்கு செய்யும் வேலைகள் நம்மை ஓரளவிற்கு கவர்கிறது என்றே சொல்லலாம். ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் பெரியதாக கைக்கொடுக்கவில்லை. 
    தமிழில் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் போல, இப்படம் அமைந்துள்ளது. காமெடி என்ற பெயரில் ரசிகர்களை சோதிக்கிறார்கள். குறிப்பாக தமிழில் பார்க்கும் போது வசனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    விமர்சனம்

    குழந்தைகளை கவரும் நோக்கத்தில் படத்தை இயக்கி இருக்கிறார் அலி ஜமானி. ஆனால், அது ஒர்க்கவுட் ஆகவில்லை. குரங்கை சுற்றியே திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். பின்னணி இசையையும், ஒளிப்பதிவும் கவரவில்லை.

    மொத்தத்தில் ‘சி.ஐ.ஏப்.’ சுவாரஸ்யம் குறைவு.
    ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம், பிரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், புகழ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சபாபதி படத்தின் விமர்சனம்.
    பிறப்பிலிருந்து பேச்சு சரியாக வராமல், திக்கி திக்கி பேசுகிறார் சந்தானம். இவருடைய அப்பா எம்.எஸ்.பாஸ்கர், அரசு வேலையில் பணிபுரிகிறார். தான் ஓய்வு பெற வேண்டிய நிலை வருவதால் தன்னுடைய மகனை வேலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். 

    பல வேலைகளுக்கு செல்லும் சந்தானத்திற்கு அங்கு நிறைய அவமானங்கள் ஏற்படுகிறது. இதனால் விரக்தி அடையும் சந்தானம், கோபத்தில் ஒருநாள் குடித்து விட்டு வீட்டில் கலவரம் செய்கிறார். 

    விமர்சனம்

    போதையில் இருக்கும் சந்தானத்திற்கு தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் நடக்கிறது. இதன் மூலம் விதி விளையாடுகிறது. பின் சந்தானம் விதியின் கையில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் விதியின் விளையாட்டில் சந்தானம் எப்படி எல்லாம் விளையாடுகிறார்? எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    வழக்கம் போல் படத்தில் சந்தானம் தன்னுடைய கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திக்கி திக்கி பேச மிகவும் சிரமப்பட்டிருப்பது தெரிகிறது. நாயகி பிரீத்தி வர்மாவுக்கு அதிகம் வேலையில்லை. படத்தில் சந்தானத்திற்கு பிறகு எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பு பாராட்டக்குரிய வகையில் இருக்கிறது. தந்தைக்குரிய பொறுப்புடன் நடித்து கைத்தட்டல் வாங்குகிறார். சில காட்சிகளில் மட்டும் வந்து செல்கிறார் புகழ். இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

    விமர்சனம்

    ஒருவர் வாழ்க்கையில் விதி விளையாடுவதை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ். கதைக்களத்தை சிறப்பாக சரியான முறையிலும் கொண்டு சென்றிருக்கிறார். படத்தில் நகைச்சுவை மட்டுமில்லாமல் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். படத்தில் டைமிங் பஞ்ச்சும், நகைச்சுவையும் படத்திற்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி சிறப்பு.

    சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு அருமை.

    மொத்தத்தில் ‘சபாபதி’ சபாஷ் போடலாம்.
    ×