என் மலர்
தரவரிசை
சுனில் டிக்ஸன் இயக்கத்தில் ஜான் விஜய், நிவின் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் தூநேரி படத்தின் விமர்சனம்.
மனைவி, மகள், மகனுடன் வாழும் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்திக் சென்னையிலிருந்து காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். போலீஸ் நிலையத்தில் சார்ஜ் எடுப்பதற்குமுன் நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தனி வீட்டில் குடியேற்றுகிறார்.
வீட்டுக்கு எதிரிலேயே சுடுகாடு இருப்பதால், குழந்தைகள் பயப்படுகின்றனர். அதே சமயம் ஊரில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடக்கிறது. மேலும் நிவின் குடும்பித்தினரையும் அமானுஷ்ய சக்தி தொந்தரவு செய்கிறது. இறுதியில் ஊரில் இருப்பவர்களை கொலை செய்வது யார்? நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தொந்தரவு செய்யும் அமானுஷ்ய சக்தி எது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நிவின் கார்த்திக் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் வழக்கமான நடிப்பில் இருந்து மாறி வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார். தன்னை திட்டுபவர்களை அடிப்பதும், பாசத்தால் உருகுவதுமாக மனதை கவர்ந்திருக்கிறார்.
நிவின் மனைவியாக வரும் மியாஸ்ரீ, அன்பு, பயம், மிரட்டல் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். குழந்தைகள் அஷ்மிதா, நகுல், அபிஜித், மூவரின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.

வழக்கமான பேய் பட வரிசையில் இப்படம் அமைந்தாலும், வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் சுனில் டிக்ஸன். சொல்ல வந்த கதையை தெளிவாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார். திகில் படத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கலையரசன். கலேஷ் மற்றும் அலன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தூநேரி’ திகில்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் தள்ளிப் போகாதே படத்தின் விமர்சனம்.
அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் சில நாட்களில் அனுபமாவிற்கு அமிதாஷுடன் திருமணம் நடக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு அதர்வாவும், அனுபமாவும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அனுபமாவிடம் அதர்வா கூற, அதற்கு அவர் மறுக்க, இருவருக்கும் விவாதம் ஏற்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் அனுபமா வீட்டிற்கு 10 நாட்கள் தங்க முடிவு செய்கிறார் அதர்வா. அதற்கு அனுபமா கணவர் அமிதாஷும் சம்மதிக்கிறார். தன் மீதான காதலை மறக்க முடியாமல் அனுபமா இருக்கிறார் எனத் தெரிந்தால் தன்னுடன் வர வேண்டும் என அதர்வா அனுபமாவிற்கு சவால் விடுக்கிறார். இந்த சவாலில் அதர்வா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து அசத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அனுபமா, அதர்வாவைக் காதலிக்கும் போது ரசிக்க வைக்கிறார். காதலனா, கணவனா என இருவருக்கும் இடையில் தவிக்கும் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார். அனுபமாவின் கணவராக வரும் அமிதாஷ் பிரதான் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த 'நின்னுக்கோரி' என்ற வெற்றிப் படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். இவர் இதற்குமுன் இயக்கிய ரீமேக் படங்கள் ஓரளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால், இந்த படம் சற்று ஏமாற்றம் தான். சில காட்சிகள் வேண்டும் என்றே திணித்தது போல் இருந்தது.
கோபி சுந்தர் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சண்முக சுந்தராமின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘தள்ளிப் போகாதே’ தள்ளாட்டம்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்களின் இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, ஹரி நடிப்பில் வெளியாகி இருக்கும் ரைட்டர் படத்தின் விமர்சனம்.
திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராக பணிபுரிகிறார் சமுத்திரகனி. இவர் காவலர்களுக்கு தனி யூனியன் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுவதால், அதிகாரிகள் சமுத்திரகனி மீது கோபப்பட்டு சென்னைக்கு மாற்றம் செய்கிறார்கள். சென்னைக்கு வேலைக்கு வரும் சமுத்திரகனிக்கு ரைட்டர் வேலை கொடுக்காமல் லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஹரியை பார்த்துக் கொள்ளும் வேலை கொடுக்கிறார்கள்.
அப்போது சமுத்திரகனி கொடுக்கும் திட்டத்தால், ஹரியை பொய் வழக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். குற்ற உணர்ச்சியில் தவிக்கும் சமுத்திரகனி, ஹரியை பொய் வழக்கில் இருந்து மீட்க போராடுகிறார். இதில் சமுத்திரகனி வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சமுத்திரகனி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இரண்டு மனைவிகளை சமாளிப்பது, குற்ற உணர்ச்சியில் புலம்புவது, ஹரியை காப்பாற்ற துடிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். அடி வாங்கும் போது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார் சமுத்திரகனி. முழு கதையும் தன் தோளில் துமந்து நடித்திருக்கிறார். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
சமுத்திரகனிக்கு அடுத்ததாக ஹரி நடிப்பை பாராட்டலாம். நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். பல இடங்களில் நடிப்பால் அசத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் சுப்பிரமணி சிவா, பாசத்தால் நெகிழ வைத்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் இனியா, நடிப்பில் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக போலீஸ் அதிகாரியின் வாகனத்திற்கு முன் குதிரையில் நிற்கும் காட்சி அசத்தல். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். வக்கீலாக வரும் ஜிஎம் சுந்தர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அதுபோல், மகேஸ்வரி, லிசா மற்றும் பலர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

காவல்துறையினரை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிராங்களின் ஜேகப். காவல்துறையில் இருக்கும் அரசியல், பணி சுமை, ஜாதி என அனைத்தையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தில் இல்லாதவர்கள் அனைவரும் அடியாட்கள் என்ற வசனம் தியேட்டரில் கைத்தட்டல் வாங்குகிறது. பிராங்களினின் நேர்த்தியான திரைக்கதைக்கு பெரிய பாராட்டுகள்.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கதையோடு பயணம் செய்து நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறார். பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.
மொத்தத்தில் ‘ரைட்டர்’ சிறந்தவன்.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சரவணன், சேரன், விக்னேஷ், சினேகன், சவுந்தரராஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் விமர்சனம்.
ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன், என நான்கு மகன்கள். சரவணனுக்கு கவுதம் கார்த்திக், வெண்பா என இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள்.
சேரன் தனது அண்ணன் சரவணன் மீது அதிக பாசமாக இருக்கிறார். சரவணன் தனது மகள் வெண்பாவின் குழந்தை தங்கள் வீட்டில்தான் பிறக்க வேண்டும் என நினைக்கிறார். வீடு கட்டுவதற்காக அண்ணன் சரவணனுக்கு தனக்கு சொந்தமான வீட்டு மனையை கொடுக்கிறார் சேரன்.

இதற்கு சரவணன், வீட்டு மனை உன்னுடையது, வீடு கட்டும் செலவு என்னுடையது என்று சேரனிடம் கூறி முடிவு செய்து மொத்த குடும்பமும் ஒன்றாக வாழ முடிவு செய்கிறார்கள். இந்த வீட்டை கட்டுவதற்கு குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் வருகிறது. இறுதியில் பிரச்சனைகளை சமாளித்து அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தார்களா? வீட்டை கட்டினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அண்ணன், தம்பி பாசத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. குடும்பத்தின் பாசப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். பல காட்சிகள் சீரியல் போல் உள்ளது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்.

கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூன்று பேரும் படத்தின் கதாநாயகர்கள் என்றே சொல்லலாம். முழு கதையும் தாங்கி சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக சேரனின் நடிப்பு படத்திற்கு பலம். ஒரு பக்கம் பாசமான அண்ணன், மறுபக்கம் குடும்பத்தை பிரிக்கத் துடிக்கும் தம்பிகள் என பல்வேறு உணர்ச்சிகளை சாதாரணமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
தம்பியாக நடித்திருக்கும் சவுந்தரராஜாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான தன்னுடைய ஸ்டைலில் வில்லத்தனம் செய்திருக்கிறார் டேனியல் பாலாஜி. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

சித்துகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சொந்தமுள்ள வாழ்க்கை என்ற பாடல் உணர்ச்சி பூர்வமாக உள்ளது. பாலபரணியின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை எதார்த்தமாய் பதிவு செய்துள்ளது.
மொத்தத்தில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆனந்தம் குறைவு.
சர்ஜுன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், மெட்ரோ சிரிஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிளட் மணி’ படத்தின் விமர்சனம்.
பிரியா பவானி சங்கர் தான் பணிபுரியும் சேனலில் புதிதாக பொறுப்பேற்கிறார். இந்த நேரத்தில் குவைத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக கிஷோர் அவரது தம்பி இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இதைத்தடுக்கும் வகையில் தனது சேனலில் செய்தி வெளியிடுகிறார் பிரியா. சீனியரான பஞ்சு சுப்பு இதில் உள்ள சிக்கலை எடுத்துக்கூறி இதைக் கைவிடுமாறு கூறுகிறார்.
ஆனாலும் பிரியா, அப்பாவி தமிழர்களைக் காப்பாற்றப் போராட முடிவெடுக்கிறார். இந்த முயற்சியில் பிரியா வெற்றியடைந்தாரா? இல்லையா? அப்பாவி தமிழர்களின் உயிர் காப்பாற்றப்பட்டதா? என்பதை படத்தின் மீதிக்கதை.

பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். ஒரு செய்தியைச் சொல்லி அலுவலகத்தில் அவமதிக்கும் நேரத்தில் இயல்பாக முகபாவனையைக் காட்டுகிறார், கிஷோரின் மகள் பேசுவதைக் கேட்டு உருகுவதும் இலங்கை மண்ணில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைத் தேடிப்போய் பேசுவதும் என்று தன் பணியை நிறைவாகவே செய்திருக்கிறார் பிரியா.
மெட்ரோ சிரிஷ் பிரியாவிற்கு துணையாக இருக்கிறார். கிஷோரின் குவைத் வாழ்க்கையும் அவர் சிறை போராட்டமும் கலங்க வைக்கிறது.

கிஷோரின் தாய், குழந்தை கிராமத்து மனிதர்கள் என்று பலரும் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. சதீஷ் ரகுநந்தன் பின்னணி இசை கதையின் பரபரப்பை நமக்குள் பாய்ச்சுகிறது. பயணம்.., அந்தாண்ட ஆகாசம் பாடல்கள் கலங்கச்செய்கிறது. குவைத்தில் தமிழர்களும் படும் கஷ்டங்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சர்ஜுன்.
மொத்தத்தில் ‘பிளட் மணி’ திகில் பயணம்
.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ராக்கி படத்தின் விமர்சனம்.
ரவுடிசம் செய்து வரும் பாரதிராஜாவுடன் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வசந்த் ரவியின் அம்மா ரோகிணியை கொலை செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் வசந்த் ரவி, பாரதிராஜா மகனை கொல்கிறார்.


ஜெயிலுக்கு சென்று பல ஆண்டுகள் கழித்து திரும்பும் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார். ஆனால், பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்ய துடிக்கிறார். இறுதியில் பாரதிராஜா வசந்த் ரவியை கொலை செய்தாரா? வசந்த் ரவி பாரதிராஜாவின் தொந்தரவை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மா, தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.
பாரதிராஜா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். வேறொரு பாரதிராஜாவை பார்க்க முடிகிறது. மகனை கொன்றவனை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். திரைக்கதை நகர்வுக்கு ஏற்றார் போல் ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் வலு சேர்த்து இருக்கிறது. கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் 'ராக்கி' வீரன்.
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கைப்பற்றியது. இதை மையமாக வைத்து 83 படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
1983 ஆம் ஆண்டு கபில்தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இங்கிலாந்து செல்கிறது. அங்கு, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிவிடும் என்று பலரும் கூறி வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் செல்கிறது.
இறுதிபோட்டிக்கு செல்வதற்கு இந்திய அணி பல அவமானங்கள் சந்திக்க நேரிடுகிறது. இதைக் கடந்து இறுதியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி எப்படி உலகக்கோப்பை கைப்பற்றியது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கபில்தேவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரன்வீர் சிங். உடல் மொழி, விளையாட்டு, சோகம், அவமானம் என தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர்கள் கேட்கும் போது நாங்க ஜெயிப்போம் என்று கூறும்போதும், பேருந்தில் டீம் மீட்டிங் நடத்தும் போதும், வெற்றி பெற்றும் மற்றவர்கள் அதை பெரியதாக பார்க்காத போதும், ரன்வீர் சிங்கின் முகபாவனைகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
ரன்வீர் சிங்கின் மனைவியாக வரும் தீபிகா படுகோனே, அவருக்கு ஊக்குவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் ரசிக்கும்படி அவரது கதாபாத்திரம் உள்ளது. மற்ற வீரர்களாக வருபவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கபீர் கான். கிரிக்கெட்டர்களின் கனவாக கருதப்பட்டும் லார்ட்ஸ் மைதானத்திற்குள் இந்திய அணி அனுமதி மறுக்கப்படும் போது, 35 வருடங்களுக்கு முன்பு சுதந்திரம் கிடைச்சுது, ஆனால் இன்னும் மரியாதை கிடைக்கவில்லை என்ற வசனம் கேட்கும்போது பார்ப்பவர்களை பரிதாப்பட வைக்கிறது. அதுபோல், ரன்வீர் சிங் சிக்ஸ் அடிக்கும்போது வெளியில் இருந்து கபில்தேவ் பிடிப்பது, தன் விளையாட்டை அமர்நாத் ரசிப்பது மற்றும் திட்டுவது ஆகிய காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் போலவே இருப்பவர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததற்கு பெரிய கைதட்டல். பல காட்சிகள் பார்க்கும்போது நாம் இந்தியர் என்ற உணர்வை கொண்டு வந்திருக்கிறார். 83 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை திரைப்படத்தோடு காட்சிபடுத்தியது சிறப்பாக இருந்தது.
அசிம் மிஷ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பக்கியத்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பிரிதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘83’ வரலாறு.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி இருக்கும் புஷ்பா படத்தின் விமர்சனம்.
செம்மரக் கடத்தல் கும்பல் தலைவரான அஜய் கோஷ்யுடன் வேலை செய்கிறார் நாயகன் அல்லு அர்ஜுன். செம்மரங்களை போலீசாருக்கு தெரியாமல் லாவகமாக கடத்திச் செல்லும் தைரியம் அல்லு அர்ஜுனுக்கு இருப்பதால், அவருக்கு பொறுப்புகளையும் பணத்தையும் கொடுக்கிறார் அஜய் கோஷ்.
ஒரு கட்டத்தில் அல்லு அர்ஜுனை பார்ட்னராகவும் சேர்த்துக் கொள்கிறார் அஜய் கோஷ். இதன் பிறகு அஜய் கோஷின் இன்னொரு பார்ட்னரான சுனிலால், அல்லு அர்ஜுனுக்கு சிக்கல் வருகிறது. இறுதியில், அந்த சிக்கலை அல்லு அர்ஜுன் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் திரை முழுவதும் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார் அல்லு அர்ஜுன். தோளை ஒரு பக்கமாகச் சாய்த்து நடக்கும் மேனரிசம், பன்ச் வசனங்கள், தைரியம் என நடிப்பில் மாஸ் காண்பித்து இருக்கிறார். நடனக் காட்சிகள், ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவற்றில் கவனிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மற்றொரு பக்கம் பாடல் காட்சியில் வந்து அசத்தி இருக்கிறார் சமந்தா. அஜய் கோஷ் மற்றும் சுனில் ஆகியோர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.

வழக்கமான கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுகுமார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம், ரசிகர்களுக்கு ஏற்ற கமர்சியல் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார். 2ஆம் பாகம் இருப்பதால் வேண்டுமென்றே திரைக்கதையின் நீளத்தை வைத்ததுபோல் இருக்கிறது.
கேங்க்ஸ்டர் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் மிரோஸ்லா கூபா. தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார்.
மொத்தத்தில் ‘புஷ்பா’ சரவெடி.
மனோ வெ.கண்ணாதாசன் இயக்கத்தில் அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், மிதுன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கடைசி பக்கம் படத்தின் விமர்சனம்.
நாயகி அம்ருதா ஸ்ரீநிவாசன் வீட்டில் தனியாக இருக்கும் போது, மர்ம நபர் ஒருவர், கொலை செய்து விடுகிறார். இதை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலசந்திரன் விசாரிக்க ஆரம்பிக்கிறார். பல கட்ட விசாரணையில் கொலை செய்த நபரை கைது செய்கிறார். அதன்பின் கொலை செய்ய சொன்னது வேறொரு மர்ம நபர் என்று தெரிந்தவுடன் அவரை தேடி அலைகிறார்.
இறுதியில் அம்ருதாவை கொலை செய்தவரை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்டுபிடித்தாரா? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீநிவாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயல் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். காமமா... காதலா... என்று பரிதவிக்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
காதலனாக வரும் விக்னேஷ் சண்முகம், காதலிக்கும் போதும், காதலை வெறுக்கும் போதும், நடிப்பில் வித்தியாசம் காண்பித்து கவர்ந்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும் மிதுன் கொடுத்த வேலையை சிறப்பாகவே நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் ராஜேஷின் நடிப்பு படத்திற்கு பலம்.

கொலை, கொலையின் பின்னணி, காதல், காமம், புத்தகம் என வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குனர் மனோ வெ.கண்ணாதாசன். ஆரம்பத்திலேயே கதைக்குள் அழைத்து செல்லும் திரைக்கதை, இறுதி வரை விடாமல் பார்ப்பவர்களை கட்டி வைத்திருப்பது சிறப்பு. காட்சியமைப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் இயக்குனர் மனோ செ.கண்ணதாசன். காதலையும், காமத்தையும் அதிகம் மிகைப்படுத்தாமல் சொல்லியிருப்பது அருமை. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
பிரவின் பாலுவின் ஒளிப்பதிவும், ஜோன்ஸ் ரூபர்டின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கடைசி பக்கம்’ சுவாரஸ்யம்.
ஜோன் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜென்டயா, பெனிடிக்ட் கம்பர்பேட்ச் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் விமர்சனம்.
கடந்த பாகம் ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் முடிந்த இடத்திலிருந்து படத்தின் கதை ஆரம்பிக்கிறது. பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. இதனால் பீட்டர் பார்க்கரும் அவன் நண்பர்களும் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில்கூட இடம் கிடைக்கவில்லை. இதனால், தான் ஸ்பைடர் மேன் என்பதை ஒட்டுமொத்த உலகமும் மறந்துவிடும்படி செய்ய டாக்டர் ஸ்ட்ரேஞ்சிடம் உதவி கேட்கிறான் பீட்டர் பார்க்கர்.
அந்த முயற்சியில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சனையில், பல்வேறு பிரபஞ்சங்கள் திறந்துகொள்கின்றன. அங்கிருந்து பழைய வில்லன்கள் இந்த உலகிற்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ் உதவியுடன் ஸ்பைடர் மேன் அவர்களை அழிக்க நினைக்கிறான். இறுதியில் ஸ்பைடர் மேன் எப்படி பழைய வில்லன்களை சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதற்குமுன் வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்களில் மிக விறுவிறுப்பான திரைப்படம் இது என்றே சொல்லலாம். முந்தைய பாகங்களில் உள்ள கதைகளின் சாயல் இல்லாமல், புதுவிதமான பாணியில் இயக்குனர் ஜோன் வாட்ஸ் கதையை உருவாக்கியது பாராட்டுக்குரியது.
அதிரடி காட்சிகளோடு துவங்கும் படம், ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை என்று விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சக்தி 'ஸ்பைடர் மேன்' படங்களுக்கு உண்டு. அதை 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறது.

படத்தில் டாக்டர் ஆக்டோபஸ், க்ரீன் காப்லின், மணல் மனிதன், மின்சார மனிதன், பல்லி மனிதன் வில்லன்களும், ஸ்பைடர் மேன்களும், ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்துக்க முடியாதளவிற்கு திரையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
நடிகர்கள், கிராபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை எல்லாம் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதால், இந்த வருடத்தின் சிறந்த சூப்பர் ஹீரோ படம் என்றுகூட இந்தப் படத்தைச் சொல்லலாம்.
மொத்தத்தில் ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’ சிறப்பு.
அர்ஜுனன் ஏகலைவன் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஊமைச் செந்நாய் படத்தின் விமர்சனம்.
தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நாயகன் மைக்கேல் தங்கதுரை. இவரின் முதலாளி கஜராஜ், அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரைப் பின் தொடரும் வேலையை கொடுக்கிறார். கஜராஜின் பொய் சொல்லி தன்னிடம் இந்த வேலையை கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்த மைக்கேல், வேலையை விட்டு விலகுகிறார்.
மேலும் ஜெயக்குமாருக்கு போன் செய்து உங்களை சிலர் பின் தொடர்கிறார்கள் என்ற விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் கஜராஜ், அடியாட்களை வைத்து மைக்கேலின் காதலி சனம் ஷெட்டியை கடத்துகிறார். இறுதியில் மைக்கேல் தனது காதலி சனம் ஷெட்டியை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த மைக்கேல் தங்கதுரை இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்து இருக்கிறார். அதிக வசனங்கள் இல்லாமல் உணர்வுகளை நடிப்பால் வெளிப்படுத்தியதற்கு பாராட்டுகள்.
மைக்கேல் தங்கதுரையின் காதலியாக வரும் நாயகி சனம் ஷெட்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைக்கேல், சனம் ஷெட்டியின் காதல் காட்சிகள் ஓரளவிற்கு ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. சேதுவாக வரும் சாய் ராஜ்குமார் வில்லத்தனத்தில் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். டிடெக்டிவாக வரும் கஜராஜ், அமைச்சர் உதவியாளர் ஜெயக்குமார், அருள் டி சங்கர் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

டிடெக்டிவ், கிரைம், திரில்லர் கதையை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன். படத்தில் நிறைய காட்சிகள் மிஷ்கின் பாணியில் இருக்கிறது. ஹீரோவுக்கு பிளாஸ்பேக் இல்லாமல் அவரை பற்றி வசனங்கள் மூலம் சொல்லியிருப்பது சிறப்பு. அதுபோல் பல விஷயங்கள் வசனங்கள் இல்லாமல் புரியும் படி எடுத்திருக்கிறார். கண்டெயினர் சண்டைக்காட்சி மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் அருமை.
கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். கிரைம் திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சிவா.
மொத்தத்தில் ‘ஊமைச் செந்நாய்’ நன்றாக பேசும்.
பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள ‘மட்டி’ படத்தின் விமர்சனம்.
ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி. இவர்கள் இருவரும் ஒரு பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார்கள். கார்த்தி கல்லூரி படிக்கும் போது மட்டி ரேசில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர். மட்டி ரேசில் தோற்றவர் கார்த்தியை தோற்கடிக்க சபதம் எடுக்கிறார். இந்த சபதத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.
தம்பி கார்த்தியை காக்க அண்ணன் ரிதன் களமிறங்குகிறார். இறுதியில் அண்ணன், தம்பி இருவரும் ஒன்று சேர்ந்து வில்லனை எதிர்த்தார்களா? மட்டி ரேசில் ஜெயித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருக்கிறார்கள். ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். தம்பியாக கார்த்தி அண்ணனை முறைப்பதும், கிளைமாக்சில் அண்ணனுடன் இணைந்து வில்லனை எதிர்க்கும் இடங்களில் ஈர்க்கிறார். ஆனால், இரண்டு பேர் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகிகளா வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை இல்லை.
மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகபல். ஹாலிவுட் படங்களில் மட்டுமே இது மாதிரியான ரேஸ் காட்சிகளின் பிரமாண்டத்தைப் பார்த்திருக்கிறோம். தமிழில் இதைப் பார்க்க அழகாக இருக்கிறது.

படத்தில் காதல், காமெடியை விட ஆக்சன் காட்சிகள் தான் படத்தில் மேலோங்கி இருக்கிறது. அனைத்து ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும்படி உள்ளன. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
காடு மலை என தாறுமாறாக வேகமாக செல்லும் கார்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் பயணித்து இருக்கும், ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரதீஷுக்கு பெரிய பாராட்டுகள். கே. ஜி. எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசை படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் ‘மட்டி’ ஆக்சன் விருந்து.






