என் மலர்
தரவரிசை
இறையன்பு, செலீனா மற்றும் ராகவ ஹரி கேசவா இயக்கி நடித்து இருக்கும் இடரினும் தளரினும் படத்தின் விமர்சனம்.
ராகவ ஹரிகேசவாவும், இறையன்பும் அண்ணன் தம்பிகள். இதில் இறையன்பு அண்ணன் மீது பொறாமைப்பட்டு மந்திரவாதி ரமணாவிடம் சொல்லி சூனியம் வைக்க சொல்கிறார். இதனால், ராகவ ஹரிகேசவாவும், அவரது மனைவி செலீனா மற்றும் மகள் ஆகியோர் பாதிக்கப்படுகிறார்கள்
இறுதியில் சூனியத்தில் இருந்து ராகவ ஹரிகேசவா தனது குடும்பத்தினருடன் தப்பித்தாரா? தம்பி இறையன்பு அண்ணனுக்கு சூனியம் வைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ராகவ ஹரிகேசவா, இறையன்பு, செலீனா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். மந்திரவாதியாக வரும் ரமணா ஓவர் ஆக்டிங் செய்கிறார். காட்டுவாசி தலைவனாக வரும் ராதாரவி அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்ததோடு இயக்கவும் செய்திருக்கிறார் ராகவ ஹரி கேசவா. படம் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிறிய பட்ஜெட்டுக்கு உண்டாக தெளிவு, தரம் கூட படத்தில் இல்லை. காட்சிகள் ஆங்கும் இங்குமாக இருக்கிறது. வேண்டுமென்றே பல காட்சிகளை திணித்து இருக்கிறார். சகாயத்தின் ஒளிப்பதிவும் சௌமியனின் இசையும் படத்திற்கு பலவீனம்.
மொத்தத்தில் ‘இடரினும் தளரினும்’ சுமாரகம்.
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே படத்தின் விமர்சனம்.
பிளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசி வருகிறார்.. காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே பணம் சம்பாதிக்கிறார். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் பயந்து வாழ்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். அதே சமயம், நந்தினியை காதலிக்க ஆரம்பிக்கிறார் அரவிந்த். ஒரு கட்டத்தில் அரவிந்த் கெட்டவன் என்று நந்தினிக்கு தெரியவருகிறது. இறுதியில் அரவிந்தை விட்டு நந்தினி சென்றாளா? போலீஸ் பிடியில் அரவிந்த் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரையில் பரவலாக அறியப்பட்ட நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன். எதிர்மறை நிழல் படிந்த கதாபாத்திரம்தான். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். செல்போன் மூலம் சிக்கிக்கொள்ளும் பெண்களிடமும் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில் சிக்கியவர்களிடம் மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இரு முகங்களைக் காட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்த ஸ்வேதா பண்டிட் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பல் பின்னலில் உள்ளவனாக வரும் ஆப்பிரிக்க நடிகர் நன்றாகவே நடித்திருக்கிறார்.

செல்போன்களைக் கொண்டு பெண்கள் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள்? ஒரு சாதாரண செல்போன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வு வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் வரதராஜ். தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது, குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது இப்படம் சொல்லியிருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை.
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவையும் விவேக் சக்ரவர்த்தியின் இசையையும் ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ விழிப்புணர்வு.
அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி இருக்கும் அன்பறிவு படத்தின் விமர்சனம்.
மதுரையில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார் நெப்போலியன். அவரிடம் உதவியாளராக பணிபுரியும் விதார்த், அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனிடையே விதார்த்தின் நண்பர் சாய் குமார், நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொள்கிறார்.
அந்த தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. இதனால் பதவி சாய் குமாருக்கு போக ஆத்திரம் அடையும் விதார்த், நெப்போலியன் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார். இரு குழந்தைகளும் தனித்தனியே வளர்கிறது. அப்பாவிடம் வளரும் அறிவு எப்படியாவது இந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கவேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். இறுதியில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் முறையாக இருவேடங்களில் நடித்திருக்கிறார். இரு கதாப்பாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்காதது வருத்தம். நக்கல் கலந்த நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும், மற்ற கதையை போன்று கதாபாத்திரங்கள் இருப்பதால் சற்று தொய்வு ஏற்படுகிறது.
அட்லியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதை புதியதாக இல்லையென்றாலும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாரசியமாக எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம் பெறும் கதைகளை போன்று இக்கதையும் இருக்கிறது. சூர்யா நடித்த வேல் திரைப்படத்தை நினைவுப்படுத்துவதாக ரசிகர்களின் முணுமுணுப்பாக இருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்ற வைத்தாலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. யுவன் பாடிய ஒரு பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘அன்பறிவு’ அன்பு குறைவு.
பரணி ஜெயபால் இயக்கத்தில் பிரேம்ஜி, எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் படத்தின் விமர்சனம்.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜி, கார் மெக்கானிக்காகவும் கார் ரேசராகவும் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் அக்கா தேவர்தர்ஷி மற்றும் மாமா விடிவி கணேஷின் அரவணைப்பில் இருந்து வருகிறார். விடிவி கணேஷும், தொழிலதிபர் எஸ்.பி.பி.சரணும் நெருங்கிய நண்பர்கள். ஒரு தொழிலுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி சரணை கடன் வாங்க சொல்கிறார் விடிவி கணேஷ்.
அதன்படி அவரும் ஒருவரிடம் கடன் வாங்குகிறார். அந்த பணத்தை சிலர் ஏமாற்றி விடுகின்றனர். இவர்களுக்கு கடன் கொடுத்தவர் பெரிய ரவுடி என்பதால், கடனை கேட்டு மிரட்டுகிறார். இறுதியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கிறார்களா? ஏமாற்றியவர்கள் யார்? அவரை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் பிரேம்ஜி வழக்கம் போல் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். இயக்குனர் இவரை சரியாக உபயோகப் படுத்தியிருக்கிறார். மதில் மேல் பூனை, டக்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பரணி ஜெயபால் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு சிறிய கதையை எடுத்துகொண்டு அதை 1 மணி நேரம் 40 நிமிடத்தில் சொல்லி முடித்திருக்கிறார். திரைக்கதையை ரசிக்கும் படி இயக்கியதற்கு பாராட்டுகள். எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜய் இப்படத்தின் காட்சிகளை சரியாக வடிவமைத்துள்ளார். படத்திற்கு பாடல்களும் பின்னணி இசையும் பிரேம்ஜியே செய்திருப்பதால் அவருக்காவே மாஸ் பிஜிம் போட்டுள்ளார். பின்னனி இசை படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ டவுண்லோடு செய்யலாம்.
ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவி லதா நடிப்பில் வெளியாகி இருக்கும் மதுரை மணிக்குறவன் படத்தின் விமர்சனம்.
மதுரையில் உள்ள மார்க்கெட்டில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பது மற்றும் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார் நாயகன் ஹரிக்குமார். அதேசமயம் அதிகம் வட்டிக்கு பணம் வாங்கும் வில்லன் காளையப்பனுடன் மோதல் ஏற்படுகிறது. அதேபோன்று அந்த ஊர் எம்.எல்.ஏ சுமனுடனும் சாராய வியாபாரி சரவணனுடனும் ஹரிக்குமாருக்கு மோதல் ஆகிறது.
இது ஒருபுறம் இருக்க ஹரிக்குமாருக்கும் அவரது மாமன் மகளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், சுமனின் சூழ்ச்சியால் அத்திருமணம் நின்றுவிட, மாதவி லதாவை திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் சுமன், சரவணன் மற்றும் காளையப்பன் மூவரும் சேர்ந்து ஹரிக்குமாரை கொலை செய்து விடுகின்றனர்.

அதன்பின் ஹரிக்குமாரை போன்றே உருவம் கொண்ட ஒருவர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் சேருகிறார். இதைக்கண்டு வில்லன்கள் அதிர்ச்சியடைகிறார்கள். இறுதியில் ஹரிக்குமார் இறந்தாரா? இன்ஸ்பெக்டராக வந்த நபர் யார்? ஹரிக்குமாரை கொலை செய்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
நடன இயக்குனாரக இருந்து பிறகு நடிகராக வலம் வரும் ஹரிக்குமார், இப்படத்தில் இரு வேடங்களில் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் ஆக்ஷன் காட்சியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகி மாதவி லதா நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். வில்லன்களாக நடித்திருக்கும் சுமன், சரவணன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் டில்லி கணேஷ் அவர்களுடைய பணியை சரியாக செய்துள்ளனர்.

இந்த படத்தை இயக்குனர் ராஜரிஷி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை தமிழ் சினிமாவில் தொடர்ந்து இடம்பெறும் கதைகளில் ஒன்றாக இருக்கிறது. பெரிதாக கதைக்கு முக்கியதுவம் கொடுக்காதது படத்தின் சரிவு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்பதே பார்வையாளர்களின் வருத்தமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.கே இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மதுரை மணிக்குறவன்’ சம்பவம் சரியில்லை.
மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் தண்ணி வண்டி படத்தின் விமர்சனம்.
நாயகன் உமாபதி மதுரைப்பகுதியில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறார். நாயகி தாமனியைச் சந்திக்கும் உமாபதிக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. இந்நிலையில், மதுரைக்குப் புதிதாக வரும் வருவாய்த்துறை பெண் அதிகாரி எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்கிறார்.
மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பவர்களை அழைத்து எச்சரிக்கிறார். ஆனால் அந்த அதிகாரி செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிகிறது. ஒரு கொலை தொடர்பான வீடியோவை தனக்கே தெரியாமல் தாமினி வெளியிட, அவரையும் காதலன் உமாபதியையும் பழிவாங்க நினைக்கிறார் அந்த அதிகாரி.
இறுதியில் அதிகாரி உமாபதியை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நிஜத்தில் தம்பி ராமையாவின் மகனான உமாபதி படத்திலும் அவரது மகனாகவே வருகிறார். நல்ல உயரம், சண்டைக்காட்சியில் இயல்பாக நடிப்பது என்று கதாநாயகனுக்கான எல்லாம் இருந்தும் அவருக்கு நல்ல கதை கிடைக்காதது சிக்கல்தான். பாலசரவணனுடன் சேர்ந்து உமாபதி காட்டும் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
வித்யூலேகா, தேவ தர்ஷினி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். சம்ஸ்கிருதி பொம்மையாக வந்து உமாபதியைக் காதலிக்கிறார். படத்தில் அவருக்கு அதிக வாய்ப்பில்லை. பெண் அதிகாரியான வரும் வினிதாலால்தான் படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார். இன்னொரு நீலாம்பரியாக விரைப்பு காட்டுகிறார். அவர் வரும் காட்சிகள் நல்ல பொழுது போக்கு.
திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் இருப்பதால் படத்தின் பல காட்சிகள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் செல்கிறது. படத்தை எடுத்த விதத்திலும் இயக்குநர் மாணிக்க வித்யா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மோசஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். வெங்கட்டின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘தண்ணி வண்டி’ தள்ளாட்டம்.
சத்தியபதி இயக்கத்தில் முத்து, சரண்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் லேபர் படத்தின் விமர்சனம்.
சென்னையில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் படம். கட்டிட தொழிலில் மேஸ்திரியாக வேலை செய்யும் கதைநாயகன் தன் மகனை என்ஜினீயருக்கு படிக்க வைக்கிறார். இதற்காக நிறைய பேர்களிடம் கடன் வாங்குகிறார். இன்னொரு பக்கம், மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமை காத்திருக்கிறது. இதற்காக ஏல சீட்டு நடத்தும் தம்பதியிடம் பணம் கட்டுகிறார். அந்த தம்பதிகள் சினிமா படம் தயாரிக்க விரும்புகிறார்கள். ஏல சீட்டின் மூலம் வசூலான தொகை முழுவதையும் சினிமாவில் முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களால் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் போகிறது.
அதே கட்டிடத்தில், கொத்தனாராக வேலை செய்கிற முத்துவும், சரண்யாவும் கணவன்-மனைவி. முத்து குடிகாரர். கணவர் திருந்தாதை எண்ணி சரண்யா கவலைப்படுகிறார். இந்த நிலையில், முத்து தலையில் அடிபட்டு இறந்து போகிறார். கணவரை இழந்த சரண்யாவும், வட மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெள்ளையும் வாழ்க்கையில் இணைகிறார்கள். இருவரும் கைகோர்த்தபடி செல்வது போல், படம் முடிகிறது.
யோகி பாபுவை போல் இருக்கும் ஒருவரை தேடிப்பிடித்து கதைநாயகன் ஆக்கியிருக்கிறார்கள். அவர் மகனின் படிப்புக்காக ஒவ்வொருவரிடமும் சென்று கடன் கேட்பது, கணவன் குடித்துவிட்டு வந்ததைப் பார்த்து சரண்யா ரவிச்சந்திரன் அழுது புலம்புவது, திருநங்கை பட்ரோஸ் அடிவாங்குவது ஆகிய காட்சிகள் உருகவைக்கும் சோகங்கள்.
கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை இயல்பாக படமாக்கியிருப்பதற்காக டைரக்டர் சத்தியபதியை பாராட்டலாம். கதையும், காட்சிகளும் மெதுவாக நகர்வதை தவிர்த்து, விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘லேபர்’ உழைப்பாளி.
தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் விமர்சனம்.
சத்யராஜ் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். இவர் திருமணமான தனது மகளுக்கு ஏற்பட்ட வன்கொடுமையைத் தட்டிக்கேட்கக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கிறார். அப்படி என்ன குற்றம் நடந்தது? அதைச்செய்தவர்கள் யார்? என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன்.
சத்யராஜ் இளமை தோற்றத்துடன் குற்றவாளிகளைக் கடத்தப்பட்ட நிலையில் அறிமுகமாகிறார். மகளின் நிலைக்காக மனம் கலங்குவதும், கோபத்தில் முகம் சிவப்பதும், கவலைப்படாமல் வில்லனின் தவிப்பதை ரசிப்பதும் என்று அட்டகாசம் செய்திருக்கிறார். படத்தை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் முழுவதும் பயணிக்கும் ஹரீஸ் உத்தமன், மது சூதனன் இருவரும் பதைக்க வைக்கும் மனிதர்களாக வந்து, பரிதவிப்பது விறுவிறுப்பு.

மகளாக ஸ்மிருதி வெங்கட் அமைதியான நடிப்பில் நம்மைக் கவர்கிறார். அவரது கணவராக வரும் யுவன் மயில்சாமிக்கு மனதில் நிற்கும் பாத்திரம். சார்லி சில காட்சிகளே வந்தாலும் நிறைவு. ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ் ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஒரு சின்ன விஷயத்தைக் கையிலெடுத்துப் பரபரப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் தீரன். சீக்கிரம் ’அது’ கிடைத்து விடவேண்டுமே என்கிற பரிதாபம் நமக்கும் வந்து விடுகிறது. கிளைமேக்ஸ் காட்சி ரசிக்க வைக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எப்படியெல்லாம் தண்டனை தரலாம் என்று இயக்குநர் தீரன் சமுதாய நோக்கோடு இப்படத்தை கொடுத்து இருக்கிறார்.

சமீபத்திய இளம்பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு தாங்களே துணிச்சலுடன் களம் இறங்க ஆரம்பித்திருக்கும் அளவுக்கு பாலியல் குற்றம் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் படம் வந்திருப்பது மிகவும் பொருத்தம். திரைக்கதையில் மட்டும் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் படத்தில் ஒரு வேகம் கிடைத்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் கருட வேகா ஆஞ்சியின் கடும் உழைப்பு தெரிகிறது. இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் திரில்லர் படங்களுக்குத் தேவையான பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ காலத்தின் தேவை.
கவின் இயக்கத்தில் முகேன், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வேலன்’ படத்தின் விமர்சனம்.
பொள்ளாச்சியில் செல்வந்தர் பிரபுக்கு மகனாக இருக்கிறார் முகேன். ஒழுங்காக படிக்காமல், பன்னிரெண்டாம் வகுப்பை 3 முறை எழுதி பாஸ் செய்ததால் இவர் மீது கோபப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கிறார் பிரபு. ஒருவழியாக கல்லூரிக்கு செல்லும் முகேன், அங்கு நாயகி மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.
மீனாட்சி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தன் காதலை மலையாளத்தில் ஒருவரை வைத்து கடிதம் எழுதி கொடுக்கிறார். அந்த கடித்தால் முகேனுக்கும், அவரது காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதே சமயம் கேரளா எம்.எல்.ஏ. ஹரிஸ் பெரடி, பிரபு மீது இருக்கும் பகையை தீர்க்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் முகேன் காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? ஹரிஸ் பெரடிக்கும் பிரவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த முகேன், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முகேனுக்கு இது சிறப்பான அறிமுகம் என்றே சொல்லலாம். முதல் படம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடி, நடனம், ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காதலுக்காக உருகுவது, தந்தை பாசத்தில் சண்டை போடுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முகேனுடன் செல்லமாக சண்டைபோட்டு கவனிக்க வைத்திருக்கிறார் ப்ரிகிடா. முதல் பாதியில் ராகுலும், இரண்டாம் பாதியில் சூரியும் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பிரபு, ஹரிஸ் பெரடி, தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
காதல், காமெடி, பாசம் என்று கமர்சியல் அம்சத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவின். நேர்த்தியான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் கலர்ப்புல்லாக இவரது கேமரா படம் பிடித்து இருக்கிறது. கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக முகேன் பாடிய சத்தியமா என்ற பாடல் முணுமுணுக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வேலன்’ வென்றான்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ, ரம்யா ரம்பீசன், பால சரவணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் விமர்சனம்.
தனியார் ஐடி ஊழியர்களான நாயகன் ரியோ மற்றும் பால சரவணன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக கூறி ஒரு தொகையை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், நடனமாடிய நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது. மேலும், பால சரவணனின் தங்கையும் தொலைந்து விடுகிறார். வேலையும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்பி கேட்க, ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும் தங்கையையும் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இறுதியில் தொலைந்த பணத்தை ரியோ, பால சரவணன் இருவரும் கண்டுபிடித்தார்களா? பால சரவணனின் தங்கைக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ரியோ நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் கதாப்பாத்திரம் ரசிக்கும்படி உள்ளது. கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் நடிப்பில் எதார்த்தம். ரோபோ சங்கர், பால சரவணன், தங்கதுரை அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். பல இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

காமெடி கலந்த நல்ல சிரிக்க வைக்ககூடிய திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். சிறிய கதையை முழு நீள திரைக்கதையாக கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் காதுகளுக்கு இனிமையாக்கியுள்ளது.
மொத்தத்தில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ குட் பிளான்.
மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் ருத்ரா, சுபிக்ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் விமர்சனம்.
கதாநாயகி ஸ்ருதி (சுபிக்ஷா) வானொலியில் பணிபுரிந்து வருகிறார். அச்சமயத்தில் இயற்கை ஒலிகளை பதிவு செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதனை தேடி, ஒலி பதிவு செய்வதில் கைதேர்ந்தவரை தேடி செல்கிறார் நாயகி. அப்பொழுது கதாநாயகன் கதிர் (ருத்ரா) என்ற ஒலி வல்லுனரின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து ஒலி பதிவு செய்ய பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. பதிவு செய்த ஒலிகளுக்கு பல விருதுகளும் அங்கிகாரமும் கிடைக்கிறது. பிறகு மீண்டும் அவர்களுக்கு மேளதாளங்களை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்க, இருவரும் பயணிக்கிறார்கள்.
இவர்கள் காதல் ஆரோக்கியமாக சென்று கொண்டிருக்கிற நேரத்தில் அமெரிக்கருடன் நெருங்கி பழகுகிறார் ஸ்ருதி. இது பிடிக்காத கதிர் சண்டையிட்டு ஸ்ருதியுடனான காதலை முறித்துவிடுகிறார். இறுதியில் இவர்கள் காதலில் இணைந்தார்களா? மேளதாளங்களை பதிவு செய்யும் பணியை முடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாள திரைப்படத்தில் நடித்த ருத்ரா இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். அவருடைய நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருந்தாலும் சில இடங்களில் புதுமுக நாயகன் என்ற தோற்றம் வெளிப்படையாக தெரிகிறது.
கடுகு, கோலி சோடா 2 போன்ற படங்களில் நடித்து அனைவருக்கும் அறிமுகமானவர் சுபிக்ஷா. இந்த படத்திலும் அவருடைய வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் இவருடைய நடிப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.

சிறிய கதையை வைத்துகொண்டு ஒரு முழு நீள திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் மகேஷ் பத்மநாபன். கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். சில இடங்களில் திரைக்கதை ரசிகர்களுக்கு தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
ஒளிப்பதிவு பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார் பிஜு விஸ்வநாத். ராஜேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. ஒலி சம்மந்தப்பட்ட படம் என்பதால், தனி கவனம் செலுத்தி ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ இனிக்கவில்லை.
ராகுல் சன்கிரிடியான் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தின் விமர்சனம்.
நாயகன் நானி (வாசு தேவ் காண்ட்டா) குறும்படம் இயக்கவேண்டும் என்ற கனவுவோடு பயணிக்கும் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். பல கனவுகளோடு அவனுடைய கதையை இயக்குவதற்கான வேலையை துவங்குகிறார். சொந்த முயற்சியில் அவனுடைய கதைக்காக பல நடிகர், நடிகைகளை தேர்வு செய்தும், ஒரு வழியாக குறும்படத்தை முடித்து விடுகிறார்.
இதற்கிடையில் குறும்படத்தின் படப்பிடிப்பில் நானிக்கு தலையில் அடிப்பட்டு சிறிய காயம் ஏற்படுகிறது. பின்பு தயாரிப்பாளரிடம் முழுநீள படத்திற்கு கதை சொல்லி ஒப்புதல் வாங்கி விடுகிறார். அந்த படமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவிடுகிறது.

பிறகு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அந்த படத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ய திட்டமிடுகின்றனர். அப்பொழுது இந்த கதை எழுத்தாளர் ஷியாம் சிங்கா ராயின் கதை, இதனை இயக்குனர் எந்த அறிவிப்பும் இல்லாமல் இயக்கிவிட்டதாக குற்றம்சாட்டி ஒரு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.
இறுதியில் நானி இயக்கிய கதை திருட்டு கதையா? சொந்த கதையா? வழக்கை எப்படி நானி சமாளித்தார்? நானிக்கும் ஷியாம் சிங்கா ராய்க்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.
முதல் பாதியில் வாசுதேவ் காண்ட்டாவாகவும் இரண்டாம் பாதியில் ஷியாம் சிங்கா ராயாகவும் நானி அவருடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பெரிய வரவேர்பை பெற்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் 60, 70களில் வரும் தோற்றத்தை இயல்பாக வெளிப்படுத்திருக்கிறார். சாய் பல்லவியும், கீர்த்தி ஷெட்டியும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சாய் பல்லவி இந்த படத்தில் அவருடைய நடன திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் தேர்வும் திரைக்கதையின் வடிவமும் இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. இயக்குனர் ராகுல் சன்கிரிடியான் தனது பணியை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு இருந்தாலும் படம் சரியான பாதையில் நகர்ந்து சுவாரசியம் கூட்டுகிறது.
படத்தில் சனு ஜான் வர்கீஷின் ஒளிப்பதிவு கண்களுக்கு அழகான காட்சியளிக்கிறது. குறிப்பாக 60களில் தோன்றும் காட்சிகள் மிகவும் நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சனு ஜான் வர்கீஷ். மிக்கி ஜே.மெயரின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஷியாம் சிங்கா ராய்’ ரசிக்கலாம்.






