என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பான வழக்கில் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நடிகர் விஷால் ஆஜராகி ஆவணங்களை சமர்பித்தார்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு காஞ்சீபுரம் மாவட்டம், வேங்கட மங்கலம் கிராமத்தில் 26 சென்ட் இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தை முன்பு தலைவராக இருந்த சரத்குமாரும், பொதுச் செயலாளராக இருந்த ராதாரவியும் சங்கத்துக்கு தெரியாமல் விற்றதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தபிறகு சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரத்குமார், ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கத் தலைவர் நாசர் காஞ்சீபுரம் போலீசில் தாக்கல் செய்தார்.



    இதைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசார் அவருக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விஷால் படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நடிகர் விஷால் இன்று மதியம் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தென்னரசு அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விஷால் நிலம் தொடர்பான ஆவணங்களை கொடுத்தார்.
    பல படங்களில் பிசியாக நடித்து விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. 

    மேற்சொன்ன மூன்று படங்களும் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள நிலையில் இந்தப் படமும் அத்தகைய பின்புலத்தில் உருவாகவுள்ளது.



    இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பி.விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கு சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல் வரிகளை வைரமுத்து எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.


    அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த கிறிஸ் பிராட், பிரபல பாலிவுட் நடிகர் அர்னால்ட்டின் மகளான கேத்தரினை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட். இவர் ஜூராசிக் வேர்ல்ட், பாசஞ்சர்ஸ், ஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: என்ட்கேம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    கிறிஸ் பிராட்டும், ஹாலிவுட் நடிகை அன்னா பாரிசும் காதலித்து 2009-ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிறிஸ் பிராட்டும், அன்னா பாரிசும் கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் மகள் கேத்தரினை கிறிஸ் பிராட் காதலித்து வந்தார். கேத்தரின் எழுத்தாளராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது.



    தற்போது கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிட்டோ நகரில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் அர்னால்ட் தனது மனைவி மரியாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். திருமண புகைப்படத்தை நடிகர் கிறிஸ் பிராட் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கேத்தரின் திருமணத்துக்கு சம்மதித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். 
    நேற்று காலமான வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகனின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
    பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி நிகழ்ச்சி காலை 9 மணியளவில் முடிவடைந்ததும், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




    ஊர்வலம் காலை 11.00 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நிறைவடைந்ததும் அங்கு கிரேஸி மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 
    நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கோவையில் லதா ரஜினிகாந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த். இவர் தயா பவுண்டேஷன் என்ற அமைப்பு மூலம் சமூக சேவைகள் செய்து வருகிறார். அத்துடன் பீஸ் பார் சில்ரன் என்ற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    கோவையில் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. அதில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டு குழந்தைகளுடன் உரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குழந்தைகளை பாதுகாப்பதற்காகவே பீஸ் பார் சில்ட்ரன் என்ற அமைப்பை உருவாக்கி ஒவ்வொரு ஊராக கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க உள்ளோம். நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.



    குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை. குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வர வேண்டும். எல்லா விதமான இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றன. வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது, சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.

    குழந்தைகள் பிரச்சினைக்குள்ளாகி இருப்பதை பார்ப்பவர்கள் உடனடியாக தகவல் அளித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான நந்திதா, சமீபத்தில் அளித்த பேட்டியில் பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை என்று கூறியிருக்கிறார்.
    அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான நந்திதா, எதிர் நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் மூலம் கவனிக்கப்பட்டார். தேவி 2 படத்தில் நடித்தவர் அடுத்து 2 படங்களில் தனி கதாநாயகியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி:-

    தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்துவது ஏன்?

    சினிமாவுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. தமிழில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் வருகின்றன. எனவே போரடித்ததால் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றதால் அங்கே நான் பிசியானதும் உண்மைதான். இந்தி, மலையாள படங்களில் நடிக்கவும் தயார்.

    தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா என்ன வித்தியாசம்?

    தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை இயல்பாக காட்டுவார்கள். தெலுங்கில் சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அழகாக காட்டுகிறார்கள். தமிழில் நான் நடித்த குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்தன.



    அம்மா வேடத்தில் திடீர் என்று நடித்தது ஏன்?

    நல்ல கதைகள் என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார்.

    விருந்து நிகழ்ச்சி செல்லும் வழக்கம் உண்டா?

    ஒருநாள் போனேன். அது சுத்தமாக பிடிக்கவில்லை. இரவு கண்விழித்தால் மறுநாள் சோர்வாகி விடுகிறது. எனவே பார்ட்டிகளுக்கு செல்வதில்லை.
    மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த அக்‌ஷத் என்ற சிறுவனுக்கு விஜய் பிறந்த நாள் பரிசளித்து அவனை நெகிழ வைத்திருக்கிறார்.
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. 

    இதில் ‘மெர்சல்’ திரைப்படம் பல விருதுகளையும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தில் விஜய்யின் மகனாக அக்‌ஷத் என்பவர் நடித்திருந்தார். சிறிய வேடம் என்றாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.



    இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நடிகர் விஜய்யை ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்தை பெற்றிருக்கிறார். சிறுவனை வாழ்த்திய விஜய், பின்னர் சிறிய கேமரா ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார்.
    தமிழ், இந்தியில் மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    கர்ப்பமாக இருக்கும் நடிகைகள் அதை கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது அதிகரிக்கிறது. ஹாலிவுட் நடிகைகளை போல இந்திய நடிகைகளும் இதை செய்ய தொடங்கி உள்ளனர். 

    சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது 3 வயது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த புகைப்படங்களை பார்த்த சிலர் அவரின் அழகை பாராட்டி இருந்தார்கள்.



    இன்னும் சிலரோ கர்ப்பிணியாக இருந்து கொண்டு இப்படி உடை அணிய வெட்கமாக இல்லையா, இப்படியா வயிற்றை காட்டுவது என்று கேட்டு இருந்தனர். சிலர் தன்னை விமர்சிப்பதை பார்த்த சமீரா ரெட்டி அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து, மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.
    பிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

    கிரேசி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை.

    பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.



    அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

    நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்’

    இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர்.

    இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் பணிக்காலம் முடிவதால் அடுத்து தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.



    தற்போதைய தலைவரான விக்ரமன் தொடர்ந்து 6 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்துவிட்டதால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். இதன் பின்னர் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது.
    பல படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேஸி மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
    மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டவருக்கு நல்ல வேலை கிடைத்தும் அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். 

    சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.

    பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். 



    வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன்.

    தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
    பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் இன்று அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

    சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார்.  இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும்.

    கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார், பெரும்பாலும் தற்காலத்திய பிரச்சனைகளை சமாளிப்பதற்காக வரலாற்றினைப் பயன்படுத்துவார்.

    அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.



    தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் குணச்சித்தர, வில்லன் ஆகிய வேடங்களில் சிறப்பாக நடித்தவராவார். இந்நிலையில் இன்று காலை வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் கிரிஷ் கர்னாட் காலமானார்.

    இவருக்கு பல்வேறு திரை உலக பிரபலங்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் கர்நாடக முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தான் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இன்று ரத்து செய்வதாக  அறிவித்தார்.

    மேலும் கிரிஷ் கர்னாட்டின் மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    ×