search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நட்புக்கு முடிவு என்பதே கிடையாது - கிரேஸி மோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
    X

    நட்புக்கு முடிவு என்பதே கிடையாது - கிரேஸி மோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

    பிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    பிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

    கிரேசி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை.

    பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.



    அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

    நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்’

    இவ்வாறு இரங்கல் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×