என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துவரும் நடிகை காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
காஜல் அகர்வாலுக்கு 34 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார்.
தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை காஜல் அகர்வாலும் உறுதிப்படுத்தி உள்ளார். தெலுங்கு டி.வி. நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர் பேசியதாவது:-
“நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அதுபோல் அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும். என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும். அக்கறையோடு என்னை கவனித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவரை மணப்பேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, திரவுபதி கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ‘சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரவுபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை தீபிகா தயாரிக்கவுள்ளார். 2021 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் சில பாகங்கள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்துப் பேசிய தீபிகா, “திரவுபதி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம். மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய கதாபாத்திரம் இது என்று உண்மையாக நம்புகிறேன். மகாபாரதம் இதிகாசக் கதையாகவும், கலாச்சாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்காகவும் அறியப்பட்டாலும், நிறைய வாழ்க்கைப் பாடங்களை மகாபாரதத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். புதிய ஒரு பார்வையில் சொல்லும்போது அது சுவாரஸ்யமாக இருப்பதோடு மிகவும் விசேஷமானதாகவும் அமையும்“ என்றார்.
பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 64வது படத்தில் பிரபல நடிகை இணைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இவர்களுடன் நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இடம் பெறும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாகவும், டெல்லியில் நடைபெறும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கு, இனி இப்படி நடக்க விட கூடாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்ததாக அறிவித்தார்கள். சுஜித் இழப்புக்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ‘அப்பாவியான குழந்தை சுஜித்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கு, பொறுப்பற்ற செயலால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம் என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்த மீட்பு பணிகளுக்குப் பிறகு குழந்தை உயிரிழந்ததாக இன்று அதிகாலை 2.30 மணியளவில் அறிவித்தார்கள். சுஜித் இழப்பு பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், ‘ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக்கொள்கிறோம். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் #SorrySujith #RIPSujith’ இவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.
பிகில் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒருவர் விடுத்துள்ளார்.
விஜய் நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர் விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து போலீசார் உடனடியாக உஷார் படுத்தப்பட்டனர். நீலாங்கரை உள்ள விஜய்யின் வீடு, சாலிகிராமம் அபுசாலி தெருவில் இருக்கும் மற்றொரு வீடு, வடபழனி அருணாசலா ரோட்டில் விஜய்யின் தாய் ஷோபா பெயரில் இருக்கும் திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போதையில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை அடையாளம் காணும் பணி தொடங்கியது. அப்போது போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரே மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘புழல்’ படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமான நடிகர் மனோ, கார் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
‘புழல்’ படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் மனோ (வயது 37). தனியார் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர். மேலும் பல படங்களிலும் நடித்து உள்ளார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.
இவர் சென்னை கொரட்டூர், பாபாநகர் 10-வது தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி லிவியா. கடந்த 27-ந்தேதி இரவு மனோ மனைவியுடன் காரில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது மனைவி லிவியா பலத்த காயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த லிவியாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, நித்யா மேனன், அதிதிராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் முன்னோட்டம்.
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
'சைக்கோ' படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தி படத்திற்கு பிறகு, ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு, முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார். தற்போது, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளன.
இதனால் தந்தையும், மகளும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதால், அங்கேயே முகாமிட்டுள்ளார். ஜான்வி. இவரது தங்கை குஷி, அமெரிக்காவின் நியூயார்க்கில் தான் படிக்கிறார். படப்பிடிப்பில், ஒரு சில நாட்கள் ஓய்வு கிடைக்கும்போது, தங்கையை பார்க்க சென்று விடுகிறார், ஜான்வி.

‘தாயின் மறைவால் ஏற்பட்ட சோகத்திலிருந்து, ஜான்வி, இப்போது தான் படிப்படியாக மீண்டு வருகிறார்’ என்கின்றனர், பாலிவுட் பிரபலங்கள்.
அறிமுக இயக்குனர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு நடிகர் கதிர், விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை அட்லி இயக்கியிருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை அடுத்து 'ஜடா' என்னும் படத்தில் கதிர் நடித்துள்ளார். போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy Diwali !! #Jada December Release!! pic.twitter.com/s227URa22u
— kathir (@am_kathir) October 27, 2019
கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்ஷன். துருக்கியில் பெரும் பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். தயாரிப்பு டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன். இந்தப் படத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.
அயோக்யா படத்துக்கு பிறகு விஷால் நடிப்பில் ஆக்ஷன் படம் வெளியாகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால் சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி அதிகம் பேசப்பட்ட நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்று டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி நடிப்பில் தற்போது கைதி திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில், லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுகுறித்து நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில், ‘கைதி படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும். ஆன்மீகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார். நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்ப்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்த விதமாகக் கூட இருக்கலாம்.

என் அப்பா திரையரங்கில் 'கைதி' படத்தை பார்த்தார். சிறப்பான படம், அப்பா மகள் சென்டிமென்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.
நேற்று இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ('கைதி 2') 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார்’ என்றார்.






