என் மலர்
சினிமா செய்திகள்
எஸ்.பி. ராஜ்பிரபு இயக்கத்தில் மைக்கேல் சசிகுமார், குணா, அமலா மரியா, கிருத்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் புலிக்கொடி தேவன் படத்தின் விமர்சனம்.
மேல்சாதி குடும்பத்துப் பெண்ணுக்கும் கீழ்சாதி இளைஞனுக்கும் காதல் மலர்கிறது. சாதிவெறி பிடித்த பெண்ணின் அப்பா, குடும்ப கெளரவம் கெட்டுவிடும் என்பதைக் காரணமாகச் சொல்லி குடும்பத்தின் சம்மதத்தோடு தன் மகளைக் கொன்று விடுகிறார். காதலியைப் பறிகொடுத்த அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்படுகிறான். கதையில் இது ஒரு டிராக்.
ஊரில் பெரிய மனிதர் அவர். சாதியில் உயர்ந்தவர். அவரது தங்கையை கீழ்சாதி இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். பெண்ணுடைய அண்ணனின் சாதிவெறி இந்த காதலர்களை என்ன செய்தது என்பது கதையின் இன்னொரு டிராக். இரண்டு கதைக்குமான தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகர்கள் மைக்கேல் சசிகுமார், குணா ஆகியோர் நடிப்பில் வெளிப்படும் அப்பாவித்தனம், நாயகிகள் அமலா மரியா, கிருத்திகா நடிப்பில் வெளிப்படும் குழந்தைத்தனம் கதாபாத்திரத்துக்கு பலம். பெருத்த தேகம், முறுக்கு மீசை என கம்பீரமான தோற்றத்தில் வேலா கிருஷ்ணசாமி. புலிக்கொடி தேவனாக, சாதிவெறியில் ஊறிப்போனவராக தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. நாயகன் குணாவின் அண்ணனாக அருள் அன்பழகனும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்.

சாதிவெறியால் சின்னாபின்னமாகும் காதலை மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி. ராஜ்பிரபு. படத்தில் காமெடி காட்சிகளுக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஜீவன் மயில் இசையில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கள்ளி என் கள்ளி’ பாடல்கள் இனிமை. சமித் சந்துருவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘புலிக்கொடி தேவன்’ சாதியும்.... காதலும்.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்றுள்ளார்.
பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்தியில் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தனக்கு தமிழ் நன்றாகத் தெரிந்தும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கல்கி கர்ப்பமானார்.

தாய்மை அடைந்திருப்பதை பற்றி உருக்கமாக பேசியிருந்தார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான வயிற்றைக் காண்பித்தபடி புகைப்படங்களை பதிவிட்டுவந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை மேகா ஆகாஷ், அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் விஜய் ரசிகையாக நடித்துள்ளார்.
‘பேட்ட,’ ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களில் நடித்தவர், மேகா ஆகாஷ். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ‘‘தமிழில், முன்னணி கதாநாயகியாக வந்து புகழ் பெற வேண்டும்’’ என்பது மேகா ஆகாசின் நீண்ட கால ஆசையாம். இதற்காக இப்போதிருந்தே காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில், மேகா ஆகாஷ் ஓசையே இல்லாமல் ஒரு இந்தி படத்தில் நடித்து விட்டு, சென்னை திரும்பி இருக்கிறார். அந்த இந்தி படத்தில் ஒரு காட்சியில், ‘‘நீ மகேஷ்பாபு ரசிகையா?’’ என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு மேகா ஆகாஷ், ‘‘நான் விஜய் ரசிகை’’ என்று பதில் அளிப்பது போல் அந்த காட்சி அமைந்துள்ளது.

‘‘நீங்க விஜய் ரசிகை என்று சொன்னது உங்களை பாதிக்காதா? மற்ற கதாநாயகர்கள் உங்களை ஒதுக்கி விடுவார்களே...?’’ என்ற கேள்விக்கு, ‘‘எனக்கு பொய் சொல்ல தெரியாது’’ என்று மேகா ஆகாஷ் துணிச்சலாக பதில் அளித்தார்.
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், சித்தார்த் நடிக்கும் டக்கர் படத்திற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரித்திருக்கும் படம் ‘டக்கர்’. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். முருகேசன் ஒளிப்பதிவை கவனிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு பாடலை பாடியுள்ளார். இவர் ஏற்கனவே நீதானே என் பொன்வசந்தம், உப்பு கருவாடு, பப்பி போன்ற படங்களில் பாடியிருந்தாலும், இப்படத்தில் அவர் புது முயற்சியாக ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடலில் இடம்பெறும் ராப் பகுதியை மட்டும் கவுதம் மேனன் பாடியுள்ளாராம்.
அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள ’சைலன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். இப்படம் ஜனவரி 31-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 20-ந் தேதி ரிலீசாகும் என மாற்றப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் தள்ளிவைத்துள்ளது. அதன்படி இப்படம் ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு தரப்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் சிருஷ்டி டாங்கே, தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
‘மேகா’ படத்தின் மூலம் பிரபலமானவர், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘தர்மதுரை’ படத்தில், சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு பேசப்பட்டது. இதேபோல் சமீபத்தில் வெளியான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மும்பையை சேர்ந்த இவர் இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், அடுத்து ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவத்தை சிருஷ்டி டாங்கே பகிர்ந்து கொண்டார். ‘‘கட்டில் படம் மூலம் இதுவரை எனக்கு தெரியாத தமிழ் கலாசாரத்தை புரிந்து கொண்டேன். அது, தமிழ் கலாசாரத்தின் மீதான எனது காதலை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. ஒரு தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்’’என சிருஷ்டி டாங்கே கூறினார்.
ரமேஷ்.ஜி இயக்கத்தில் வினோத் கிஷன், அம்மு அபிராமி, ராஜபாண்டியன், விஷ்ணு பிரியா, ஆர் என் ஆர் மனோகர், முத்துராமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அடவி’ படத்தின் விமர்சனம்.
இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூக விரோதிகள் சிலரை கொடூரமாக கொல்கிறது. போலீஸ் இதை நம்ப மறுத்து கிராம மக்களை பிடித்து விசாரிக்கின்றனர். அப்போதுதான் வினோத் கிஷன், அம்மு அபிராமியின் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன.
கோத்தகிரி மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் (மனோகரன்) முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த முருகன் (வினோத்), வள்ளி (அம்மு அபிராமி)யும் மக்களை ஒன்று சேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே மீதிக்கதை.

வினோத் கிஷன் மலைவாழ் இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என நன்றாக நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக வந்து உள்ளங்களை கொள்ளையடிக்கிறார். அழகான காதலியாக மட்டும் அல்லாமல் சிலம்பு சுற்றும் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார்.
வள்ளியின் தோழியாக வரும் விஷ்ணுபிரியாவுக்கு சிறப்பான கதாபாத்திரம். தனது பங்களிப்பை உணர்ந்து நடித்துள்ளார். ராஜபாண்டியன், ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், கே.சாம்பசிவம் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரத்துக்கு உரிய சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே பல திரைப்படங்களில் காட்டிய மலைவாழ் மக்களை விரட்டியடிக்கும் கதை என்ற தோற்றம் இருந்தாலும், தேன்மொழி தாஸின் வசனமும், ரமேஷ்.ஜி ஒளிப்பதிவும் நம்மை இருக்கையில் கட்டிப்போகிறது.

சரத் ஜடாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. மலைவாழ் மக்களின் இசையையும் பாடலையும் படத்தில் பயன்படுத்தியது பொருத்தம். சதீஷ் குரோசேவ்வின் படத்தொகுப்பில் முதல் பாதியில் இருந்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இருக்கலாம்.
அடவி என்றால் காடு மட்டும் அல்ல. அதுதான் வாழ்க்கை. அதை அழிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை நாமே குழிதோண்டி புதைத்துக்கொள்கிறோம் என்ற கருத்தை வலுவாகவும் வணிக ரீதியாகவும் சொல்லியிருக்கிறார்கள். வனம் என்னும் இயற்கை அளித்த வரத்தை சுயலாபத்துக்காக சிதைக்க நினைப்பவர்களுக்கு எதிரான மலைவாழ் மக்களின் போராட்டமே அடவி.
மொத்தத்தில் ‘அடவி’ அடர்த்தி குறைவு.
மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று சதீஷ் ராமகிருஷ்ணன் இயக்கி வரும் 2323 படத்தின் முன்னோட்டம்.
மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத் தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.
இந்த படம் பற்றி இயக்குநர் பேசும் போது, ‘இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். இப்போது முதல் பாகத்தை உருவாக்கி வருகிறேன்.
நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகரமான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.
இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தண்ணீருக்காக நடக்கும் அரசியலையும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத் தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.
இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன். இப்படத்தில் நாயகனாக நான் நடித்து இருக்கிறேன். நாயகிகளாக சாத்விகா, கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்தவர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் 'எமன்' படப் புகழ் அருள் டி சங்கர், ராஜேந்திரன் கிருஷ்ணராஜ், ப்ரீத்தா, காசி, ஒரிசா பாலு, டாக்டர் அபர்ணா, வினீஷ் ,ஆனந்த் ஆர். லிங்கா, சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு டி.எம்.சந்துரு. இசை மகராஜ் தேவர், ஏ.ஆர்.தாமஸ், ஸ்ரீராம் ஆனந்த். வெற்றித் தமிழ் உருவாக்கம் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்’ என்றார்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும், தற்போது விக்ரம் பிரபுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன், ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்காக விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதற்காக படப்பிடிப்பில் இருந்து விசாரணைக்காக விஜய் சென்னை வரவழைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விஜய் வீட்டில் எந்த ஆவணங்களும் கைப்பற்ற படவில்லை என்றும் வருமான வரி கணக்குகளை சரியாக வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கினார்கள். இசை வெளியீட்டு விழாவில் வருமான வரி சோதனை பற்றி விஜய் பேசுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வலிமை திரைப்படம் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 14 தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, அந்த மாதிரி படங்கள் பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.
தமன்னா நடிப்பில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் ஆகிய 4 படங்கள் வந்தன. தற்போது போலோ சுதியான் என்ற இந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமா என்பது வினோதமான சாதனம். திரையில் எதையாவது சொல்லுங்கள். எதையாவது காட்டுங்கள். ஆனால் படத்தை பார்க்கிறவர்கள் இரண்டரை மணி நேரம் வெளி உலகத்தை மறந்து ஜாலியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன். அவற்றில் நடிக்கவும் விருப்பம் இருக்காது.

இது மாதிரி படங்கள் பார்க்கும்போது நமக்கு உள்ளேயே ஒரு எதிர்மறை உணர்வு வந்து விடும் என்ற பயம் ஏற்படும். நமது இதயமும் பாரமாகி விடும். மனது கலங்கி கண்ணீர் வரும். பெண்களை கேவலப்படுத்துவது மாதிரியான கதாபாத்திரங்களிலும் நான் நடிக்க மாட்டேன். சினிமாவை பற்றி நாம் ஏதாவது கற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.
அது உற்சாகத்தை கொடுப்பது மாதிரியும், கஷ்டங்களை மறக்கிற மாதிரியும் இருக்க வேண்டும். படங்களில் சிறிய அறிவுரையும் இருக்க வேண்டும். கெட்ட விஷயங்களை திணிப்பது மாதிரியும், தெரியாதவர்களுக்கு கெட்ட விஷயங்களை தெரியப்படுத்துவது மாதிரியும் படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.’‘
இவ்வாறு தமன்னா கூறினார்.






