என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இயக்குனர் பாரதிராஜாவும், ராமநாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்கிற ராமசாமியும் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே ராமநாராயணன் 3 முறை தலைவராக இருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், தாணு ஆகியோர் தலைவரானார்கள். முந்தைய தேர்தலில் நடிகர் விஷால் தலைவராக தேர்வானார். அவரது பதவி காலம் முடிந்துள்ளது.

    தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் அரசு நியமித்துள்ளது. வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்காக தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.

    தேர்தலில் புதிய தலைவராக போட்டியிடுபவர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. டைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த தற்போதைய ஆலோசனை குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து அவரிடம் வற்புறுத்தி வருகிறார்கள்.

    ராமநாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்கிற ராமசாமியும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் திரைக்கு வந்த மெர்சல், பொதுவாக என்மனசு தங்கம், மணல் கயிறு-2, தில்லுக்கு துட்டு, ஆறாது சினம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

    தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. தலைவர் தவிர, 2 துணைத்தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துவரும் நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது.
    நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

    இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் பேசுவதாக ஒரு வீடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வாலிபர், எங்கள் சமுதாயத்தை பற்றி அவதூறாக ஏதேனும் திரைப்படம் எடுத்தால் தலை இருக்காது. வெட்டிக்கொலை செய்வோம் என்று நடிகர் தனு‌‌ஷ், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.

    தனுஷ்

    இந்த வீடியோ தற்போது தென்மாவட்டங்கள் முழுவதும் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், என்னை ஒழிக்க முயன்றார் என்று நடிகை சனம் ஷெட்டி மீது புகார் கூறியிருக்கிறார்.
    தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

    இதனை சனம் ஷெட்டி மறுத்தார். தர்ஷனும், நானும் இரண்டரை வருடம் கணவன்-மனைவி போலவே வாழ்ந்தோம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் அவர் மாறி விட்டார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி இருப்பதில் உண்மை இல்லை என்றார்.

    இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சனம் ஷெட்டி - தர்ஷன்

    “சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.

    அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.”

    இவ்வாறு தர்ஷன் கூறியுள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர், நெல்லை மாவட்ட செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், ‘‘1991-ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி நடிகர் தனு‌‌ஷ் நடிப்பில் எடுக்கப்பட்டு வருகின்ற ‘கர்ணன்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அமைதி நிலவி வருகின்ற சூழ்நிலையில் இதுபோன்ற படங்களால் மீண்டும் கலவர சூழ்நிலை எற்படும். அந்த படத்தில் மணியாச்சி போலீஸ் நிலையத்தை தாக்குவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே, இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.

    படக்குழுவினருடன் தனுஷ்

    இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்றொரு மனுவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திலும் அவர்கள் கொடுத்தனர்.
    இந்தியன் 2 படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் கமல், மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.
    சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. 

    நேற்று இரவு மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கமல் ட்விட்

    இந்த சம்பவம் குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    தமிழில் ராஜா ராணி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நஸ்ரியா, அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.
    திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த நஸ்ரியா திடீரென்று தனது முடிவை மாற்றிக்கொண்டு டிரான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவரது கணவர் பகத் பாசிலுடன் இணைந்து நடிக்கிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து நஸ்ரியாவிடம் கேட்டபோது,

    கணவருடன் நஸ்ரியா

    'கல்யாணத்துக்கு பிறகு ஒரேயொரு படத்தில்தான் நடித்தேன். தற்போது பகத் பாசிலுடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை. கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்' என்றார்.
    தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.
    நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர், தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.

    தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.. 

    ராஷ்மிகா

    அதில் தெலுங்கு நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.
    கமல்ஹாசன் படப்பிடிப்பில் நேற்று ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
    சென்னை:

    இயக்குனர் ‌‌ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசே‌‌ஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

    நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

    மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நடிகர் கமல்ஹாசன் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன.
    ஆந்திரா, தெலுங்கானாவில் தமிழ் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவிக்கின்றன. இதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியிடுகிறார்கள்.

    இந்நிலையில், தனுஷ் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியான பட்டாஸ் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தெலுங்கில் ‘லோக்கல் பாய்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகிறது.

    பட போஸ்டர்கள்

    இதேபோல் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தையும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இந்த படத்துக்கு தெலுங்கில் சக்தி என்று பெயர் வைத்துள்ளனர். இப்படமும் இந்த மாத இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    மாஃபியா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரியா பவானி சங்கர், அருண் விஜய்யிடம் இருந்து வெற்றி ரகசியத்தை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஃபியா. இதில் பிரியா பவானி சங்கர் அதிரடியாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: “மாஃபியா” எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நிறைய நல்ல நண்பர்களை வாழ்வில் தந்த படம். அருண், பிரசன்னா திரையில் வந்தாலே அவர்களது திறமை மிளிரும். 

    கார்த்திக் தனக்கு என்ன தேவை என தெரிந்து வேலை செய்யும் மனிதர். இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு படம் செய்ய, அவர் திறமையே காரணம். அருண் பலருக்கு முன்மாதிரியாக திகழ்பவர். என் வாழ்விலும் நிறைய பாதிப்பை தந்துள்ளார். ஒரு தோல்வியிலிருந்து மீண்டு எப்படி வெற்றி பெறுவது என கற்றுக்கொள்ள அவரிடம் நிறைய இருக்கிறது. 

    அருண் விஜய், பிரியா பவானி சங்கர்

    வெற்றி இல்லாதபோது அவர் பின்பற்றிய கண்ணியமும், நேர்மையும் தான் வெற்றி கிடைத்தபோதும், அவரை மிகவும் தன்மையானவராக வைத்திருக்கிறது. ஷூட்டிங் முடித்ததும் காலை 3 மணிக்கு ஜிம்முக்கு போகாமல் வீட்டுக்குப் போங்கள் அருண். வீட்டில் ஆர்த்தி காத்திருப்பார்’. இவ்வாறு அவர் பேசினார்.
    ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரகுமான் அறிமுகமான காலம் முதலே இசையில் புதுமைகளை தொடர்ந்து செய்து வருகிறார். டி.டி.எஸ் இசையில் புதிய பாணிகளை கையாண்டது, டிஜிட்டலில் புதிய ஒலிகளை அறிமுகப்படுத்தியது என படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஏ.ஆர். ரகுமான் பழைய பாடல்களை ரீமேக் செய்வதில் விருப்பம் இல்லாமலே இருந்து வந்தார். 

    புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் பல திரைப்படங்களிலும் இளம் இசை அமைப்பாளர்கள் ரீமேக்கை கையாண்டு வந்த காலகட்டத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கும் ரீமேக் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ திரைப்படத்திற்காக முதல் முறையாக எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் வெளிவந்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்.

    இந்த பாடலை கேட்டு எம்.எஸ். விஸ்வநாதன் தனது பாடலின் ஜீவனை கெடுக்காமல் இருந்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி கூறியிருந்தார். சமீபத்தில் வெளிவந்த ஸ்ட்ரீட் டான்சர் படத்திற்காக ஏ.ஆர். ரகுமானின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான ‘முக்காபுலா பாடலை’ இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபு தேவாவுக்காக ரகுமான் வழங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

    ஏ.ஆர்.ரகுமான்

    தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது: கடந்த 2017ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட எந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. அவற்றில் சில பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தன. 

    அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து, “இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். ஆனால், இந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இதை நான் ஆதரித்தால் மக்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ரீமிக்ஸ் டிரெண்ட் இப்போது முடிந்துவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ மற்றும் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
    ‘ஓ மை கடவுளே’ படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
    அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். காதல், பேண்டசி படமாக உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

    ஓ மை கடவுளே படக்குழு

    அதில் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து பேசியதாவது: ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதைக்காக 5 ஆண்டுகள் உழைத்தேன். படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு உற்சாகத்தை தருகிறது. அடுத்ததாக ‘ஓ மை கடவுளே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போகிறேன். இந்த படத்திற்கான வேலைகள் அடுத்தாண்டு தொடங்கும். முதல் பாகத்தில் பணியாற்றியவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என அவர் கூறினார்.
    ×