என் மலர்
சினிமா செய்திகள்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பிப்ரவரி 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், 44 வயதான ஷில்பா ஷெட்டிக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. பிப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமீஷா என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் கவிழ்ந்து 3 பேர் பலியானது தொடர்பான வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன்-2’. இதன் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்தது. பிப்ரவரி 19-ந் தேதி இரவு எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் கமல் தரப்பில் தலா ரூ.1 கோடி நிதியுதவியும், லைகா நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் அடுத்ததாக இயக்கும் தேரும் போரும் படத்தில் தினேஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
முதல் படமான மதயானை கூட்டம் படத்திலேயே, தென் தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவு முறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து கவனத்தை ஈர்த்தவர், விக்ரம் சுகுமாரன். தற்போது இவர், தேரும் போரும் என்ற படத்தை இயக்குகிறார். தாய் சரவணனின், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பாக, நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை தயாரிக்கின்றனர். அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.

படம் குறித்து, விக்ரம் சுகுமாரன் கூறுகையில், ''சிவகங்கை பகுதி மக்களின் வாழ்க்கையை, எதார்த்தமாக பதிவு செய்யும் படம் இது,'' என்றார். மைனா, கும்கி, பைரவா, ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர். ஜஸ்டின் பிரபகாரன் இசையமைக்கும் இந்த படத்துக்காக அட்டகத்தி தினேஷ் தனது தோற்றத்தை வித்தியாசமாக மாற்றியுள்ளார்.
பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்.ராஜு, முத்துக்குமார், சுகுமார் சண்முகம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாரம்’ படத்தின் விமர்சனம்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவல்காரராக இருந்து வருபவர், கருப்பசாமி. அறுபது வயதை தாண்டிய அவர், ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில், அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பக்கத்து டவுனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். அவரை பரிசோதித்த டாக்டர், “இடுப்பில் ஆபரேஷன் செய்து சிகிச்சை அளித்தால் குணமாகி விடும்” என்கிறார்.
அதற்கு செலவாகும் என்பதால் அவருடைய மகன் செந்தில் ஆபரேஷனுக்கு சம்மதிக்க மறுக்கிறார். வலியால் துடிக்கும் அப்பாவுக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல், அலட்சியப்படுத்துகிறார். இந்த நிலையில், பெரியவர் கருப்பசாமி திடீரென்று மரணம் அடைகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கருப்பசாமியின் மருமகன்கள் (சகோதரியின் மகன்கள்) சந்தேகிக்கிறார்கள்.
மருமகன்களில் ஒருவரான வீரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுக்கிறார். அமைச்சர் கேட்டுக்கொண்டதால், கருப்பசாமியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று வழக்கை முடித்து விடுகிறார்கள்.

பத்திரிகை நிருபர்கள் துப்பறிந்து, கருப்பசாமிக்கு அவருடைய மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவுகிறது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கருப்பசாமியாக ஆர்.ராஜு நடித்து இருக்கிறார். விபத்துக்குள்ளாகி காயம் அடைந்த ஒரு முதியவரின் வலியையும், வேதனைகளையும் படுத்துக்கொண்டே வெளிப்படுத்துகிறார். இயற்கை உபாதைக்காக, மகனை அழைக்கும்போது, ஒட்டு மொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.
அவரைப்போலவே ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல் கருப்பசாமியின் மகன் முத்துக்குமார், மருமகன்கள் சுகுமார் சண்முகம், சமராஜா, பிரேம்நாத், சகோதரியாக ஜெயலட்சுமி ஆகியோர் கிராமத்து மனிதர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

டைரக்டர் பிரியா கிருஷ்ணசுவாமி, கிராமப்புறங்களில் தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி இந்த படத்தில் விவரமாக கூறியுள்ளார். இயல்பான நடிப்பு, யதார்த்தமான காட்சிகள் மூலம் ஒரு கிராமத்தில், எளிய மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.
இசையமைப்பாளர் வெட் நாயர், ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில் ‘பாரம்’ அபாரம்.
விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொல்லிய விதம் மிகவும் பிடித்திருந்தது. அதேபோல் இந்த கதாபாத்திரமும் என்னை கவர்ந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாஃபியா’ படத்தின் விமர்சனம்.
அருண் விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக இருக்கிறார். அவரது குழுவில் பிரியா பவானி சங்கரும், ஒரு இளைஞரும் பணியாற்றுகின்றனர். சென்னையில் முக்கிய இடங்களில் அருண்விஜய் தலைமையிலான குழு திடீர் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையில் கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதை புழக்கத்தை கண்டறிகிறார் அருண் விஜய். அவரது இந்த சோதனையில் போதை மருந்து கடத்தும் சின்ன சின்ன ஆட்கள் மட்டுமே சிக்குகின்றனர். அவரால் பெரும் புள்ளிகளை நெருங்க முடியவில்லை.

இந்த சூழலில், போதை மருந்து தடுப்பு பிரிவில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு சில முக்கிய தகவல்களை தந்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதன்பிறகு தேடலை துரிதப்படுத்தும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா? போதை மருந்து புழக்கத்தை ஒழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அருண் விஜய், போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனை நெருங்க முயற்சிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

நாயகி பிரியா பவானி சங்கர், மற்ற நாயகிகள் போல் காதல், ரொமான்ஸ் என்று இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் திறம்பட நடித்து கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக மனதில் பதிகிறார் பிரசன்னா.
இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியால் மாஃபியா படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

இரண்டாம் பாதியை போல் முதல் பாதியும் வேகமாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிளைமாக்ஸில் கொடுக்கும் டுவிஸ்ட் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் படம் மிகவும் ஸ்டைலிஷாக வந்துள்ளது.
மொத்தத்தில் ‘மாஃபியா’ வேகம் குறைவு.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற பைக் சேஸிங் காட்சியில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கை மற்றும் கால்களில் அடிப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்துக் கொண்ட போது ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித்தின் புதிய தோற்றம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிப்பில் கார்த்திக் நடிக்கும் 'தீ இவன்' படத்தின் முன்னோட்டம்.
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் 'தீ இவன்'. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு பணியாற்றுகிறார்.
மலையாளத்தில் பிரேமம் படத்திலும், தமிழில் கொடி படத்திலும் நடித்த அனுபமா பரமேஸ்வரனின் செயலால் ரசிகர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில் ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி நடிகைகள் அவர்களது வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இளமையாக இருந்தால் தான் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது.
ஆனால், இந்தக் காலத்தில் திருமணம் முடிந்த நடிகைகள் கூட முன்னணியில் இருக்கும் காலமாக மாறிவிட்டது. தமிழில் தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் அறிமுகமானவரும், தற்போது அதர்வா நாயகனாக நடிக்கும் 'தள்ளிப் போகாதே' படத்தில் நாயகியாக நடிப்பவருமான அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

டுவிட்டரில் வெறும் '24' என பதிவிட்டு தான் 24வது பிறந்தநாளைக் கொண்டாடுவதாக மறைமுகமாக அவர் குறிப்பிட்டிருந்தார். ஒரு நடிகை தன்னுடைய வயதை வெளிப்படையாகச் சொன்னதை ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள்.
கே.அலெக்சாண்டர் இயக்கத்தில் சோழவேந்தன், தேஜா ரெட்டி, காயத்ரி, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘குட்டி தேவதை’ படத்தின் விமர்சனம்.
ஊர் தலைவராகவும், சாதி தலைவராகவும் கெத்தாக வாழ்ந்து வரும் வேல ராமமூர்த்திக்கு, சாதி மாறி காதலிப்பதோ, திருமணம் செய்வதோ அறவே பிடிக்காது. ஊரில் யாராவது வேறு சாதியினரை காதலித்தால், அவர்களை வெறித்தனமாக தாக்குவது, தேவைப்பட்டால் கொலை செய்வது என எந்த எல்லைக்கும் செல்கிறார். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த தலைவருக்கு அவரது மகன் மூலம் சோதனை வருகிறது.
இவருடைய மகன் சோழவேந்தன் வேறொரு சாதியினரை சேர்ந்த நாயகி தேஜாவை காதலிக்கிறார். இந்த விஷயம் வேல ராமமூர்த்திக்கு தெரியவர, மகனை கண்டிக்கிறார். ஆனால், அவரோ வீட்டை விட்டு ஓடிச்சென்று, தேஜாவை திருமணம் செய்து வாழ்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடையும் வேல ராமமூர்த்தி, சோழவேந்தனையும், தேஜாவையும் கொலை செய்ய தேடி வருகிறார்.
குழந்தை பிறக்கும் நேரத்தில் வேல ராமமூர்த்தியால் கொலை செய்யப்படுகிறார் தேஜா. பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு சோழவேந்தன் நகரத்துக்கு சென்று விடுகிறார். அங்கு எம்.எஸ்.பாஸ்கருடன் வேலை செய்துக் கொண்டு குழந்தையை வளர்த்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கரின் மகளையும் திருமணம் செய்துக் கொள்கிறார்.

இந்நிலையில், இறந்ததாக நினைத்த மனைவி தேஜா, சோழவேந்தனை தேடி வருகிறார். அதே சமயம், எம்.எஸ்.பாஸ்கர் தனது மகள் மற்றும் பேத்தியை அழைத்துக் கொண்டு வேல ராமமூர்த்தியை சந்தித்து குடும்பத்துடன் இணைய முயற்சிக்கிறார்.
இறுதியில் சோழவேந்தன் இரண்டு மனைவிகளில் யாருடன் சேர்ந்தார்? வேல ராமமூர்த்தியின் ஜாதி வெறி தணிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சோழவேந்தன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகிகள் தேஜா ரெட்டி, காயத்ரி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். சிறுமியாக வரும் பேபி சவி சிறப்பான நடிப்பு.

சாதிவெறி பிடித்த பெரிய மனிதர் பாத்திரத்தில் வேல ராமமூர்த்தியும் அவரை திருத்த போராடும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் படத்தை கலகலப்பாகவும் நகர்த்துகிறார்.
கண் முன்னே நடக்கும் ஆணவக்கொலை சம்பவங்களை கோர்த்து ஒரு கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் அலெக்சாண்டர். கல் நெஞ்சக்காரரையும் அன்பால் மாற்றலாம் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அமுதபாரதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சூரியன், நௌசத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘குட்டி தேவதை’ சுவாரஸ்யம் குறைவு.
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக வந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை.
தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அனுஷ்கா கூறியதாவது:-

“காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். ஒரு தொழில் அதிபரை காதலிக்கிறேன் என்றனர். டாக்டரை விரும்புவதாக கூறினார்கள். அதன்பிறகு என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து பேசினார்கள்.
இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்கின்றனர். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்ற வருத்தம் ஏற்படுகிறது. ஆனாலும் நடிகைகள் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவது சகஜம்தான். எனது திருமண முடிவை பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன்.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், அனன்யா, அஸ்வந்த், லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காட் ஃபாதர்’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் சாதுவான நட்ராஜ், எந்த பிரச்சனைக்கும் செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார்.
இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால், 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். இந்த மகனுக்கு இதய நோய் ஏற்படுகிறது. மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் அவனது குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் லால், நட்ராஜ் மகனின் ரத்தம் மற்றும் இதயம் தன் மகனுக்கு பொருந்தும் என்பதை அறிந்துக் கொள்கிறார். இதனால், நட்ராஜின் மகனை கொன்று இதயத்தை எடுத்து மகனுக்கு பொருத்த நினைக்கிறார். இதையறிந்த நட்ராஜ் தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடுகிறார்.
இறுதியில் லால் தன் திட்டத்தை முடித்து மகனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ், பொறுப்பான கணவராகவும், பாசமான அப்பாவாகவும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக மகனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நாயகி அனன்யா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவரின் அமைதியான குணத்துக்கு நேர் எதிரான குணத்தையும் அதே நேரத்தில் மகன் ஆபத்தில் சிக்கியதும் அவர் காட்டும் பரிதவிப்பும் சிறப்பு.
வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் லால். தான் நினைத்தவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரின் மிரட்டல் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சின்ன சின்ன அசைவுகளால் ரசிக்க வைத்திருக்கிறார் சிறுவன் அஸ்வந்த். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவர் மறைக்கப்படும் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

சிறிய கதையை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். குறைந்த நடிகர்களை கொண்டு ஒரு அபார்ட்மெண்டுக்குள்ளேயே கதையை முக்கால்வாசி நகர்த்தி இருக்கிறார். லாஜிக் மீறல்கள் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு சமமாக திகிலூட்டுகின்றன. நவின் ரவீந்தரனின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.
மொத்தத்தில் ‘காட் ஃபாதர்’ கனகச்சிதம்.






