என் மலர்
சினிமா செய்திகள்
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா நடிக்காமல் இருப்பதே வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா.
இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் பிசியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை.
இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன். ஆனால் படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார் திரிஷா.
தமிழில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதனால் சினிமா துறையும் முற்றிலும் முடங்கிவிட்டது. சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே பெப்சி சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினருக்கு உதவும் விதமாக 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியுள்ளார். இதை இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.
ரஜினி இந்த உதவி பொருட்களை வழங்கும் போது மீடியாவுக்கு எந்த செய்தியும் கொடுக்க வேண்டாம் என்று தான் கூறினாராம். ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் பேரரசு ட்விட்டரில், "ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது 'பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்' என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!" என அவர் தெரிவித்துள்ளார்.
80களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அமலா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
நடிகை அமலா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்தவர். நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது அமலாவிற்கு 52 வயதாகிறது.
இந்த வயதில் மற்ற நடிகைகள் பெரும்பாலும் தங்களின் பேரன் பேத்திகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஆனால் அமலாவோ கடினமான உடற்பயிற்சிகளை செய்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் இளைஞர்களுக்கு இணையாக பளுவை தூக்கி தோள்பட்டையில் வைத்து அசத்தி இருக்கிறார்.

அப்போது அருகே எந்த பயிற்சியாளரும் இல்லை. தானாக ஒரு இடத்தில் கேமராவை வைத்து பேசிய படியே உடற்பயிற்சியை மேற்கொள்கிறார். வீட்டில்இருக்கும் போது உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இமான் அண்ணாச்சி ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி செய்து கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி ஏழைகளுக்கு தானே பிரியாணி சமைத்துக் கொடுக்கும் காணொளி வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தெருவோரத்தில் வசிக்கும் மக்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அவ்வாறான மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார்.
கொரோனா நிதி அதிகம் கொடுத்தது யார் என்பதில் தகராறு ஏற்பட்டு விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜினி ரசிகர் கைது செய்ய பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கூலிதொழிலாளியான இவர் விஜய் ரசிகர்.
அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (22) ரஜினி ரசிகர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் 2 பேரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது போதை தலைக்கேறியதும் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது ரஜினியா? விஜய்யா? என வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது. ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு கைகளால் யுவராஜை கொடூரமாக தாக்கி கீழே தள்ளினார். இதில் யுவராஜுக்கு தலையில் அடிபட்டது. இதனை பார்த்ததும் தினேஷ்பாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு யுவராஜுன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர்.
அவர்கள் யுவராஜை தட்டி எழுப்பி பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையறிந்த பெற்றோர் கதறி துடித்தனர்.
இது குறித்து மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று யுவராஜுன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்தனர்.
பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, ஒரு படத்தை பார்த்து எமோஷ்னல் ஆகியிருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு என்பதால் மக்கள் யாரும் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அனைவரும் டிவி, திரைப்படங்கள், வெப் சீரிஸ் என வீட்டிலேயே தங்கள் நேரத்திற்கு கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அவர் சில்லுக்கருப்பட்டி படத்தை அவர் பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு அதிகம் எமோஷ்னல் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் படத்தை இயக்கிய ஹலிதா ஷமீமுக்கு இமெயிலில் வாழ்த்து கூறியுள்ளார் சாய் பல்லவி. அதில் அவர் கூறியிருப்பதாவது..
"ஹெலோ ஹலிதா.. படத்தை பார்த்துவிட்டு நானும் என் பெற்றோரும் அதிகம் எமோஷ்னல் ஆகிவிட்டோம். உங்களுக்காக நான் அதிகம் சந்தோஷப்படுகிறேன். இப்படி ஒரு உணர்வை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி. நீங்க இது போன்ற பல ரத்தினங்களை உருவாக்க வேண்டும். எங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனை எப்போதும் உங்களுக்கு உண்டு" என கூறியுள்ளார் சாய் பல்லவி.
ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம்.
காமன்மேன் பிரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு - சரவணன் அபிமன்யு, இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு - ஏ.எம்.ராஜா முகமது, கலை - ஜி.துரைராஜ், பாடல்கள் - ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடனம் - ராஜு சுந்தரம், ஷோபி ஆக்ஷன் - ராஜசேகர், கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ரவி அரசு.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை திடீரென மொட்டை அடித்ததால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
தமிழில் தலைநகரம், இதய திருடன், நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான அமல் நீரத் என்பவரை 2015-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார். "தமசோமா ஜோதிர்கமய" என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருள், இறைவா எங்களை இருளில் இருந்து வெளிச்சத்தற்கு கொண்டு செல் என்பதாகும். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படத்தை லாக்டவுன் காரணமாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மார்ச் 28-ந் தேதியே ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் நிறைய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனால் சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. இதன் காரணமாக சிறிய படங்களை நேரடியாக டிஜிட்டல் தளங்களில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படமும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும், இதன்முலம் படத்தின் பட்ஜெட்டை விட இருமடங்கு லாபம் ஈட்டி இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
கொரோனா நிவாரண பணிகள் பற்றி தினமும் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தும் விஜய், அவர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் நோயின் தாக்குதல் இந்தியா முழுக்க வேகம் எடுத்துள்ளது. கொரோனா நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் 4 தென்னிந்திய மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார். தமிழகம் முழுக்க விஜய்யின் உத்தரவின் பேரில் மக்கள் மன்றத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:- விஜய் எப்போதுமே தான் அளிக்கும் உதவிகள் நேரடியாக மக்களை சென்று சேர வேண்டும் என்று எண்ணுவது வழக்கம். கஜா புயலின் போது மாவட் டங்களில் இருக்கும் தனது மன்ற தலைவர்களுக்கு நேரடியாக பணம் அனுப்பி உதவி செய்ய வைத்தார்.
கொரோனா தொடங்கிய உடனே மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக தமிழ்நாடு முழுக்க இருக்கும் நிர்வாகிகளை தீவிரப்படுத்தினார். தமிழகத்தில் இருக்கும் 38 மாவட்ட செயலாளர்கள், மற்றும் கேரள, ஆந்திர, கர்நாடக, தெலுங்கானா நிர்வாகிகளுக்கும் தகவல்கள் பறந்தன. அந்தந்த பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு சானிடைசர்கள், மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே மக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இரவு பகல் பாராமல் சேவையாற்றும் காவல்துறை, மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு டீ, சாப்பாடு வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து பணமாலையுடன் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவையில் இரவுநேரங்களில் சேவையாற்றும் பணியாளர்களுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் திட்டக்குடி பகுதிகளில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் போட்டி போட்டு உதவிகள் செய்து வருகின்றனர். தஞ்சாவூர், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிறந்தநாள் அன்று தொடக்கப்பட்ட விலையில்லா விருந்தகம் மூலம் இலவச உணவு வழங்கப்படுகிறது.
இவை அனைத்துமே மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக விஜய்யின் கவனத்துக்கு சென்றுவிடுகிறது. தினமும் அவரிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் அறிவித்த நிவாரணத்தொகை தவிர கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களை கணக்கெடுத்து இன்று அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக உதவித்தொகையை செலுத்தி இருக்கிறார்.
விஜய் தனது கையில் இருந்து அளிக்கும் இந்த தொகை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் பயனடைய இருக்கிறார்கள். மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் அடிக்கடி பேசும் விஜய் தமிழக மக்களின் நிலையை கவனத்தில் எடுத்து விசாரித்து வருகிறார். அதே நேரத்தில் நிர்வாகிகள் யாரும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்பதையும் அறிவுறுத்தி இருக்கிறார்.
மாஸ்டர் படம் தள்ளிபோனது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் ரசிகர்கள், பொதுமக்களின் உயிர் தான் முக்கியம். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வருவதற்கு மாஸ்டர் படம் முக்கிய காரணமாக அமையப்போகிறது. சினிமாத்துறையே அதைத்தான் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அனுஷ்கா, மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள சைலன்ஸ் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக தயாராகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர். இப்படம் ஜனவரி 31-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 20-ந் தேதி ரிலீசாகும் என மாற்றப்பட்டது. இறுதியாக ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக படம் அன்று திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பு நிறுவனம், சைலன்ஸ் படம் குறித்து பரவும் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.






