என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முழுமையடையாமல் நிற்கும் திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
    திரைப்படங்களின் ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பணிவான வணக்கம்.

    தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த ஷூட்டிங் வேலைகளும் நடக்கவில்லை.

    தங்களின் கனிவான ஒப்புதலால், போஸ்ட்-புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5.2020 முதல் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. என்றாலும் ஏறக்குறைய படப்பிடிப்பு நடத்தப்பட்டு, சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் செய்து முடிக்க வேண்டிய படங்கள் 50-க்கும் மேல் உள்ளன. இதனால் ஏறக்குறைய 600 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    தற்போது போஸ்ட்-புரொடக்ஷன் பணிகளை, தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் சானிடைசர் உபயோகித்தும், சுகாதாரமான முறையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, மிகவும் கவனமாக செய்து வருகிறோம். அதே போல், ஷூட்டிங் பணிகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

    11 தொழிற்துறைகளுக்கு எவ்வாறு தற்போது நிபந்தனையுடன் கூடிய அனுமதி (100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்கள் பணிபுரிய அனுமதி) வழங்கியிருப்பதை போன்று, 50 சதவீதம் திரைத்துறை தொழிலாளர்களுடன் (அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கு கொள்ளும்) நாங்கள் ஷூட்டிங் பணிகளையும் தொடர அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    ஏற்கனவே திரைப்படங்களை தொடங்கி முழுமையடையாமல் இருக்கும் 50 படங்களுக்கு தற்போது இந்த ஷூட்டிங் அனுமதி கோருகிறோம். இந்த ஷூட்டிங் அனுமதி மூலம், திரைத்துறை சம்பந்தப்பட்ட 10,000 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலையும் கிடைக்கும். எனவே கனிவுடன் எங்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ஷூட்டிங் பணிகளை தொடங்க அனுமதி கோரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் சார்பில்: T. சிவா, இயக்குனர் மனோபாலா, PL. தேனப்பன், JSK. சதிஷ் குமார், G. தனஞ்செயன், R.K. சுரேஷ், சுரேஷ் காமாட்சி, பஞ்சு சுப்பு மற்றும் விடியல் ராஜு ஆகியோர் அமைச்சரை சந்தித்தனர்.

    மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம் நடிகர் ஆரி அருஜுனா இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
    மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட    அத்தியாவசிய மளிகை பொருட்கள்  வழங்கினர்.

    இதனை பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜுனா கூறுகையில்....

    மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்த காட்சி


    கொரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தின்  தாரமங்கலத்திலுள்ள   நமது தொப்புள் கொடி உறவுகளான  ஈழ தமிழர்களும் 50 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறார்கள்  என்று தகவல் அறிந்து அவர்களுக்கு உதவும் பொருட்டு  மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மற்றும் கனடா வாழ் ஈழத் தமிழர்கள் இணைந்து சுமார் 410 சேலம் தாரமங்கலம் பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளோம்.

    சமூகம் சந்தித்து இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் கரம் நீட்டி கரம் தூக்குவோம் என்றார்

    எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் சிரிஷ், மிருதுல்லா முரளி, அருந்ததி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்தா படத்தின் முன்னோட்டம்.
    மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். மெட்ரோ படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்ததாக சிரிஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் பிஸ்தா. இந்த படத்தில் சிரிஷ் ஜோடியாக மிருதுல்லா முரளி, சைத்தான் படத்தில் நடித்த அருந்ததி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 

    கிராமப் பின்னணியில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். செந்தில், சதீஷ், யோகி பாபு, சென்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 25-வது படமாகும். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூழலில் கொரோனா ஊரடங்கால் ஷுட்டிங் தடைபட்டது. ஊரடங்கு முடிந்த பின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் படமாக்க உள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி முடிந்தால் படத்தை டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. 
    ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

    ஆர்ஆர்ஆர் படக்குழு

    இதனிடையே, வருகிற மே 20-ந் தேதி இப்படத்தின் நாயகன் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. 

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் பணிகள் அனைத்தும் முடங்கியதால், மே 20-ந் தேதி பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, வீடியோவோ வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. ஆர்.ஆர்.ஆர் படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பால் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துமாறு அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா அச்சத்தால் நிறுத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். 

    தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருப்பதாவது: "பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு செய்து பரிசீலிக்கவும்". இவ்வாறு விவேக் குறிப்பிட்டுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிரெய்லர் குறித்த மாஸ் அப்டேட்டை அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார்.
    விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

    இந்நிலையில், மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாஸ்டர் டிரெய்லர் அப்டேட்டை அவரிடம் கேட்டார். இதற்கு பதிலளித்த அர்ஜுன் தாஸ், "மாஸ்டர் பட டிரெய்லரை 6 முறை பார்த்து விட்டேன். டிரெய்லர் வேற லெவல்ல இருக்கு. 
    எப்போது டிரெய்லர் ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். சரியான தருணத்தில் டிரெய்லர் வெளியிடப்படும். அதில் வரும் ஒரு டயலாக் மரண மாஸா இருக்கு, கண்டிப்பாக அதற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே டிரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம்" என அவர் கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின், இந்த 2 மாத இடைவெளியில் 11 கதைகளை தயார் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் தான் 11 கதை தயார் செய்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த ஊரடங்கில் நான் புத்தகம் படிக்க அதிக நேரம் செலவிடுகிறேன். இதுதவிர பியானோ வாசிக்க கற்றுக்கொள்கிறேன். இந்த 2 மாத ஊரடங்கில் 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன். 

    மிஷ்கின்

    சிம்பு படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், அஞ்சாதே படத்தை பார்த்துவிட்டு எனது அலுவலகத்திற்கு வந்த சிம்பு, என்னுடன் பணியாற்ற விரும்பினார். சமீபத்தில் அவரை சந்தித்து கதை கூறினேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிம்பு எனது படத்தில் நடிப்பார் என மிஷ்கின் கூறினார்.
    திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனை நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.
    திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் பின்னர் ஒவ்வொருவராக குணமடைந்து, தற்போது 114 பேரும் குணமடைந்து கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இருந்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனின் நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் கலெக்டர் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடைபிடிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட மக்களுக்கு சவால்களை விடுத்தார். இதுபோல் சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்றவற்றில் விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். இது பலரையும் கவர்ந்து வருகிறது.

    விஜயகார்த்திகேயன்


    கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கலெக்டர் விஜயகார்த்திகேயனை, நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அதன்படி கலெக்டர் தனது டுவிட்டர் பதிவில் திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து பதிவு செய்திருந்தார். அதனை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், இது போன்று தொடர்ந்து பணியாற்றுங்கள். நாம் ஒவ்வொருவரும் இது போன்று பணியாற்ற வேண்டும். நீங்கள் இதற்கு தகுதியானவர். பாராட்டுக்குறியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் டுவிட்டரில் அளித்த பதிலில், நன்றி சகோதரர். கொரோனா தடுப்பு பணியில் ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது!, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்! ஜெயிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலில் உள்ள வசனம் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்காவின் படமும் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் தியேட்டருக்கு பதிலாக இணையதளத்தில் நேரடியாக புதிய படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படமும் நேரடியாக இணையதளத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி வெளியாகிறது. இரண்டு பெரிய நடிகைகள் படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அனுஷ்கா

    இந்த நிலையில் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இணைய தளத்தில் வெளியிட தயாராகிறார்கள். இதில் மாதவன், மைக்கேல், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. 

    ஜனவரி 31-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து பின்னர் பிப்ரவரிக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு ஏப்ரல் மாதம் வரும் என்றனர். கொரோனா ஊரடங்கினால் 3-வது தடவையும் வெளியாகவில்லை. இதனால் ‘நிசப்தம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கித்தவித்த தமிழர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் மீட்க உதவி செய்துள்ளார்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்கு வாங்கிய சம்பள முன்பணத்தை கொரோனா நிவாரண உதவிகளுக்கு வழங்கி இருக்கிறார். சமீபத்தில் தனது அலுவலகம் முன்னால் திரண்ட வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு மூலம் ஏற்பாடு செய்தார்.

    இந்த நிலையில் குஜராத்தில் சிக்கி தவிக்கும் தமிழ் குடும்பங்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக அழுது வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவை லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, ‘தமிழ் குடும்பங்களை மீட்க உதவுங்கள்’ என்று குஜராத் முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் விடுத்தார். லாரன்ஸ் கோரிக்கையை குஜராத் அரசு ஏற்றது.

    இதுகுறித்து ராஜ்கோட் கலெக்டர் தமிழ் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருப்பதாகவும், அவர்கள் தமிழகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து லாரன்ஸ் குஜராத் முதல்-மந்திரிக்கும், ராஜ்கோட் கலெக்டருக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பிரபல இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலால் தியேட்டர்கள் 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு பழைய மாதிரி கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து சில காலம் இருக்கும் என்றும், அதோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனவே தியேட்டர்கள் திறந்த பிறகும் உள்ளே ஒரு இருக்கையை காலியாக விட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க தியேட்டர்களுக்குள் மதுபானம் வினியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். 

    நாக் அஸ்வின்

    அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “படம் பார்க்க ரசிகர்களை இழுக்க திரையரங்குகளுக்குள் பீர், ஒயின் போன்ற மதுபானங்களை விற்க லைசென்ஸ் வழங்க வேண்டும். இதன்மூலம் தியேட்டர் தொழிலை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் இதுபோல் திரையரங்குகளில் மதுபானங்களை விற்கும் முறை உள்ளது” என்று வற்புறுத்தி உள்ளார்.

    தியேட்டர்களில் மதுபானம் கொடுத்தால் குடும்பத்தினர் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நாக் அஸ்வின், ‘மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமாவது இதை அமல்படுத்தலாம்’ என்றார்.
    ×