என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜோதிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து அனுஷ்காவின் படமும் தியேட்டருக்கு பதிலாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. இதனால் தியேட்டருக்கு பதிலாக இணையதளத்தில் நேரடியாக புதிய படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் ரிலீஸ் ஆகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

    தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படமும் நேரடியாக இணையதளத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி வெளியாகிறது. இரண்டு பெரிய நடிகைகள் படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அனுஷ்கா

    இந்த நிலையில் நடிகை அனுஷ்கா நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்தையும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் இணைய தளத்தில் வெளியிட தயாராகிறார்கள். இதில் மாதவன், மைக்கேல், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. 

    ஜனவரி 31-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து பின்னர் பிப்ரவரிக்கு தள்ளி வைத்தனர். அதன்பிறகு ஏப்ரல் மாதம் வரும் என்றனர். கொரோனா ஊரடங்கினால் 3-வது தடவையும் வெளியாகவில்லை. இதனால் ‘நிசப்தம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலத்தில் சிக்கித்தவித்த தமிழர்களை நடிகர் ராகவா லாரன்ஸ் மீட்க உதவி செய்துள்ளார்.
    நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2-ம் பாகம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்கு வாங்கிய சம்பள முன்பணத்தை கொரோனா நிவாரண உதவிகளுக்கு வழங்கி இருக்கிறார். சமீபத்தில் தனது அலுவலகம் முன்னால் திரண்ட வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு மூலம் ஏற்பாடு செய்தார்.

    இந்த நிலையில் குஜராத்தில் சிக்கி தவிக்கும் தமிழ் குடும்பங்கள் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பதாக அழுது வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவை லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, ‘தமிழ் குடும்பங்களை மீட்க உதவுங்கள்’ என்று குஜராத் முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் விடுத்தார். லாரன்ஸ் கோரிக்கையை குஜராத் அரசு ஏற்றது.

    இதுகுறித்து ராஜ்கோட் கலெக்டர் தமிழ் குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இருப்பதாகவும், அவர்கள் தமிழகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து லாரன்ஸ் குஜராத் முதல்-மந்திரிக்கும், ராஜ்கோட் கலெக்டருக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பிரபல இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் பரவலால் தியேட்டர்கள் 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு பழைய மாதிரி கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து சில காலம் இருக்கும் என்றும், அதோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனவே தியேட்டர்கள் திறந்த பிறகும் உள்ளே ஒரு இருக்கையை காலியாக விட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க தியேட்டர்களுக்குள் மதுபானம் வினியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார். 

    நாக் அஸ்வின்

    அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “படம் பார்க்க ரசிகர்களை இழுக்க திரையரங்குகளுக்குள் பீர், ஒயின் போன்ற மதுபானங்களை விற்க லைசென்ஸ் வழங்க வேண்டும். இதன்மூலம் தியேட்டர் தொழிலை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் இதுபோல் திரையரங்குகளில் மதுபானங்களை விற்கும் முறை உள்ளது” என்று வற்புறுத்தி உள்ளார்.

    தியேட்டர்களில் மதுபானம் கொடுத்தால் குடும்பத்தினர் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நாக் அஸ்வின், ‘மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமாவது இதை அமல்படுத்தலாம்’ என்றார்.
    சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
    திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். சில படங்களை டைரக்டும் செய்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: “எனக்கு சிறு வயதில் நடந்த ஒரு அனுபவத்தை இப்போது நினைக்கும்போதும் மனது வலிக்கிறது. அப்பா வயதில் இருக்கும் ஒருவர் என் முன்னால் அந்தரங்கத்தை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அது எனக்கு புரியவில்லை. 

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    வளர வளர புரிய ஆரம்பித்ததும் எவ்வளவு கேவலமான செயல் என்று மனதில் ரணம் ஏற்பட்டது. பெண் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்து பாருங்கள். அதே மாதிரி எனது மகள் பள்ளியில் இருந்து வரும்போது லிப்டில் ஒருவன் ஆபாசமாக நின்றுள்ளான். சி.சி.டி.வி. கேமராவில் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது நெருங்கிய நண்பர்கள் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு மோசமான தொடுதல் நடந்துள்ளது. இப்படி பல பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது”. இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிம்பு - திரிஷா கூட்டணியில் வெளியாகி காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தின் பாடல்கள், இசை, கதையமைப்பு, வசனம் ஆகியவை அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதன் அடுத்த பாகத்தை எழுதி முடித்துள்ளார் கவுதம் மேனன். அடுத்தடுத்த படங்களில் அவர் பிஸியானதால் அதனை கிடப்பில் போட்டிருந்தார். 

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வுக்காக அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் குறும்படமாக எடுத்துள்ளார். வீட்டிலிருந்தபடியே இந்த குறும்படத்தை எடுத்துள்ளார் கவுதம் மேனன். சிம்பு மற்றும் திரிஷா செல்போனில் உரையாடுவது போன்று இந்த குறும்படம் அமைந்துள்ளது.

    திரிஷா, சிம்பு, கவுதம் மேனன்

    இந்த குறும்படத்திற்கான வசனத்தை கவுதம் மேனன் அனுப்பியபோது, அதனை படித்தவுடன் சிம்பு அழுதுவிட்டாராம். பின்னர் கவுதம் மேனனிடம், இதனை குறும்படத்துடன் நிறுத்திவிடக்கூடாது, கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் பண்ணனும் என சொன்னாராம். மேலும் அதன் ஷுட்டிங்கிற்காக எப்போது வேண்டுமானாலும் தேதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாக  சிம்பு உறுதியளித்தாராம். இதன்முலம் விண்ணைத்தாண்டி வருவாயா-2 குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள பிஸ்கோத் படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் ஆர்.கண்ணன் வெளியிட்டுள்ளார்.
    மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் படம் பிஸ்கோத். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். 

    பிஸ்கோத் பட போஸ்டர்

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்தும் தடைபட்டது. தற்போது அரசு அனுமதி அளித்ததையடுத்து இதன் பணிகள் வேகமெடுத்துள்ளன. 

    இந்நிலையில், இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பிஸ்கோத் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இது முடிவடைந்துவிடும் என தெரிவித்துள்ளார். 
    ஜே பார்த்திபன் இயக்கத்தில் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாக்கி இருக்கும் மிருகா படத்தின் முன்னோட்டம்.
    'ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.

    ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

    இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான்.  அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா'.
    ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியாரின் திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
    ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் புருவத்தை வளைத்து சுருக்கி முக பாவனை காட்டியதன் மூலம் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். பள்ளி மாணவியாக இருந்த பிரியா வாரியர், அடார் லவ் படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்தார். அவர் காட்டிய முக பாவனைகள், உலகம் முழுவதும், ஒரே நாளில் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்தது. அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது. 

    பிரியா வாரியர்

    இந்நிலையில் திடீரென்று பிரியா வாரியார் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விலகியுள்ளார்.  அதற்கான காரணம் பற்றி அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.  அதே சமயம் மற்ற சமூக வலைதள கணக்குகளில் தொடர்ந்து நீடிக்கிறார். லட்சக்கணக்கான பாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் பிரியா வாரியர் மீது யார் கண்ணு பட்டுச்சோ இன்ஸ்டாவிலிருந்து விலகி விட்டாரே, என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான், காப்பான் ஆகிய 3 படங்கள் உருவாகின. இதில் அயன் தவிர மற்ற இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தன. இந்நிலையில், அக்கூட்டணி 4-வது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது அயன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லாக்டவுன் முடிந்த பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூர்யா, கே.வி.ஆனந்த்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களில் சூர்யா நடிக்க உள்ளார். இதன்பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், பாகுபலி கெட்-அப்பில் டிக்டாக் செய்து அசத்தியுள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாததால், சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களை வார்னர் டிக்டாக் செய்து மகிழ்வித்து வருகிறார். சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இவர் ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபரம்லு படத்தில் இருந்து புட்ட பொம்மா மற்றும் ராமுலு போன்ற பாடல்களுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் டிக்டாக் செய்து அசத்தினார். 

    தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடித்து உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் இடம்பெறும், 'அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    View this post on Instagram

    Guess the movie!! @sunrisershyd

    A post shared by David Warner (@davidwarner31) on


    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் கார்த்திக் டயல் செய்த எண். இக்குறும்படத்தில் திரிஷா நடித்துள்ளார். சிம்பு நடித்துள்ளாரா? இல்லையா என்பதை கவுதம் மேனன் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்தின் முன்னோட்டமாக இந்த குறும்படம் இருக்கும் என கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். 

    கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா துறை முடங்கியதால் சோகத்தில் இருக்கும் கார்த்திக்கிற்கு ஜெஸ்சி ஆறுதல் கூறுவது போல இந்த குறும்படத்தின் டீசர் அமைந்திருந்தது.

    திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

    இந்த குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவதாக தகவல் வெளியான நிலையில், நடிகை திரிஷா அதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இதற்கான இசைக்கோர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அது முடிந்ததும் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

    மிஷ்கின், அருண்விஜய்

    இந்நிலையில் மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மிஷ்கினின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அருண்விஜய் கைவசம் சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் உள்ளது. இதுதவிர வல்லினம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
    ×