என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதியை வைத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக கொரோனா குமார் என்ற படத்தை இயக்க உள்ளார்.
    ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், தற்போது மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர். 

    இந்நிலையில், கோகுல் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இவரின் அடுத்த படத்திற்கு 'கொரோனா குமார்' என பெயர் வைத்துள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ஒரு விஷயம் செய்ய நினைக்கும் முடிவெடுக்கும் போது லாக்டவுன் அறிவிக்கின்றனர். அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல உள்ளோம். இப்படத்தில் நல்லதொரு சமூக கருத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கோகுல், விஜய் சேதுபதி

    இப்படத்தின் புரோமோ வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2-ம் பாகமாக கொரோனா குமார் திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. லாக்டவுனுக்கு பின் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. 

    நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

     இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. 

    பீட்டர் பால்

      பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது "அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர். வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
    தமிழில் பிரபல நடிகராக இருக்கும் சிம்பு தயாரிப்பாளருக்கு இடையேயான பிரச்சனையில் சமரசம் செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு கன்னட படமான முஃப்தி ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு - கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகாவில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், சிம்பு - ஞானவேல் ராஜா இடையேயான மனஸ்தாபத்தால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. 

    இதையடுத்து சிம்பு, ஹன்சிகாவுடன் மஹா படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார். 

    சிம்பு, கௌதம் கார்த்திக்

     இந்த நிலையில், தற்போது முஃப்தி பட ரீமேக்கை மீண்டும் துவங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் சிம்பு - ஞானவேல் ராஜா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் பிளஸ் மைனஸ் என்ன என்பதை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
    நடிகைகள் பலரும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பெண் குயின் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

     கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் பிளஸ், மைனஸ் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், பிளஸ் நிறைய இருக்கு. படத்தின் மொத்த பளுவையும் நாமே தாங்க வேண்டும். பொறுப்பு நிறைய இருக்கு. பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பிளஸ். அதை பின்பற்றுவது கொஞ்சம் கஷ்டம். 

    கீர்த்தி சுரேஷ்

    நம்ம தான் படத்துல மெயின் என்று இருக்கும் போது சின்ன சின்ன விஷயங்கள் கூட பார்த்து பண்ண வேண்டியது இருக்கு. நல்ல கதையை தேர்வு செய்ய வேண்டும். ஒரு படம் நடித்தால் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பை கொடுக்க வேண்டும். பிளஸ் என்று சொல்வதை விட பொறுப்புகள் அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். மைனஸ் எதுவும் பெரியதாக இல்லை. என்றார்.
    விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் துருவ் விக்ரம்

     இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையாக உருவாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு திறவுகோல் மந்திரவாதி என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக விக்கிப்பீடியோவில் தகவல் வெளியாக, படக்குழு அதனை மறுத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தன்னுடைய தந்தைக்கு தானே முடிவெட்டி விட்டு பிரபல நடிகர் காசு வாங்கி இருக்கிறார்.
    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தான் ஒரு சில தளர்வுகள் ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டது.

    ஆனால் தற்போது மீண்டும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மீண்டும் சலூன் கடைகள் அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொண்டும் தங்கள் குடும்பத்தினருக்கும் முடி வெட்டி கொண்ட வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    அந்த வகையில் தற்போது நடிகர் ஆதி தனது தந்தைக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தந்தைக்கு முடி வெட்டி விட்டு அழகு பார்க்கும் போது, தந்தை அவருக்காக பணம் கொடுத்தார். முதலில் அந்த பணத்தை வேண்டாம் என்று மறுக்கும் ஆதி, தந்தை வலுக்கட்டாயமாக பணம் கொடுக்க முயற்சிக்கும் போது தந்தையின் மணிபர்சை பிடுங்கி அதில் இருந்து அவரே ஒரு தொகையை எடுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
    புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டை மக்கள் கடவுளாக வழிபட்டுள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காகச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

     சிக்கி வேலையிழந்து தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 200 தொழிலாளர்களும் அடக்கம்.  இதுமட்டுமின்றி, தனது 6 மாடி ஹோட்டலை மருத்துவர்கள் தங்கி ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு நடிகர் சோனு சூட் அறிவித்திருந்தார். 



    இந்நிலையில் சோனு சூட்டின் உதவியை நினைத்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் முக்கிய சாலை சந்திப்பில் ஒரு குழுவினர் சோனு சூட்டின் பிரமாண்ட பேனரை வைத்து வழிபட்டுள்ளனர்.

     கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மன்னர் என்று சோனு சூட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ள தொழிலாளர்கள், அவர் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்திய வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 'தளபதி 65' படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார் ராஷ்மிகா. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    ராஷ்மிகா

    இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 'தளபதி 65' படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) 'தளபதி 65' குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார்.
    சுஷாந்த் சிங் மரணமடைந்தால் தோனி இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக தயாரிப்பாளர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.
    பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றார். 2016-ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் அவரது அபார நடிப்பு அனைவரையும் அசரவைத்தது. தோனியின் ஸ்டைல், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்டமுறை என்று அவரின் அனைத்தையும் கண்முன்னே கொண்டுவந்திருப்பார். 

    சுஷாந்த் சிங்கின் கடுமையான உழைப்பின் காரணமாகவே அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. "M.S. Dhoni: The Untold Story" படத்தில் தோனியின் இளம் வயது முதல் அவர் இந்தியாவுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று சாதித்தது வரை படமாக்கி இருந்தனர். 

    சுஷாந்த் சிங் ராஜ்புட்

    இந்நிலையில், உலகக்கோப்பைக்கு பின்னர் தோனியின் வாழ்க்கையில் நடந்த கிரிக்கெட் மற்றும் சொந்த அனுபவங்கள் குறித்து 'தோனி  2' படமாக தயாரிக்க தயாரிப்பாளர் அருண் பாண்டே முடிவு செய்திருந்தார். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. 

    தற்போது சுஷாந்த் சிங் மரணமடைந்து விட்டதால், அவர் அளவுக்கு அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு ஆளே இல்லை என்றும் அதனால் தோனி 2 படம் எடுக்கும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.
    சுஷாந்த் தற்கொலை முடிவு எடுத்ததன் பின்னணியில் சல்மான் கான் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இருப்பதாக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிறன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்கொலைக்கான காரணம் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

    சுஷாந்த் சிங் ராஜ்புட்

    இந்நிலையில், அவரது மரணத்தில் பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோகர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்பட 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். சுஷாந்த் 7 படங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதுதவிர அவரது சில படங்கள் ரிலீசாகவில்லை. இதுவே அவர் தற்கொலை முடிவு எடுக்க காரணமாக இருக்கும். அவர்கள் திட்டமிட்டு சுஷாந்த்தின் பட வாய்ப்புகளை தடுத்ததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெற்றி பெற்ற பிகில் படம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
    அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

    கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக படம் சறுக்கினாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பிகில் பட ரீ ரிலீஸ் போஸ்டர்கள்

    இந்நிலையில், இப்படம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஜெர்மனியில் ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த படங்களை திரையிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில், இந்தாண்டு பிகில் படத்தை அரசாங்க நிபந்தனைகளுடன் திரையிட உள்ளனர். பிரான்சில் வருகிற ஜூன் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிகில் படம் திரையிடப்பட உள்ளது.

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என கூறியுள்ளார்.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மன நல ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

    அந்தவகையில் நடிகை அனுஷ்கா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “எல்லோரும் நிறைவானவர்கள் என்பது இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கின்றனர். இதுதான் சரி இதுதான் தவறு என்பதும் இல்லை. வாழ்க்கையை நடத்த நாம் பிறக்கும்போதே வரைபடத்தோடு பிறக்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் அவரவர் வழிகளில் நடக்கின்றனர். 

    அனுஷ்கா

    சிலர் உதவி கேட்பார்கள். சிலர் உள்ளுக்குள் உடைந்து போவார்கள். சிலர் அழுது விடுவார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலருக்கு உதவிகள் கிடைப்பது இல்லை. சிலர் அவரவர் வழியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கனியோடு இருக்கவும் கற்றுக்கொள்வோம். விட்டுக்கொடுக்கவும் மற்றவர்கள் மீது அன்பு காட்டவும் கற்றுக்கொள்வோம். மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் பிறருடன் உரையாடவும் வலுவாக இருக்கவும் பலகீனமாக இருக்கவும் கற்றுக்கொள்வோம். 

    உள்ளே எப்படி உணர்கிறோமோ அதை வெளியே மற்றவர்களுக்கும் சொல்லலாம். நாம் மனிதர்கள் சிரிப்பு, கேட்க காது, நேர்மையான தொடுதல் போன்றவை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது சரி செய்யவும் முடியாது. ஆனால் ஒரு சிறிய அடி எடுத்து வைத்தாலும் பெரிய மாற்றம் வரும்.” இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.
    ×