என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனா பாதித்த நடிகை ஒருவர், மருத்துவமனையில் டாக்டர், நர்ஸ் தன்னை கவனிப்பதில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
    இந்தி நடிகை இஷிகா போரா. இவர் மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். இஷிகா போராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அசாம் மாநிலம் நகோனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று இஷிகா போரா குற்றம் சாட்டி உள்ளார். 

    இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘நான் மும்பையில் வசிக்கிறேன். சொந்த ஊருக்கு வந்தபோது கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். டாக்டரும் நர்சும் என்னை கவனிப்பது இல்லை. எதற்காக இங்கே வைத்துள்ளனர் என்று புரியவில்லை. 

    இஷிகா போரா

    மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீர், வைட்டமின் சி, வெள்ளரி, தக்காளி, அஸ்வகந்தா போன்றவற்றின் மூலம் கொரோனாவை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். ஆனால் எனக்கு எதுவும் தரவில்லை. வீட்டில் சத்தான உணவு, சூப்கள், பழங்கள் மூலிகை மருந்துகள் சாப்பிட்டும் உடற்பயிற்சிகள் செய்தும் குணமாகி இருப்பேன். ஆஸ்பத்திரியில் குளிர்ந்த தண்ணீரும் உணவும் தருகிறார்கள். கொசு கடிக்கிறது. வேதனையில் இருக்கிறேன். தற்கொலை உணர்வும் வருகிறது'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    விஜய்யிடம் பேசுவதுமில்லை, அவரது படங்களை பார்ப்பதுமில்லை என நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர், நெப்போலியன். நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

    இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன், ஜூம் செயலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். போக்கிரி படத்தில் விஜய்யுடன் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

    நெப்போலியன், விஜய்

    அதற்கு பதிலளித்த நெப்போலியன் "பிரபுதேவாவுக்காக தான் போக்கிரி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த படத்தின் போது எனக்கும் விஜய்க்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது.

    தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த கதாபாத்திரத்தில் தான் விஜய் நடித்தார். நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதனால் தானே வளர்ந்து வருகிறார்” என்றார். 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி மே 1-ம் தேதி, இப்படம் ரிலீசாவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ந் தேதி ஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
    கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக நடிகை டாப்சி கோபமாக கூறியிருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார். இது பரபரப்பானது.

     இந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். இவர் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி வந்தான் வென்றான், காஞ்சனா 3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். 

    டாப்சி

     அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு ரூ.36 ஆயிரம் மின் கட்டணம் விதித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் 3 மாதங்களாக நான் புதிதாக மின்சாதனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ இல்லை. அப்படி இருக்கும்போது இவ்வளவு மின் கட்டணம் எப்படி கணக்கிட்டனர் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார்.
    பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை தொடர்ந்து நடிகர் அமீர்கான் வீட்டில் கொரோனா நுழைந்து இருக்கிறது.
    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்நோய் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இல்லத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமீர்கானின் பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

    அமீர்கான் பதிவு 

    இது குறித்து அமீர் கான் தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், என்னுடைய பணியாளர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். மும்பை மாநகராட்சி அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

     எங்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. இப்போது எனது தாயாருக்கு பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறேன். அவருக்கும் நெகட்டிவ் முடிவு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
    ஊரடங்கு நேரத்தில் காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட  காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். 

     இந்நிலையில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தயாரிப்பாளர்

     படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்த  தாதா 87 என்ற படத்தை தயாரித்தவர்.  இவரோடு பல்மருத்துவ நிபுணர் ஆனந்த்ராஜ் என்பவரும் கைது  செய்யப்பட்டுள்ளார்.
    வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக சூர்யா ரசிகர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
    கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர். இ

    இதில்  வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக நகர், பகுதிகளில், பெரம்பூர் பேருந்து நிலையம், பெரம்பூர் ரயில் நிலையம், ஜீவா ரயில் நிலையம், அயனாவரம், ஜமாலியா, புளியந்தோப்பு, மாதாவரம் பைபாஸ், மூலக்கடை போன்ற பகுதிகளில் லாக்டவுனில் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்கு கடந்த 80 நாட்களாக தினமும் மதியம் மற்றும் இரவு  சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்த நண்பர்கள் தலைமையில் தினமும் உணவளித்து வருகிறார்கள்.

    மக்களுக்கு உதவும் சூர்யா ரசிகர்கள்

     80 நாட்களில் இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
    மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதற்கு சாக்‌ஷி அகர்வால் நன்றி கூறியுள்ளார்.
    சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால்,  தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

     நேற்று மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

    சாக்ஷி அகர்வால்

     இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.
    பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் எம்.ஜி.ஆர் மகன் படத்தின் முன்னோட்டம்.
    கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன்ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். ’எம்.ஜி.ஆர் மகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். 

    கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் இயக்குநர் பொன்ராம் கவனித்துள்ளார். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ஆசை, பிரபல இயக்குனரின் மரணத்தால் நிறைவேறாமல் போனதாக கூறப்படுகிறது.
    கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பீஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். 

    இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படமும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்யும் பணிகள்  நடக்கிறது.

    சாஷி

    ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை பார்த்து வியந்த நடிகர் அஜித், இயக்குனர் சாஷியை போனில் பாராட்டினாராம். மேலும் அவருடன் கூட்டணி சேரவும் விரும்பினாராம். இதையடுத்து அஜித்துக்காக கதை தயார் செய்த சாஷி, அதை கொரோனா ஊரடங்குக்கு பின் சொல்ல காத்திருந்தாராம். இதனிடையே கடந்த ஜூன் 18-ந் தேதி சாஷி உயிரிழந்ததால், அஜித்தின் ஆசை நிறைவேறாமல் போனது. 
    பிகில் படத்தில் விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதற்கு சுஷாந்த் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

    ’பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் 'ராயப்பன்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அந்த கேரக்டருக்காக ஒரு சிலரை பரிசீலனை செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.

    அர்ச்சனா கல்பாத்தி

    அப்போது மும்பையில் இருந்து வந்திருந்த ஒப்பனை கலைஞர் ஒருவர் சுஷாந்த் சிங் நடித்து வரும் சிச்சோரே என்ற படத்தில் அவருடைய இரண்டு கதாபாத்திரம் குறித்த புகைப்படங்களை காண்பித்தார். அந்த புகைப்படங்களை பார்த்த பின்னர் தான் ராயப்பன் கதாபாத்திரத்திலும் ஏன் விஜய் நடிக்கக்கூடாது என்ற யோசனை எனக்கும் அட்லீக்கும் வந்தது.

    அதன் பின் விஜய்க்கு ராயப்பன் கதாபாத்திரத்தின் டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து தான் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய்யும் வயதானவராக இதுவரை நடித்ததில்லை என்பதால் அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
    தனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.

    படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டிருந்தனர். இந்தப் படத்தில் தனுசுடன் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படம், ஷுட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்டது.

    இதனிடையே இப்படத்தை தனுஷ் மீண்டும் தொடங்க உள்ளதாகவும், அப்படத்தின் சில பகுதிகளை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    ஷான் ரோல்டன்

    இந்நிலையில், அப்படம் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: தனுஷ் இயக்கும் படத்தின் பணிகளில் சில முன்னேற்றங்கள் இருப்பதை தவிர எனக்கு எந்த அப்டேட்டும் தெரியாது. ஆனால் இப்படம் முழுவடிவம் பெற்றால், கண்டிப்பாக இது தமிழ் சினிமாவின் திருப்புமுனை படமாக அமையும். பாகுபலி, தெலுங்கு சினிமாவின் போக்கை மாற்றியதைப் போலவே, இந்த படம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் என்று நான் நம்புகிறேன்.

    இந்த படத்தின் மூலம் தனுஷின் அவதாரத்தை ஒரு சிறந்த இயக்குனராக எல்லோரும் பார்ப்பார்கள். தனுஷ் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதையும், அவர் எந்த பாத்திரத்தையும் திறம்பட செய்பவர் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அதேபோல் அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட, விரைவில் அனைவரும் அதைப் பார்ப்பீர்கள். அவரது கதையில் ஏராளமான ஆச்சரியங்கள் உள்ளன" என்று ஷான் ரோல்டன் கூறினார்.
    ×