என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பாடலை சிறுமி அதுபோல் இசையமைத்து அவரை நெகிழ வைத்துள்ளார்.
    செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தின் "தும்பி துள்ளல்" என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. வெளியான நிமிடத்தில் இருந்தே பாடல் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது. ஏ.ஆர் ரஹ்மானின் அற்புத இசையில் பாடல் எல்லோராலும் பாரட்டப்பெற்று  தற்போது 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இன்னும் வெற்றிகரமாகப்  பார்க்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் நேற்று கண் பார்வையற்ற சிறுமி  சஹானா  கீ-போர்டில் மிக அழகாக வாசித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். சஹானா பிறவியிலேயே கண்பார்வையற்ற சிறுமி. அவர் தமிழ் சேனலில் சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாவதாக வந்தவர். அவரின் கீ-போர்டில் வாசித்த பாடல் வந்த சற்று நேரத்திலேயே எல்லாராலும் பாரட்டப்பெற்று பகிரப்பட்டது. அதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நேற்று இரவு சஹானாவின் வீடியோவை கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் ட்விட்டரில் ஸ்வீட் என ரீ ட்வீட் செய்து பாராட்டியிருந்தார். 

    சிறுமி சஹானா

    உடனே படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தன் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாகவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சார்பாகவும்  சிறுமி சஹானாவிற்கு விலை உயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டுடியோ செட்டப்பை பரிசாக கொடுத்து மகிழ்வித்துள்ளார்.
    நடிகை சமந்தாவை ஸ்பைடர் மேன் போல் சித்தரித்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

    நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், அதில் ''கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் யோகா'' என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், சமந்தா யோகா செய்யும் புகைப்படத்தை ஸ்பைடர் மேனோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம் போட்டுள்ளனர். சமந்தாவிற்கு அந்த மீம் மிகவும் பிடித்திருந்ததால், அவர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம்.
    ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். 

    இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் திட்டமிட்டு நடந்ததல்ல, திடீரென அமைந்தது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
    விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையாக உருவாகவிருக்கிறது. 

    விக்ரம், துருவ்

    சியான் 60 படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: விக்ரம் உடனான படம் திட்டமிட்டு நடந்ததல்ல. திடீரென அமைந்தது. ஒருநாள் விக்ரம் என்னை ஒரு புராஜக்ட் பற்றி பேசலாம் என வரச் சொன்னார். விக்ரம் அழைத்தது எனக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் பல்வேறு கதைகளை விவாதித்தேன், இறுதியில் ஒரு கதையை இறுதி செய்தோம். இன்னும் சியான் 60 படத்தின் கதையை முழுவதாக எழுதி முடிக்கவில்லை என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
    சாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல என இயக்குனர் பாரதிராஜா தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
    தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பேரிடர் காலங்களைக் கையாளும் தமிழக அரசுக்கு, நேரம் காலம் பாராமல் தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் சிறப்பான பணியை முன்வைக்கும் முதல்வர் மற்றும் அதிகாரிகளை நன்றியோடு பார்க்கும் அதேவேளையில், இவ்வரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் ஈன காரியங்களை சில அதிகாரிகள் தங்கள் வரம்பு மீறி செய்துவிடுகிறார்கள். 

    ஜனநாயக கட்டமைப்பில் வாழும் நாம், எப்படி இரு உயிர்கள் வதைபட்டு அவதிக்குள்ளாகி மரணிக்க அனுமதித்துவிட்டோம் என்று புரியவில்லை. அந்த இறப்பின் வலி, வேதனை என்னை உறங்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறது. அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வோடு கூட நிற்க வேண்டும். தனிப்பட்ட சில மனிதர்களின் தவறு ஒரு அரசாங்கத்தின் தவறல்ல. 

    பாரதிராஜா

    குற்றம் செய்தவர்களை பாரபட்சமின்றி இந்த அரசு கையாள வேண்டும். கொரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு தூய்மைப் பணியாளருக்கு இல்லாத மன அழுத்தமா? பொருளாதாரம் இழந்து வருமானம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு இல்லாத நெருக்கடியா? மன அழுத்தம் யாரேனும் கொண்டிருந்தால் அக்காவலர்கள் விடுப்பில் சென்று மன அமைதி கொள்ளட்டும். 

    அகால மரணமடைந்த ஜெயராஜனுக்கும் பென்னிக்ஸுக்கும் மட்டுமல்ல இந்த பேரிடரைப் பார்த்துப் பார்த்துக் கையாளும் அரசுக்கும் பெரும் அநீதி இழைத்துள்ளார்கள் சாத்தான் குள காவல் அதிகாரிகள். அக்கொடூரர்களை மேலும் மக்கள் பணி செய்யவிடாமல் தடுப்பதே நீதியாகப் பார்க்கப்படும். துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகளை அக்கொடியோர் மீது மேற்கொள்ள வேண்டும்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து பெப்சி அமைப்பு தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: ‘’சின்னத்திரை படப்பிடிப்புகளை எப்போது தொடங்கலாம் என்று தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் போன் செய்து விசாரித்தனர். வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பழைய தளர்வுகள் நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    நான் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் பேசினேன். அவர் 6-ந்தேதிக்கு பிறகு புதிய அனுமதி வாங்க வேண்டி இருக்காது. ஏற்கனவே அளித்துள்ள அனுமதியின்படியே படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றார். மீண்டும் முதல்வரையோ அமைச்சரையோ பார்த்து அனுமதி வாங்க வேண்டி இருக்குமா? இல்லை இதே அனுமதியோடு படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டேன். 

    ஆர்.கே.செல்வமணி

    அவர் 6ந்தேதிக்கு பிறகு பழைய நடைமுறையே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவே புதிய அனுமதி தேவை இருக்காது. ஒருவேளை தேவைப்பட்டால் நான் உங்களுக்கு சொல்கிறேன் என்றார். ஒன்றிரண்டு நாட்கள் காத்திருந்து நிலைமையை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றும் தெரிவித்தார். 

    வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பழைய நடைமுறையே இருக்கும் என்பதால் 8-ந்தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க நாம் தயாராகலாம். ஓரிரு நாளில் இதனை உறுதிப்படுத்தி சொல்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.
    சாத்தான்குளம் வழக்கில் மாஜிஸ்திரேட்டிடம் துணிச்சலுடன் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை திரைப்பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.
    சாத்தான் குளம் போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விடிய விடிய அடுத்து துன்புறுத்தியதாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த பெண் தலைமை காவலர் ரேவதியை பாராட்டி இணைய தளத்தில் ஹேஷ்டேக்கை உருவாக்கி உள்ளனர். அதில் பலரும் ரேவதியை வாழ்த்தி பதிவுகள் வெளியிடுகின்றனர்.

    நடிகர் கமல்ஹாசன் தனது வலைத்தள பக்கத்தில், “சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிகொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

    நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட பதிவில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று கூறியுள்ளார்.

    இயக்குனர் வெற்றிமாறன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், துணிச்சல் மிகுந்த ரேவதி, நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் துணையாக இருப்போம்“ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    நடிகை ராஷிகன்னா வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் தைரியமும் துணிச்சலும் இன்னும் நீதியின் மீது எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. உண்மையை வெளிப்படுத்திய ரேவதிக்கு நன்றி. உங்களை நினைத்து எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

    நடிகை நிவேதா பெத்துராஜ் வலைத்தளத்தில், “ரேவதிக்கு வாழ்த்துக்கள், இந்த தேசம் உங்கள் பின்னால் நிற்கிறது” என்று கூறியுள்ளார்.
    காதலித்து ஏமாற்றியதாக நடிகை கொடுத்த புகார் அடிப்படையில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

      நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால்  வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார். இ

    இதை தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டோம் என கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷியாம் கே.நாயுடு சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம். 

    ஆனால் அந்த ஆவணங்களில் இருந்த ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷியாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
    பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டிருக்கிறார்.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருப்பவர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

     1945-ம் ஆண்டு பிறந்த இவருக்கு வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி 74-வது பிறந்தநாள். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

     அந்த வீடியோவில், “பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு சந்தோஷமாக செல்வீர்கள். ஆனால் இந்த வருடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது.

     யாரும் இப்போது உண்மையான சந்தோஷத்தில் இல்லை. பயம் கலந்த நிலையிலேயே இருந்து வருகிறோம். ஆகவே உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். யாருமே இந்த வருடம் நேரில் வர வேண்டாம். ஏனென்றால் உங்களது குடும்பத்தாருக்கு நீங்கள் முக்கியம். உங்களுக்கு குடும்பம் முக்கியம். மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.
    பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

      இந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில் வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

    நவ்யா சாமி

    சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன் பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
    சமூக வலைத்தளத்தில் நடிகைகள் வேதிகா மற்றும் சாயிஷா இருவரும் போட்டி போட்டு நடன வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் வேதிகா. இவர் லாரன்ஸின் முனி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்திலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதே போல தனது ஸ்டைலிஷ் நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். 

    சாயிஷா

     இந்நிலையில் நடிகைகள் வேதிகா மற்றும் சாயிஷா தங்களது ட்விட்டர் பக்கத்தில், அவர்களது புதிய டான்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார். பிரபல ஆங்கில ஆல்பம் பாடலுக்கு, இருவரும் செம ஸ்டைலிஷாக ஆடும் இந்த வீடியோக்கள், இணையத்தில் வைரல் அடித்து வருகின்றது. சபாஷ், சரியான போட்டி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    வேதிகா
    கொரோனா ஊரடங்குக்கு பின் சினிமா படப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கும் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கினால் சினிமா உலகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். சினிமா படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும், தியேட்டர்களை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

    ஆனால் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் தற்போது அதற்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. திரையுலகம் டிசம்பர் மாதம்தான் பழைய நிலைக்கு திரும்பும் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். 

    நாசர்

    இது பற்றி அவர் கூறியதாவது: கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. 3 மாதங்களுக்கு மேலாக எந்த திரைப்பட பணிகளும் நடக்கவில்லை. சினிமா படப்பிடிப்புகளை மீண்டும் எப்படி நடத்துவது என்பதும் தியேட்டர்களை திறப்பதும் பெரிய சவாலாகவே இருக்கும். திரையுலகம் பழைய மாதிரியான நிலைக்கு திரும்புவதற்கு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரை ஆகலாம் என்று கருதுகிறேன். 

    தற்போதையை சூழ்நிலையில் நடிகர்கள் பலர் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். நடிகர்கள் சம்பள குறைப்பு செய்வது வரவேற்கத்தக்கது. நானும் கபடதாரி படத்துக்கு சம்பளத்தை குறைத்து இருக்கிறேன். ஸ்ரீபிரியா இயக்கிய யசோதா என்ற குறும்படத்தில் நடித்துள்ளேன். வீட்டில் இருந்தபடியே இதில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இவ்வாறு கூறினார்.
    ×