என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல தமிழ் பட நடிகரான ஜீவா நடித்துள்ள பாலிவுட் படம் பண்டிகை தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983-ல் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. கபீர்கான் இயக்கியுள்ள இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடித்துள்ளார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது. இப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், கங்கனா ரனாவத்தை டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.
நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தை கடுமையாக சாடி உள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கத்தை கங்கனா கண்டித்து பேசி இருந்தார். அவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின. வாரிசு நடிகைகள் கங்கனாவை கடுமையாக சாடினர். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத் தகுதி இல்லாதவர் என மீரா மிதுன் கூறியுள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது: “சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் கங்கனா ரனாவத் தேவையின்றி கருத்து தெரிவித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. தமிழ் திரை உலகில் இருக்கும் அரசியலால் உங்களை ஜெயலலிதா வேடத்துக்கு தேர்வு செய்து தவறு இழைத்துள்ளனர். சகாப்தமாக வாழ்ந்த துணிச்சல் மிக்க ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நீங்கள் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவர்” என்று மீராமிதுன் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகம் முடங்கி இருப்பதால் பிரபல நடிகர் ஒருவர் தெருவில் பாட்டு பாடி காய்கறி விற்று வருகிறார்.
கொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் நடிகர்கள் சிலரும் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் பாடிப்பாடி காய்கறி விற்று வருகிறார். ஜாவேத் ஆமிர் கானின் 'குலாம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தனது செலவுகளுக்கு காசில்லாமல் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ராகவா லாரன்ஸ் இயக்கி இருக்கும் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் சில படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீசாகின்றன. தமிழில் ’பொன்மகள் வந்தாள்’ ’பெண்குயின்’ ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் பாலிவுட் உட்பட பல மொழிகளிலும் பல முன்னணி நடிகர் நடிகைகளின் திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது.

தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வந்த ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்ஷய்குமார், கைரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியான ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல... என்று நடிகை வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர் பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பதிவின் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா - பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது. அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலளித்திருக்கும் வனிதா விஜயகுமார், “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.
மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவில் இருந்து மக்கள் அனைவரும் தப்பிக்க நடிகை தேவயானி யோசனை சொல்லி இருக்கிறார்.
கொரோனாவில் இருந்து வயதானவர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நடிகை தேவயானி வற்புறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- கொரோனா கஷ்ட காலத்தில் அந்தியூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கணவர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கிறேன். விதவிதமாக சமைத்து போடுகிறேன். தோட்ட வேலைகள் செய்கிறேன். வெளியே எங்கேயும் போவது இல்லை.
கட்டில் படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ் பாபு இயக்கிய அரசின் கொரொனா விழிப்புணர்வு படத்தில் ஆடுகளம் ஜெயபாலனுடன் நடித்துள்ளேன். இந்த விழிப்புணர்வு படம் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் எல்லோரும் முக கவசம் அணிய வேண்டும். அது உயிர்கவசம். கபசூர குடிநீர் குடியுங்கள். சமூக விலகல் வேண்டும். கைகுலுக்காமல் கை கூப்பி வணங்குங்கள். இதைத்தான் பாடல் மூலம் விழிப்பணர்வு படத்தில் சொல்லி இருக்கிறேன்.

வயதானவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோய் இருப்பவர்கள், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். கொரோனா எல்லோருக்கும் கஷ்டம் கொடுத்து உள்ளது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் விரைவில் ஒழிய ஆண்டவனை வேண்டுகிறேன். ஊரடங்குக்கு பிறகு மீண்டும் சினிமா தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்“ இவ்வாறு தேவயானி கூறினார்.
சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் நடந்த சம்பவம் பற்றி பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர் அறிமுகமானார். எனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோர் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசினோம். எங்கள் வீட்டுக்கும் வந்தனர். அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை துருவி துருவி கேட்டதும் பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.
அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டார்கள். பணம் கொடுக்க மறுத்ததும் மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது பார்த்துக்கொள்கிறோம் என்று எச்சரித்தனர். பெரிய நடிகை என்று நினைத்து விட்டாயா. மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாய் இல்லையா? பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.
என்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. சினிமா அழகியலான உலகம். பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.” இவ்வாறு பூர்ணா கூறினார்.
பாடகி ஜானகி குறித்து வதந்தி பரவிய நிலையில், அவர் உடல்நலமுடன் இருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். வயது மூப்பின் காரணமாக 2018ம் ஆண்டுடன் பாடல்கள் பாடுவதை ஜானகி நிறுத்திக்கொண்டார்.
இதனிடையே பாடகி எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல்கள் உலா வரத்தொடங்கியது. இது உண்மையில்லை எனக்கூறி ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: "காலையில் இருந்து சுமார் இருபது தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்துவிட்டது. ஜானகி அம்மா எப்படி இருக்கிறார் என்பது பற்றி தான் விசாரிக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் எப்படியோ ஒருவர் ஜானகி அம்மா குறித்து வதந்தி பரப்பியுள்ளார். என்ன முட்டாள்தனமான விஷயம் இது?.. நான் அவருடன் பேசினேன். அவர் மிகவும் நலமுடன் இருக்கிறார்.
இது போன்ற விஷயங்களால் என்ன நடக்கும் என்றால், யாராவது ஒருவர் ஒரு கலைஞரை மிகவும் மனப்பூர்வமாக விரும்பினால், அவர்களுக்கு இது மாரடைப்பை கொடுத்திருக்கலாம். சமூக வலைதளங்களில் தயவு செய்து நல்ல விஷயங்களை பரப்புவதற்காக மட்டும் பயன்படுத்துங்கள்.
சமூக வலைத்தளங்களை இது போன்ற மோசமான விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். தயவு செய்து.. ஜானகி அம்மா நீடூழி வாழட்டும். அவர் பாதுகாப்புடனும், உடல் நலமுடனும் இருக்கிறார். ஏன் இது போன்ற விஷயங்களை செய்கிறீர்கள் ஜென்டில்மேன்? உங்களை ஜென்டில்மேன்னு சொல்லலாமா? கடவுள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என எஸ்.பி.பி தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் படத்தில் நடித்ததால் கோட்டு சூட் ஆசை நிறைவேறியதாக நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நண்பர்களால் ‘’மாவீரன்” என்று செல்லமாக அழைக்கப்படுபவர், நெப்போலியன். நடிகர், தொழில் அதிபர் என இவருக்கு இரண்டு முகங்கள். மகனின் உடல் நலன் கருதி அமெரிக்காவில் குடியேறி விட்டார். அங்கே சென்ற பிறகும் அவர் திரையுலகை மறக்கவில்லை. ‘டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்து இருக்கிறார்.
ஹாலிவுட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நெப்போலியன் கூறியதாவது: ‘’1990-ல் குருநாதர் பாரதிராஜா மூலம் திரையுலகுக்கு அறிமுகமானேன். 4 காட்சிகளிலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தேன். இருப்பினும் என் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்தேன்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கினேன். சினிமா என் தொழிலாக மாறியது. இதற்கிடையே அரசியலில் ஈடுபட்டேன். என் மகனின் உடல்நிலை கருதி சினிமா, அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றேன். டெல் கணேசன் என் நெருங்கிய நண்பர். பட அதிபரான அவர், ‘’நான் எடுக்கும் படங்களில் நீங்கள் இருக்க வேண்டும்‘’ என்றார். அவர் எங்கள் ஊர்க்காரர் என்பதால் தொடர்ந்து அவருடைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்கள் மேலோங்கி நிற்கின்றன. தமிழில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் 100 பேர் கொண்ட குழுவினர் பணிபுரிவார்கள். ஆனால் ஹாலிவுட்டில் 15 அல்லது 20 பேர்களை வைத்துக் கொண்டு அழகாக படம் எடுக்கிறார்கள். தமிழில் ஒரு கதாநாயகனுக்கு ஒரு மானேஜர், ஒரு உதவியாளர், ஒரு டிரைவர் என இருப்பார்கள். ஹாலிவுட்டில் அனைத்தையும் நாமே செய்ய வேண்டும். பொருளாதார ரீதியில் பார்த்தால், அங்கே செலவு குறைவுதான். ஆனால், டாலர் என்பதால் அதிகமாக தெரியும். அனைத்தையும் திட்டமிட்டே தொடங்குகிறார்கள்.
‘டெவில்ஸ் நைட்’ படத்தில், அருங்காட்சியக மேற்பார்வையாளராக நடித்து இருக்கிறேன். எனக்கு தமிழை தவிர மற்ற மொழிகள் எல்லாம் தகராறுதான். கொஞ்சம் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். இங்கே நடிக்கும்போது எல்லா படங்களிலும் வேட்டி, சட்டை, பட்டாபட்டி டிரவுசர், கையில் ஒரு அரிவாள் கொடுத்து விடுவார்கள். எப்போதுதான் எனக்கு கோட்டு சூட் கொடுப்பீர்கள்? என்று கேட்டு இருக்கிறேன். அந்த ஆசை, ஹாலிவுட் படத்தில் நிறைவேறி இருக்கிறது.” இவ்வாறு நெப்போலியன் கூறினார்.
பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியான நிலையில், தற்போது வெங்கட் பிரபு படமும் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
ஷ்வேத் புரடெக்ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி.
சார்லஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், லாக்கப் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக யோகிபாபுவின் காக்டெய்ல் வருகிற ஜூலை 10-ந் தேதியும், வரலட்சுமி சரத்குமாரின் டேனி திரைப்படம் ஆகஸ்ட் 1-ந் தேதியும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்யா கமல் கெட்டப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கிலும் நடிக்கிறார். மேலும் தேவர்மகன் படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்யா பட கமல் போல் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. சத்யா பட கமல் கெட்டப்பில் இருக்கும் விஜய் சேதுபதியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், விஜய் சேதுபதியை வைத்து சத்யா இரண்டாம் பாகமே எடுக்கலாம் போல என கமெண்ட் செய்கின்றனர்.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தில் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நம்பிக்கை அளிக்குமாறு, அரசுக்கு சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The ppl behind the brutal crime should be punished as per the law & the punishment should make sure that these kind of crimes are not to be repeated again.I request the Government to give every one of us the hope by giving#JusticeForJayarajandBennicks
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 28, 2020






