என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், வருகிற 9-ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என சவால் விட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். மராட்டிய அரசியல்வாதிகளும் மும்பை போலீசாரும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சாடினார். இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும், மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வரவேண்டாம் என்று கூறியிருந்தார்.

மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, மும்பை போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். மும்பை போலீசை குற்றம் சாட்டும் கங்கனா ரணாவத்துக்கு மும்பையிலோ அல்லது மராட்டிய மாநிலத்திலோ வாழ உரிமை இல்லை என்று கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் டுவிட்டரில், “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். கங்கனா தற்போது சொந்த ஊரான மணாலியில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகா மந்தனா, “நானும் சிங்கிள் தான்” என கூறியுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ராஷ்மிகா, அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அந்தவகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ராஷ்மிகா. அப்போது ரசிகர் ஒருவர், யாரை காதலிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “நானும் சிங்கிள் தான். எனக்கு அது பிடித்திருக்கிறது. மேலும், சிங்கிளாக இருப்பது குறித்து வருத்தப்படுபவர்களுக்காக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நம்புங்கள், சிங்கிளாக இருப்பதை ரசிக்க தொடங்கிவிட்டால், உங்கள் காதலருக்கான மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க சிலர் வற்புறுத்தியதாக நடிகை சமீரா ரெட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.

நீங்க ஏற்கனவே முசாபிர் படத்தில் அவ்வாறு நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில் செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் நீங்கள் மாற்றப்படலாம் என்றார்கள்.
மற்றொரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ, உங்களுடன் நடிப்பது போர் அடிக்கிறது, நீங்கள் ஜாலியாக இருப்பதில்லை என சொன்னார். இனி, இவரோடு நடிக்கக் கூடாது எனவும் கூறினார். அதன் பின்னர் நான் அவருடன் நடிக்கவே இல்லை” என கூறியுள்ளார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம், தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ள ‘பிஸ்கோத்’ படத்தின் முன்னோட்டம்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘பிஸ்கோத்’. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே.செல்வா கவனிக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது: "இது சந்தானத்தின் 400-வது படம். 18-ம் நூற்றாண்டு உள்பட மூன்று காலகட்டங்களில் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. சரித்திர காலத்து கதையில் ராஜசிம்மன் என்ற மன்னர் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார். சரித்திர காலத்து ஆடைகள், பல்லக்கு, வாள், கத்தி போன்றவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. படத்தில் 30 நிடங்கள் இந்த காட்சிகள் இடம்பெறும்.

இதற்காக 500 நடிகர், நடிகைகள் சரித்திர கால உடை அணிந்தே நடித்துள்ளனர். பிஸ்கோத் படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்கும் படமாக தயாராகி உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் போல், சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படம் திரையரங்குகளில் வெளியிடப்படும். கொரோனா அழுத்தத்தில் இருந்து மக்களை மீட்டு, மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றுவதாக இந்த படம் இருக்கும்” என அவர் கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மை தான் என தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தெரிவித்துள்ளார்.
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான்.
இதனிடையே, மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதை தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர். மேலும் இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இது வடசென்னை படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது அந்த படத்தை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயல்புநிலை திரும்பியதும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. தனது மனைவியுடன், ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடி உள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று எஸ்.பி.பி. - சாவித்ரி தம்பதியின் 51வது திருமண நாள் என்பதால், எஸ்.பி.பி.யை பார்க்க மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சாவித்ரி, தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.சி.யூ.வில் வைத்து டாக்டர்கள் உதவியுடன் எஸ்.பி.பி. - சாவித்ரி தம்பதி கேக் வெட்டியதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், தனது காதலி ராஹியை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஆரவ்வுக்கு, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஆரவ்வும் ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன்அவர்களது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், காயத்ரி ரகுமார், ஆர்த்தி, வையாபுரி, பிந்து மாதவி, ஹரீஷ் கல்யாண், ஷக்தி, காஜல் பசுபதி, சுஜா வருணி, கணேஷ் வெங்கட் ராம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதேபோல் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்தி நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகர்களில் அர்ஜூன் கபூரும் ஒருவர். இவர் பிரபல பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார்.
இந்தியில் வெளியான இஸ்க்ஜாடே, அவுரங்கசீப், குண்டே, 2 ஸ்டேட்ஸ், ஹீ அண்டு ஹா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் அர்ஜூன் கபூர்.
இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜூன் கபூர் வெளியிட்டுள்ளார்.
மேலும், அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாலிவுட் நடிகர் அமித்தாப் பச்சனின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘நேரம்’, ‘பிரேமம்’ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அல்போன்ஸ் புத்திரன், 5 ஆண்டுகளுக்கு பின் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து `பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான `பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது. நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட `பிரேமம்' படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.
‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில், தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: "எனது அடுத்த படத்தின் பெயர் ‘பாட்டு’. பகத் பாசில் ஹீரோவாக நடிக்கிறார். யு.ஜி.எம் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இம்முறை நான் இசையமைப்பாளராக மாறியுள்ளேன். இப்படம் மலையாளத்தில் எடுக்கப்படும். படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப குழு பற்றிய விவரத்தை படம் எடுக்கப்படும்போது தெரிவிக்கிறேன்". என அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
தனுஷ் பட நடிகை ஒருவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்- நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டு புத்தகம் படித்தபடி அந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் சாரா அலிகான்.

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கும் அத்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அக்ஷய்குமாரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
டி.வி. சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஜோடியாக நடித்தவர் நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். டி.வி. தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டி.வி. தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினி என்று இவரை அழைத்தனர்.
மூன்று வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை நந்தினி காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு வருடத்திலேயே கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க தொடங்கிய மைனா, டி.வி. நடிகர் யோகேஷ் என்பவரை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கர்ப்பமாக இருந்த மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரின் கணவர் யோகேஷ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நந்தினிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகை தனது காதலனுடன் ஏர்போர்ட்டில் ஜாலியாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரும் இந்த செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஐதராபாத் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர்கள் இருவரும், ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.






