என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, நடிகை அனுஷ்கா படத்தின் புரமொஷனுக்கு உதவி உள்ளார்.
    ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 4 இந்தியர்களுக்கும், அமெரிக்க போலீசுக்கும் இடையே நடக்கும் கிரைம் திரில்லர் படமாக சைலன்ஸ் தயாராகி உள்ளது. 

    இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஏனெனில் சைலன்ஸ் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படமும் வெளியாக உள்ளது. தன் படத்துக்கு போட்டியாக வெளியாகும் படத்தின் டிரெய்லரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

    இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

    திரிஷ்யம் 2 படக்குழு

    தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக மோகன்லால், மீனா உள்ளிட்ட படக்குழுவினர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சாந்தனு, தோனியின் ரூமுக்கு சென்று சிஎஸ்கே மேட்ச்சை கண்டு களித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

    நடிப்பை தாண்டி நடிகர் சாந்தனுவுக்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் அதிகம். தீவிர கிரிக்கெட் ரசிகரான சாந்தனுவுக்கு ஐ.பி.எல்.லில் மிகவும் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். குறிப்பாக அவர் தோனியின் வெறித்தனமான ரசிகராம்.

    மனைவியுடன் சாந்தனு

    இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின, இதில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது. நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் இந்த போட்டியை தோனியின் ரூமில் கண்டு களித்தார்களாம்.

    ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறும் போது சிஎஸ்கே வீரர்கள் பிரபல நட்சத்திர ஓட்டலில் தான் தங்குவார்கள். அந்த ஓட்டலில் தோனி தங்கும் அறையை புக் செய்து அங்குள்ள டிவியில் சென்னை அணியின் முதல் போட்டியை சாந்தனுவும், கீர்த்தியும் கண்டுகளித்துள்ளனர்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக 2 நடிகைகள் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார்களாம்.
    தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சற்று தாமதமாக தொடங்க உள்ளது. கடந்த மாதம் பிக்பாஸ் 4வது சீசன் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய போது, இன்னும் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

    சிவானி, ரம்யா பாண்டியன்

    அதேபோல் அதில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயாராகி வருவதாகவும், இதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அதேபோல் சின்னத்திரை நடிகை சிவானியும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதி என தகவல்கள் வெளிவந்துள்ளன.
    மிஷ்கினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
    தமிழ் திரையுலகில் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே, அவர்களில் முக்கியமானவர் மிஷ்கின். அந்த வகையில் அவர் இயக்கிய அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என மிஷ்கின் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

    மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட முன்னணி இயக்குனர்கள்


    இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதில் மணிரத்னம் தலைமையில் பிரபல இயக்குனர்கள் ஷங்கர், கவுதம் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, வெற்றிமாறன், பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மிஷ்கினுக்கு கேக் ஊட்டிவிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    தல 61 படத்தின் மூலம் அஜித் - சுதா கொங்கரா கூட்டணி நடக்குமா என்பது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
    நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. 

    இந்நிலையில், இன்று டுவிட்டர் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம் அஜித் - சுதா கொங்கரா மூவி நடக்குமா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், “செம்ம ஸ்கிரிப்ட் அது. நடந்ததுனா செம்மையா இருக்கும். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் அது. சுதா அந்த ஸ்கிரிப்ட் என்கிட்ட சொல்லிருக்காங்க. அது நடந்தால் நல்லாயிருக்கும்” என தெரிவித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி நடிப்பில் உருவாகி இருக்கும் அடங்காதே படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’. இதில் ஹீரோயினாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறும்போது ‘இந்து முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. கோவை கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் உள்ளிட்ட பல உண்மை சம்பவங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தியா என்பது எல்லோரும் சேர்ந்து வாழும் நாடு என்று ஒற்றுமையை வலியுறுத்தும் கதை.

    சரத்குமார் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஜி.வி.பிரகாஷ் காசியில் வசிக்கும் பைக் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல்வாதி நல்லவராக இருப்பது சாத்தியமா என்ற கேள்விக்கு சரத்குமாரின் கதாபாத்திரம் பதில் அளிக்கும். விஜயசாந்தி நடிக்க வேண்டிய ஒரு போலீஸ் வேடத்தில் மந்த்ரா பேடி நடித்துள்ளார் என்றார்.
    சூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.

    இந்நிலையில் ஓடிடி மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டு லாபத்திலிருந்து சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்த ரூ.30 லட்சம் தொகையை தற்போது தயாரிப்பாளர்கள் கே ஆர் , கே. முரளிதரன் , கே.ஜெ.ஆர். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. 

    நீதிபதியிடம் காசோலையை வழங்கிய தயாரிப்பாளர்கள்

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம்  மூலம் பயனடைவார்கள். சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலாவின் அடுத்த படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவ உள்ளார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலா, தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக கடந்த 2018-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கிறார். இப்படத்தில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

    போஸ்டர்

    இதன் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பத்மகுமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வருகிற 23ம் தேதி காலை 9.30 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் நடிக்கும் படத்துக்கு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிகை டாப்சியும், நடிகர் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் டாப்சியும், விஜய் சேதுபதியும் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. திகில் நிறைந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    அதன்படி இப்படத்திற்கு ‘அனபெல் சுப்பிரமணியம்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனபெல் என்பது டாப்சியின் பெயராகவும், சுப்பிரமணியம் என்பது விஜய் சேதுபதியின் பெயராகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாப்சி, விஜய் சேதுபதி

    பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். இவர், நடிகரும், இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் ஆவார். மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி, பிக்பாஸ் மதுமிதா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெறுகிறது. 
    ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமுத்திரக்கனிக்கு, அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    பாகுபலி படத்தின் இயக்குனர், ராஜமவுலியின் இயக்கத்தில், சிறிய வேடத்தில் நடித்தாலே போதும் என்று நடிகர் - நடிகையர் நினைப்பர். இந்நிலையில், அவரது, ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதற்கு, 'சம்பளமே வேண்டாம்...' என்று சொல்லி தான் ஒப்பந்தமானார், சமுத்திரகனி. 

    ஆனால், முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது, சமுத்திரகனியே நினைத்துப் பார்க்காத அளவுக்கு, ஒரு பெரிய சம்பளத்தைக் கொடுத்து இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளார், ராஜமவுலி.

    அதையடுத்து, 'இதுவரை கிடைக்காத அரிய வாய்ப்பு மட்டுமின்றி, இதுவரை வாங்காத சம்பளமும் இந்த படத்தில் எனக்கு கிடைத்துள்ளது...' என்று, மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார், சமுத்திரகனி.
    பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை டுவிட்டரில் வைத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    அதில் “அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்ததாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதனால் தனக்கும், தன் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். தயவு செய்து உதவுங்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டில் அவர் பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார்.  

    பாயல் கோஷ்

    பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் அனுராக் காஷ்யப், நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×