என் மலர்
சினிமா செய்திகள்
இசையமைப்பாளர் இளையராஜா தான் பெற்ற விருதுகளை திருப்பி கொடுக்க போறதா வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளித்து, இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.

இந்நிலையில் இசையமைப்பாளர் தீனா பத்திரிகையாளர் சந்திப்பில், 50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்" என்று கூறினார்.
இதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் சொல்லாத கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறு. விருதுகள் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்ற கருத்தை நான் வெளியிடவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஹீரோவை விட எனக்கும் அவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்று நந்திதா ஸ்வேதா பட விழாவில் கூறியிருக்கிறார்.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கபடதாரி’. கன்னடத்தில் வெளியான ‘காவலுதாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது.

லலிதா தனஞ்செயன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். சிபிராஜ் நாயகனாக நடிக்க நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நந்திதா ஸ்வேதா பேசும் போது, ஒரு படத்தில் சின்ன வேடம் என்றால் பெயர் சொல்லும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். கபடதாரி படத்தில் எனக்கும் சிபிராஜுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியை விட ஜெயபிரகாஷுக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிறைய படங்களில் நானும் அவரும் ஒன்றாக இணைந்து நடித்து வருகிறோம். எனக்கும் அவருக்கு அப்பா, மகள் என்ற நல்ல உறவு இருக்கிறது என்றார்.
98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
கமல் நடித்த 'பம்மல் கே சம்பந்தம்', படத்தில் கமல்ஹாசனின் தாதாவாக நடித்திருந்தவர் பிரபல மலையாள பட நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. மேலும், சந்திரமுகி, 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 98 வயதாகும் இவர், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார்.

98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவர்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என்று பிரபல இயக்குனர் பாலாஜியை வாழ்த்தி இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஆரிக்கு டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கமல்ஹாசன் வழங்கினார். ஆரிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் ஆன சேரன், ஆரிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதுபோல், "BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மை முகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி" என குறிப்பிட்டு உள்ளார்.
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: ஒரு பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இவர்களுக்கும், ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் டைட்டில் வின்னரான ஆரி, தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஆரிக்கு டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கமல்ஹாசன் வழங்கினார். இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் இல்லாத அளவிற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஆரி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டைட்டில் ஜெயிச்சதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கோப்பையுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆரி. “எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே” எனப் பதிவிட்டு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண், ஷங்கரின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பவன் கல்யாணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
தற்போது நடிகர் ராம் சரண் தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம், உலக அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளதாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.
கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். ஆனால் தற்போது மாஸ்டர் படம் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.

ஜனவரி 13-ந் தேதி வெளியான இப்படம் வசூலில் பல்வேறு சாதனை படைத்து வருகிறது. கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலரை வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது.
வார இறுதியில், மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்கிற படம் 11.75 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது.
திரையரங்குகள் திறக்கப்பட்ட பல வெளிநாடுகளிலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் சசிகுமார், அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளாராம்.
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் க.பெ.ரணசிங்கம். அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கி இருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டனர். விமர்சன ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், விருமாண்டி இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சசிகுமார் கைவசம் கொம்பு வச்ச சிங்கம்டா, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா போன்ற படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் சூரரைப் போற்று பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கிருஷ்ணகுமார் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். அப்படத்தின் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இயக்குனர் கார்த்திக் நரேனுடனும், தனுஷ் 43 படக்குழுவினருடனும் பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் இன்று நேற்று நாளை, தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் 2015ல் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை. டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் எழுதி உள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்க உள்ளார். தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர்கள் விஷ்ணு விஷால், கருணாகரன், தயாரிப்பாளர் சிவி குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர்கள் ஆர்.ரவிக்குமார், கார்த்திக் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இது சிவி குமார் தயாரிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கவுதம் மேனன் - அஜித் கூட்டணியில் உருவான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்த அருண் விஜய், தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






