என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் சிம்பு, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    தெலுங்கு சினிமாவில் 2010-ல் வெளிவந்த ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

    அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு படங்களிலுமே அவருடைய நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது. 

    கணவருடன் ரிச்சா கங்கோபாத்யாய்

    நடிகை ரிச்சா, கடந்த 2019-ம் ஆண்டு ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வரும் ரிச்சா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் பாடல்களை எழுதி வருகிறார். அந்தப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. 

    சிவகார்த்திகேயன், விஜய்

    அந்தவகையில் கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

    ஆகையால், நெல்சன் அடுத்ததாக இயக்கும் தளபதி 65 படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுத உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகி ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
    நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்தவகையில் அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் இயக்குகிறார்.

    வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் படக்குழு

    இந்நிலையில், அப்படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்த கேகே, இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியும் இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

    கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

    "வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

    1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

    அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

    தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

    அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

    வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

    இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

    எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    "கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

    உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

    பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

    "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

    (1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

    "மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

    ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

    அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

    "ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

    அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

    அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

    பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

    "வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

    ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

    "கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

    அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

    நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

    ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

    வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

    உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

    அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

    முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

    "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

    மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

    இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு அரசியல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டில் விஷேசம் நடந்துள்ளது.
    தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலையே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தனுஷின் கர்ணன் படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்க உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் விஷேசம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது மாரி செல்வராஜின் மனைவியான திவ்யாவிற்கு வளைக்காப்பு நிகழ்ந்துள்ளது.

    மாரி செல்வராஜ் மனைவி

    ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதும், தற்போது இரண்டாவது குழந்தையை இந்த தம்பதியினர் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களது வளைக்காப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
    விஜய் சேதுபதியை வைத்து சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி அடுத்ததாக புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
    விஜய் சேதுபதியை வைத்து சூதுகவ்வும் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

    சமீபத்தில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு குறும்படத்தை இயக்கினார் நலன் குமாரசாமி.

    நலன் குமாரசாமி

    இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க நலன் குமாரசாமி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படம் ஒரு பேண்டஸி த்ரில்லராக உருவாகும் என்று கூறப்படுகிறது. 
    சபரீஸ் எம் இயக்கத்தில், மறைந்த நடிகை விஜே சித்ராவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் கால்ஸ் படத்தின் விமர்சனம்.
    சென்னையில் இருக்கும் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்கிறார் விஜே சித்ரா. டார்கெட்டை அடைய முடியாததால் வேலையை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார். இவர் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையில் இருக்கிறார்கள். 

    அதே சமயம் மர்ம நபர் ஒருவர் போனில் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கிடையில் ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது. சென்னை ஆந்திரா எல்லையில் ஒரு பெண்ணின் சடலமும் கிடைக்கிறது.

    இறுதியில் சித்ரா டார்கெட்டை அச்சீவ் செய்து வேலையை காப்பாற்றிக் கொண்டாரா? சித்ராவிற்கு போனில் தொந்தரவு கொடுத்தது யார்? மர்மக் கொலைகள் நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் விஜே சித்ரா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கோபம், பயம், சிரிப்பு என தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாகவே செய்து இருக்கிறார். மற்ற நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஆனால் யாருமே மனதில் நிற்கவில்லை.

    இந்த படம் பெண்களுக்கான படம், இளைஞர்களுக்கான படம், வெற்றியடைய போராடுபவர்களுக்கான படம், என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அதிகப்படியாக இருப்பதால் படம் சுவாரஸ்யத்தை இழக்கிறது. 

    விமர்சனம்

    தேவையற்ற கதாபாத்திரங்கள், அவர்கள் அனைவரும் தத்துவம் பேசுவது என காட்சிகளை திணித்து இருக்கிறார் இயக்குனர் சபரீஸ் எம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவில்லாமல் திரைக்கதையில் சொதப்பி இருக்கிறார். படத்தில் மெடிக்கல் கிரைம், பெண்கள் பாதுகாப்பு சொல்லியும் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இவரின் ஒளிப்பதிவும் கதைக்கு கை கொடுக்கவில்லை. தமீன் அன்சாரியின் இசை பக்கபலமாக இருக்கிறது. 

    மொத்தத்தில் 'கால்ஸ்' ராங் கால்.
    பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கி இருக்கும் தோப்புக்கரணம் படத்தின் முன்னோட்டம்.
    பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் தோப்புக்கரணம். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கைலா படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

     தோப்புக்கரணம் படத்தில் கோகன், அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

    இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த ஸ்டீவ் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.
    சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் 20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
    நடிகர் சூர்யா தற்போது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். மேலும் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சூர்யா - ராஜ்கிரண்

    இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரான ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ராஜ்கிரண் சூர்யாவுடன் கடைசியாக நந்தா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த சசிகுமார் மீண்டும் தன்னுடைய சிஷ்யன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
    ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படம் 38 வருடங்களுக்கு பின்னர் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

    பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    எஸ்ஆர் பிரபாகரன்

    ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை சசிகுமாரின் சிஷ்யனும் பிரபல இயக்குனருமான எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்க இருக்கிறார். இவர் இதற்கு முன் சசிகுமாரை வைத்து சுந்தரபாண்டியன் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர். மேலும் இவர்கள் கூட்டணியில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 
    ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
    ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமானவர் மதுர் மிட்டல். ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

    இளம் பெண்ணுடன் மதுர் மிட்டல் நெருக்கமாக பழகி உள்ளார். அந்த பெண் தற்போது பாலியல் ரீதியாக மதுர் மிட்டல் தன்னை துன்புறுத்தியதாகவும் மோசமான வார்த்தைகளை பேசி அடித்ததாகவும் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மதுர் மிட்டல் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    மதுர் மிட்டல்

    அந்த பெண் தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு மதுர் மிட்டலை விட்டு பிரிந்து விட்டார். ஆனாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கழுத்தில் 15 தடவை அடித்து தலைமுடியை பிடித்து இழுத்து வலது கண்ணில் குத்தி கீழே தள்ளி உள்ளார் என்று பெண்ணின் வக்கீல் கூறினார்.
    ×