என் மலர்
சினிமா செய்திகள்
விவாகரத்துக்கு பின் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து நடிகை அமலாபால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் காதலித்து 2016-ல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகை அமலாபால் விவாகரத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நான் விவாகரத்து செய்து பிரிந்தபோது எனக்கு யாரும் ஆதரவு தரவில்லை. எல்லோரும் என்னை பயமுறுத்த முயற்சி செய்தனர். நான் முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது எனது மனநிலை பற்றியோ, எனது மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றியோ யாரும் கவலைப்படவில்லை'' என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனும் பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
பறை இசையுடன் கிராமியப் பாடலாக உருவாகி இருந்த இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்தது.

‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது அடுத்த பாடலை வெளியிட உள்ளதாக கர்ணன் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை மார்ச் 2ந் தேதி கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
பிரபல நடிகை பிரியா வாரியர், தெலுங்கு படத்திற்காக பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது தவறி கீழே விழுந்துள்ளார்.
2018-ம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாள படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடலில் அவரது கண் சிமிட்டல் காட்சி பலரையும் ஈர்த்தது. அதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா.
அதைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நிதின் உடன் ‘செக்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது ஓடிவந்து நடிகர் நிதினின் முதுகில் ஏறுவதற்கு பதிலாக தவறி கீழே விழுந்துள்ளார் பிரியா வாரியர்.
உடனே அங்கிருந்த நபர்கள் ஓடி வந்து பிரியாவுக்கு உதவினர். தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறி கீழே விழுந்த வீடியோவை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பிரியாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.
வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.
அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.
படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதுபற்றி வாலி கூறுகிறார்:-
"நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.
"மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''
நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது. "என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
"வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.
பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.
அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி. அப்போது, அவர் தந்தை காலமானார்.
வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.
மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.
அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.
இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.
கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்கும் நல்ல காலம் பிறந்தது.
ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.
வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.
மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.
ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.
"நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.
"பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?'' "ஆமாம் சார்!'' "அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!'' ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.
வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார். மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.
காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.
`எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ரஷியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது அரசியல் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் முன்னோட்டம்.
மலையாளத்தில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ஹெலன். தந்தை மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இந்த படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என பெயரில் ரீமேக் ஆகி உள்ளது.
கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோகுல் இயக்கி உள்ளார்.

தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஒருநாள் காதலருடன் ஹெலன் வெளியே சென்று திரும்பும்போது போலீசார் தடுத்து நிறுத்தி, காதலன் மது அருந்தி இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
இந்த தகவலை அறிந்த தந்தை ஹெலனிடம் கோபப்பட்டு அவரோடு பேசுவதை நிறுத்துகிறார். இதனால் வேதனையில் ஹெலன் மாயமாகிறாள். அவரை தந்தை தேடி அலைகிறார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹெலன் என்ன ஆனாள் என்பதே படத்தின் கதை.
ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாத இடைவெளிக்கு பின் கடந்த மாதம் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சன், தனக்கு ஆபரேசன் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தி சினிமா உலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். தற்போது 78 வயதாகும் அவருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 1982-ம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவருடய உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் எனது உள் உறுப்புகள் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன என்று கூறி இருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் திடீரென அவரை கொரோனா தாக்கியது. மும்பை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்பிழைத்தார்.

ஆனால் இப்போது திடீரென அவருக்கு ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவலை அமிதாப்பச்சனே அவருடை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒற்றை வரியில் அந்த செய்தி உள்ளது. அதில், ‘மருத்துவ சூழ்நிலை, ஆபரேசன். இதற்கு மேல் விவரிக்க முடியாது’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அவருக்கு உடல்நிலையில் என்ன செய்கிறது. எந்த வகையான ஆபரேசன் நடக்கிறது? ஆபரேசன் நடந்துவிட்டதா? அல்லது நடக்கப்போகிறதா? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடக்கிறது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பாஸ் பிரபலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை உதயநிதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறதாம்.

இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் ஜெயித்த ஆரவ், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ராஜபீமா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். சலார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சலார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள காடன் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.
3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும், ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி ஒலி அமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், காடன் படக்குழு டிரெய்லர் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளதால், உலக வனவிலங்கு தினமான, வருகிற மார்ச் 3-ந் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படம், பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளதாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.
கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், திரையரங்கிலும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூலையும் வாரிக் குவித்தது.

இந்நிலையில், மாஸ்டர் படம் வசூலில் ‘பாகுபலி 2’ படத்தை முந்தி உள்ளதாம். இதுவரை தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்கிற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ நிகழ்த்தி இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாம். மாஸ்டர் படம் நிகழ்த்தி உள்ள இந்த மாபெரும் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.






