என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
    திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

    ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

    நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

    அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

    வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

    ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

    அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

    வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

    முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

    திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

    ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

    அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

    (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

    1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

    அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

    இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

    பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

    பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

    பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

    இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

    "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

    அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

    கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார்.
    மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். 

    முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    பிசாசு

    அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து விட்டதாக கூறி நன்றி சொல்லி இருக்கிறார்.
    தமிழில் அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சிந்து. இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி போராடி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார்.

    சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, சிந்துவின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, ஆரம்ப கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது புற்றுநோய் மேலும் பரவியதால் அடுத்த கட்ட சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. இதனால் நண்பர்கள், ரசிகர்கள் உதவுமாறு கேட்டு கொண்டார்.

    சிந்து

    இந்நிலையில் சிந்துவின் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும், இதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் சனம் ஷெட்டி பதிவு செய்திருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரேஷ்மா, தற்போது உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறார்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்து வரும் 3:33 என்ற திரைப்படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

    ரேஷ்மா

    இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்த ரேஷ்மா அதில் பெண்களின் உள்ளாடைகள் குறித்து விரைவில் ஒரு வீடியோவை வெளியிட இருக்கிறாராம். பெண்களுக்கு உள்ளாடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த போவதாகவும் உள்ளாடை குறித்த பல சந்தேகங்களை அவர் தீர்க்க போவதாகவும் அதில் அறிவித்துள்ளார்.
    ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்கே.சுரேஷ், சுபிக்‌ஷா, ராம்கி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தின் விமர்சனம்.
    கொடைக்கானல் பகுதியில் மாமா, அத்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் ஆர்.கே.சுரேஷ். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் ராம்கியிடம் அடியாளாக வேலை பார்க்கும் ஆர்.கே.சுரேஷ், அவர் சொல்லும் குற்ற செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் சுபிக்‌ஷாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் ஆர்கே.சுரேஷ். துரத்தி துரத்தி காதலித்து ஒரு கட்டத்தில் அவரையே திருமணமும் செய்துகொள்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு, ராம்கியிடம் ஆர்.கே.சுரேஷ் வேலைக்கு செல்வதை தடுக்கிறார். அதே சமயம், ஆர்.கே.சுரேஷால் பாதிக்கப்பட்ட ஒரு கும்பலும், ராம்கியிடம் அடியாளாக இருப்பவரும் அவரை கொல்ல முயற்சி செய்கிறார்கள். இறுதியில் ஆர்.கே.சுரேஷ் மனைவி சுபிக்‌ஷாவின் பேச்சைக் கேட்டு திருந்தினாரா? எதிரிகளிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    கதையின் நாயகனாக ஆர்கே.சுரேஷ். முதல் பாதியில் குற்ற செயல்களில் ஈடுபடுவது, சுபிக்‌ஷாவை துரத்தி துரத்தி காதலிப்பது என்பது எதிர்மறையாக தெரிந்தாலும் இரண்டாம் பாதியில் தன் தவறுகளை உணர்ந்து திருந்தும்போது தேர்ந்த நடிகராக பரிணாமிக்கிறார். இறுதிக்காட்சிகளில் உருக்கமாக நடித்து கவர்கிறார். சுயநலத்துக்காக ஆர்கே.சுரேஷை பயன்படுத்திக்கொள்ளும் கதாபாத்திரத்தில் ராம்கி. தோற்றத்திலும் நடிப்பிலும் ஸ்டைலாக கலக்கி என்றும் நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.

    நாயகி சுபிக்‌ஷாவுக்கு கதையை தாங்கும் வேடம். இடைவேளை வரை அழகு பதுமையாக வருபவர் ஆர்கே.சுரேஷை திருமணம் செய்துகொண்ட பிறகு பொறுப்பான பெண்ணாக மாறி சிறப்பாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷிடம் கோபப்படுவது, கணவர் சந்தேகப்படுவதாக நினைப்பது, பள்ளி பருவத்தில் வெகுளியான நடிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். மற்ற கதாபாத்திரங்களான ஜோதிமணி, விஜய் கார்த்திக், நமோ நாராயணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

    விமர்சனம்

    தாதாவிடம் அடியாட்களாக இருப்பவர்களின் நிலைமை, பெண்கள் பேச்சை கேட்காத ஆண்களின் நிலைமையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய்சங்கர். கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் உள்ள நீளத்தை குறைத்திருக்கலாம். இன்னும் கூட கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம்.

    கணேஷ் சந்திரசேகரனின் இசை படத்துக்கு ஓரளவிற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். முனீஸ் ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் மலையழகு ரம்மியம்.

    மொத்தத்தில் ‘வேட்டை நாய்’ குடும்ப பிணைப்பு.
    விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
    விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. மேலும் இந்த பாடலுக்கு பல நடிகர்கள், நடிகைகளும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள்.

    நஸ்ரியா

    இந்நிலையில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த நஸ்ரியாவும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் மற்றொரு இசையமைப்பாளர் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பிரபல இசையமைபாளர் இருக்கும் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் தற்போது முன்னணி நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வந்தா மல, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா.பாண்டியனின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.

    ஷாம் டி ராஜ்

    கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் சென்னையில் துவங்குகிறது.
    விரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என்று கவிபேரரசு வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
    சமீபத்தில் வெளியான என்றாவது ஒருநாள், க/பெ ரணசிங்கம் மற்றும் சியான்கள் ஆகிய திரைப்படங்கள் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. இந்த திரைப்படங்கள் தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    'என்றாவது ஒருநாள்’, ‘க/பெ ரணசிங்கம்’, 'சீயான்கள்’ - ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது. முதலிரு படங்களுக்கு நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது பரவசம் தருகிறது. விரைக தமிழர்களே! இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார். என்று பதிவு செய்திருக்கிறார்.


    நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 'தேசியதலைவர்' தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு கொடுத்துள்ளார்.
    தேசியதலைவர் திரைப்படத்தில் தேவராக நடிக்கும் ஜெ.எம்.பஷீர் அவர்கள் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கழகம் சார்பாக போட்டிட வேண்டும் என்று விருப்ப மனுவை தேசியதலைவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி அஇஅதிமுக கழக மேலாளர் மகாலிங்கம் அவர்களிடம் வழங்கினார். 

    தயாரிப்பாளர்

    "தேவராக எங்கள் வரலாற்றை திரைப்படமாக எடுக்க எனக்கு பேருதவி செய்தமைக்கு நன்றி கடனாக எனது இந்த முயற்சி. ஜெ.எம்.பஷீர் தேவர் வாழ்ந்த மண்ணான ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் தேவரின் ஆசியுடன் அவருக்கு வெற்றி உறுதி" என தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தெரிவித்தார்.
    டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்தின் முன்னோட்டம்.
    டி.சுரேஷ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. இதில் அன்சன்பால், ரேபா மோனிகா ஜான் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ‘சங்கர்குரு’ ராஜா, மாத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா பஞ்சு, வெற்றிவேல் ராஜா ஆகியோரும் இருக்கிறார்கள். ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

    படத்தை பற்றி இயக்குனர் டி.சுரேஷ்குமார் கூறியதாவது: “ஒரு இளைஞனும், இளம் பெண்ணும் கொட்டும் மழையில் சந்திக்கிறார்கள். இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். இது ஒன்று போதாதா? 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காதல் ஜோடி எதிர்ப்புகளைச் சமாளித்து கொட்டும் மழையில் ஒன்று சேர்கிறார்கள்” என்பது தான் கதை.

    மழையில் நனைகிறேன் படக்குழு

    படத்தின் உச்சகட்ட காட்சியை யாராலும் யூகிக்க முடியாது. அப்படி ஒரு கனமான ‘கிளைமாக்ஸ்’ இடம்பெறுகிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி, அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்”.
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கோப்ரா படப்பிடிப்பிற்காக ரஷியா சென்றுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’. கடந்தாண்டு இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தபோது கொரோனா பரவலால் முடங்கியது. எனவே விடுபட்ட காட்சிகளை படமாக்க விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் மீண்டும் ரஷியா சென்றுள்ளனர். 

    இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கோப்ரா படப்பிடிப்பிற்காக ரஷியா சென்றுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அஜய் ஞானமுத்து, இர்பான் பதான்

    அங்கு இரண்டு வாரம் படப்பிடிப்பை நடத்திவிட்டு படக்குழு சென்னை திரும்புகிறார்கள். இந்தப் படத்தில் நாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். கோப்ரா படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விக்ரம் பங்கேற்க உள்ளார்.
    கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் டிக்கிலோனா. இதில் நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். 

    மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

    டிக்கிலோனா பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி டிக்கிலோனா படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரித்துள்ளனர்.
    ×