என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்து வரும் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.

குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டு படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிச் சென்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் புதிய மாஸ்க் ஸ்டைலுக்கு பாராட்டுகளையும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்.
எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண் எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் என்று கே.வி.ஆனந்த் மறைவிற்கு சூர்யா இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கே.வி. ஆனந்த் சார்.. இது 'பேரிடர் காலம்' என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை, மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.
நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில்தான், 'சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. 'முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்தில், அந்த இரண்டு மணிநேரம், ஒரு போர்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன்.
'நேருக்கு நேர்' திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த, அந்த ' ரஷ்யன் ஆங்கிள்' புகைப்படம்தான், இயக்குனர் திரு, வசந்த், தயாரிப்பாளர் திரு. மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும், என்மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தைவிட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும், நடிகனாக என்னை படம்பிடித்ததும் நீங்கள்தான்.

முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும், வழிகாட்டலும் மறக்கமுடியாதது. 'வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்' என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழிநடத்துகின்றன.
இயக்குனராக அயன்' திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு, ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள், புதிய உத்வேகத்தை அளித்தது. அயன் திரைப்படத்தின் வெற்றி, 'அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக' என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது முதல் திரைப்படத்தில் நீங்களும், உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது இயற்கை செய்த முரண் எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி. இவ்வாறு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நாளை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.


மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் மதுரையில் அஜித்தை எம்ஜிஆர் ஆக சித்தரித்து பொன்மனச் செம்மலை என கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பிக் பாஸ் போட்டியாளர் என பன்முக திறமை கொண்ட சேரன் வில்லன் நடிகரை புகழ்ந்து கூறியிருக்கிறார்.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இதில் சேரனுடன் சௌந்தரராஜா, செல்லா, முனிஸ்ராஜ், சூசன், ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு.. எவ்வளவு பேருக்கு நடுவில் ஒரு நடிகன் தன் உணர்ச்சிகளை முகத்தில் எந்த பதட்டமுமின்றி காட்டவேண்டும். இங்கே டேனியல் பாலாஜி.. நான் ரசிக்கும் வளரும் கலைஞன்.. கூடவே நமோநாராயணன்.. என்று பதிவு செய்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
'யுவரத்னா, ருஸ்தம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா மக்களுக்கு உதவுவதற்காக தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார். 'புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்' என்ற அமைப்புடன் இணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.


இதுகுறித்து கூறிய அர்ஜுன் கவுடா, “நான் உரிய பயிற்சி எடுத்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துகளால் நிறைத்துவிட்டீர்கள். மக்களுக்கு இப்படி சேவை செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்றார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவின் புகைப்படத்திற்கு அதிக லைக்குகள் குவிந்து வருகிறது.
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் கோர்ட் மட்டும் அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் கேலியும் கிண்டலுமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.
நடிகர் செல்லதுரை மறைவிற்கு நட்பே துணை படத்தில் அவருடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து ஹிப்ஹாப் ஆதி இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ஹிப்ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் செல்லதுரை. 84 வயதான இவர் நேற்று மாலை காலமானார். நடிகர் செல்லதுரை மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நட்பே துணை படத்தில் கதாநாயகனாக நடித்த ஹிப் ஹாப் ஆதி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் செல்லதுரை உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், கடைசி மூச்சு இருக்கும் வரை நடிச்சிட்டே இருக்கணும்னு என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். நட்பே துணை செட்களில் தினமும், நாங்கள் தாத்தாவுடன் மிகவும் வேடிக்கையாக இருந்தோம். சிங்கிள் பசங்க பாடல் படப்பிடிப்பிலிருந்து அவர் இரவு தாமதமாக வெளியேறியபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் சோர்வாக இருந்தோம், ஆனால் அவர் உற்சாகம் நிறைந்தவர். அவர் நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். R.I.P செல்லதுரை தாதா என்று பதிவு செய்துள்ளார்.
திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மறைவிற்கு பிரபல நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் அயன் படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில், புகழ்பெற்ற கே.வி.ஆனந்த் சாருடன் பணிபுரியும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. எனது தமிழ் திரை படங்களில் மறக்கமுடியாத திரைப்படத்தை எனக்குக் கொடுத்தார். ஐயா, நீங்கள் ஈடுசெய்ய முடியாதவர். குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி என்று உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக், சிவாத்மிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் முன்னோட்டம்.
நந்தா பெரியசாமி எழுதி இயக்கி உள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிவாத்மிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் சேரன், விக்னேஷ், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சினேகன், நமோ நாராயணன், சவுந்தரராஜன், மவுனிகா, சுஜாதா, பிரியங்கா என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்று நடித்து வருகிறது.

பி.ரங்க நாதன் தயாரிக்கும் இப்படம் நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி வருகிறது. பெர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்கிறார். ஆர்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். தினேஷ் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை நடித்து வருகிறாராம்.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகை தன்யா, ஊடக நிருபர் வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படி ஆகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன்.

தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர், இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






