என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிசியான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுக்கு ஜோடியாக அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

    தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷி கண்ணா, சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், ஜீவாவுக்கு ஜோடியாக மேதாவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷி கண்ணா.

    ராஷி கண்ணா
    ராஷி கண்ணா


    இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் நடிகை ராஷி கண்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்க உள்ளனர். 
    பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டவர் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். நடிகர் பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘சலார்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கன்னடத்தில் ‘கேஜிஎப்’ என்ற பிளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படத்தை கொடுத்த பிரசாந்த் நீல், இப்படத்தை இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பிரபாஸ்

    இந்நிலையில், சலார் படத்துக்கு பின் பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் கதைக்களம் வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால் இப்படத்தை பாகுபலி பாணியில் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்க உள்ளாராம். மேலும் பிரபாஸின் 25-வது படமாக இது உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.  
    பிரபுதேவா நடிப்பில் உருவாகி உள்ள படம் ஒன்று, விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

    படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பொன் மாணிக்கவேல் படத்தின் போஸ்டர்
    பொன் மாணிக்கவேல் படத்தின் போஸ்டர்

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே எனும் இந்தி படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.
    கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், செஸ் விளையாடி, கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட உள்ளார்.

    விஸ்வநாதன் ஆனந்துடன் அமீர்கான் செஸ் விளையாடியபோது எடுத்த படம்
    விஸ்வநாதன் ஆனந்துடன் அமீர்கான் செஸ் விளையாடியபோது எடுத்த படம்

    ‘செக்மேட் கோவிட்’ என்கிற பெயரில் வருகிற ஜூன் 13ஆம் தேதி அந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக செஸ் விளையாட உள்ளார். செஸ் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அமீர்கான், ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருவதாக தெரிவித்து உள்ளார்.
    இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரணாவத், ஒரு படத்தில் நடிக்க ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் இருக்கிறார். 

    இந்நிலையில், வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக கங்கனா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை. 

    கங்கனா ரணாவத்
    கங்கனா ரணாவத்

    இதனால் வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வருமான வரியின் பாதி தொகையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள படத்தை நேரடியாக தொலைகாட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
    தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுப்ரமணியம்சிவா. அதன்பின் பொறி, யோகி, சீடன் போன்ற படங்களை இயக்கிய அவர், வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் சமுத்திரகனியை வைத்து இவர் இயக்கியிருக்கும் படம் ‘வெள்ளை யானை’.

    நடிகை ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, திரையரங்க வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது படக்குழு.

    வெள்ளை யானை படத்தின் போஸ்டர்
    வெள்ளை யானை படத்தின் போஸ்டர்

    தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக முன்னணி தொலைக்காட்சியுடன் பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் சமுத்திரகனி நடித்த ‘ஏலே’ படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.
    சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.

    இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "என் இளமைக்கால தோழர்கள் என்றால் அதில் முதல் இடம் கரியணம்பட்டி சுப்பிரமணியத்துக்குத்தான். பலரும் இருந்தார்கள் என்றாலும் மிகவும் உயர்ந்த நட்பு இவருடன்தான் இருந்தது. ஜெயகரன், ரங்கசாமி, மகேஸ்வரன் என்பவர்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.

    சுப்பிரமணியுடன் ஆறு, ஏழு, எட்டு என ஒன்றாகப் படித்த பின்னே, அவர் பெரியகுளம் ஆஸ்டலில் தங்கிப் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர், அப்போதிருந்த "பி.ï.சி'' முடித்து ஊருக்கு வந்த நேரத்தில்தான் எங்கள் நட்பு வலுத்தது.

    இந்த நேரத்தில்தான் இந்திய அரசு "என்.எம்.இ.பி'' என்றொரு அமைப்பை தொடங்கியிருந்தது. இது மலேரியா காய்ச்சல் வரும் முன் காக்கும் அமைப்பு.

    கிராமங்களுக்குப்போய் வீடு வீடாக இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பார்கள். அதை பரிசோதனைக்கு வத்தலக்குண்டுக்கு அனுப்புவார்கள். இந்த சோதனையில் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள்.

    இந்த வேலையை பார்ப்பதற்காக எங்கள் ஊர் பண்ணைபுரத்தை சென்டராக்கி 7 கிராமங்களுக்கு மூன்று பேர் இருந்தார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக இன்ஸ்பெக்டராக ஒரு ஆள் வந்தார்.

    ஒருநாள் தற்செயலாக நானும், அண்ணன் பாஸ்கரும் பண்ணைபுரம் அத்தி மர பஸ் ஸ்டாண்ட் பக்கமாய் போய்க்கொண்டிருந்தோம். பஸ்சில் இருந்து பேண்ட் - ஷர்ட்டுடன் இறங்கிய ஒருவர், எங்களைக் கடந்து ஊருக்குள் போனார்.

    "அது யார்றா பேண்ட் - ஷர்ட் போட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு வர்றது?'' என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். உடனே விடை கிடைக்கவில்லை. மதிய உணவு முடிந்து சாயங்காலம் காபி சாப்பிட கடைத் தெருவுக்குப் போனால் அங்கே பாஸ்கரும், காலையில் பார்த்த பேண்ட் - ஷர்ட் ஆளும் உட்கார்ந்திருந்தார்கள்.

    என்னைப் பார்த்ததும் பாஸ்கர் "இவர்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிற என்.எம்.இ.பி. இன்ஸ்பெக்டர். பெயர் சின்னசாமி'' என்று அந்த புதியவரை அறிமுகப்படுத்தினார். நானும் உடனே கைகொடுத்து `ஹலோ சார்' என்று அறிமுகமாகிக் கொண்டேன்.

    காபி குடித்து முடித்ததும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தபோது ஒரு மாதிரியான ரசனை உள்ளவராகத் தெரிந்தது.

    மறுநாள் காலையில் கிணற்றடியில் குளிக்கப்போனோம். முதல் நாள் அவரை `சார்... சார்...' என்று அழைத்த பாஸ்கர், `ஏய், என்னப்பா' என்று மாற்றி, அதையும் தாண்டி `அடப்போய்யா' என்ற லெவலுக்கு நெருக்கமாகி விட்டார்.

    நான் சிறுவன். நானும் பாஸ்கரும் அண்ணன் - தம்பி என்றாலும் நண்பர்கள் போலத்தான் பழகுவோம். இப்போது பிரச்சினை என்னவென்றால் சின்னச்சாமியுடன் பாஸ்கர் நெருக்கம் காட்டியதில் என்னை வெட்டி விட்டார். அவர்கள் போகிற இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லமாட்டார்கள். மீறி அவர்களுடன் போக முயன்றால் "டேய், நீ சின்னப்பையன்! எங்களோடு வராதே!'' என்பார்கள்.

    இந்த சின்னச்சாமி வேறு யாருமல்ல. பின்னாளில் சினிமா டைரக்டராக மாறி, `மண்வாசனை'யுடன் ரசிகர்கள் மனதில் குடிகொண்டுவிட்ட பாரதிராஜாதான்.

    பண்ணைபுரத்திலேயே பாரதி ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார். இன்ஸ்பெக்ஷனுக்கு போய்வரவேண்டும் என்று அவ்வப்போது புறப்பட்டுப்போவார்.

    "என்னய்யா, பெரிய இன்ஸ்பெக்ஷன்? அப்புறம் போகலாம்'' என்பார், பாஸ்கர்,

    "டூட்டியில் கரெக்டா இருக்கணும்'' என்பார், பாரதி. "நீயே இன்ஸ்பெக்டர்தானே. எப்ப வேணும்னாலும் போகலாமில்லே?'' - இது

    பாஸ்கர்."மேல இருந்து யாராவது வந்து நான் மாட்டிக்கக் கூடாதில்லே?'' - இது பாரதி.

    பாரதி அங்கே இங்கே இன்ஸ்பெக்ஷனுக்காக சுற்றுகிற நேரம்தவிர, மற்ற நேரங்களில் எங்களோடுதான் இருப்பார். எங்களோடுதான் சுற்றுவார். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்.

    சீட்டாடுவது; சினிமாவுக்குப் போவது; பிடித்த நடிகர்கள் பற்றி பேசுவது; எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அலசுவது; புளியந்தோப்பில் காக்கா குஞ்சு விளையாடுவது; கிணற்றில் நீச்சலில் தலைகீழாகத் தாவுவது; கிணற்றுக்குள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடுவது என இப்படி நாங்கள் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம்.

    ஆனாலும் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை என்னை ஒதுக்கிவிடுவார்கள். `நீ சின்னப்பையன். எங்களுடன் வரக்கூடாது' என்று "தடா'' போடுவார்கள். நானும் ஒதுங்கி விடுவேன்.

    `ஏன் இப்படி?' கேட்பீர்கள். அந்த நேரம் ஸ்கூல் முடிந்து மாணவிகள் வீடு வரும் நேரம்! இதுதான் காரணம்.

    இப்படி `தடா' போட்டவர்கள் நாளடைவில் நான் வளர்ந்ததாக கருதினார்களோ என்னவோ, என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.

    பாரதி நன்றாக ஓவியம் வரைவார். நானும் கொஞ்சம் வரைவேன். எல்லாம் பென்சில் டிராயிங்தான். சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் போட்டி வந்துவிடும். யார் வரைவது நன்றாக இருக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. இரண்டுமே நன்றாக

    இருக்கும்.ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், பாரதி என்னைவிட நன்றாக ஓவியம் வரைவார் என்பது.

    இப்படி எங்களுடன் தெருவில் ஆரம்பித்த நட்பு வீடு வரை வந்துவிட்டது. வீட்டுக்கும் வந்து, `ஜோக்' அடித்து கலகலப்பு ஏற்படுத்திவிட்டுப் போவார்.

    ஆனால் இப்படி நெருக்கம் காட்டி பழகிய பாரதி என்னைவிட எங்களிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது. அதற்கு பாஸ்கர்தான் காரணம்.

    பாஸ்கர் ஒருமுறை கோம்பை டூரிங் தியேட்டரில் படம் பார்க்க பாரதியை அழைத்துப்போனார். டிக்கெட் வாங்காமல் நண்பர்கள் மூலம் பெஞ்ச் டிக்கெட்டில் ஓசியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, போதாத நேரம் செக்கிங் அதிகாரி வந்துவிட, பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக செக்கிங் பார்வைக்கு போகாமல் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், பாஸ்கரை கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்.

    அடுத்த நாள் காலையில் கடை வீதியில் டிபன் சாப்பிடப் போனால் அங்கிருந்தார். ஆனால் எங்களைப் பார்த்த பிறகும் பேசாமல் இருந்தார். "சரி; கோபம் போலிருக்கிறது'' என்றெண்ணி சாப்பிடும் நேரத்தில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம்.

    அப்போதுகூட தீராத கோபத்துடன்தான் பாஸ்கரை பார்த்தபடி, "டேய் இவன் இருக்கானே...'' என்று ஆரம்பித்தார்.

    ஆனால் அந்தக் கோபம் நிற்கவில்லை. பாஸ்கர் முகத்தைப் பார்த்ததும் புரையேறும் அளவுக்கு சிரிக்கத் தொடங்கி விட்டார். கூடவே நாங்களும் சேர்ந்து கொள்ள, நிறுத்த முடியாத சிரிப்பாகி விட்டது.

    சிரிப்பு ஓய்ந்த நேரத்தில் பாஸ்கரிடம், "எப்படிய்யா உனக்கு இந்த மாதிரி ஒரு தைரியம் வந்தது?'' என்று கேட்டார்.

    பாஸ்கர் அவரிடம், "இன்ஸ்பெக்டர் அய்யாவாச்சே! நல்ல படம் ஓடுது. அதைப் பார்க்கட்டுமேன்னு `ஓசி'யில ஏற்பாடு செய்தேன். ஆனா உன்னோட நேரம் சரியில்லை'' என்றார்.

    பாரதியும் விடவில்லை. "ஏண்டா கூட்டிட்டுப்போனது நீ! ஆனால் என் நேரம் சரியில்லையா?'' என்று மடக்கினார்.

    பாஸ்கரும் விடுவதாக இல்லை.

    "இத்தனை நாள் நாங்க போயிருக்கோம். யாராவது செக்கிங் வந்தார்களா? அதென்ன நீ வந்தப்போ மட்டும் செக்கிங்? அப்ப உன் நேரம் சரியில்லையா? என் நேரம் சரியில்லையா?''

    பாஸ்கர் விடாப்பிடியாகக் கேட்க, பாரதி  அதற்கு சிரிக்க, கோபம் காணாமல் போயிருந்தது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எங்கள் நட்பு மேலும் வலுப்பட்டது.
    தன் மீது காவல்நிலையத்தில் நடிகர் விஷால் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதற்கு, தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.
    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடித்த இரும்புத்திரை படத்துக்காக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அப்போது விஷால் அளித்த உறுதிமொழிப் பத்திரம் மற்றும் காசோலைகளை, கடனை திருப்பிச் செலுத்திய பிறகும் ஆர்.பி.சௌத்ரி தரவில்லை என்பது விஷாலின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக அவர் ஆர்.பி.சௌத்ரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு ஆர்.பி.சௌத்ரி தற்போது பதிலளித்துள்ளார்.

    அதில், இரும்புத்திரை படத்துக்காக விஷால் என்னிடமும், திருப்பூர் சுப்பிரமணியத்திடமும் கடன் வாங்கினார். அது தொடர்பான ஆவணங்களை ஆயுதபூஜை படத்தை இயக்கிய சிவகுமார் கவனித்து வந்தார். 

    துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவர் பொறுப்பில் இருந்த ஆவணங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷால் பணத்தை திருப்பி தந்த போது, அதனை பெற்றுக் கொண்டதாக நாங்கள் எழுதி கையொப்பம் இட்டு தந்த பிறகும், தொலைந்து போன ஆவணங்கள் கிடைத்துவிட்டால், அதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சனை வருமோ என விஷால் பயப்படுகிறார்" என்று ஆர்.பி.சௌத்ரி விளக்கமளித்துள்ளார்.

    விஷால், ஆர்.பி.சௌத்ரி,

    மேலும் தற்போது கொடைக்கானலில் இருக்கும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, ஓரிரு நாட்களில் சென்னை திரும்பி இந்த பிரச்சினையில் சரியான விளக்கம் தருவதாகவும், விரைவில் இந்த விஷயத்தை தீர்த்து வைப்பதாகவும் கூறியுள்ளார்.
    இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், தனது பதிவுக்கு பதில் அளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
    நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. 

    சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். மேலும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...' என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.



    இதற்கு ரசிகர்கள் பலரும் பல தலைப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், புதிதாய் இன்று பிறக்கிறோம், எளிதாய் சிரமம் கடக்கிறோம். பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம். ஹிந்தி தலைப்பு -அள்ளி வழங்கிய, எண்ணிலடங்கா -எதிர்பாரா கோணங்களில். பலரது பாராட்டுக்குரியது, சிலது சிறப்பு! அனைத்தும் பரிசீலனையில். விரைவில் தேர்வாகும். பங்குக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி! என்று பதிவு செய்து இருக்கிறார்.

    சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து பிரபலமான அமித் பார்கவ், தனது மனைவியுடன் கொரோனா பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    சின்னத்திரை நடிகராக அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை, அச்சம் தவிர், நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை, கண்ணாடி, கண்மணி தொடர்களில் நடித்தார். ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

    அமித்

    இவர் சின்னத்திரை தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சில படங்களில் பாடியும், நடித்தும் இருக்கிறார். தற்போது இருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் கொரோனா மருத்துவ பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தேவைப்படும் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மற்றும் செறிவூட்டிகளை வாங்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடன இயக்குனராக இருக்கும் பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்திற்கு நடன இயக்குனராக அறிமுகமானவர் பாபா பாஸ்கர். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்த ’குப்பத்து ராஜா’ என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார். 

    மேலும் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக் கொண்டார். ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

    பாபா பாஸ்கர் மகள்
    பாபா பாஸ்கர் மகள்

    இந்த நிலையில் பாபா பாஸ்கர் மகள் சடங்கு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
    டாக்டர், அயலான், டான் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஒரே நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

    இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஐந்து படங்களுக்கும் சேர்த்து ரூபாய் 75 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சிவகார்த்திகேயன்

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ’அண்ணாத்த’, ’தளபதி 65’, சூர்யா 40 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.
    ×