என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் சூர்யா சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்காக முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சூர்யா

    இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில் வரும் ஜூலை 6 மற்றும் 7ம் தேதி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
    என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
    அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்த பாடலில் 'என்னக் குறை என்னக் குறை என் செல்லப் பேராண்டிக்கு என்னக் குறை' என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    பாக்கியம்மா


    இவரது மறைவிற்கு பாடகர் அறிவு, பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் போஸ்டரில் இமான் பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர் 4ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழுவினர் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்கள்.

    இந்த போஸ்டரில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க இசையமைப்பாளர் இமான் பெயர் மட்டும் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    இமான்

    ரசிகர்களும் இமானுக்கு டேக் செய்து, உங்கள் பெயர் போஸ்டரில் இல்லை, எனினும் போஸ்டரை பகிர்ந்திருப்பது உங்களின் பெருந்தன்மை என பலரும் பாராட்டி உள்ளனர்.
    இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
    சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

    இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார்.

    இதனால் 'இந்தியன் 2' படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இயக்குனர் சங்கர்

    ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் 'இந்தியன் 2' பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    பிரபல இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் டெல்லி விமானநிலையத்தின் நிலை குறித்து பதிவு செய்திருக்கிறார்.
    பாகுபலி படம் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் தற்போது இரத்தம் ரணம் ரெளத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்ற இயக்குனர் ராஜமவுலி, அங்குள்ள நிலையைப் பார்த்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேதனையாக பதிவு செய்திருக்கிறார்.

    அதில், "அன்புள்ள டெல்லி விமானநிலையம், நான் லுஃப்தான்ஸா விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு வந்தேன். கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கான விண்ணப்ப படிவங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அனைத்து பயணிகளும் தரையில் அமர்ந்து கொண்டும், சுவற்றில் வைத்தும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை. அவர்களுக்கு மேஜைகள் வழங்குவது என்பது ஒரு சாதாரண சேவை.

    அதுமட்டுமின்றி ஏராளமான தெரு நாய்கள் வெளியேறும் வாயிலுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தேன். நிச்சயமாக வெளிநாட்டவர்களுக்கு இது நல்லவிதமான பார்வையைத் தராது. இதைக் கவனத்தில் கொள்ளவும். நன்றி" என்று பதிவு செய்துள்ளார்.

    ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
    இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு, நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையில் படைப்புச் சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 

    நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல' என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.


    ஹென்றி இயக்கத்தில் ஆடுகளம் முருகதாஸ், வெலினா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜா மகள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும், மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘ராஜா மகள்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பற்றி அதன் இயக்குனர் ஹென்றி கூறியதாவது: ‘‘பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கும்போது நம் இயலாமையை காரணம் காட்டி, ‘‘முடியாது’’ என்று சொல்லி வளர்த்தால், அதன் பிறகு பிள்ளைகள் எதற்கும் ஆசைப்படவே தயங்குவார்கள் என்ற கருத்தை மையமாக கொண்ட கதை இது.

    ராஜா மகள் படக்குழு

    இதில், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘கன்னிமாடம்’ வெலினா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.முருகேசன் தயாரிக்கிறார். சென்னை, மகாபலிபுரம், திருத்தணி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்போது பின்னணி இசை சேர்ப்பு பணி நடைபெறுகிறது.
    தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட்டால், அதன்மூலம் சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு விடிவு காலம் என சேரன் தெரிவித்துள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அவற்றுக்கு ஓடிடி-யில் வரவேற்பு கிடைப்பதை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

    இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். 

    சேரனின் டுவிட்டர் பதிவு
    சேரனின் டுவிட்டர் பதிவு

    சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சேரன், தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது டுவிட்டர் பக்கங்களையும் அதில் டேக் செய்துள்ளார்.
    நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றையை தினம் ரசிகர்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம்.
    நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

    சூர்யா

    இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றையை தினம் சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் இந்த தகவலால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    மணிரத்னம் தயாரிப்பில் நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.
    கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி வருகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.

    அதில் கவுதம் மேனன் இயக்கும் ஒரு பாகத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இதன்மூலம் வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து இவர்கள் இணைந்துள்ளனர். இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்டின் நடித்துள்ளார்.

    சூர்யா

    இந்நிலையில், கவுதம் மேனன் - சூர்யா கூட்டணியில் உருவாகி உள்ள தொடரின் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
    பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    ஹீனா பாஞ்சல்
    ஹீனா பாஞ்சல்

    கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில் மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.  இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார். நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய முனைப்பு காட்டி வருகிறார்.
    பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும், ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டி வருகிறார்.

    அர்ஜுன் கபூர், கோமாளி படத்தின் போஸ்டர்
    அர்ஜுன் கபூர், கோமாளி படத்தின் போஸ்டர்

    அந்தவகையில், இவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘கோமாளி’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார். இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுன் கபூர், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×