தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லையென்றாலும் தகவல் எடுப்போம் - ஆய்வில் வெளியான பகீர் தகவல்

Published On 2019-01-04 09:14 GMT   |   Update On 2019-01-04 09:14 GMT
ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia



பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே.-Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும்.

இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 34 செயலிகளை எடுத்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் 10 முதல் அதிகபட்சம் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர். 



பின் இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அனைத்து செயலிகளும் ஆகஸ்டு 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. 

ஆய்வறிக்கையின்படி 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள் தானாக ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பயனர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் இன் செய்யவில்லை என்றாலும் பயனர் விவரங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News