புதுச்சேரி

புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2024-04-22 05:53 GMT   |   Update On 2024-04-22 05:53 GMT
  • வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
  • புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.

அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.

புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.

அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.

புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.

இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.

Tags:    

Similar News